இந்தப் பெண் 'கன்னித்தன்மையை இழப்பதற்காக' ஆண் பாலியல் தொழிலாளரை நாடியது ஏன்?

மெலனி

பட மூலாதாரம், MELANIE

படக்குறிப்பு, மெலானீ

கொரோனா பொதுமுடக்கத்தின் போது ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த 43 வயது மெலானீ, அப்போது ஓர் உறுதி ஏற்றுக்கொண்டார். அது பொது முடக்கம் முடிவுக்கு வந்த உடன் முதன்முதலாக தாம் செய்யவேண்டிய வேலை என்னவென்றால் ஒரு பாலியல் தொழிலாளர் மூலம் தமது கன்னித் தன்மையை இழப்பது என்பதே.

மாற்றுத் திறனாளி என்பதாலேயே காதல் மற்றும் பிற நபர்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்து வந்த மெலானீ, அதனால் ஏற்பட்ட கவலையை பாலுறவு வைத்துக்கொள்வதன் மூலம் தான் போக்க முடியும் என நம்பினார். அதற்காக அவர் ஏற்பாடு செய்த நபர் தான் சேய்ஸ்.

மெலானீக்கு உதவி செய்வதற்காக அவரது வீட்டில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் தான் அது போன்ற ஆலோசனையை அவருக்கு அளித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தின் போது மெலானீயும், அவரது உதவியாளர் ட்ரேசியும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அப்போது தான் அவர் அந்த ஆலோசனையை அளித்தார்.

மருத்துவ காரணங்களுக்காக மட்டுமின்றி, 43 வயதான மெலானீயை அதுவரை எந்த ஒரு ஆணும் தொட்டது கூட கிடையாது. ஆனால் பாலுறவு குறித்து அவருக்கு ஏராளமான தேவைகள் இருந்ததை அப்போது தான் அவர் உணர்ந்தார்.

ட்ரேசி - அவருடைய உண்மையான பெயர் அல்ல - முன்பு ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்ததாகவும், அந்த அனுபவத்தின் காரணமாகவே இந்த ஆலோசனையை முன்வைத்ததாகவும் தெரிவித்து, ஒரு பாலியல் தொழிலாளரை அணுகுவதன் மூலம் மெலானீக்கு பல நன்மைகள் இருக்கின்றன என புரியவைத்திருக்கிறார்.

"அந்த ஆலோசனை தான் எனது கண்களைத் திறந்தது. நானும் பாலுறவு இன்பங்களை அனுபவிக்க முடியும் என்ற உண்மையை எனக்கு உணர்த்தியது," என மெலானீ 'பிபிசி அக்ஸஸ் டூ ஆல்' பிரிவிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், பாலியல் சேவை அளிக்கும் எஸ்கார்ட் நிறுவனம் ஒன்றைக் கண்டுபிடித்து, ஓர் ஆண் துணையைத் தேடினார் மெலானீ. அங்கு அவருக்கு கிடைத்த நபர் தான் சேய்ஸ்.

இதில் மிகுந்த மனமகிழ்ச்சியடைந்த மெலானீ, பின்னர் சேய்ஸின் வீட்டுக்குச் செல்ல ஏற்பாடுகளைச் செய்தார். சேய்ஸ் வீட்டிற்குச் சென்ற அவர் தனது முதல் சந்திப்பின் போது, "நான் எனது மின்சார சக்கர நாற்காலியில் இருந்து இறங்கிய போது, அங்கே நாங்கள் இருவர் தான் இருந்தோம். நான் அங்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து எதுவும் தோன்றவில்லை" என்றார்.

கோடு

மூன்று வயது முதல் சக்கர நாற்காலி உதவியுடன் வாழ்க்கை

மெலானீ தனது மூன்று வயது முதலே சக்கர நாற்காலியின் உதவியுடன் தான் வாழ்ந்து வருகிறார். அவர் குழந்தையாக இருந்த போதே, தண்டுவடத்தில் இருந்த ஒரு வீக்கம் காரணமாக ட்ரான்ஸ்வெர்ஸ் மையலைட்டிஸ் என்ற நோய் பாதிப்பு இருந்தது. அதனால் அவரது கால்கள் செயலிழந்து போயிருந்தன. அதே போல் கைகளையும் குறைந்த அளவு தான் பயன்படுத்தும் நிலை இருந்தது. குழந்தைப் பருவத்தைக் கடந்த பின், அவருக்கு உதவும் பணியாளர்களை வைத்துக் கொண்டு தான் தற்போது வரை செயல்பட்டு வருகிறார்.

அவர் ஜப்பானில் வேலை பார்த்த நிலையில், தற்போது ஒரு படத்தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். ஆனால் அவருடைய வாழ்வில் காதல், பாலுறவு இன்பம் என்பதே இதுவரை இருந்ததில்லை.

"அது நடக்குமா... அது நடக்குமா.... என என்னை நானே அடிக்கடி கேட்டுக்கொள்வேன்."

ஒரு ஆணுடன் பழகுவதையோ, அல்லது எனது மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதையோ மற்றவர்கள் ஏற்பார்களாக என்ற அச்சம் இருந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளை உலகம் எப்போதும் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை என்பதே அவரது எண்ணமாக இருந்துள்ளது.

பிரிட்டன் அரசு நடத்திய ஒரு கணக்கெடுப்பில் கிடைத்த விவரங்களை 2021-ம் ஆண்டு அரசு வெளியிட்டது. அதன் படி, 56 சதவிகிதம் பேர் தான் மாற்றுத்திறனாளிகளிடம் நெருங்கிய உறவு வைத்துக்கொள்வதில் சிரமம் எதுவும் இருக்காது என நம்புவதாக தெரியவந்துள்ளது.

இது போன்ற காரணங்களால் பாலுறவு குறித்து மெலானீ சிந்தித்தபோதெல்லாம் அது நடக்கும் போது நடக்கட்டும் என விட்டுவிட்டார்.

இந்நிலையில் சேய்ஸ்க்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பிய பின் அது குறித்து அவர் வீடியோ அழைப்புக்கள் மூலம் மெலானீயிடம் பேசினார். இதன் மூலம் இருவரும் நன்றாக அறிமுகமாயினர்.

"நான் ஏராளமான கேள்விகளை அவரிடம் கேட்டேன். இதற்கு முன் இதே போன்ற ஒரு நபரைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? உங்களுடைய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்திற்கு சக்கர நாற்காலியில் வரமுடியுமா? உங்கள் கட்டடத்தில் உள்ள லிஃப்ட் எத்தனை முறை பழுதாகியிருக்கிறது?" என மெலானீ கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார்.

"அனேகமாக ஒவ்வொரு ஆறு மாத்திலும் ஒருமுறை லிஃப்ட் பழுதாகிறது" என சேய்ஸ் பதில் அளித்தார்.

மெலனி

பட மூலாதாரம், Getty Images

சந்திப்பு எப்படி நிகழ்ந்தது?

மெலானீயைப் பொறுத்தவரை, சேய்ஸ் அளித்த பதில்கள் திருப்தியாக இருந்ததால் அவரை ஒரு முறை அவரது வீட்டில் சந்திக்க முடிவெடுத்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் மிகுந்த மகிழ்ச்சியிலும் திளைத்தார்.

மெலானீயும், சேய்ஸும் ஏற்பாடு செய்த இந்த உறவு முறை சந்திப்பு சட்டப்படி சரியானது தான்.

மேற்கு ஆஸ்திரேலியாவில், விபசார தடுப்பு சட்டம் 2000-ன் படி, தெருவில் நின்று கொண்டு பாலுறவுக்கு ஆட்களை அழைப்பது சட்டப்படி தவறானது என்ற போதிலும், மெலானீ அணுகிய நிறுவனத்தைக் போன்ற சேவை அளிக்கும் நிறுவனங்கள் சட்டத்துக்கு உள்பட்டவையாக கருதப்படுகின்றன. ஆஸ்திரேலியா முழுவதும் ஒரே மாதிரியான சட்டங்கள் இல்லை என்ற நிலையில், விக்டோரியா, நியூ சவுத்வேல்ஸ், மற்றும் வடபகுதிகளில் பாலியல் தொழில் என்பது சட்டப் படி தவறானது அல்ல.

பிரிட்டனிலும் இதே போன்ற சட்டங்கள் தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் தொழில் நடத்துவது சட்டப்படி சரியானதாகவே கருதப்பட்டாலும், வடக்கு அயர்லாந்தில் பாலியல் தொழிற் கூடங்களை நடத்துவது, இது குறித்து விளம்பரம் செய்வது உள்ளிட்ட செயல்கள் சட்டவிரோதமானவை.

சேய்ஸின் வீட்டிற்கு மெலானீ வந்த போது, அந்த சூழ்நிலையே மாறிப்போனது.

"பாலியல் இன்பம் குறித்து எனக்கு போதிய அளவு விஷயங்கள் தெரியாது என நன்றாக அறிந்திருந்தேன். அதனால் என் முன்னால் அத்துறையில் நிபுணத்துவம் பெற்ற நபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தது எனது உற்சாகத்தை அதிகரித்தது," என்றார் மெலானீ.

"இருப்பினும் மாற்றுத் திறனாளிகள் குறித்து எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். ஆனால் அவருக்கு அது குறித்து போதிய விஷங்கள் தெரியாது. இது எங்கள் இருவருக்குமான வித்தியாசம். இந்த அறியாமைகளைப் பற்றி பேசி இருவரும் சிரித்துக்கொண்டோம். இரண்டு மணிநேரம் கழித்து நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக மாறினோம்."

சேய்ஸ், ஒரு பாலியல் தொழிலாளியாக 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள நிலையில், புதிய வாடிக்கையாளர்கள் அவரிடம் வரும் போது, முழுமையான இன்பம் வேண்டும் என பெரிதும் அழுத்தம் கொடுப்பது தான் பெரும் பிரச்சினையாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

இந்த உரையாடலுக்குப் பின், "நாம் எப்படி செயல்படப் போகிறோம் என தற்போது நன்றாக புரிந்திருப்பீர்கள்" என சேய்ஸ் சொல்கிறார்.

அவருக்கு சேவை அளிப்பதற்காக சேய்ஸை தேர்வு செய்ததற்கு முன்பு, அது போன்ற நேரங்களில் மெலானீயின் உடலில் உள்ள குறைபாடுகள் மிகப்பெரிய தடையாக இருக்குமா, அதனால் முழு இன்பம் கிடைக்காமல் போகுமா என்பது பற்றி எல்லாம் மெலானீக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

"அந்த ஒரே காரணத்துக்காகத் தான் நான் சேய்ஸை தேர்ந்தெடுத்தேன். ஏதோ ஒரு உல்லாச விடுதியில் இருந்து ஒரு நபரைத் தேர்வு செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பற்ற பாலுறவு கொள்ள ஒரு போதும் நான் விரும்பவில்லை. அது அழகற்ற செயலாகவும் இருக்கும்."

சேய்ஸிடம் மிகப்பெரும் இன்பம் கிடைக்கும் என கண்டுபிடித்த மெலானீ, அதில் எந்த அளவையும் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை.

மேலும், அவருடைய கால்கள் அவருக்கு போதிய அளவு ஒத்துழைப்பை அளிக்காததால் ஒவ்வொரு முறையும் கால்களுக்கு புத்துணர்வு ஊட்டவேண்டியிருந்தது.

"பின்னர் நான் எனது கால்களை படுக்கையுடன் இணைத்து கட்டிவிட்டதால் எந்தப் பிரச்சினையும் எழுவில்லை" என்கிறார்.

மெலானீ

பட மூலாதாரம், MALANIE

படக்குறிப்பு, மெலானீ

அனுபவம் இல்லாத ஒரு புதிய வீட்டில் மாற்றுத் திறனாளி ஒருவர் இருப்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்ததாக தெரிவிக்கும் மெலானீ, "மருத்துவமனையைத் தவிர பிற இடங்களில், ஒரு ஆண் முன்னாள் ஆடைகளின்றி நான் இருந்தது அதுவே முதல் முறை" என அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பாகவே உடல் பாதிப்புக்களுடன் கூடியவர்களை சேய்ஸ் கையாண்ட அனுபவம் இருந்ததால், "மெலானீக்கு ஒரு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த முடிந்தது" என்றும், அதற்காக அவர் எப்போதும் உயர் முன்னுரிமை அளித்ததாகவும் தெரிவிக்கிறார்.

ஆனால், ஒரு மாற்றுதிறனாளியின் உடல் திறன்களை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை மட்டுமே அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கருத முடியாது. பல நேரங்களில் மாற்றுத் திறனாளிகளே வெறுக்கும் அளவுக்கான அவர்களது இயலாமையை மற்றவர்கள் மிக சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நிலையும் காணப்படுகிறது. சில மாற்றுத் திறனாளிகள் இதை அவர்களுக்குள் நிகழும் பாரபட்சம் என அழைக்கின்றனர்.

மெலானீயின் தற்போதைய அனுபவங்கள், அவருக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஆற்றல் மிகுந்திருப்பதை உணர வைத்துள்ளது.

"கட்டணம் செலுத்தி சேய்ஸை நான் தேர்ந்தெடுத்தது சரியான செயல் தான் என எனக்குத் தெரியும். ஒரு வேளை நான் எதிர்பார்த்தது போல் அவர் செயல்படவில்லை அல்லது தவறாக செயல்பட்டிருந்தார் என்றால் மீண்டும் அவரை நான் தேர்வு செய்வதை நிறுத்திவிடுவேன்."

ஆனால் அதற்காக மெலானீ செலவிட்ட தொகையையும் கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

"அது லட்சக்கணக்கில் வரும்," என்று சேய்ஸ் தமது 48 மணிநேரத்துக்கான கட்டணத்தைக் கூறுகிறார். ஒரு மணிநேரத்துக்கு சுமார் 21,100 ரூபாயை அவருக்கு செலுத்தவேண்டும்.

அவரது கட்டணத்தை நியாயப்படுத்தும் அவர், "பெரும்பாலானவர்கள் புரிந்துகொள்ளாத ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு வாடிக்கையாளரை தொடர்ந்து 48 மணிநேரம் கையாள்வது என்பது, அதைத் தவிர வாழ்க்கையில் வேறு எதையும் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துகிறது" என்கிறார்.

ஆனால், அவரது வேலையில் அவருக்கு மிகுந்த மனநிறைவு கிடைப்பதாகவும் அவர் கூறுகிறார்.

"மற்றவர்கள் நிறைய இன்பத்தைப் பெற யார் தான் உதவ மாட்டார்கள்? அது போன்ற இன்பங்களைப் பெற்று மகிழ விரும்பும் மக்களுக்காக நான் ஏன் செயல்படக் கூடாது?"

"சேய்ஸ் உடன் நெருக்கமான அன்பு ஏற்படுவதை தடுக்க முடியாது" என்பதை ஒப்புக்கொள்ளும் மெலானீ, "இருப்பினும் அது ஒரு தொழில் ரீதியான உறவு என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்" என்கிறார்.

மெலானீயும், சேய்ஸும் கடந்த ஜனவரி மாதம் முதல் அடிக்கடி சந்தித்து வருகின்றனர். ஆனால் அது வெறும் பாலுறவுக்காக மட்டுமான சந்திப்பு எனக்கருத முடியாது.

மெலானீ

பட மூலாதாரம், Melanie

படக்குறிப்பு, மெலானீ

ஒரு பாலியல் தொழிலாளியாக மட்டுமே மெலானீயுடன் பழகாமல், காதல் உறவின் இன்பங்களை அளிக்கும் வகையில் மெலானீயுடன் பழக ஒரு பயிற்சியாளரிடம் பயிற்சியும் பெற்றுவருகிறார். அதன் மூலம் மெலானீயிடம் தொடர்ந்து பழகி, அவர் மற்றவர்களிடமும் அது போல் பேசிப்பழகும் அளவுக்கு மாற்றப் போவதாகவும் சேய்ஸ் கூறுகிறார்.

"கட்டணம் செலுத்தாமலேயே என்னிடம் அன்புடன் பழகி எனக்கு உதவியாக இருக்கும் நபர்களை நான் தேடிவருகிறேன். சேய்ஸ் இருக்கும் இடத்தில் அந்த புதிய உறவை வைத்துப் பார்க்க ஆசைப்படுகிறேன்" என்கிறார் மெலானீ.

"இணையவழியில் ஆண் நண்பர்களைச் சந்தித்து அவர்களிடம் உரையாடும் வாய்ப்பை அளிக்கும் சேவை நிறுவனங்களை நான் இப்போது நன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன். இது போல் நான் மாறுவேன் என ஒருபோதும் எண்ணியதில்லை. நான் மிகவும் காலம் கடந்து இதைச் செய்கிறேன் என்பதே எனது வருத்தம்."

மெலானீயைப் பொறுத்தவரை, பாலியல் இன்பம் என்பதைத் தாண்டி, இது போன்ற உறவுகள் மற்றும் இன்பங்களை மாற்றுத் திறனாளிகள் பெறமுடியாத நிலையில் இருப்பதாக கருதுகிறார். இது போன்ற உணர்வுகளை அவர்கள் பெற அரசுகள் தான் உதவவேண்டும் என்றும், அதற்கான கட்டணங்களை அரசுகளே செலுத்தவேண்டும் என்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் பாலுறவு இன்பம் கிடைக்கவேண்டும் என்பதே அவருடைய மிகவும் முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது.

"என்னுடைய நம்பிக்கை தற்போது பெருமளவு அதிகரித்துள்ளது. இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நான் சந்தோஷமாக இருக்கிறேன். வாழ்க்கையையே தலைகீழாகத் திருப்பிய இந்த மாற்றத்துக்கு ஒரு விலையை நிர்ணயிப்பது தவறான ஒன்று" என்கிறார் மெலானீ.

மேலும், அவர் தமது புதிய அனுபவங்களை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதும் அவருக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாகவே இருக்கிறது.

"தொடக்கத்தில் இது போல் மற்றவர்களிடம் எதையும் பேசுவதில் சிறிதளவு சங்கடப்பட்டேன். ஆனால் அது போல் பிறரிடம் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது எனது வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. இதை மற்றவர்களிடம் சொல்வதை எப்போதும் நிறுத்தமாட்டேன், எனது முகத்தில் தோன்றும் புன்னகையை எப்போதும் நான் மறைக்கமாட்டேன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: