முதல் அணியாக டெல்லி அவுட்: பஞ்சாப் கிங்ஸ் வெற்றியால் கோலியின் ஆர்சிபி அணிக்கு நெருக்கடி

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பிரப்சிம்ரன் சிங்கின் அபாரமான சதத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் டி20 தொடரில் இருந்து முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 59-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற 168 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்திருந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டும் சேர்த்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது.
பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் தோல்வி
பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்சிம்ரன் சிங்(103) தவிர வேறுஎந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. பிரப்சிம்ரனுக்கு அடுத்ததாக அதிகபட்ச ஸ்கோர் சாம் கரன் அடித்த 20 ரன்களும், உதிரிகளாக கிடைத்த 13 ரன்களும்தான்.
தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் இசாந்த் ஷர்மா பவர்ப்ளே ஓவருக்குள் தவண்(7), லிவிங்ஸ்டோன்(4) என இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடியில் தள்ளினார். சுழற்பந்துவீச்சு கொண்டுவந்தவுடன் அக்சர் படேல் பந்துவீச்சில் ஜிதேஷ் சர்மா(5) ஆட்டமிழந்தார். பவர் ப்ளே ஓவரில் பஞ்சாப் அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
4-வது விக்கெட்டுக்கு சாம்கரன், பிரப்சிம்ரன் நிதானமாக ஆடி அணியை மீட்டனர். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைத்ததால், சாம் கரன் ஷாட்களை ஆட சிரமப்பட்டார். ஆனால், பிரப்சிம்ரன் சிங் அநாயசமாக ஷாட்களை ஆடி சிக்ஸர் , பவுண்டரிகளாக விளாசினார். டெல்லி மைதானத்தில் பலமுறை விளையாடிய அனுபவம் இருந்ததால், பிரப்சிம்ரனுக்கு எளிதாக இருந்தது. 42 பந்துகளில் பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
டாப் கியரில் சிம்ரன்
சாம்கரன், பிரப்சிம்ரன் 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தநிலையில் பிரிந்தனர். சாம் கரன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஹர்பீரித் பிரார்(2), ஷாருக்கான்(2) ரன்களில் வெளியேறினர். 42 ரன்களில் அரைசதம் அடித்த பிரப்சிம்ரன், அதன்பின் ஆட்டத்தை டாப்கியருக்கு மாற்றினார்.
அரைசதம் அடிக்கும்போது 3 சிக்ஸர், 3 பவுண்டரி சேர்த்திருந்த பிரப்சிம்ரன் அதன்பின் 3 சிக்ஸர்களையும், 7 பவுண்டரிகளையும் விளாசி அடுத்த 19 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். ஐபிஎல் தொடரில் பிரப்சிம்ரன் சிங் முதல் சதத்தை நிறைவு செய்து 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பாராட்டிய டெல்லி வீரர்கள்
பிரப்சிம்ரன் சதம் அடித்தவுடன் பேட்டை தூக்கி ரசிகர்களிடம் மகிழ்ச்சியை தெரிவிக்காமல், இரு கைகளையும் கூப்பி மைதானத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டு நன்றி செலுத்தினார். அதன்பின்புதான் டக்அவுட்டிலும், ரசிகர்களுக்கும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பிரப்சிம்ரன் சிங் சதம் அடித்தவுடன், எதிரணி என்றுகூட பாராமல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பல வீரர்கள் தாங்களாகவே முன்வந்து கைகுலுக்கி பாராட்டுகளைத் தெரிவித்துச் சென்றனர்.
பஞ்சாப் அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் பக்கம் சென்றுவிடும் என நினைத்த தருணத்தில் தனிஆளாக களத்தில் நின்று டெல்லி அணிக்கு சிம்மசொப்பனமாக பிரப்சிம்ரன் சிங் திகழ்ந்தார்.

பட மூலாதாரம், PBKS/IPL
ஆட்டநாயகன் பிரப்சிம்ரன் சிங்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் அடித்த அற்புதமான சதம், சுழற்பந்துவீச்சாளர்கள் ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் ஆகியோரின் பந்துவீச்சு முக்கியமானதாகும்.
ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சதம் அடித்து 103 ரன்களில் (65பந்துகள், 6 சிக்ஸர், 10பவுண்டரி) ஆட்டமிழந்த பிரப்சிம்ரன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
பஞ்சாப் அணியில் நேற்று மட்டும் பிரப்சிம்ரன் சிங்கைத் தவிர்த்து 8 பேட்ஸ்மேன்கள் பேட் செய்தனர். இதில் பிரப்சிம்ரன் மட்டும் 103 ரன்கள் சேர்த்தார், மற்ற 8 பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 55 பந்துகளில் 51 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். தனிஒருவனாக களத்தில் போராடி சதம் அடித்த பிரப்சிம்ரன் ஆட்டமே பஞ்சாப் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
10-வது ஓவர் முடிவுவரை பிரப்சிம்ரன் சிங் 27 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார் ஆனால், 18-வது ஓவர்கள் முடிவில் 61 பந்துகளில் சதத்தை நிறைவு செய்துவிட்டார்.

பட மூலாதாரம், BCCI/IPL
பரிதாபத்தில் டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் நேற்று கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் தவறவிட்டதால், அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இசாந்த் ஷர்மா, அக்சர் படேல் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை மற்ற பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தொடக்கத்திலேயே பஞ்சாப் அணியின் 3 விக்கெட்டுகளை இருவரும் வீழ்த்தி உதவிசெய்தனர், ஆனால் பிரப்சிம்ரன் சிங்கை ஆட்டமிழக்கச் செய்யும் அளவுக்கு மற்ற பந்துவீச்சாளர்கள் பந்துவீசவில்லை.
இவரை மட்டும் ஆட்டமிழக்க வைத்திருந்தால் ஆட்டம் டெல்லி அணியின் கையில் இருந்திருக்கும். தொடக்கத்தில் டெல்லிஅணியின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டத்தை பிரப்சிம்ரன் பறித்துவிட்டார்.
டெல்லி அணியின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒருவரான வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார், நேற்று ஒரு ஓவர் மட்டுமே வீசி 3 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழத்தினார். முகேஷ் குமாருக்கு தொடர்ந்து ஓவர்களை வழங்கியிருக்கலாம், கலீல் அகமதுக்கும், மிட்ஷெல் மார்ஷுக்கும் ஓவர்களை வழங்கி வார்னர் தவறு செய்துவிட்டார்.
“கேட்ச் மிஸ்ஸிங், மேட்ச் மிஸ்ஸிங்” என்று கிரிக்கெட்டில் சொல்வதுண்டு, பிரப்சிம்ரன் சிங்கை ஆட்டமிழக்கச் செய்ய வந்த கேட்சை ரூசோ கோட்டை விட்டதற்கு மிகப்பெரிய விலையை டெல்லி அணி கொடுக்க நேர்ந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
வார்னர் மட்டும் சிறப்பாக ஆடினால் போதுமா?
பேட்டிங்கில் வார்னர், சால்ட் மட்டுமே டெல்லி அணிக்கு நம்பிக்கையளித்தனர். டேவிட் வார்னர் மட்டும் எத்தனை போட்டிகளுக்கு தனி ஆளாக விளையாட முடியும். மற்ற வீரர்களின் பங்களிப்பும்தான் அணியின் வெற்றிக்கு உதவும். ஆனால், பெரும்பாலான போட்டிகளில் பேட்டிங்கில் மற்ற வீரர்களின் பங்களிப்பை தேட வேண்டியுள்ளது.
இந்த ஆட்டத்தில்கூட வார்னர், சால்ட் இருவரும் களத்தில் இருந்தவரை ரன்ரேட் வேகமாகச் சென்றது. ஸ்கோரை விரைவாக சேஸிங் செய்யலாம் என்ற ஆர்வத்தில் வார்னர் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார், சால்ட்டும் உதவியாக இருந்தார்.
இதனால் பஞ்சாப் அணியின் பக்கம் ஆட்டம் செல்லாமல் டெல்லி பக்கம் நகர்ந்தது. 5 ஓவர்களில் டெல்லி அணி 50ரன்களை எட்டியது, பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி டெல்லி அணி 65 ரன்கள் சேர்த்தது. வார்னர் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஆனால் பவர்ப்ளே முடிந்து ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹரை பந்துவீச தவண் அழைத்தபின் ஆட்டத்தில் திருப்பம் நிகழ்ந்தது. சால்ட் 21 ரன்னில் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், பிரார் வீசிய 7வது ஓவரில் மார்ஷ் 3ரன்னில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ரூஸோ(1), வார்னர்(54) என பிரார்வீசிய 9-வது ஓவரில் விக்கெட்டை இழந்தனர். அக்சர் படேல்(1), இம்பாக்ட் வீரர் மணிஷ் பாண்டே(0) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.
விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்திருந்த டெல்லி அணி அடுத்த 23 ரன்களைச் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிரவீண் துபை(16) ரன்னில் எல்லீஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். குல்தீப்(10), முகேஷ்(6) இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி அணியின் வெற்றிக்கு வார்னர், சால்ட் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நடுவரிசை, பின்வரிசையில் வந்த எந்த பேட்ஸ்மேன்களும் பயன்படுத்தவில்லை.
ஆடுகளமும் 2வது இன்னிங்ஸில் மாறத் தொடங்கி, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது. ராகுல் சாஹர், பிரார் பந்துகளை எதிர்கொள்ள டெல்லி பேட்ஸ்மேன்கள் கடும் சிரமப்பட்டனர். டெல்லி பேட்ஸ்மேன்களை வைத்து சாஹர், பிரார் படம் காட்டியதால் ரன்கள் வரவேயில்லை.

பட மூலாதாரம், BCCI/IPL
பிரார், சஹார் ஹீரோக்கள்
ஹர்பிரீத், சாஹர் இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 46 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் வரிசையை குலைத்தனர்.
இருவரும் சேர்ந்து 29 டாட் பந்துகளையும் வீசினர். அதாவது ஏறக்குறைய 5 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்களை ரன் அடிக்கவிடாமல் கட்டிப்போட்டனர். இருவரும் 8 ஓவர்கள் வீசியதில் 5 ஓவர்களில் ரன் ஏதும் வழங்கவில்லை.
"நீண்ட காலம் காத்திருநதேன்"
ஆட்டநாயகன் விருது வென்ற பிரப்சிம்ரன் சிங் கூறுகையில் “ நான் அதிகமாக எதையும் சிந்திக்கவில்லை. விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தவுடன், கடைசிவரை ஆட வேண்டும் என்று முடிவு செய்தேன். பஞ்சாப் அணியில் நீண்டகாலமாக இருக்கிறேன், மூத்த வீரர்களிடம் இருந்து அதிகமாகக் கற்றுக்கொண்டேன். என் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறேன். ஆடுகளத்தில் பந்து அதிகமாக டர்ன் ஆகியதால் ஷாட்களை அடிக்க சிரமமாக இருந்தது.
சாம் கரனுடன் பார்டனர்ஷிப் அமைக்க முயன்று அதன்பின் அடித்து ஆட நினைத்தேன். இந்த சதம் எனக்கு முக்கியமானது. இந்த ஆட்டத்துக்காகவே நீண்ட நாட்கள் காத்திருந்தேன். உள்நாட்டு கிரிக்கெட்டிலும் இது எனக்கு அங்கீகாரம்” எனத் தெரிவித்தார்.
"வாய்ப்பைத் தவறவிட்டு விட்டோம்"
தோல்வி குறித்து டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் வார்னர் கூறுகையில் “ ஆடுகளத்தில் பந்துகள் அதிகமாக டர்ன் ஆகின, நல்ல ஸ்கோருக்குள் பஞ்சாபை சுருட்டினோம். எங்களைவிட சிறப்பாகவே பந்துவீசினர். பிரப்சிம்ரன் சிறப்பாக பேட் செய்தார். அவரை ஆட்டமிழக்கச் செய்ய கிடைத்த வாய்ப்பை தவறவிட்டோம்.
நன்றாகத் தொடங்கினோம், ஆனால், 30 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்தோம். பேட்டிங்கில் மிகவும் மோசமாக செயல்பட்டது வேதனையாக இருக்கிறது.ஏராளமான மாற்றங்களைச் செய்து நல்ல கூட்டணியை உருவாக்கியும் விரைவாக விக்கெட்டுகளை இழந்தோம்” எனத் தெரிவித்தார்
ப்ளே ஆப் ரேஸில் பரபரப்பு
பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் நிகர ரன்ரேட் அடிப்படையில் மைனசில் 0.268ல் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 12 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட் வலுவாக வைத்துள்ளது. ஆனால், ஆர்சிபி அணி, நிகர ரன்ரேட்டில் பஞ்சாப் அணியைவிட குறைவாக இருக்கிறது.
இன்று நடக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இ்ந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வென்றால், 14 புள்ளிகளுடன் நல்ல ரன்ரேட்டில் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தும், ஆர்சிபி வெல்லும்பட்சத்தில் ராஜஸ்தான் ப்ளே ஆப் கனவுக்கு ஆபத்து வரலாம்.
அதேநேரம், பஞ்சாப் அணியும் அடுத்துவரும் இரு ஆட்டங்களையும் வென்று 16 புள்ளிகளுடன், நல்ல ரன்ரேட்டில் இருந்தால்தான் ப்ளே ஆப் வாய்ப்பு குறித்தவாய்ப்பு பிரகாசமாகும். ஆதலால் பஞ்சாப் அணிக்கு அடுத்துவரும் இரு ஆட்டங்களும் முக்கியமானவை.
கொல்கத்தா அணியும், சிஎஸ்கே அணியும் இன்று இரவு மோதுகின்றன. இந்த ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 13-வது போட்டியாகும். 10 புள்ளிகளுடன் இருக்கும் கொல்கத்தா இதில் தோற்கும் பட்சத்தில் தொடரிலிருந்து வெளியேறும். சிஎஸ்கே அணி 17 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்யும். ஆதலால் இன்று நடக்கும் இரு ஆட்டங்களும் மிகுந்த முக்கியமானவை.
இந்த ஆட்டத்தில் தோற்றதன் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் போட்டியில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்துவரும் 2 ஆட்டங்களில் வென்றால்கூட 12 புள்ளிகள்தான் பெறும், இது ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல உதவாது என்பதால், வெளியேறியது.
அதேசமயம், இனிவரும் 2 ஆட்டங்களையும் தோற்றாலும் வென்றாலும் கவலையில்லை என்ற ரீதியில் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி டெல்லி அணி விளையாடலாம். ஒருவேளை அடுத்து இரு ஆட்டங்களில் சிஎஸ்கே, பஞ்சாப் அணிகளை டெல்லி அணி வென்றால் ப்ளே ஆப் ரேஸை இன்னும் பரபரப்பாக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












