'ஆணாக இருந்தும் மாதவிடாய் வலிகளை அனுபவித்தேன்' - தமிழகத்தின் இடைப்பாலின ஆண் கடந்துவந்த துயரமான பாதை?

'ஆணாக இருந்தும் மாதவிடாய் வலிகளை அனுபவித்தேன்' - தமிழகத்தின் இடைப்பாலின ஆண் கடந்துவந்த துயரமான பாதை?
    • எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

”எங்களை போன்றவர்களின் கதைகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டும் இந்தச் சமூகம், உண்மையில் எங்களை பற்றி புரிந்துகொள்வதில் அக்கறை செலுத்துவதில்லை. எங்களுக்கு ஆதரவளிப்பதும் இல்லை. ஆனால் நாம் எங்கே நிராகரிக்கப்படுகிறோமோ அங்கேதான் நமக்கான அங்கீகாரத்தையும் பெற வேண்டும். எனவே அதற்கான முயற்சிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இடைப்பாலின ஆண் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி.

உயிரியல் ரீதியாக ஆணாக காணப்படும் ஒருவருக்கு பெண்ணின் மரபணுக்கள் அதிகமாகவும் பெண்ணின் உடற்கூறியலும் அமைந்திருக்கலாம். அதேபோல் உயிரியல் ரீதியாக பெண்ணாக பிறக்கும் ஒருவருக்கு ஆணின் மரபணுக்கள் அதிகமாகவும், ஆணின் உடற்கூறியலும் அமைந்திருக்கலாம்.

அதாவது ஆண், பெண் என இருபாலினத்தைச் சேர்ந்த பாலியல் உடற்கூறியலோடும் பிறப்பவர்களை இடைப்பாலினத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கின்றனர். இடைப்பாலினம் குறித்தான விழிப்புணர்வு இந்தியா போன்ற நாடுகளில் குறைவாகவே காணப்படுகிறது. அதுவே அம்மக்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.

தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர், பின்னணி குரல் கலைஞர் என பன்முகத்தன்மையில் இயங்கி கொண்டிருந்தவர் எஸ்.ஆர். சக்கரவர்த்தி. ஆனால் தற்போது சமூகத்தாலும், சக கலைஞர்களாலும் ஒதுக்கிவைக்கப்பட்டு, வீட்டில் முடங்கியிருக்கிறார். ”நான் இடைபாலினத்தைச் (Intersex Person) சேர்ந்தவன்” என்று அவர் அறிவித்ததே அதற்கு காரணம் என்கிறார் அவர்.

”வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. வாழ்க்கையின் அனைத்து பக்கங்களிலிருந்தும் நிராகரிப்புகளையும், வலிகளையும் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று பிபிசி தமிழிடம் பேசத் துவங்குகிறார் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி.

அவர் தொடர்ந்து பேசும்போது, “என்னுடைய சொந்த ஊர் பன்ருட்டி. நானும் ஒரு சாதாரண குழந்தையாகத்தான் பிறந்து வளர்ந்து வந்தேன். ஆனால் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, திடீரென ஒருநாள் என்னுடைய பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அம்மாவிடம் கூறினேன். அவர் முதலில் எனக்கு ஏதோ அடிபட்டிருக்கும் என நினைத்தார்.

ஆனால் மருத்துவமனை சென்று பரிசோதித்தப் பிறகுதான் எனக்கு உதிரப்போக்கு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால் அன்றைய காலத்தில் இடைப்பாலினம் குறித்த விழிப்புணர்வோ, இதை பரிசோதிப்பதற்கான மருத்துவ வசதிகளோ கிடையாது. என் வயிற்றில் கைவைத்து பரிசோதித்த மருத்துவர், எனக்கு கர்ப்பப்பை இருக்கிறது என்று அம்மாவிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் எனக்கு அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அந்த வயதில் என்னுடைய உடலுக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு உதிரப்போக்கு ஏற்பட்டதை மட்டும் என் நண்பர் ஒருவனிடம் கூறினேன். அவன் அவனுடைய அம்மாவிடம் தெரிவிக்க, அவர் என் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துவிட்டார்.

அப்படியே ஊர் முழுவதும் நான் பேசுபொருள் ஆகிவிட்டேன். அன்று முதல் நான் எதிர்கொண்ட ஒடுக்குமுறைகளும், நிராகரிப்புகளும் இன்னமும் தொடர்ந்து வருகின்றன. காரணமே இல்லாமல் பள்ளியில் என் ஆசிரியர்கள் என்னை அடிப்பார்கள். வெறுப்புடன் நடந்துகொள்வார்கள். அந்த சிறுவயதில், நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் என்று யோசிப்பேன்” என்று வேதனையுடன் கூறுகிறார் சக்கரவர்த்தி.

'ஆணாக இருந்தும் மாதவிடாய் வலிகளை அனுபவித்தேன்' - தமிழகத்தின் இடைப்பாலின ஆண் கடந்துவந்த துயரமான பாதை?

“இடைப்பாலினம் குறித்து யாருக்கும் விழிப்புணர்வு இல்லாததால், என்னை அனைவரும் ஒரு திருநங்கையாக நினைத்தார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் இந்தச் சமூகத்தில் எதிர்கொள்ளும் அனைத்து ஒடுக்குமுறைகளையும் நானும் அனுபவித்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போது, என் வகுப்பு ஆசிரியர் ஒருவரே என்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார். சாலைகளில் நடந்துபோகும்போது என் மேல் தண்ணீரை எடுத்து ஊற்றுவார்கள்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சமூகத்தில் இப்படியான அழுத்தங்களை சந்தித்து வந்த அதே நேரத்தில், உடல் ரீதியாகவும் பல துயரங்களை அனுபவித்ததாக தெரிவிக்கிறார் சக்கரவர்த்தி. ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படும்போது என்னென்ன வலிகள் ஏற்படுமோ, அத்தனை வலிகளையும் தான் அனுபவித்ததாக அவர் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ” மாதவிடாய் காலங்களில் பெண்கள் நேப்கின்களை பயன்படுத்துவது போல் என்னால் அவ்வளவு எளிதாக அதை பயன்படுத்த முடியாது. ஏனென்றால் பெண்களின் பிறப்புறுப்பு அமைப்பிற்கும், ஆண்களின் பிறப்புறுப்பு அமைப்பிற்கும் உள்ள வேற்றுமை அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் எவ்வளவு சிக்கலான முறையில் நான் நேப்கின்களை பயன்படுத்தியிருப்பேன் என்பதை நினைத்து பாருங்கள்.

அதற்காகவே மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை நான் அணிய வேண்டும். அதன் காரணமாக மாதவிடாய் காலத்திற்கு பிறகு எனக்கு நிறைய தொற்றுகள் ஏற்பட்டிருக்கின்றன. அதற்கும் தனியாக மருந்துகள் எடுத்துகொள்வேன். தூங்கும்போது என்னால் நிம்மதியாக தூங்க முடியாது. வயிற்று வலி, கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி என அனைத்து இன்னல்களையும் நான் அப்போது அனுபவிப்பேன்” என்கிறார் அவர் .

10வயதில் தனக்கு ஏற்பட்ட மாதவிடாய், அதன் பின் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்தது என்று சக்கரவர்த்தி கூறுகிறார். சில நேரங்களில் மாதங்கள் தவறியும் மாதவிடாய் ஏற்பட்டிருக்கின்றன. “மாதவிடாய் தள்ளிபோகும் நேரங்களில், எப்போது வேண்டுமானாலும் மாதவிடாய் ஏற்பட்டுவிடுமே என்ற பதட்டத்துடன் நான் இருந்திருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இடைப்பாலினம், தன்பால் ஈர்ப்பாளர், தமிழ்நாடு

பட மூலாதாரம், Facebook/Src Chakravarthy

மாதவிடாய் பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த சக்கரவர்த்திக்கு, அவருடைய 11வது வயதில், திடீரென ஒருநாள் விந்து வெளியேறியுள்ளது. இதனால் மீண்டும் மருத்துவரின் பரிசோதனைக்கு சென்றிருக்கிறார். அப்போது மருத்துவர் தன்னுடைய தாயிடம் உரையாடியதை கவனித்ததன் மூலமே தன்னை பற்றிய உண்மைகள் ஓரளவு புரிந்ததாக அவர் கூறுகிறார்.

”நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது இதுகுறித்து என்னிடம் வெளிப்படையாக பேசிய என் அம்மா, ‘உனக்கு கர்ப்பப்பை இருக்கிறது. அதனால்தான் உனக்கு உதிரப்போக்கு ஏற்படுகிறது. வாழ்நாள் முழுவதும் நீ இப்படிதான் இருக்க போகிறாய். உன்னால் ஒரு ஆணையும் திருமணம் செய்துகொள்ள முடியாது, ஒரு பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள முடியாது. ஆனால் அதற்காக சோர்ந்துவிடாமல், உன் வாழ்க்கையை வித்தியாசமாக அமைத்துகொள்ள நீ முயற்சி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

அந்த சமயத்தில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன், நான் சோர்வடையும்போது நிறைய கதைகள் கூறி என்னை உற்சாகப்படுத்துவான். அவனுக்கு சினிமாவிற்குள் செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தது. அவன் கூறும் கதைகளில் என்னை கதாநாயகனாக உருவகப்படுத்துவான். அப்படிதான் எனக்கு ஊடகங்களின் மீதும், நடிப்பின் மீதும் ஆர்வம் வர தொடங்கியது” என்று விவரிக்கிறார் சக்கரவர்த்தி.

தன்னை ஏளனமாக பார்த்து வந்த ஊர் மக்களின் முன்னால், திரையில் தோன்றி கௌரவமாக வலம் வரவேண்டும் என எண்ணியதாகவும், அதேசமயத்தில் தங்களுடைய குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்ததால் தனக்கு ஊடக வாய்ப்புகள் அமைவதற்கு வழி கிடைத்ததாகவும் அவர் கூறுகிறார்.

இடைப்பாலினம், தன்பால் ஈர்ப்பாளர், தமிழ்நாடு

பட மூலாதாரம், Facebook/Src Chakravarthy

இதுகுறித்து அவர் கூறும்போது, “ சென்னைக்கு வந்த பிறகு என்னுடைய அண்டை வீட்டினர் ஒருவரின் உதவியால், எனக்கு முதன்முதலில் ’பின்னனி குரல்’ கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் தூர்தர்ஷனில் நிகழ்ச்சி தொப்பாளராகவும் வாய்ப்பு கிடைத்தது. அங்கேதான் சண்முகநாதன் என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது.

என் வாழ்க்கையில் ஒரு குரு போல அவர் அமைந்தார். இப்போது வரை அவர் எனக்கு ஆதரவளித்து வருகிறார். தூர்தர்ஷனில் மருத்துவ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகளை அவர் எனக்கு ஏற்படுத்தி கொடுத்தார். அதேசமயம் சில தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்திருந்தேன் ” என்று அவர் தெரிவிக்கிறார்.

”மருத்துவ நிகழ்ச்சிகளை தொகுந்து வழங்கி வந்த காலத்தில், மருத்துவர்களிடம் என்னுடைய சந்தேகங்களை கேட்பதற்கான வாய்ப்புகள் நிறைய அமைந்தன. அப்படிதான் மருத்துவர் ஒருவரின் ஆலோசனையுடன் முதன்முதலாக, ஊடுகதிர் (Scan) மூலம் என் வயிற்றை பரிசோதனை செய்தேன்.

அதில் எனது கர்ப்பப்பை என்னுடைய பிராஸ்டேட் உறுப்புடன் (prostate - சிறுநீர் சுரப்பி) இணைந்திருக்கிறது என்று தெரியவந்தது. எனக்கு மாதவிடாய் ஏற்பட துவங்கிய காலத்திலிருந்து சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சனைகள் இருந்தன. அதற்கான காரணம் எனக்கு அப்போதுதான் புரிந்தது.

இதனை அறிந்தபிறகு, அடுத்ததாக எனக்கு மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில் என்னுடைய க்ரோமோசோம் `46xx` ஆக இருந்தது. அதாவது பெண்ணுக்கான மரபணுக்களே என் உடலில் அதிகமாக இருப்பது தெரியவந்தது.

பின் விந்து பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் விந்தணுக்கள் ஒன்று கூட இல்லை. அப்போதுதான் நான் இடைப்பாலினத்தைச் சேர்ந்த நபராக இருக்கிறேன் என்று எனக்கு சொல்லப்பட்டது. அதுவரை இடைப்பாலினம் என்ற வார்த்தை எனக்கு பரீட்சையமாக இல்லை.

அதேபோல் நான் ஒரு இடைப்பாலின நபர் என்பது குறித்து யாரிடமும் சொல்லவில்லை. என் பெற்றோருக்கும், உடன்பிறந்தவர்களுக்கும் மட்டுமே தெரிந்த விஷயமாக அது இருந்தது” என்று தன் உடல் மற்றும் பாலினத்தின் நிலை குறித்து விவரிக்கிறார் சக்கரவர்த்தி.

”கர்ப்பப்பையினால்தான் சிறுநீர் கழிப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது என்று தெரிந்தபிறகு, அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பையை அகற்றிவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால் அது சில சிக்கல்களை ஏற்படுத்தலாம் என அப்போதே மருத்துவர் எச்சரித்தார். நான் கேட்கவில்லை, மாதவிடாய் வலிகளை தாங்க முடியாமல் 2012ஆம் ஆண்டு என்னுடைய 30 வயதில் கர்ப்பபையை அகற்றிவிட்டேன். அவர் எச்சரித்தது போலவே, அறுவை சிகிச்சைக்கு பின் உடல்நிலை மோசமானது” என்று வேதனையுடன் தெரிவிக்கிறார் அவர்.

இடைப்பாலினம், தன்பால் ஈர்ப்பாளர், தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், ஹார்மோன் பிரச்னைகள், உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகளை தற்போது சக்கரவர்த்தி எதிர்கொண்டு வருகிறார். இதனால் தொடர்ச்சியாக வேலை செய்வதிலும் அவருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அதன்பின் 2019ஆம் ஆண்டில், தான் ஒரு இடைப்பாலினத்தவராக இருப்பது குறித்து வெளிப்படையாக அறிவித்தார் சக்கரவர்த்தி. அப்போது முதல் ஊடகத்துறையில் தனக்கு வரும் வாய்ப்புகள் குறைய துவங்கியதாகவும், அனைவரும் தன்னை ஒதுக்கி வைத்ததாகவும் அவர் கூறுகிறார்.

பிபிசியிடம் இதுகுறித்து பேசிய அவர்,”அந்த சமயத்தில் நான் சில நாடகங்களில் நடித்துகொண்டிருந்தேன். நான் ஒரு இடைப்பாலினத்தைச் சேர்ந்தவன் என அறிவித்ததும், மற்றவர்கள் என்னிடம் அணுகும் விதத்தில் வித்தியாசம் ஏற்பட்டது. நான் நடித்துகொண்டிருந்த நாடகத்தின் இயக்குனர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். நான் அவரிடமிருந்து விலகிச் சென்றேன். அதனால் என்னை வேண்டுமென்றே ஷீட்டிங்கின்போது அவமானப்படுத்துவார். சக கலைஞர்கள் கூட எனக்கு ஆதரவளிக்கவில்லை.

ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமிருந்தும் கூட எனக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒருபுறம் ,மோசமான உடல்நிலை மற்றொருபுறம் வேலை செய்யும் இடத்தில் சந்திக்கும் ஒடுக்குமுறை என முற்றிலும் சோர்ந்துபோனேன். ஒருகட்டத்தில், எனக்கான வாய்ப்புகள் வருவது நின்றுவிட்டது. தற்போது எனக்கு எந்த வருமானமும் இல்லை. நான் முற்றிலும் என் பெற்றோரை நம்பிதான் இருக்கிறேன்.

என் அப்பாவின் பென்சன் ஊதியத்தில்தான் என்னுடைய மருத்துவ செலவுகளை செய்கிறேன். என் அம்மா, என்னால் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். ஆனால் ஒருபோதும் என்னை அவர் வெறுத்தது இல்லை. நான் வாழ்க்கையின் மீது விரக்திகொள்ளும்போதெல்லாம் அவர்தான் எனக்கு ஆதரவளிக்கிறார்” என்று கூறுகிறார் சக்கரவர்த்தி.

சமீபத்தில் தமிழக அரசால், மூன்றாம் பாலினத்தின் ஒரு பிரிவாக இடைப்பாலினமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் மூன்றாம் பாலினத்தவருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் அடையாள அட்டையை (TG CARD) இனி இடைப்பாலினத்தவரும் பெற்றுகொள்ளலாம். இந்த அடையாள அட்டையை, பெற்றிருக்கும் முதல் நபராக எஸ்.ஆர். சக்கரவர்த்தி இருக்கிறார்.

இடைப்பாலினம், தன்பால் ஈர்ப்பாளர், தமிழ்நாடு

பட மூலாதாரம், Facebook/Src Chakravarthy

இதுகுறித்து அவர் கூறும்போது, “நம் மாநிலத்தில் இருபதாயிரத்திற்கும் மேலான இடைப்பாலினத்தவர்கள் இருக்கிறார்கள் என குயர் அமைப்பினரின் சில தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் வெளிப்படையாக வந்து ’நான் ஒரு இடைப்பாலினத்தைச் சேர்ந்தவர்’ என்பதை கூறுவதற்கு அவர்களுக்கு தயக்கம் இருக்கிறது.

திருநங்கை மற்றும் திருநர் சமூகம் குறித்து ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு அளவிற்கு கூட இதுவரை இடைப்பாலினம் குறித்து ஏற்படவில்லை. LGBT என்று மட்டுமே சிலருக்கு தெரிகிறது. ஆனால் அதற்கு பின்னால் LGBTQIA+ என்று இருப்பதை அனைவரும் அறிய வேண்டும். நமது பள்ளி கல்விகளிலேயே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவருக்காக வழங்கப்படும் தமிழ்நாடு அடையாள அட்டையில் (TG CARD), தற்போது இடைப்பாலினத்தை இணைத்த பிறகும் கூட, அதனை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இடைப்பாலினத்துகாக அந்த அடையாள அட்டையை பெற்றிருக்கும் முதல் நபர் நான்தான். இதனை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கூட தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இனிமேலாவது இடைப்பாலினத்தவர்கள் தங்களுடைய தயக்கங்களை உடைத்து வெளியே வரவேண்டும்” என்று கூறுகிறார் சக்கரவர்த்தி.

”வாழ்க்கையில் இப்போது எனக்கென எதுவுமே இல்லை. எனக்கும் காதலிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் இதுவரை என்னை ஏற்றுகொண்டு, என்மீது அன்பு செலுத்தும் ஒருவரை கூட சந்தித்தது இல்லை. ஒரு இடைப்பாலினத்தவராக நான் அனுபவிக்கும் துயரங்களை, இனி வரும் காலங்களில் பிறக்கும் இடைப்பாலின குழந்தைகள் அனுபவிக்க கூடாது.

எங்களை போன்றவர்களின் கதைகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டும் இந்தச் சமூகம், உண்மையில் எங்களை பற்றி புரிந்துகொள்வதில் அக்கறை செலுத்துவதில்லை. எங்களுக்கு ஆதரவளிப்பதும் இல்லை. ஆனால் நாம் எங்கே நிராகரிக்கப்படுகிறோமோ அங்கேதான் நமக்கான அங்கீகாரத்தையும் பெற வேண்டும். அதற்கான முயற்சிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்

இடைப்பாலினம், தன்பால் ஈர்ப்பாளர், தமிழ்நாடு

பட மூலாதாரம், Facebook/Src Chakravarthy

அதனுடைய பலன்களையும் மெதுவாக காணமுடிகிறது. சில மாதங்களுக்கு முன்னால் தமிழகத்தில் ஒரு இடைப்பாலின குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு ஆண், பெண் என இருப்பாலினத்தைச் சேர்ந்த பாலியல் உறுப்புகளும் அமைந்துள்ளன. இதனை அந்த குழந்தையின் தாயால் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஆனால் என்னைபற்றி கேள்விபட்ட அக்குழந்தையின் தந்தை, என்னை தொடர்புகொண்டு என் குழந்தைக்கு என்ன மாதிரியான பரிசோதனைகள் செய்ய வேண்டும், வரும்காலங்களில் எப்படி வளர்க்க வேண்டும் என என்னிடம் ஆலோசனை செய்தார். அக்குழந்தையின் வரும்காலம் குறித்து எனக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற மாற்றங்களைதான் நான் எதிர்பார்க்கிறேன். அதற்காக என் உயிர் இருக்கும் கடைசி நிமிடம் வரையிலும் முயற்சி செய்துகொண்டே இருப்பேன். சமுதாயத்தில் இதுகுறித்த முழுமையான மாற்றங்கள் வந்தால் மகிழ்வேன். ஒருவேளை மாற்றங்களே வரவில்லையென்றால், உயிருள்ள வரை அதற்காக போராடியிருக்கிறேன் என்ற நிம்மதியுடன் சென்றுவிடுவேன்” என்று கூறுகிறார் சக்கரவர்த்தி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: