சென்னை அணி பிளே ஆப் செல்வதற்கு அடுத்து இருக்கும் சிக்கல் என்ன?

தோனி, ஜடேஜா, சிஎஸ்கே, ஐபிஎல் டி20, டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம், Getty Images

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வெற்றிகளுடன் ஏறக்குறைய ப்ளேஆஃப் சுற்றை நெருங்கியிருக்கிறது. ஆனால் உறுதியாகி விட்டதா?

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 140 ரன்களில் சுருட்டி 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வென்றது.

கடந்த 2010ம் ஆண்டுக்குப்பின் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை, டெல்லி கேபிடல்ஸ் அணி ஒருமுறைகூட வென்றது இல்லை என்ற சாதனை நேற்றும் தொடர்ந்தது. கடந்த 13 ஆண்டுகளாக வெல்ல முடியாத அணியாகவே சிஎஸ்கே திகழ்கிறது.

வெற்றிக்கு காரணமான தோனி

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அனைத்து பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் பங்களிப்பு ஒருபுறம் இருந்தாலும், கடைசியில் களமிறங்கி கேப்டன் எம்எஸ் தோனி சிறிய கேமியோ ஆடி 9 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணம்.

ஒருவேளை தோனி இந்த 20 ரன்களைச் சேர்க்காமல் இருந்திருந்தால், சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 140 ரன்களுக்குள் முடிந்திருக்கும். டெல்லி கேபிடல்ஸ் அணியும் சேஸிங் செய்திருக்க முடியும்.

தோனியின் சிறிய கேமியோவால்தான் சிஎஸ்கே அணி முதலில் பேட் செய்து 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்க்க முடிந்தது. அதிலும் தோனி கடைசியில் சேர்த்த 20 ரன்கள் மிகவும் முக்கியமானவை என்பது சிஎஸ்கே டிபெண்ட் செய்தபோதுதான் தெரிந்தது.

மந்தமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் இந்த குறைந்த ஸ்கோரையும் அடிக்க முடியாமல் டெல்லி கேபிடல்ஸ் தோல்வி அடைந்தது. ஒருவேளை சிஎஸ்கே அணி 150 ரன்களுக்குள் சுருண்டிருந்தால், டெல்லி கேபிடல்ஸ் பக்கம் முடிவு மாறியிருக்கலாம்.

ரசிகர்களின் மகிழ்ச்சியும், சோகமும்

ஆதலால், கேப்டன் தோனியி்ன் கடைசி நேர கேமியோ அணியின் வெற்றிக்கு முக்கியத் துருப்புச்சீட்டாக அமைந்தது.

தோனி களமிறங்குவதைப் பார்ப்பதுதான் சென்னை ரசிகர்களின் உச்சகட்ட மகிழ்ச்சியாக இருந்தது. தோனி களம்புகுந்தபோது “தோனி, தோனி” என்று ரசிகர்கள் எழுப்பிய கோஷம் காதைப் பிளந்தது, சாலைவரை எதிரொலித்தது. சேப்பாக்கம் மைதானம் முழுவதுமே மஞ்சள் மயமாகி, தோனியையும் சிஎஸ்கேவையும் வரவேற்க ரசிகர்கள் குவிந்திருந்தார்கள்.

அதிலும் தோனி 2 சிக்ஸர்களை விளாசியபோது, அரங்கில் அமர்ந்திருந்த தோனியின் மனைவியும், மகளும் கைதட்டி மகிழ்ச்சியையும், ஆதரவையும் தெரிவித்தனர்.

சிஎஸ்கே வீரர்கள் ஷாட்களை அடித்தபோதும், விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் கரகோஷம் செய்து, விசில் அடித்து மகிழ்ந்த ரசிகர்கள், டெல்லி வீரர்கள் ஷாட் அடித்தபோதும், விக்கெட் வீழ்த்தியபோதும் ஆரவாரமின்றி இருந்தனர்.

சிஎஸ்கே அணியில் பேட்ஸ்மேன்களில் ஷிவம் துபே சேர்த்த 25 ரன்கள்தான் அதிகபட்சமாகும். ஆனால், மற்ற 6 பேட்ஸ்மேன்களும் 20 ரன்களுக்குள் சேர்த்ததால்தான் இந்த அளவு ஸ்கோரை பெறமுடிந்தது.

தோனி, ஜடேஜா, சிஎஸ்கே, ஐபிஎல் டி20, டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

பழக்கப்பட்ட ஆடுகளம்

சேப்பாக்கம் ஆடுகளத்தின் இந்த மந்தமான ஆடுகளத்தில் ஏராளமான முறை ஆடி பழக்கப்பட்ட சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சிலும் பட்டையக் கிளப்பினர். அதிலும் குறிப்பாக தீபக் சஹர் இந்த மந்தமான ஆடுகளத்தில் பலமுறை பந்துவீசியிருந்ததால், தொடக்கத்திலேயே வார்னர், சால்ட் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி அளித்து, மற்ற பந்துவீ்ச்சாளர்களுக்குப் பாதை அமைத்தார்.

இதைப் பயன்படுத்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, தீக்சனா, மொயின் அலி ஆகியோர் டெல்லி கேபிடல்ஸ் அணியை நெருக்கடியில் தள்ளினர். இளம் வீரர் பதிராணா பெற்ற 3 விக்கெட்டுகளும் சிஎஸ்கே அணியின் வெற்றியை எளிதாக்கியது.

என்னை வெறுத்த ரசிகர்கள்

தோனி, ஜடேஜா, சிஎஸ்கே, ஐபிஎல் டி20, டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

ஆட்டநாயகன் விருது வென்ற ரவிந்திர ஜடேஜா கூறுகையில் “ தோனி களமிறங்குவதை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். 7-வது வீரராக நான் பேட் செய்ய வந்தபோது, ரசிகர்கள் சோர்வடைந்து, மகிபாய், மகிபாய், தோனி என்று கூச்சலிட்டனர். ஒருவேளை நான் உயர்வரிசையில் பேட் செய்யவதாக கற்பனை செய்துபாருங்கள், நான் எப்போது ஆட்டமிழப்பேன் என ரசிகர்கள் காத்திருந்திருப்பார்கள்” எனச் சொல்லி சிரித்தார்.

மீளமுடியாத டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ் அணி 168 ரன்கள் எனும் குறைந்த இலக்கை துரத்தினாலும், பவர்ப்ளே ஓவர்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

முதல் ஓவரின் 2வது பந்திலே தீபக் சாஹர் பந்துவீச்சில் வார்னர் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து தீபக் சாஹர் வீசிய 3வது ஓவரில் பில் சால்ட்(17) விக்கெட்டை இழந்தார். டெல்லி அணிக்கு பல போட்டிகளில் தூணாக இருந்து பேட் செய்துவரும் மிட்ஷெல் மார்ஷ் 4வது ஓவரில் ரஹானேவால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

அதிலும் மணிஷ் பாண்டேயின் தவறான அழைப்பினால் மார்ஷ் ஸ்ட்ரைக்கர் க்ரீஸ் வரை சென்றபின், பாண்டே நான்-ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு செல்லாமல் மீண்டும் ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு ஓடினார்.இதனால் நடுவழியில் மார்ஷ் நிற்க வேண்டியிருந்தது.

ரஹானேவின் புத்திசாலித்தனம்

தோனி, ஜடேஜா, சிஎஸ்கே, ஐபிஎல் டி20, டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

கச்சிதமாக பீல்டிங் செய்த ரஹானே, பந்தை எறிந்தால் ரன் அவுட் தவறிவிடவும் வாய்ப்புள்ளதை எண்ணி சமயோஜிதமாக, ஓடிவந்து ஸ்டெம்பை அடித்து மார்ஷை ரன் அவுட் செய்தார். இந்த 3 விக்கெட்டுகளுமே டெல்லி அணிக்கு முக்கியமானவை, இவர்களை இழந்தவுடனே டெல்லி அணியின் பாதி பலம் குறைந்துவிட்டது

மணிஷ் பாண்டே, ரூஸோ இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர். இருவரும் ரன் ரேட்டைப் பற்றிக் கவலைப்படாமல் விக்கெட் சரிவு ஏற்படாமல் நிதானமாக ஆடினர். ஆடுகளமும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடுவது கடினமாக இருந்தது.

நெருக்கடிதரும் பந்துவீச்சு

பவர்ப்ளே முடிந்தபின் ஜடேஜா, மொயின அலி, தீக்சனா என மூவரும் சேர்ந்து, டெல்லி பேட்ஸ்மேன்களைக் கட்டிப்போட்டனர். டெல்லி அணியின் ரன்ரேட் மோசமாகச் சரிந்தது. நடுப்பகுதி ஓவர்களில் ஏற்பட்ட தொய்வை டெல்லி பேட்ஸ்மேன்களால் ஈடுகட்டவே கடைசிவரைஇயலவில்லை. விக்கெட் சரிவைத் தடுக்கும் நோக்கில், ரன்ரேட்டை கோட்டைவிட்டனர்.

4-வது விக்கெட்டை வீழ்த்தும் நோக்கில் பதிராணாவை பந்துவீச தோனி அழைத்தார். பதிராணா வீசிய 13-வது ஓவரில் மணிஷ் பாண்டே 27 ரன்கள் சேர்த்த நிலையில் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்த சிறிது நேரத்தில் ஜடேஜா வீசிய 15-வது ஓவரில் லாங் ஆன் திசையில் பவுண்டரி அடிக்க ரூஸோ தூக்கி அடிக்க பதிரணாவிடம் கேட்சானது. ரூஸோ 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். செட்டிலான இரு பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தபின், டெல்லி கேபிடல்ஸ் அணியின் சேஸிங் கேள்விக்குறியானது, நம்பிக்கையும் குறைந்தது.

நம்பிக்கை தகர்ந்தது

தோனி, ஜடேஜா, சிஎஸ்கே, ஐபிஎல் டி20, டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

அடுத்து வந்த அக்ஸர் படேல், 11 பந்துகளில் 20ரன்கள் என்ற சிறிய கேமியோ ஆடி பதிராணா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தபின், டெல்லி கேபிடல்ஸ் தோல்வி ஏறக்குறைய உறுதியானது. கடைசி 2 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. அதிலும் இந்த ஆடுகளத்தில் இந்த ஸ்கோரை அடிப்பது சாத்தியமில்லாத ஒன்று, அவ்வாறு சேஸிங் செய்வதற்கு பேட்ஸமேன்களும் இல்லை.

தேஷ்பாண்டே வீசிய 19வது ஓவரில் ரிப்பால் படேல் ரன் அவுட்செய்யப்பட்டு, டெல்லி கேபிடல்ஸ்5 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பதிராணா வீசிய 20வது ஓவரில் லலித் யாதவ் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி 5வது பந்தில் விக்கெட்டை இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 140ரன்கள் சேர்த்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை இழந்தோம்

டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் வார்னர் கூறுகையில் “ பவர்ப்ளையில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம், 6வது முறையாக முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்திருக்கிறோம். இந்த செயல்தான்அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கச் செய்கிறது, மார்ஷ் ரன்அவுட் திருப்புமுனை. எளிதாக அடையக்கூடிய ஸ்கோர்தான், எங்கள் பேட்ஸ்மேன்களில் ஒருவர் நீண்டநேரம் நிலைத்து பேட் செய்திருந்தால், நிச்சயம் சேஸிங் செய்திருப்போம். நடுப்பகுதியில் 4 ஓவர்களில் எங்களால் ரன்களைச் சேர்க்க முடியவில்லை, ஸ்ட்ரைக்கையும் ரொட்டேட் செய்ய முடியவி்லலை” எனத் தெரிவித்தார்.

சிஎஸ்கே பேட்ஸ்மேன்களும் திணறல்

தோனி, ஜடேஜா, சிஎஸ்கே, ஐபிஎல் டி20, டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

சேப்பாக்கம் ஆடுகளத்தில் நேற்று சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாட், கான்வே இருவருமே ரன் சேர்க்கத் திணறினர். வேகப்பந்துவீச்சில் ரன்கள் செல்கின்றன என்று தெரிந்தவுடன் சுழற்பந்துவீச்சாளர்களை வார்னர் பயன்படுத்தினார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது, அக்ஸர் படேல் வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் கால்காப்பில் வாங்கி கான்வே(10) ஆட்டமிழந்தார்.

அக்ஸர் படேல் வீசிய 7-வது ஓவரில் கெய்க்வாட் எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடிக்க முற்பட்டு அமன் கானால் கேட்ச் பிடிக்கப்பட்டு 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அனுபவ வீரர் ரஹானே 21 ரன்கள் சேர்த்திருந்த போது ஸ்ட்ரைட் டிரைவ் ஷாட்டில் அடிக்கப்பட்ட பந்தை லலித் யாதவ் அற்புதமாக கேட்ச் செய்து வெளியேற்றினார்.

இந்த சீசனில் தொடர்ந்து ஏமாற்றிவரும் மொயின் அலி 7ரன்னில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை சிஎஸ்கே அணி இழந்தது.

ஷிவம் துபே, அம்பதி ராயுடு இணைந்து ஸ்கோரை உயர்த்தும் வகையில் அதிரடியாக ஷாட்களை அடித்தனர். ஷிவம் துபே வழக்கம்போல் சிக்ஸர்களை விளாசி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 25 ரன்கள் சேர்த்தாலும், துபேயின் ஸ்ட்ரைக் ரேட் 200க்கு மேல் இருந்தது. ராயுடு, துபே கூட்டமி 19 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கலீல் அகமது பந்துவீ்ச்சில் ராயுடு 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தோனியின் அதிரடி

தோனி, ஜடேஜா, சிஎஸ்கே, ஐபிஎல் டி20, டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

அதன்பின் ரசிகர்கள் எதிர்பார்த்த கேப்டன் தோனி களமிறங்கினார். தோனி களமிறங்கியபோது, அரங்கமே ரசிகர்களின் கரகோஷத்தாலும், முழுக்கத்தாலும் அதிர்ந்தது. ஜடேஜா, தோனி இருவரும் சிஎஸ்கே அணிக்காக பலமுறை கேமியோக்களை ஆடி சரிவிலிருந்து மீட்டுக்கொடுத்தனர். அதுபோல் இந்தமுறையும் தோனியின் ஆட்டம் அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

குல்தீப் யாதவ் வீசிய 18-வது ஓவரில், ஜடேஜா சிக்ஸர் உள்ளிட்ட 11 ரன்கள் சேர்த்தார். கலீல் அகமது வீசிய 19-வது ஓவரில், தோனி இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். 41வயதிலும் தோனியால் நின்ற இடத்திலிருந்து சிக்ஸர் விளாச முடிகிறது என்பது வியப்புக்குரியதுதான். அதேசமயம், கலீல் அகமது பந்துவீச்சும் மோசமாகத்தான் இருந்தது, கலீல் அகமது வைட் யார்கராக வீசியிருக்கலாம், அல்லது ஷாட் பிட்சாக வீசியிருக்கலாம்.

தோனியின் திடீர் கேமியோவைக் கட்டுப்படுத்த கடைசிஓவரை மார்ஷ் வீசினார். மார்ஷ் வீசிய முதல் பந்தில் ஜடேஜா பவுண்டரி விளாசினார், 2வது பந்து லெக் கட்டராக வந்தபோது அதையும் சிக்ஸருக்கு அடிக்க ஜடேஜா(21) முயன்று ரிப்பால் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த தீபக் சஹர் ஒரு ரன்எடுத்து தோனியிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்தார். 5-வது பந்தில் தோனி சிக்ஸர் அடிக்க முயன்றார், ஆனால், மார்ஷ் ஸ்லோவர் பாலாக லெக் கட்டராக வீச, தோனி அடித்த ஷாட் வார்னர் கைகளில் தஞ்சமடைந்தது. தோனி 9பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

தோனியின் ஆட்டத்தைக் காண வந்த ரசிகர்களை ஏமாறவில்லை. தோனியின் அற்புதமான 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியைப் பார்த்து ரசித்துச் சென்றனர்.

'விக்கெட் வீழ்த்துவது முக்கியமல்ல'

வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் “ ஆடுகளம் 2வது பாதியில் அதிகமான மாற்றத்துடன் சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக மாறியது. மற்ற பந்துவீச்சாளர்களைவிட எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் சீமிங்கை நன்கு பயன்படுத்தினர். விக்கெட்டுகள் மீது கவனம் செலுத்தாதீர்கள், துல்லியமான பந்துகளை வீசுங்கள் என்றுதான் எங்கள் பந்துவீச்சாளர்களிடம் கூறியிருக்கிறேன்.

பேட்டிங்கில் நாங்கள் இன்னும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கலாம். இதுபோன்ற ஆடுகளத்தில் தேவையற்ற சில ஷாட்களை ஆடுவதைத் தவிர்த்திருக்கலாம். ஜடேஜா, மொயின் அலி பேட் செய்தது மகிழ்ச்சி. என்னுடைய பணி என்பது சில பந்துகளில் ஷாட்கள்அடிப்பதுதான், அதிகமான ரன்களை ஓடி எடுக்க முடியாது. நான் சந்திக்கும் பந்துகளில் அதிகபட்ச ரன்களை பங்களிப்பாக வழங்குவேன். அதற்காகத்தான் அதிகமாக பயிற்சி எடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி?

தோனி, ஜடேஜா, சிஎஸ்கே, ஐபிஎல் டி20, டெல்லி கேப்பிடல்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

சிஎஸ்கே அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள், 5 தோல்விகள் என 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. ப்ளேஆஃப் வாய்ப்பில் டாப்-4 இடத்தை சிஎஸ்கே தற்போது பெற்றாலும், அடுத்துவரும் 2 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றால் முதல் இரு இடங்களில் ஒரு இடத்தை சிஎஸ்கே உறுதி செய்யும். ஒருவேளை இரு போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்தால் மற்ற அணிகளின் ஆட்டத்தைப் பொறுப்பு பிளே ஆப் வாய்ப்பு கிடைக்காமலும் போகலாம்.

தற்போது தோல்வி அடைந்திருக்கும் டெல்லி அணி தனது சொந்த மைதானத்தில் சென்னையை வீழ்த்துவதற்கு முனைப்புக் காட்டக்கூடும். அதேபோல கொல்கத்தா அணியும் பிளே ஆப் சுற்றுக்கான தீவிர வேட்கையில் சென்னை அணியை சென்னையிலே தோற்கடித்தால் சென்னையின் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்.

டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொறுத்தவரை 11 போட்டிகளில் ஆடி 4 வெற்றிகள், 7 தோல்விகளுடன் 8புள்ளிகளுடன் உள்ளது. அடுத்துவரும் 3 போட்டிகளில் அதிக ரன்ரேட்டில், கட்டாய வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகள்தான் கிடைக்கும். இந்த புள்ளிகள் மூலம் டெல்லி கேபிடல்ஸ் ப்ளே ஆஃப் வாய்ப்பு என்பது மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருக்கும். எனினும் வாய்ப்பு முற்றிலுமாகப் பறிபோய்விடவில்லை.

சென்னை அணியை தவிர, 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளை வென்றுள்ள குஜராத் அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

குஜராத் டைட்டஸ் அணி எஞ்சி இருக்கும் 3 போட்டிகளில் தோல்வி அடைந்தாலும், அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் எந்த சிக்கலும் இருக்காது.

ஹைதராபாத் அணியை பொறுத்தவரை 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் 8 புள்ளிகளை மட்டுமே எடுத்துள்ளது. அடுத்து வரும் 4 போட்டிகளையும் வென்றால் அந்த அணிக்கான ப்ளே ஆஃப் வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

11 போட்டிகளில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடித்தாலும், அந்த அணி அடுத்த முன்னேற இன்னும் 2 வெற்றிகளை பெறுவது அவசியமாகிறது. இல்லையெனில் பிற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே அந்த அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் 11 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் லக்னௌ அணி 11 புள்ளிகளும், பிற அணிகள் 10 புள்ளிகளுடன் முறையே 4 முதல் 8வது இடத்தில் உள்ளன.

அடுத்த 3 போட்டிகளின் முடிவுகளை பொறுத்து இந்த அணிகளுக்குள் ப்ளே ஆஃப் முடிவுகள் அமையும். இந்த அணிகளுக்குள் 3வது, 4வது இடங்களை பிடிக்க அதிகப் போட்டி நிலவக்கூடும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: