"முதல் சந்திப்பிலேயே சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முடிவு செய்தேன்"

வேல்ஸ், மனிதநேயம், மருத்துவம்

பட மூலாதாரம், CENYDD OWEN

படக்குறிப்பு, கேட்டி(இடது) மற்றும் லூசி
    • எழுதியவர், ஜாரெட் எவிட்ஸ்
    • பதவி, பிபிசி நியூஸ்

கண்டதும் காதல் என்று தமிழ் சினிமாவில் பார்த்து இருப்போம். பார்த்த முதல் சந்திப்பிலேயே அறிமுகமாகி நண்பர்களான கதைகளை கேட்டு இருப்போம். அவசர காலத்தில் முன்பின் தெரியாத நபர் செய்த உதவிக்காக அவருக்கு நன்றி தெரிவித்து இருப்போம்.

ஆனால் முதல் சந்திப்பிலேயே யாரென்று தெரியாத ஒரு நபருக்கு உங்கள் சிறுநீரகத்தை தர ஒப்புக் கொள்வீர்களா?

கேட்க விசித்தரமாக இருக்கலாம், ஆனால் இது உண்மையில் நடந்த கதை.

பிரிட்டனில் உள்ள வேல்ஸை சேர்ந்த லூசிக்கு, அந்நியரான கேட்டி ஜேம்ஸ் எப்படி தனது சிறுநீரகத்தை கொடுக்க முன்வந்தார் என்ற கதை இது.

லூசியின் சிறுநீரக பிரச்னை

வேல்ஸ், மனிதநேயம், மருத்துவம்

பட மூலாதாரம், CENYDD OWEN

படக்குறிப்பு, மருத்துவமனையில் லூசி, கேட்டி, செனைட்

லூசி ஹம்ப்ரி தனது இணையருடன் சேர்ந்து அவர்களின் இரண்டு நாய்களை அழைத்துக் கொண்டு அந்த கடற்கரைக்கு செல்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் ஒரு தகவலை அவர்களிடம் பகிர்ந்து இருந்தார்.

இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் லூபஸ் என்ற நோயினால் 15 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருந்தார் வேல்ஸில் உள்ள கேர்ஃபில்லி கவுண்டியைச் சேர்ந்த லூசி.

இதன் காரணமாக 44 வயதான லூசியின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்பட்டது.

ஆனால் 2019ஆம் ஆண்டு அவரை சோதித்த மருத்துவர், இனி டயாலிசிஸ் சிகிச்சை பெரிதாக உதவாது என்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், லூசியால் 5 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ முடியாது என தெரிவித்துள்ளார்.

இதற்கு சில காலம் முன்பு, லூசி தனது இணையர் செனைட் ஓவனுடன் சேர்ந்து தங்களின் இரண்டு டாபர்மேன் நாய்களை கூட்டுக்கொண்டு தொலைதூரங்களுக்கு பயணம் செய்யும் வகையில் ஒரு கேம்பர்வேனை வாங்கினர்.

கேம்பர்வேன் என்பது, நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஒரு நகரும் வீடாகும். இதில் படுக்கையறை, குளியலறை, சமையல் செய்யும் வசதி என நம் வீட்டில் இருக்கும் பல வசதிகள் இருக்கும்.

லூசி தனது டாபர்மேன் நாய்களுக்கு ஜேக், இண்டி என பெயரிட்டு இருந்தார். ஆனால் லூசியின் உடல்நிலையை காரணமாக காட்டி, நாய்களுடனான அந்த பயணத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

மாறிய கடற்கரை

வேல்ஸ், மனிதநேயம், மருத்துவம்

பட மூலாதாரம், CENYDD OWEN

லூசிக்கு சிறுநீரகம் செயலிழந்த நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 2021 இல், வேல்ஸில் உள்ள மற்றொரு நகரமான அபெரிஸ்ட்வித்திற்கு இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க செல்ல லூசியும், அவரது இணையரும் திட்டமிட்டிருந்தனர்.

அப்போது லூசியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. எனவே அதற்கு பதிலாக அருகிலேயே சவுத் வேல்ஸின் பாரியில் உள்ள கோல்ட் நாப் கடற்கரைக்கு செல்ல முடிவு செய்தனர்.

லூசியும், செனைடும் கடற்கரைக்கு அருகே தங்கள் கேம்பர்வேனை நிறுத்திவிட்டு, தங்கள் நாய்களுடன் சேர்ந்து ஒரு பார்பிக்யூவைத் தயார் செய்தனர்.

"சுமார் நூறு அடி தொலைவில் இருந்த ஒரு பெண்ணை நோக்கி இண்டி ஓடியது," என்று லூசி கூறுகிறார்.

"இண்டி, நாங்கள் இருந்த இடத்தில் இருந்து அந்தப் பெண் இருந்த இடத்திற்கு இடையே முன்னும் பின்னும் ஓடிக் கொண்டு இருந்தது. நாங்கள் இருந்த இடத்திற்கு வருமாறு அவளை மீண்டும் மீண்டும் அழைத்தோம். ஏனெனில் ஒரு பெரிய டாபர்மேன் நாயை பார்க்கும் யாராக இருந்தாலும் பயப்படுவார்கள்."

அங்கு இண்டிக்கு ஏதாவது உணவு இருக்கிறதா என்ற சந்தேகத்தில் நானும், செனைடும் சென்றோம். மேலும் இண்டி தொந்தரவு செய்ததற்காக அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்க நினைத்தோம்.

அடையாள காட்டிய நாய்

வேல்ஸ், மனிதநேயம், மருத்துவம்

பட மூலாதாரம், LUCY HUMPHREY

படக்குறிப்பு, கேட்டியை அடையாளம் காட்டிய லூசியின் நாய் 'இண்டி'

பாரி பகுதியைச் சேர்ந்த 40 வயதான கேட்டி ஜேம்ஸ் அங்கிருந்தார்.

"அந்த பெண் என் வாழ்வில் முக்கியமான ஒரு நபராக மாறுவார் என்று அப்போது எனக்கு தெரியாது," என லூசி கூறினார்.

கேட்டி, கடற்கரையில் அமர்ந்து ஸ்வெட்டர் பின்னிக் கொண்டு இருந்தார். அவர் இண்டி தனக்கு அருகில் வந்து செல்வது குறித்து எந்த கவலையுமின்றி அமர்ந்து இருந்தார்.

"அவருக்கு அது கடினமான காலமாக இருந்தது. அதனால் எங்களுடன் சாப்பிட வருமாறு நான் அவரை அழைத்தேன்," என லூசி கூறுகிறார்.

"கேட்டி எங்கள் வேனுக்கு வந்தார். எங்களுக்கு சேர்த்து மதுபானம் வாங்கி வந்தார். அதை எனக்கும் குடிக்க கொடுத்தார்."

"நான் டயாலிசிஸ் செய்து கொள்வதால் என்னால் குடிக்க முடியாது என செனைட் அவரிடம் விளக்கினார் . ஏன் என்று கேட்டி கேட்க, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகாக நான் காத்துக் கொண்டு இருப்பதாக செனைட் கூறினார்."

அதிர்ச்சியடைந்த கேட்டி எங்களிடம், "நானும் சிறுநீரகத்தை தானம் செய்ய பதிவு செய்து இருக்கிறேன்," என்றார்.

"யாருக்கு உங்கள் சிறுநீரகத்தை தானம் செய்யப் போகிறீர்கள்? " என்று செனைட் கேட்டார்.

"யாருக்கே தேவையோ, அவர்களுக்கு," என கேட்டி பதிலளித்தார்.

உடனடியாக கேட்டியும், லூசியும் தங்கள் தொடர்பு எண்களை பரிமாறிக்கொண்டனர். விரைவிலேயே சிறுநீரக நன்கொடையாளர்களுக்கான ஒருங்கிணைப்பாளர் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நடந்தது.

"அவர் எல்லா பரிசோதனைகளையும் செய்து கொண்டார், எனக்கு தானம் செய்ய கேட்டி பொருத்தமானவர் என்று தெரிய வந்தது," என லூசி கூறுகிறார்.

எனக்கு லூபஸ் பாதிப்பு இருப்பதால், பொருத்தமானவரை தேர்வு செய்ய 22 மில்லியனில் 1 வாய்ப்பு மட்டுமே இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.

கோவிட் தொற்றுப் பரவல் காரணமாக லூசிக்கான அறுவை சிகிச்சை உடனடியாக நடைபெறவில்லை. பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தள்ளிப்போனது.

கிட்னி கேங்

வேல்ஸ், மனிதநேயம், மருத்துவம்

பட மூலாதாரம், LUCY AND CENYDD OWEN

படக்குறிப்பு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய சிகிச்சை பெற்று வரும் லூசி, கேட்டி

அறுவை சிகிச்சை தாமதமானதால், தொடர்பு கொள்ள வசதியாக கேட்டி ஒரு வாட்சப் குழுவை உருவாக்கி அதில் லூசியையும், செனைடையும் சேர்த்தார்.

அந்த குழுவுக்கு ‘தி கிட்னி கேங்’ (The Kidney Gang) என பெயரிடப்பட்டு இருந்தது.

"கேட்டி மருத்துவமனைக்கு செல்லும் புகைப்படங்களையும், பரிசோதனை முடிவுகளையும் அந்த குழுவில் பகிர்ந்து கொள்வார்," என செனைட் நினைவு கூர்ந்தார்.

"எல்லா பதிவுகளும் என்னிடம் இன்னும் உள்ளன. ஒரு நல்ல காரியத்தை செய்வதாக நினைத்து கேட்டி மிக உற்சாகமாக இருந்தார். அவரால் தான் லூசிக்கு வாழ்க்கை திரும்ப கிடைத்தது."

உங்கள் வாழ்க்கைக்கு தொடர்பே இல்லாத ஒரு அந்நியர் உங்களுக்கு செய்த உதவிகளை நினைத்து தனக்கு இன்னும் ஆச்சரியமாக இருப்பதாக செனைட் கூறினார்.

இறுதியாக 2022ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதிக்கு லூசிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. கேட்டியின் ஒரு சிறுநீரகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக லூசிக்கு பொருத்தப்பட்டது.

"கடந்த 5 வருடங்களாக நான் மதுபானம் எதுவும் குடிக்கவில்லை. நான் குறிப்பிட்ட சில உணவுகளை மட்டுமே சாப்பிட்டேன். ஆனால் இனி எனக்கு பிடித்ததை குடிக்க முடியும், சாப்பிட முடியும். பழைய வாழ்க்கைக்கு திரும்பியதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது," என அறுவை சிகிச்சைக்கு பிறகு லூசி தெரிவித்தார்.

"நாங்கள் ஞாயிற்றுக்கிழமை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டோம். அடுத்த நாள் காலை எனக்கு அறுவை சிகிச்சை நடந்தது. என்னுடைய கிட்னியை எடுத்து லூசிக்கு பொருத்தினார்கள். அவ்வளவுதான்," என்கிறார் கேட்டி.

"லூசியை சந்தித்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எனக்கு இதனால் எந்த இழப்புமில்லை. ஆனால் லூசிக்கு இதன் மூலமாக வாழ்க்கை கிடைத்து இருக்கிறது."

இண்டிக்கு தான் தனது முதல் நன்றி என்று கூறிய லூசி, "சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இன்னும் 5 வருடம் தான் வாழ்நாள் இருப்பதாக சொன்னார்கள். ஆனாலும் எனக்கு அறுவை சிகிச்சை உடனே நடக்கவில்லை. காத்திருப்பு பட்டியலில் நான் சில வருடம் காத்திருந்தேன். இப்போது என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது," என்றார்.

"என்னை பார்க்கும் போது எனக்கே பெருமையாக இருக்கிறது. என் பாட்டியுடன் நான் வெளியே செல்லும் போதெல்லாம், எனது பேத்தி சிறுநீரகத்தை தானமாக கொடுத்தார் என்று மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார். இது சில நேரங்களில் எனக்கு கூச்சமாகவும் இருக்கிறது," என்று தெரிவித்தார் கேட்டி.

கேட்டியை பற்றி பேசிய செனைட், "தன்னலமற்ற, அற்புதமான நபர்" என விவரித்தார்.

ஆனால் அவருக்கு என் நகைச்சுவை மட்டும் பிடிக்கவில்லை. நான் ஜோக் சொல்வதை நிறுத்தாவிட்டால், தன்னுடைய கிட்னியை திரும்பக் கேட்பேன் என்று என்னிடம் கேட்டி சொல்வார்.

"நிறைய நல்லவர்கள் இங்கே இருக்கிறார்கள். அன்று அந்த கடற்கரைக்கு போகாமல் இருந்திருந்தால் லூசியின் கிட்னி கிடைத்து இருக்காது. அதனால் ஒருபோதும் நம்பிக்கையை கைவிடாதீர்கள்." என்கிறார் கேட்டி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: