சண்டை செய்யாமல் சரணடைந்த ராஜஸ்தான்: இமாலய வெற்றியால் ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைத்த ஆர்சிபி

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐபிஎல் டி20 வரலாற்றிலேயே இதுபோன்ற மோசமான ஆட்டத்தைக் காண்பது மிகவும் அரிது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இன்றைய மட்டமான பேட்டிங், அதிர்ச்சியளிக்கும் தோல்வி அந்த அணியின் ப்ளேஆஃப் கனவு ஏறக்குறைய முடிவுக்கு வரவும் வாய்ப்புள்ளது.

அதேநேரம், ஆர்சிபி அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றில் தனது இருப்பை உயிர்ப்புடன் ஆர்சிபி வைத்துள்ளது.

பர்னல் ஆட்டநாயகன்

ஜெய்ப்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 60வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்திருந்தது.

172 ரன்களை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10.3 ஓவர்களில் 59 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் வரலாற்றில் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெல்வது இது 10-வது முறை. அந்த வகையில் ஆர்சிபி மைல்கல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் பர்னல், சிராஜ், கரன் சர்மா ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தனர். பவர்ப்ளே ஓவருக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி, அடுத்த 5 ஓவர்களுக்குள் மீதம் இருந்த 5 விக்கெட்டுகளையும் சீட்டுக்கட்டு சரிவதுபோல் இழந்தது.

ஜோஸ் ஹேசல்வுட்டுக்கு பதிலாக இன்று பர்னல் சேர்க்கப்பட்டிருந்தார். அற்புதமாகப் பந்துவீசிய பர்னல், ராஜஸ்தானின் பட்லர், சாம்சன், ரூட் ஆகிய 3 முக்கிய பேட்ஸ்மேன்களையும் வெளியேற்றி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

3 ஓவர்கள் வீசி 10 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்து பர்னல் ஆட்டநாயகன் விருது பெற்றார். சுழற்பந்துவீச்சாளர்கள் பிரேஸ்வெல், கரண் சர்மா தலா 2விக்கெட் ,மேக்ஸ்வெல் ஒருவிக்கெட் என சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

இதுதான் அதிகபட்சமாக!

ராஜஸ்தான் அணியில் ஹெட்மயர்(35), ஜோ ரூட்(10) ரன்கள்தான் அதிகபட்சமாகும். மற்ற முக்கிய வீரர்களான ஜெய்ஸ்வால், சாம்சன், பட்லர், படிக்கல், ஜூரேல், அஸ்வின் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

ராஜஸ்தான் அணியில் 4 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டில் ஆட்டமிழந்தனர், 4 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.

கடந்த போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 150 ரன்களை 12 ஓவர்களில் சேஸிங் செய்த ராஜஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் தலைகீழாக 59 ரன்களில் சுருண்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.

3வது மோசமான ஸ்கோர்

ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணிக்கு எதிராக 49 ரன்களில் ஆர்சிபி அணி சுருண்டதே மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர். அதன்பின் 2009இல் ஆர்சிபிக்கு எதிராக 58 ரன்னில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுருண்டுள்ளது.

இப்போது 2023இல் ஆர்சிபிக்கு எதிராக 59 ரன்னில் ராஜஸ்தான் ராயல்ஸ் மோசமான ஸ்கோர் எடுத்து தோல்வி அடைந்துள்ளது.

ஆர்சிபிக்கு எதிராக மட்டும் இரு மோசமான ஸ்கோர்களை எடுத்து ராஜஸ்தான் தோற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் ஒரு அணி எடுத்த மிகக் குறைவான ஸ்கோர் ராஜஸ்தான் சேர்த்த 59 ரன்களாகும்.

11வது ஓவரில் 2 விக்கெட், 2வது ஓவரில் 2 விக்கெட் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் களத்துக்கு வருவதும் பெவிலியன் செல்வதுமாக இருந்தனர். ஹெட்மயர், ஜோ ரூட் இருவரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் களத்தில் குறைந்தபட்சம் 5 நிமிடங்கள்கூட பேட் செய்யவில்லை என்பது அதிர்ச்சிக்குரியது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

ஆர்சிபி-க்கு வாய்ப்பு

ஆர்சிபி அணி இந்த மிகப்பெரிய வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது, நிகர ரன்ரேட்டும் மைனஸில் இருந்து ப்ளசுக்கு மாறிவிட்டது.

ஆர்சிபி அணி இந்த சீசனில் பகலில் ஆடிய 4 போட்டிகளிலும் வென்றுள்ளது.

இரவில் நடந்த 8 லீக் ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் மட்டுமே வென்று, 6 போட்டிகளில் தோற்றுள்ளது. இந்த சீசனில் ஆர்சிபி அணி கடைசியாக வெளி மாநிலங்களில் நடந்த 4 ஆட்டங்களில் 3 போட்டியில் தோற்ற நிலையில், இன்றைய வெற்றி அந்த அணிக்குப் பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

ஆர்சிபி அணி இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு முன் ஆர்சிபி அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.345 என்று இருந்தது, வெற்றிக்குப் பின் பிளஸ் 0.166 என உயர்ந்துள்ளது.

ஆர்சிபி அணி அடுத்த இரு ஆட்டங்களிலும் வென்றால் அதிகபட்சமாக 16 புள்ளிகளைப் பெற முடியும், ரன்ரேட்டையும் அதிகமாக வைத்திருப்பதும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல உதவும்.

ராஜஸ்தான் நிலை என்ன

ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இந்தத் தோல்வியால், ராஜஸ்தான் ப்ளே ஆஃப் கனவு முடிந்துவிடவில்லை, அடுத்துவரும் ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றால் 14 புள்ளிகளைப் பெற்றலாம்.

இருப்பினும் ப்ளே ஆஃப் வாய்ப்பு குறைவு, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்தப் போட்டிக்கு முன், குஜராத்திற்கு அடுத்தாற்போல், ரன்ரேட்டை 0.600 என வைத்து 2வது இடத்தில் இருந்தது. ஆனால், இந்தத் தோல்விக்குப்பின் ராஜஸ்தான் ரன்ரேட், பிளஸ் 0.140 என்று சரி்ந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

உத்வேகம் கிடைத்திருக்கிறது

ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளெசி கூறுகையில், “அற்புதமாக விளையாடினோம், நிகரரன்ரேட்டை உயர்த்த இந்த வெற்றி தேவை. பேட்டிங் செய்வதற்கு இந்த ஆடுகளம் கடினமாக இருந்தது. பவர்ப்ளேவில் பந்து மிகவும் தாழ்வாக ஷாட்களை அடிக்க முடியாததுபோல் வந்தது, இந்த ஆடுகளத்தில் 160 ரன்கள் நல்ல ஸ்கோர்.

இந்த ஸ்கோரை நாங்கள் டிஃபெண்ட் செய்திருக்கிறோம், அனைவரும் பொறுப்பேற்று விளையாடினோம். இது மிகவும் முக்கியம், ஒவ்வொருவரும் வெற்றியைக் கொண்டாடுகிறோம். அடுத்துவரும் 2 ஆட்டங்களிலும் இதே உத்வேகத்தோடு விளையாடுவோம்,” எனத் தெரிவித்தார்.

மேக்ஸ்வெல், டூப்ளெஸ்ஸி அனுஜ் அதிரடி

ஜெய்ப்பூர் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகக் கடினமான ஆடுகளமாகும். இந்த ஆடுகளத்தில் ஆர்சிபி அணியின் கேஜிஎஃப் வீரர்களான மேக்ஸ்வெல், டூப்பிளசிஸ் இருவரின் அரைசதம் பங்களிப்பு, அனுஜ் ராவத்தின் கடைசி நேர கேமியோ ஆகியவை கௌரமான ஸ்கோரை எட்டுவதற்கு உதவின. மற்றவகையில் ஆர்சிபி அணியில் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

குறிப்பாக மேக்ஸ்வெல் 30 பந்துகளில் அடித்த அரைசதம், டூப்ளெஸ்ஸி 41 பந்துகளி்ல் அடித்த அரைசதம் ஆகியவை ராஜஸ்தான் அணிக்கு பெரும் சவாலாக இருந்தது. விராட் கோலி 18 ரன்னில் ஆட்டமிழந்தபின், 2வது விக்கெட்டுக்கு டூப்ப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஜோடி களத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றனர்.

ஆடுகளத்தில் ஷாட்களை ஆடுவது கடினமாக இருந்ததால், 9 ஓவர் முதல் 12 ஓவர்கள் வரை ஆர்சிபி அணியால் எந்த பவுண்டரிகளையும் அடிக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டது. அதன்பின் சந்தீப் சர்மா ஓவரில் மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்து ரன்ரேட்டை வேகப்படுத்தினார். மேக்ஸ்வெல், டூப்ளெஸ்ஸி ஜோடி 69 ரன்கள் சேர்த்து அணியைக் கட்டமைத்தனர்.

டூப்ளெஸ்ஸி 44 பந்துகளில் 55 ரன்கள்(2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) சேர்த்து ஆசிஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 33 பந்துகளி்ல் 54 ரன்கள் சேர்த்து(3சிக்ஸர், 5பவுண்டரிகள்), சந்தீப் சர்மா பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

அதன்பின் 16வது ஓவரில் மகிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், ஆர்சிபி சற்று தடுமாறியது. 6 பந்துகளில் 3 விக்கெட்டுகளை ஆர்சிபி இழந்து திணறியது. ஆனால், அனுஜ் ராவத் கடைசி நேரத்தில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 11 பந்துகளில் 29 ரன்கள் விளாசி ஸ்கோர் உயர்வுக்கு முக்கியப் பங்காற்றினார்.

டி.கே-வின் மோசமான ஆட்டம்

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு இந்த சீசன் மோசமாக அமைந்துள்ளது. 12 போட்டிகளில் மொத்தம் 140ரன்கள்தான் சேர்த்துள்ளார். இதில் அதிகபட்சமே 30 ரன்கள்தான், ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்கவில்லை.

பல போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கிற்கு திறமையை நிரூபிக்க பேட்டிங் வாய்ப்பு கிடைத்தபோதிலும் அதைப் பயன்படுத்தவில்லை, இன்றைய ஆட்டத்திலும் டிகேயின் மோசமான ஆட்டம் தொடர்ந்தது.

ராஜஸ்தான் சொதப்பல்

ராஜஸ்தான் அணி கடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியைப் புரட்டி எடுத்து, 150 ரன்களை 12 ஓவர்களில் சேஸிங் செய்து ரன்ரேட்டில் உச்சத்துக்குச் சென்றது. ஆனால், இந்த ஆட்டத்தில் தலைகீழாக மாறி, 59 ரன்னில் சுருண்டு, ரன்ரேட்டை குறைத்துள்ளது தற்கொலை முடிவுபோல் அமைந்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அடித்த ஷாட்டும் யோசித்து அடித்தார்போல் இல்லை, ஆர்சிபி வீரர்களுக்கு ஃபீல்டிங் பயிற்சியும், கேட்ச் பயிற்சியும் அளித்தது போன்று இருந்தது.

குறிப்பாக ஜாஸ் பட்லர் ஆப்சைடில் அடித்த ஷாட் தேவையற்றது, அவ்வாறு அடித்தாலும் தூக்கி கவர் திசையில் தூக்கி அடித்திருக்கலாம். ஆனால் சிராஜுக்கு எந்தவிதமான சிரமும் இன்றி அவரின் கைகளில் பந்துவிழுமாறு பட்லர் ஷாட் அடித்தது வினோதமாக இருந்தது.

கொல்கத்தா அணிக்கு எதிராக மரண அடி அடித்து அதிவேகமாக அரைசதம் அடித்த ஜெய்ஸ்வாலுக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இன்றைய ஆட்டம் இருந்தது. 2 பந்துகளைச் சந்தித்த ஜெய்ஸ்வால், சிராஜ் வீசிய முதல் ஓவரில் டக்அவுட்டில் வெளியேறினார்.

பவர்ப்ளே ஓவருக்குள் ராஜஸ்தான் அணி அணி டாப் ஆர்டரில் 5விக்கெட்டுகளை இழந்தது. ஒரு பேட்ஸ்மேன்கூட போட்டியை வெல்ல வேண்டும் என்ற இன்டென்ட் இல்லாமல் களத்துக்கு வருவதும், சில நிமிடங்கள் இருந்துவிட்டு ஆட்டமிழந்து பெவிலியன் செல்வதுமாக இருந்தனர்.

கேப்டன் சாம்ஸன் அடித்த ஷாட் பேட்டில் எட்ஜ் எடுத்து கேட்சானது, ஜோ ரூட் முதல் ஆட்டத்தில் களமிறங்கினார், பர்னல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

படிக்கல் ஏமாற்றம்

இம்பாக்ட் ப்ளேயராக வந்த தேவ்தத் படிக்கல் 4 ரன்னில் பிரேஸ்வெல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடந்த இரு சீசன்களாகவே தேவ்தத் சிறப்பாக ஆடவில்லை.

ஆர்சிபி அணியில் இருந்தபோது, ஆடிய வேகம், ரன் குவிப்பு ராஜஸ்தான் அணிக்கு வந்தபின் காணப்படவில்லை, இந்த சீசனில் 12 போட்டியில் விளையாடிய படிக்கல் 210 ரன்கள் சேர்த்துள்ளார். ஒரு அரைசதம் அடித்துள்ளார்.

அணியில் ஹெட்மயர் மட்டும் ஆறுதலாக 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 50 ரன்கள் வரை 6 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி, அடுத்த 9 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபியிடம் சரணடைந்தது.

தோல்வியை நோக்கி பயணிக்கிறோம் என்பது ராஜஸ்தான் அணிக்குத் தெரிந்துவிட்டாலும், எளிதாகத் தோல்வியை ஏற்காமல் கடைசி பந்துவரை சண்டை செய்ய வேண்டும், போராட வேண்டும்.

கடந்த மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் ரஷித் கான் தனி ஒருவனாக கடைசிவரை அணியை எடுத்துச்சென்றார். குஜராத் அணி தோற்றாலும், ரஷித் கான் ஆட்டத்தால் நிகர ரன்ரேட் குறையவில்லை. கடைசிவரை ரஷித் கான் போராட்ட குணத்தை வெளிப்படுத்தி, அணிப் பெருமையை நிலைநாட்டினார்.

ஆனால், இன்று ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம், போட்டியில் வெல்ல வேண்டும் என்ற இன்டென்ட் இல்லாததுபோல் இருந்தது. எந்த பேட்ஸ்மேனும் கடைசிவரை போட்டியை எடுத்துச் செல்ல வேண்டும், ரன்ரேட் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் விளையாடவில்லை.

தோல்விக்குப் பொறுப்பேற்கிறோம்

ஆர்சிபி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் “பவர்ப்ளை ஓவர்களை நாங்கள் நன்றாகப் பயன்படுத்துவோம். ஆனால் இன்று அதுபோல் நடக்கவில்லை.

எங்கள் தவறுகளைப் பற்றி ஆலோசிக்க வேண்டும். ஆடுகளம் மெதுவாக இருக்கும்போது, டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளே எதிர்பார்த்த அளவு அமையாது என்பது டி20 போட்டியில் இயல்பு.

ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள். இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தோடு ஆடினர். நாங்கள் பவர்ப்ளேவில் நன்றாக ஸ்கோர் செய்திருந்தால், ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றிருக்கும்.

அடுத்து நடக்கும் தர்மசலா ஆட்டத்தில் வலிமையாக வருவோம், எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். பேட்ஸ்மேன்களை மட்டும் குறைகூற முடியாது, தோல்விக்கு அணியாகப் பொறுப்பேற்கிறோம்,” எனத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: