சூர்யகுமார் விஸ்வரூபம் எடுத்ததால் கோலி அணிக்கு இனி என்ன சிக்கல்?

MI vs RCB

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ஒருமுறை 200 மற்றும் அதற்கு அதிகமான வெற்றி இலக்கை அநாயசமாக சேஸ் செய்து அசத்தியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் சவாலை முறியடிக்க அந்த அணிக்கு சூர்யகுமாரின் ஆட்டம் பக்கபலமாக அமைந்தது. அடுத்தடுத்து 200 ரன்களை எளிதாக சேஸிங் செய்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி எதிரணிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறியுள்ளது. அதேநேரத்தில், இந்த தொடரை வெற்றிகரமாக தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அடுத்தடுத்த தோல்விகளால் சிக்கலில் சிக்கியுள்ளது.

வான்கடே மைதானத்துக்கு வந்திருந்த ரசிகர்கள் டிக்கெட் காசுக்கு வானவேடிக்கை பார்த்துச் சென்றனர். இந்த ஆட்டத்தில் மட்டும் இரு அணிகளும் சேர்த்து 21 சிக்ஸர்கள், 37 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.

‘ஸ்கை’ அதிரடி ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் SKY எனச் செல்லமாக அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், வதேரா கூட்டணி, “200 ரன்கள் எல்லாம் ஒரு ஸ்கோரா” என்று கேட்கும் அளவுக்கு அதிரடியாக ஆடி இலக்கை எளிதாக அடைய வைத்தனர்.

அதிலும் குறிப்பாக சூர்யகுமார்யாதவ், 26 பந்துகளில் அரைசதம் அடித்து அடுத்த 9 பந்துகளில் 33 ரன்களை விளாசியது ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தது. மதம்பிடித்த யானை போன்று செயல்பட்ட சூர்யகுமார் யாதவ், 35 பந்துகளில் 84 ரன்கள்(6 சிக்ஸர், 7 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்களைச் சேஸிங் செய்ததைப் பார்த்தபின், ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் 230 ரன்களை அடித்திருந்தால்கூட அதை டிபெண்ட் செய்யதிருக்க முடியாது என்றுதான் கூறலாம்.

MI vs RCB

பட மூலாதாரம், BCCI/IPL

சூர்யகுமார்-வதேரா கூட்டணி

ஏனென்றால், ஒரு கட்டத்தில் 60 பந்துகளில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 101 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், சூர்யகுமார் அதிரடியால் திடீரென 26 பந்துகளில் 8 ரன்கள் சேர்தால் வெற்றி எனும் நிலைக்கு மும்பை இந்தியன்ஸ் நிலை மாறியது. 21 பந்துகள் மீதமிருக்கையில் அந்த 101 ரன்களை அடைந்து, மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது ஆர்சிபி வீரர்களையே மிரளவைத்துள்ளது.

சூர்யகுமார் யாதவின் பேட்டில் பட்ட பந்துகள் நேற்று சிக்ஸர், பவுண்டரி எனப் பறந்தன. ஹேசல்வுட், ஹசரங்கா, சிராஜ், ஹர்சல்படேல் ஆகிய ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் சூர்யகுமார் யாதவுக்கு எப்படிபந்துவீசுவது எனத் தெரியாமல் கையைக் கசக்கி நின்றனர்.

நிதானமாகத் தொடங்கிய சூர்யகுமார் களத்தில் செட்டில்ஆனபின் ஆர்சிபி வீரர்களின் பந்துவீச்சை துவசம் செய்தார். ஹேசல்வுட் , சிராஜ், ஹர்சல் படேல் பந்துகள் ஸ்வீப் ஷாட்டிலும், ஸ்கூப் ஷாட்டிலும் சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறந்தன. 26 பந்துகளில் அரைசதம் அடித்த சூர்யகுமார், அடுத்த 9 பந்துகளில் 33 ரன்களைச்ச சேர்த்து ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் நேற்று அடித்த ஷாட்கள் குழந்தைகள் கால்பந்து விளையாட்டில் பந்தை தூக்கி லாவகமாக அடிப்பதைப் போல் மிக எளிதாக இருந்தது. சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்தது ஐபிஎல் தொடரில் அவரின் சிறந்த ரன் குவிப்பாகும். ஆட்டநாயகன் விருது வென்ற சூர்யகுமார் கடந்த 6 இன்னிங்ஸ்களில் 4-வது அரைசதமாகும்.

சூர்யகுமார் - வதேரா ஜோடி 3வது விக்கெட்டுக்கு 64 பந்துகளில் 140 ரன்கள் சேர்த்தனர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் சார்பில் 3வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட 3வது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்குமுன் ரோஹித் சர்மா, கிப்ஸ் கூட்டணி 167 ரன்களும், டுவைன் ஸ்மித், சச்சின் கூட்டணி 163 ரன்களையும் சேர்த்திருந்தனர்.

MI vs RCB

பட மூலாதாரம், BCCI/IPL

நவீன கிரிக்கெட்டில் சிறந்த ரிஸ்ட் வீரர்

இந்திய அணியின் முன்னாள் வீரர் தாஸ் குப்தா, கூறுகையில் “ இன்றைய நவீன கிரிக்கெட் உலகில் நான் பார்த்தவரையில் மணிக்கட்டை பயன்படுத்தி பேட்டிங் செய்வதில் சிறந்தவராக சூர்யகுமார் இருக்கிறார், அதிலும் கவர் டிரைவ் ஷாட்களை ரிஸ்ட்டை பயன்படுத்தி ஆடுவதில் நம்பமுடியாத வகையில் செயல்படுகிறார்.” எனத் புகழாரம் சூட்டியுள்ளார்.

திலக் வர்மா காயத்தால் செல்லவே அவருக்குப்பதிலாக களமிறக்கப்பட்டவர் நேஹல் வதேரா. 22 வயதான வதேராவை ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு மும்பை அணி வாங்கியது. ஆனால், தனக்கு கொடுக்கப்பட்ட விலைக்கு அதிகமாகவே விளையாடி காண்பிக்க முடியும் என்ற ரீதியில் திலக்வர்மா இடத்தை வதேரா நிரப்பிவிட்டார். இந்த சீசனில் வதேரா 2வது அரைசதத்தை அடித்துள்ளார்.

MI vs RCB

பட மூலாதாரம், BCCI/IPL

ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. இந்த சீசனில் மீண்டும் டக்அவுட்டில் ஆட்டமிழக்காமல் நேற்று ஒற்றை இலக்கமான 7 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா இந்த சீசனில் ஒற்றை இலக்கத்தில் 5வதுமுறையாக விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

ஆனால், இஷான் கிஷன் கடந்த ஆட்டத்தில் காட்டிய அதே வேகத்தை, அதிரடியை இந்த போட்டியிலும் வெளிப்படுத்தினார். சிராஜ், ஹசரங்கா, ஹேசல்வுட் பந்துகளில் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசி ரன்ரேட்டை உயர்த்தி 21 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள் 4பவுண்டரிகள் அடங்கும்.

மதயானை மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்குள் செல்ல வேண்டும் என்று மதம்பிடித்த யானைபோல் கடந்த சில ஆட்டங்களாக ஆடி வருகிறது. இந்த நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 200 ரன்கள் மட்டுமல்ல அதற்கு மேல் ரன்கள் இருந்தாலும், அதையும் எளிதாக சேஸிங் செய்யவே முயற்சிக்கும். இதை வரும் போட்டிகளிலும் காண முடியும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் பந்துவீச்சாகும். டெத் ஓவர்களை வீசவும், நடுப்பகுதியில் ரன்களைக் கட்டுப்படுத்தவும் சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் திணறுகிறது. இதனால்தான் எதிரணிகளை அதிகமான ரன்களை அடிக்கவும் மும்பை இந்தியன்ஸ் அனுமதிக்கிறது.

வலுவான பேட்டிங் வரிசையை நம்பித்தான் பல போட்டிகளில் மும்பை அணி களமிறங்குகிறதே தவிர பந்துவீச்சை நம்பி அல்ல. 200 ரன்களுக்கு குறைவான ஸ்கோரை மும்பை இந்தியன்ஸ் அணியால் டிபெண்ட் செய்வது என்பது இப்போதுள்ள பந்துவீச்சாளர்களை வைத்து நடத்துவது இயலாத காரியம்.

MI vs RCB

பட மூலாதாரம், BCCI/IPL

ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கடைசி 2 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மத்வால், ஜோர்டன் ஆகியோர் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி, ஆர்சிபி ரன் வேகத்தை இழுத்துப் பிடித்தனர். கடைசி இரு ஓவர்களில் ஆர்சிபி அணியை வெறும் 15 ரன்களை மட்டுமே அடிக்கும் வகையில் மத்வால், ஜோர்டன் பந்துவீசியது பாராட்டுக்குரியது. அதுமட்டுமல்லாமல் ஜோர்டன் வீசிய 17-வது ஓவரில் 9 ரன்கள், குமார் கார்த்திகேயா வீசிய 16-வது ஓவரில் 9 ரன்கள், கேமரூன் கீரின் வீசிய 15வது ஓவரில் 6 ரன்கள் ஒருவிக்கெட் என ஆர்சிபி ரன் வேகத்துக்கு பெரிய தடைக்கல்லை உருவாக்கினர்.

ஒருவேளை ஆர்சிபி அணி கடைசி 5 ஓவர்களில் நன்றாக ஸ்கோர் செய்திருந்தால், நிச்சயமாக 30 முதல் 40ரன்கள் கூடுதலாகச் சேர்த்திருக்கும்.

ஆர்சிபி-யின் வலுவில்லாத நடுவரிசை பேட்டிங்

ஆர்சிபி அணியில் கேஜிஎப் எனப்படும் விராட் கோலி, மேக்ஸ்வெல், டூப்பிளசிஸ் ஆகிய 3 பேரில் யாரேனும் இருவர் ஸ்கோர் செய்தால்தான் அந்த அணி பெரிய ஸ்கோரை எட்டும் என்பது ஒவ்வொரு போட்டியிலும்உறுதியாகிறது.

நடுவரிசையில் உள்ள பேடஸ்மேன்கள் இக்கட்டான நேரத்தில் அதிரடியான பேட்டிங்களை வெளிப்படுத்தவோ அல்லது சிறிய கேமியோ ஆடிவிட்டு செல்லவோ திறனற்றவர்களாக இருக்கிறார்கள். ஆர்சிபியின் “சாப்ஃட் மிடில்ஆர்டர்” பேட்ஸ்மேன்கள் இந்த சீசன் முழுவதும் அந்தஅணியின் தோல்விக்கு ஏதாவது ஒரு விதத்தில் காரணமாகிவிடுகிறார்கள்.

இந்த ஆட்டத்தில் கோலி, ராவத் ஆட்டமிழந்தபின், கேப்டன் டூப்பிளசிஸ், மேக்ஸ்வெல் கூட்டணி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பவர்ப்ளே ஓவர்களை தவறாமல் பயன்படுத்திய இருவரும் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர்களாக துவம்சம் செய்தனர். பவர்ப்ளேயில் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் 62 ரன்களைச் சேர்த்தனர்.

MI vs RCB

பட மூலாதாரம், BCCI/IPL

கடந்த சில போட்டிகளாகச் சொதப்பிய மேக்ஸ்வெல் மீண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, 25 பந்துகளில் அரைசத்தை நிறைவு செய்தார், டூப்பிளசிஸ் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த சீசனில் டூப்பிளசிஸ் அடிக்கும் 6-வது அரைசதம் இதுவாகும். இந்த சீசனில் 4வதுமுறையாக மேக்ஸ்வெல்- டூப்பிளசிஸ் கூட்டணி 100 ரன்களுக்கு மேல் ஃபார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஆட்டத்திலும் இருவரும் 3வது விக்கெட்டுக்கு 120ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து பெஹரன்டார்ப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 8பவுண்டரிகள் அடங்கும். டூப்பிளசிஸ் 41 பந்துகளில் 65 ரன்களில்(3சிக்ஸர்,5பவுண்டரி) விக்கெட்டை இழந்தார்.

மும்பை பந்துவீச்சாளர் பெஹரன்டார்ப் வீசிய முதல் ஓவரிலேயே டூப்பிளசிஸ் ஆட்டமிழக்க வேண்டியது, ஆனால், மிட்விக்கெட்டில் டூப்பிளசிஸ் அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்க வதேரா தவறிவிட்டார். இந்த கேட்சைத் தவறவிட்டதற்கும் மும்பை அணி பெரிய விலை கொடுக்க நேர்ந்தது.

MI vs RCB

பட மூலாதாரம், BCCI/IPL

கடைசி 5 ஓவர்கள்

மேக்ஸ்வெல்-டூப்பிளசிஸ் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரன்ரேட் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால் இருவரும் ஆட்டமிழந்தபின் ரன்ரேட் சரியத் தொடங்கியதை மும்பை பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தி இறுக்கிப் பிடித்தனர். கடைசி 5 ஓவர்களை ஆர்சிபி சிறப்பாக கையாண்டிருந்தால், ஸ்கோர் 240 ரன்களை எட்டியிருக்கும்.

இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட கேதார் ஜாதவ் பெரிதாக எந்த தாக்கத்தையும் பேட்டிங்கில் ஏற்படுத்தவில்லை. கடைசி இரு ஓவர்களில் களத்தில் இருந்தும் பெரிதாக ரன்களையும் ஸ்கோர் செய்யவில்லை. ஜாதவ் 12 ரன்னிலும், ஹசரங்கா 12 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தினேஷ் கார்த்திக் சிறிய கேமியோ ஆடி, 18 பந்துகளில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். உடல்நலக்குறைவு காரணத்தால் களத்திலேயே இருமுறை வாந்தி எடுத்தார், கடுமையான இருமல் காரணமா அவருக்குப் பதிலாக ராவத் விக்கெட் கீப்பிங் பணியைக் கவனித்தார்.

MI vs RCB

பட மூலாதாரம், BCCI/IPL

"220 ரன் கூட பாதுகாப்பானது அல்ல"

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் எடுக்கும் ரிஸ்கிற்கு ஏற்ற பலன் கிடைக்கிறது. 200 ரன்களுக்குள் ஆர்சிபியை நாங்கள் சுருட்டியது சிறப்பானது.

டி20 கிரிக்கெட்டில் 220 ரன்கள் அடித்தால்கூட அது பாதுகாப்பான ஸ்கோரா என சொல்ல முடியாது. 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்யும்போது பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுக்கிறார்கள், அணிக்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற மனநிலைக்கு பேட்ஸ்மேன்கள் வருகிறார்கள். சிறந்த ஆடுகளம், நிதானமாக ஆடினால் நல்ல ரன்களை எடுக்கலாம். ஆகாஷ் மத்வால் சிறப்பாக கடைசி ஓவர்களை வீசினார்” எனத் தெரிவித்தார்

“ஸ்கை”க்கு பந்துவீசுவது சிரமம்

தோல்விக்குப்பின் ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஆடுகளத்தின் தன்மையைப் பார்க்கும்போது கூடுதலாக20 ரன்களை அடித்திருக்கலாம். இந்த சீசனில் ஆடுகளத்தைப் பார்க்கும்போதும், மும்பை அணியி்ன் பேட்டிங் வரிசையைப் பார்க்கும்போதும் 220 ரன்கள் போதுமானதா, எந்த அளவு ஸ்கோர் அவர்களைக் கட்டுப்படுத்தும் எனத் தெ ரியவில்லை. பேட்டிங்கில் வலுவாக மும்பை அணி இருக்கிறது.

நாங்கள் கடைசி 5 ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. 200 ரன்கள் நல்லஸ்கோர் என்றாலும், ஆடுகளம் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருந்தது. சூர்யகுமார் யாதவுக்கு பந்துவீசு உண்மையிலேயே சிரமமாக இருந்தது. பல வாய்ப்புகளைப் பயன்படுத்தியும் அவரை அடக்க முடியவில்லை, டி20 போட்டியில் பந்துவீச்சாளர்களை எளிதாக நெருக்கடியில் ஸ்கை தள்ளிவிடுகிறார்” எனத் தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் சாதனை

இந்த சீசனில் 200-க்கும் மேற்பட்ட ரன்களை 3வது முறையாகவும் ஒட்டுமொத்தத்தில் 4வது முறையாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் செய்து சாதனை படைத்துள்ளது.

அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் 200க்கும் மேற்பட்ட ரன்கள் அதி விரைவாக 21 பந்துகள் மீதமிருக்கையில் சேஸிங் செய்த அணியும் மும்பை இந்தியன்ஸ்தான். இதற்கு முன் கடந்த 2017ல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 209ரன்களை 24 பந்துகள்மீதமிருக்கையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சேஸிங் செய்திருந்தது.

சூர்யகுமார் யாதவுக்கு துணையாகவும், திலக் வர்மாவின் இடத்தை நிரப்பவும் அணியில் சேர்க்கப்பட்ட நேஹல் வதேரா 34 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

வான்ஹடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசியாக 2015ம் ஆண்டு ஆர்சிபி அணி தோற்கடித்திருந்தது. அதன்பின் 8 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தமுடியாத வரலாறு தொடர்கிறது.

MI vs RCB

பட மூலாதாரம், BCCI/IPL

ஆர்.சி.பி. அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு சிக்கலா?

2023ம் ஆண்டு ஐ.பி.எல். சீசன் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ப்ளே ஆஃப் சுற்றில் 4 இடங்களைப் பிடிக்க ஒவ்வொரு அணிகளும் கடும் போட்டியை எதிர்கொள்கின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 12 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்றாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் இன்னும் மைனஸில்தான் இருக்கிறது. அடுத்துவரும் 3 ஆட்டங்கள் மும்பை அணி, லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணியுடன் மோத உள்ளது.

இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. ஆனால், லக்னெள அணி ப்ளே ஆஃப் வாய்ப்பைப் பெறுவதற்கு கடுமையாக முயற்சிக்கும், சன்ரைசர்ஸ் அணியும் சமீபத்தில் ஃபார்முக்கு வந்திருப்பதால், அடுத்த 3 போட்டிகளுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடும் சவாலாக இருக்கும். இந்த 3 ஆட்டங்களில் குஜராத், சன்ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் வான்கடேவில் விளையாடுவது மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமான அம்சமாகும்.

மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் 2 ஆட்டங்களில் வென்றுவிட்டாலே ப்ளே ஆஃப் வாய்ப்பை பெறலாம். அதாவது 3வது இடத்தையோ அல்லது 4வது இடத்தையே பெற்று எலிமினேட்டர் சுற்றில் விளையாடலாம்.

ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்துவரும் 3 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்றால், 14 புள்ளிகளுடன் நிற்கும், அத்தகைய நிலையில் மும்பை இந்தியன்ஸ் வரும்பட்சத்தில் அதிகமான நிகர ரன்ரேட்டை வைத்திருந்தாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்புள்ளது.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளுடன் இருக்கும்பட்சத்தில், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளின் வெற்றி, தோல்வியைப் பொறுத்துதான் மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும். ஒருவேளை அடுத்துவரும் 3 ஆட்டங்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றால், தொடரிலிருந்து வெளியேறும்.

MI vs RCB

பட மூலாதாரம், BCCI/IPL

அதேநேரத்தில் ஆர்.சி.பி. அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று, ஏழாவது இடத்தில் இருக்கிறது. அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் சிக்கலின்றி பிளேஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும். ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 3 அணிகளுடன் அந்த அணி மோதவிருக்கிறது.

நடப்புத் தொடரில் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் இருந்து, அவரது தரத்திற்கான மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. நல்ல பார்மில் இருக்கும் விராட் கோலி அவரது ஆட்டத்தின் உச்சக்கட்டத்தை எட்டினால், அந்த அணியை வெல்வது எந்த அணிக்கும் சிரமமான காரியமாகவே இருக்கும். கோலியின் ரசிகர்களும் அவரிடம் அத்தகைய ஆட்டத்தையே எதிர்பார்க்கின்றனர்.

சென்னைக்கு பிளே ஆப் வாய்ப்பு எப்படி?

தற்போது 11 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகள் எடுத்துள்ளது சிஎஸ்கே.

அந்த அணிக்கு தற்போது மூன்று வாய்ப்புகள் உள்ளன. மீதமுள்ள மூன்று போட்டிகளையும் வெல்லும் பட்சத்தில் பிளே ஆஃப் தகுதி பெறுவது மட்டுமின்றி இறுதிப்போட்டிக்கு எளிதாக தகுதி பெறும்வகையில் குவாலிபயர் 1 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். இது சென்னை அணிக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் குவாலிபயர் 1 போட்டி சென்னை மண்ணில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை சென்னை மீதமுள்ள மூன்று போட்டிகளில் எதாவது ஒன்றில் தோற்றால் கூட பிளே ஆஃப் வாய்ப்பு முற்றிலுமாக கைவிட்டு போய்விடாது. ஏனெனில் அப்போது சென்னைக்கு 17 புள்ளிகள் கிடைக்கும். இப்போதைய சூழலில் மும்பை, பெங்களூரு, குஜராத் அணிகள் மட்டுமே 17 புள்ளிகளை விட அதிகம் பெறும் வாய்ப்பை கொண்டிருக்கின்றன. சென்னை அணி ரன்ரேட்டில் கவனம் செலுத்தினால் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்துவிடும்.

ஒருவேளை சென்னை அணி மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெல்லும் பட்சத்தில் 15 புள்ளிகள் கிடைக்கும். அப்போதும் பிற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து நூலிழையில் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆனால் மீதமுள்ள மூன்று போட்டிகளையும் தோற்றால் சென்னை அணியின் கோப்பைக் கனவு தகர்ந்துவிடும்.

சென்னை அணிக்கு ஒரு நல்ல செய்தி என்னவெனில் மீதமுள்ள மூன்று லீக் போட்டிகளில் இரண்டு ஆட்டங்களை சென்னை மண்ணில் விளையாடவுள்ளது. பலத்த ரசிக படையை கொண்டுள்ள சென்னையை அதன் மண்ணில் தோற்கடிப்பது டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எளிதல்ல.

சென்னை தனது கடைசி மூன்று ஆட்டங்களை டெல்லியுடன் இரண்டு ஆட்டமும், கொல்கத்தாவுடன் ஒரு ஆட்டமும் விளையாடவுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: