அமெரிக்கா டு சென்னை: 26 மணி நேர பயணத்தில் அறுவை சிகிச்சைக்காக இந்தியா வந்த நோயாளி

பட மூலாதாரம், ICATT
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்தி, பெங்களூரு
அவசர அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒரு இந்திய பெண், இந்த வாரம் அமெரிக்காவில் இருந்து தாய்நாட்டுக்கு அவசரகால மருத்துவ விமானம் மூலம் அழைத்துச் வரப்பட்டுள்ளார்.
அந்த விமானத்தில் அந்த நோயாளியின் பயணம் 26 மணி நேரம் நீடித்தது. வழியில் மூன்று முறை எரிபொருள் நிரப்புவதற்காக அந்த விமானம் நிறுத்தப்பட்டது - செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இந்தியாவின் தென்னக நகரமான சென்னையை வந்தடையும் முன்பும் ஒருமுறை ஐஸ்லாந்திலும் இரண்டாம் முறை துருக்கியிலும் அந்த விமானம் நிறுத்தப்பட்டது.
அந்த பெண் இப்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"இதய வால்வு பிரச்னையுடன் அமெரிக்காவில் உள்ள ஐசியுவில் அந்த பெண் சேர்க்கப்பட்டிருந்தார். ஜூலை 5ஆம் தேதி எங்கள் இருதயநோய் நிபுணர் டாக்டர் சாய் சதீஷை அந்த பெண்ணின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர். அதைத்தொடர்ந்து இதய வால்வை சரி செய்ய இங்கு வந்தனர்," என்று மருத்துவமனை அதிகாரி பிபிசியிடம் கூறினார்.
67 வயதாகும் பெண் - யார் என்ற அடையாளத்தை மருத்துவ நிர்வாகம் வெளியிடவில்லை - ஓரிகானின் போர்ட்லேண்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தபோது அவருக்கு உடல் பிரச்னை ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து தாய்நாட்டில் உள்ள வீட்டிலேயே அவருக்கு சிகிச்சையளிப்பது நல்லது என்று அவரது குடும்பத்தினர் கருதினர். இதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் உள்ள விமான ஆம்புலன்ஸ் சேவையான International Critical-Care Air Transfer Team (ICATT) அமைப்பை தொடர்பு கொண்டனர்.
ஐசிஏடிடியின் இணை நிறுவனரும் இயக்குநருமான டாக்டர் ஷாலினி நல்வாட் இது குறித்து கூறுகையில், "விமான நிலையங்களில் கட்டாய எரிபொருள் மற்றும் பராமரிப்பு நேரத்தைக் குறைக்க நாங்கள் இரண்டு விமானங்களைப் பயன்படுத்தினோம். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து சென்னைக்கு புற்றுநோய் நோயாளியுடன் 18 மணி நேர பயணத்தை ஒரு முறை எங்களுடைய ஆம்புலன்ஸ் விமான சேவை மேற்கொண்டது. அதுவும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்த கொரோனா காலகட்டத்தில் இந்த சேவை வழங்கப்பட்டது," என்றார்.
இந்தியாவில் ஏர் ஆம்புலன்ஸ் தொழில் இன்னும் பெரிய அளவில் மேம்படவில்லை. அந்த துறை தற்போது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 6% வளர்ச்சியடைந்து வருவதாகவும், விரிவாக்கத்திற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான இந்திய தொழில் நிறுவனங்களால் தனியார் ஏர் ஆம்புலன்ஸ்களை அதிக விலை கொடுத்து வாங்க முடியவில்லை, ஆனால் அத்தகைய ஆம்புலன்ஸ் விமானத்துக்கு தேவை அதிகரித்து வருவதாக சேவை வழங்குநர்கள் கூறுகின்றனர்.
கடந்த மே மாதம், இந்திய மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசும்போது, நாட்டில் 49 ஏர் ஆம்புலன்ஸ்கள் உள்ளன, அவை 19 ஆபரேட்டர்களால் இயக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் சுமார் 4,100 நோயாளிகள் ஏர் ஆம்புலன்ஸ்களில் சிகிச்சை பெற பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
ரெய்காவிக் முதல் இஸ்தான்புல் வரை
அமெரிக்காவில் இருந்து இந்திய பெண் நோயாளியை அழைத்து வர, ICATT அமைப்பின் மருத்துவக் குழு, பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கும் நோயாளியைத் தயார்படுத்துவதற்கும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே போர்ட்லேண்டை அடைந்தது. அக்குழுவில் முக்கியமான பராமரிப்பு மருத்துவர்கள் மற்றும் இரண்டு பெர்ஃப்யூசிஸ்டுகள் (இதய-நுரையீரல் இயந்திரங்களை இயக்குபவர்கள்) இடம்பெற்றிருந்தனர்.
முதலில் ஒரு சேலஞ்சர் 605 விமானத்தில் அவர்கள் பறந்தனர் - அது "பறக்கும் ICU" ஆக மாற்றப்பட்டது - ஐஸ்லாந்தில் உள்ள ரெய்காவிக் நகரில் அந்த விமானத்தின் எரிபொருள் நிரப்பப்பட்டது.
பின்னர் அவர்கள் துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லுக்குச் சென்றனர், அங்கு நோயாளி புதிய குழுவினரைக் கொண்ட மற்றொரு விமானத்திற்கு மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்வதற்கு முன்பு துருக்கியில் உள்ள தியர்பாகிர் என்ற இடத்தில் மீண்டும் எரிபொருள் நிரப்ப நிறுத்தினர்.
ஒவ்வொரு முறையும் எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் நிறுத்தப்படும்போது கட்டாய சோதனைகளுக்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை குறைக்கும் வகையில் விமானம் மாற்றப்பட்டது என்கிறார் டாக்டர் நல்வாட்.
"எட்டு மணிநேரம் பறந்த பிறகு விமானிகள் ஓய்வெடுப்பது கட்டாயமாகும், அதற்கேற்ப விமான பணியாளர்களும் மாற்றப்பட்டனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
2017இல் நிறுவப்பட்ட ICATT, 25 மருத்துவர்களையும் 25 பெர்ஃப்யூசிஸ்டுகளையும் கொண்டுள்ளது. இந்த அமைப்பு, இந்தியாவில் இரண்டு விமானங்களை வைத்திருக்கிறது - ஒன்று பொதுவாக தெற்கு நகரத்தில் நிறுத்தப்படும், மற்றொன்று மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு நகரமான கொல்கத்தாவில் உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் நோயாளிகளின் தேவை அதிகமாக இருப்பதால், இரண்டாவது விமானம் தலைநகர் டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது என்று டாக்டர் நல்வாட் கூறினார்.
வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களில் இருந்து பல நோயாளிகள் இந்த சேவைகளைப் பயன்படுத்தி தெற்கில் உள்ள மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள், அங்கு மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் சிறப்பாக உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
விமானத்தை கொல்கத்தாவுக்கு மாற்றுவது செலவுகளைக் குறைத்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
முன்பு, ஒரு நோயாளி கொல்கத்தாவில் இருந்து தெற்கே உள்ள பெரிய நகரத்திற்கு பறக்க 14 லட்சம் வரை செலவாகும். இப்போது அதில் பாதி தொகை மட்டுமே ஆகிறது.
ஆனால், போர்ட்லேண்டில் இருந்து சென்னைக்கு சமீபத்தில் வந்த ஆம்புலன்ஸ் விமானத்துக்கான செலவு கொஞ்சம் அதிகம்தான் என்று தொகை எண்ணை தெரிவிக்காமல் முடித்துக் கொண்டார் டாக்டர் நல்வாட்.
ஆனால் இந்த பயணத்திற்கு சுமார் ஒரு கோடி வரை செலவாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வோர் நாளும் இரண்டு அல்லது மூன்று நோயாளிகள், தங்களின் ஆம்புலன்ஸ் விமான சேவையை பயன்படுத்துவதாகக் கூறும் டாக்டர் நால்வாட், நோயாளிகள் மட்டுமின்றி மாற்று அறுவை சிகிச்சைக்காக உடல் உறுப்புகளை விமானத்தில் கொண்டு செல்லும் சேவையையும் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












