இளம் வீரரின் அபார பந்துவீச்சு: எதிர்பாராத முடிவால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிக்கல்

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐ.பி.எல். தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை சாய்த்து, லக்னோ சூப்பர் ஜெயேன்ட்ஸ் அணி பிளேஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடைசிப் பந்து வரை பரபரப்பாக நீடித்த இந்த ஆட்டத்தில் எதிர்பாராத வகையில் தோல்வியைத் தழுவிய மும்பை அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. லக்னோ அணிக்கு ஸ்டாய்னிஸ் பேட்டிங்கில் கைகொடுக்க, இளம் வீரர் மோசின்கான் கடைசி ஓவரை சிக்கனமாக வீசி அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோசின் கான் தோள்பட்டை காயம் காரணமாக 2023 ஐபிஎல் சீசனின் பாதித்தொடர்வரை போட்டியில் பங்கேற்கவில்லை. மோசின்கானை நீக்கிவிடலாம் என லக்னெள தலைமைப் பயிற்சியாளர் ஆன்டி பிளரும் அறிவுறுத்தினார். ஆனால், லக்னெள அணி நிர்வாகம் மோசின் கானை நீக்கவும் இல்லை மாற்றுவீரரை எடுக்கவும் இல்லை. லக்னெள அணி நிர்வாகம் வைத்திருந்த நம்பிக்கையை மோசின் கான் நேற்று காப்பாற்றினார்.
ஸ்டாய்னிஷ் ஆட்டநாயகன்
லக்னெள அணி வலுவான ஸ்கோரைப் பெறவும், அதை டிபெண்ட் செய்யவும் முக்கியக் காரணமாக இருந்தவர் மார்கஸ் ஸ்டாய்னிஷ்தான். நடுவரிசையில் களமிறங்கிய பொறுப்புடன் பேட் செய்த ஸ்டாய்னிஷ் 47 பந்துகளில் 89 ரன்கள்(4 பவுண்டரி, 8 சிக்ஸர்கள்) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அதிலும் கடைசி 3 ஓவர்களை அவர் வெளுத்து வாங்கினார். 18-வது ஓவரில் மட்டும் இரு சிக்ஸர்கள், 3 பவுண்டர்கள் என 24 ரன்கள், 19-வது ஓவரில் 15 ரன்கள், 20-வது ஓவரில் 15 ரன்கள் என 3 ஓவர்களில் மட்டும் லக்னெள அணி 54 ரன்களைச் சேர்த்தது. 17-வது ஓவர் முடிவில் ஸ்டாய்னிஷ் 35 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்திருந்தார், ஆனால், 20வது ஓவர் முடிவில் 47 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார்.
லக்னெள அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் குர்னல் பாண்டியா, ஸ்டாய்னிஷ் கூட்டணி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர். குர்னல் பாண்டியா 42 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்த நிலையில் ரிட்டயர்ஹர்ட் ஆகினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
ரோஹித், இஷான் நல்ல தொடக்கம்
178 ரன்களை துரத்திச் சென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் நல்ல தொடக்கம் அளித்தனர். லக்னெள பந்துவீச்சாளர்களை வெளுத்துவாங்கிய இருவரும் 10 ரன் ரேட்டில் அணியின் ஸ்கோரை நகர்த்தினர்.
அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் தனது முதல் 12 பந்துகளில் 3பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசினார். ரோஹித் சர்மா முதல் 3 ஓவர்களில் 4 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையி்ல், அடுத்த ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி, ஸ்கோரை பவர் ப்ளேயில் 58 ரன்களுக்கு உயர்த்தினார். இருவரின் அதிரடியால் ஸ்கோர் உயர்ந்து 10 ஓவர்களில் 90 ரன்களை எட்டியது.
இருவரையும் பிரிக்க லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னோய் கொண்டுவரப்பட்டார். அதற்குப் பலனும் கிடைத்தது. ரவி பிஸ்னாய் வீசிய முதல் ஓவரில் ரோஹித் சர்மா 37 ரன்னில் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
பிஸ்னாய் தனது 2வது ஓவரில் இஷான் கிஷன் (59 ரன்கள்)விக்கெட்டை சாய்த்து இரு செட்டிலான பேட்ஸ்மேன்களை வெளியேற்றியதன் மூலம் லக்னெள அணி்க்கு புத்துயிர் ஊட்டினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
தேவையற்ற ஷாட் ஆடிய சூர்யகுமார்
அடுத்து வந்த நேஹல் வதேரா, சூர்யகுமார் யாதவ் கூட்டணியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், நேற்று ஸ்கூப் ஷாட்டுக்கு முயன்று போல்டாகினார்.
யாஷ் தாக்கூர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் ஸ்கூப் ஷாட் அடிக்க முயன்றார். ஆனால், தாக்கூர், பந்தை வேகமாக வீசாமல் ஸ்லோவர் பாலாக வீசினார், பந்து சூர்யகுமார் பேட்டில் பட்டு ஸ்டெம்பில் அடித்ததால் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் விக்கெட்டை வீழ்த்தியது லக்னெள அணிக்கு பெரிய நம்பிக்கையை அளித்தது. கடந்த சிலபோட்டிகளாக சிறப்பாக பேட் செய்துவரும் வதேரா 16 ரன்கள் சேர்த்த நிலையில் மோசின்கான் ஓவரில் விக்கெட்டை இழந்தார். விஷ்ணு வினோத்தும் 2 ரன்னில் வெளியேறினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
கடைசி ஓவர் திக்..திக்..
இரு பெரிய ஹிட்டர்கள் டிம் டேவிட், கேமரூன் கீரீன் களத்தில் இருந்தனர். கடைசி இரு ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. நவீன் உல்ஹக் வீசிய 19வது ஓவரில் டேவிட் இரு சிக்ஸர்கள் உள்ளிட்ட 19 ரன்களைச் சேர்த்தார்.
கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி ஓவரை யார்கர்களாகவும், வைடு யார்கர்களாகவும் பந்துவீசி டேவிட், கிரீன் ஆகிய இருவரையும் பெரிய ஷாட்களை ஆட விடாமல் செய்தார் மோசின்கான்.
முதல் பந்தில் கீரீன் ரன் எடுக்கவில்லை, 2வது பந்தில் மிட்விக்கெட்டில் தட்டி ஒரு ரன்னை கீரின் எடுத்தார்.
3வது பந்தில் டேவிட் ஒரு ரன் சேர்த்தார். 4வது பந்தில் கிரீன் ரன் ஏதும் எடுக்கவில்லை. 5வது பந்தில் கீரீன் ஒரு ரன்னும், கடைசிப் பந்தில் டேவிட் 2 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மும்பை அணி 5 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.
கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய மோசின்கான் 3 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ரவி பிஸ்னாய் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். யாஷ் தாக்கூர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
"ஸ்கோர் போர்டை பார்க்கவே இல்லை"
கடைசி ஓவரை சிறப்பாக வீசி 11 ரன்களை டிபெண்ட் செய்த மோசின் கான் கூறுகையில் “ என் தந்தை கடந்த 10 நாட்களாக ஐசியூவில் இருந்து நேற்றுதான் டிஸ்சார்ஜ் ஆகினார், அவருக்காகவே இந்த ஆட்டத்தை ஆடினேன். என் பந்துவீச்சை அவர் நிச்சயம் டிவியில் பார்த்திருப்பார், மகிழ்ச்சி அடைந்திருப்பார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகியவுடன் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டேன். ஓர் ஆண்டு கிரிக்கெட் விளையாடாதது எனக்கு கடினமான ஆண்டாக இருந்தது.
கடந்த ஆண்டு நான் பந்துவீசியதற்கும், இந்த சீசனில் பந்துவீசயதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நான் பயிற்சியில் எவ்வாறு பந்து வீசினேனோ அதைப்போலவே வீசினேன். கடைசி ஓவரை வீசுகிறாயா என்று குர்னல் பாண்டியா என்னிடம் கேட்டார் நான் துணிந்து சரி என்று முடிவு செய்தேன்.
நான் பந்துவீசும் போது ஸ்கோர் கார்டைப் பார்க்கவில்லை. வெற்றிக்கு எத்தனை ரன்கள் தேவை என்பதுகூட எனக்குத் தெரியாது. 6 பந்துகளையும் சிறப்பாக வீச வேண்டும் என்ற நோக்கில் மட்டும் வீசினேன். ஸ்லோவர் பந்து, யார்கர், வைடு யார்கர் என பல்வேறு பந்துகளை வீசினேன்” எனத் தெரிவித்தார்
மும்பை அணி ஏன் தோற்றது
ரோஹித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் சேர்ந்து நல்ல தொடக்கத்தை அளித்து, வலுவான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர்.
ஆனால், சூர்யகுமார் யாதவ், வதேரா அதைப் பயன்படுத்தத் தவறவிட்டனர். இதுபோன்ற முக்கியமான ஆட்டத்தில் 360 டிகிரி வீரர் சூர்யகுமார் தொடக்கத்திலேயே ஸ்கூப் ஷாட்களை அடிக்க முயன்றிருக்க கூடாது. செட்டில் ஆன நிலையில் வித்தியாசமான ஷாட்களுக்கு சூர்ய குமார் முயன்றிருக்கலாம். சூர்ய குமாரின் விக்கெட் வீழ்ச்சி பெரிய திருப்புமுனையாக மாறியது.
மும்பை இந்தியன்ஸ் அணி நடுப்பகுதி ஓவர்களில் ரன் சேர்க்கத் தவறியதும், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடாததும் தோல்விக்கு முக்கியக் காரணமாகும். அதுமட்டுமல்லாமல் நடுப்பகுதி ஓவர்களில் ரன்கள் பெரிதாக வராததும், பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட்கள் ஏதும் அடிக்க முயலாததும் ரன்ரேட்டை மேலும் பலவீனமாக்கி, கடைசி நேரத்தில் நெருக்கடியில் தள்ளியது.

பட மூலாதாரம், BCCI/IPL
வதேரா, விஷ்ணு வினோத்தை விரைவாக களமிறக்கியதற்குப் பதிலாக, இதுபோன்ற பெரியஸ்கோரை சேஸிங் செய்யும்போது கேமரூன் கிரீன், டேவிட் இருவரையும் விரைவாக களமிறக்கி இருக்கலாம். குறிப்பாக நேஹல் வதேரா 20 பந்துகளைச் சந்தித்து 16 ரன்கள் மட்டுமே சேர்த்து மந்தமாக ஆடி ரன்ரேட்டை குறைத்துவிட்டார்.
பந்துவீச்சிலும் பியூஷ் சாவ்லா அற்புதமாக வீசி ஒருவிக்கெட்டை வீழத்தினார். இதேபோல் ஆகாஷ் மத்வால், ஹெரன்டார்ப், ஷோகீன் ஆகியோரும் கட்டுக்கோப்பாக வீசினர். ஆனால், ஜோர்டன் 4 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கினார். கடைசி 3 ஓவர்களில் மட்டும் 54 ரன்களை மும்பை பந்துவீச்சாளர்கள் வழங்கியது தோல்விக்கான முக்கியக் காரணமாகும்.
நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ நாங்கள் தோற்றுவிட்டோம், வெற்றி பெறும் அளவுக்கு நாங்கள் விளையாடவில்லை. நாங்கள் வெற்றி பெறாததற்கு சில காரணங்களும் உள்ளன. எங்களிடம் நல்ல பார்ட்னர்ஷிப் நடுப்பகுதி ஓவர்களில் அமையாதது பெரிய துரதிர்ஷ்டம். ஆடுகளத்தின் தன்மையை நன்கு ஆய்வு செய்தோம், பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும் வகையில் இருந்தது. கடைசி 3 ஓவர்களில் அதிகமாக ரன்களை வழங்கியது பின்னடைவு. நானும், இஷான் கிஷனும் நன்றாகத் தொடங்கி இலக்கை நோக்கி பயணித்தோம். அதன்பின் அதை மற்ற பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தவில்லை” எனத் தெரிவித்தார்
லக்னோவுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்

பட மூலாதாரம், BCCI/IPL
லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றியின் மூலம் 13 போட்டிகளி்ல் 15 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறி ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. சிஎஸ்கே அணிக்கு இணையாக 15 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே 2வது இடத்திலும், லக்னெள 3வது இடத்திலும் உள்ளன.
லக்னெள அணி அடுத்துவரும் கடைசி லீக் ஆட்டத்திலும் வெல்லும்பட்சத்தில் 17 புள்ளிகளுடன் ப்ளேஆப் சுற்றை உறுதி செய்யும். அதேசமயம், சிஎஸ்கே அணியும் கடைசி லீக்கில் வென்றால் 17 புள்ளிகள் பெறும் இரு அணிகளுக்கும் இடையே நிகர ரன்ரேட் முக்கியத் துருப்புச் சீட்டாக மாறும்.
மும்பை அணியால் அடுத்த போட்டியி்ல் வென்றாலும், 16 புள்ளிகள்வரையில் பெற இயலும். ஆதலால், 2வது இடத்துக்கு மும்பை அணியால் பாதிப்பு வராது. இப்போது 2வது மற்றும் 3வது இடத்துக்கு சிஎஸ்கே அணியா அல்லது லக்னெள அணியா என்பதுதான் முக்கியக் கேள்வியாகும்.
இரு அணிகளுமே தங்களின் கடைசி லீக்கில் வென்று 17 புள்ளிகளுடன் இருந்தால், நிகர ரன் ரேட் அடிப்படையி்ல் முடிவு செய்யப்படும். ஒருவேளை நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே சிறப்பாக இருந்தால் 2வது இடத்திலும் லக்னெள 3வது இடம் பெறும். கடைசி இடத்துக்கு மும்பை, ஆர்சிபி, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் போட்டியிடும்.
ஒருவேளை சிஎஸ்கே அணி கடைசி லீக்கில் வென்று, லக்னெள அணி தோற்றால் 15 புள்ளிகள்தான் பெறும். அப்போது ப்ளேஆப்பில் 3வது மற்றும் 4வது இடம் சிக்கலாக மாறும்.
ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் 16 புள்ளிகள் பெறும்பட்சத்தில் நிகர ரன்ரேட் அடிப்படையில் எந்த அணி சிறப்பாக இருக்கிறதோ அந்த அணிக்கு ப்ளே ஆப்பில் 3வது இடமும், அடுத்த அணிக்கு 4வது இடமும் கிடைக்கும். 15 புள்ளிகள் எடுத்திருக்கும் அணிக்கு இடம் கிடைக்காது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












