கோட்டைவிட்ட சன்ரைசர்ஸ்: லக்னெள வெற்றியால் சிஎஸ்கேவுக்கு சிக்கலா?

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் அதிரடியில் ஒரே ஓவரில் 31 ரன்கள் சேர்க்கப்பட்டதே லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஆதிக்கம் செலுத்திய சன்ரைசர்ஸ் அணி அபிஷேக் சர்மா வீசிய 16 ஓவரோடு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றியை தாரைவார்த்துக் கொடுத்தது.

ஹைதராபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 58-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை 4 பந்துகள் மீதமிருக்கையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அபராமாக வென்றது.

கடந்த 4 போட்டிகளாக தோல்வியோடு பயணித்த லக்னெள அணிக்கு இந்த வெற்றி ப்ளே ஆப் வாய்ப்புக்கான வழியை விசாலமாக்கியுள்ளது. ஒரு நேரத்தில் லக்னெள அணி வெற்றிக்கு 42 பந்துகளில் 94 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், ஆட்டம் சன்ரைசர்ஸ் கைவசம் இருந்ததால் அந்த அணி வெற்றியை எளிதாகப் பெறும் என நம்பப்பட்டது.

திருப்பத்தை ஏற்படுத்திய பூரன்

ஆனால், நிகோலஸ் பூரன் களமிறங்கியபின் ஒட்டுமொத்த ஆட்டமும் மாறியது, சன்ரைசர்ஸ் கையில் இருந்த வெற்றியும் கைநழுவிப் போனது. களத்துக்கு வந்தவுடன், நிகோலஸ் பூரன், அபிஷேக் பந்தில் அடுத்தடுத்து ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து ஆட்டத்தை மாற்றினார்.

அதன்பின் ஆட்டத்தை கையில் எடுத்த லக்னெள அணி, சன்ரைசர்ஸ் அணியை வதம் செய்தது. நிகோலஸ் பூரன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, 13 பந்துகளில் 44 ரன்கள் விளாசி(4சிக்ஸர்,3பவுண்டரி) வெற்றிக்கு முக்கியக் காரணமாகினார்.

அதுமட்டுமல்லாமல் பிரிரேக் மன்கட் அடித்த 45 பந்துகளில் 65 ரன்கள், ஸ்டாய்னிஷ் சேர்த்த 40 ரன்கள் ஆகியவை லக்னெள அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

ஒரே ஓவரில் வெற்றி தாரைவார்ப்பு

பகுதிநேர பந்துவீச்சாளரான அபிஷேக் சர்மா ஒரு ஓவரை கூடுதலாக வீசி ஆட்டத்தின் முடிவு தலைகீழாக மாறக் காரணமாகிவிட்டார். அபிஷேக் பந்துவீச வருவதற்கு முன்புவரை லக்னெள அணி வெற்றிக்கு 30 பந்துகளில் 69 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால், அபிஷேக் 16வது ஓவரை முடித்துச் சென்றபின், லக்னெள வெற்றிக்கு, 24 பந்துகளில் 38 ரன்கள் தேவை என குறைந்தது. லக்னெளவின் வெற்றிக்கு திருப்புமுனை ஏற்படுத்திய ஓவராக அபிஷேக் ஓவர் அமைந்தது.

5 சிக்ஸர்கள்தான் திருப்புமுனை

லக்னெள அணியின் கேப்டன் குர்னல் பாண்டியா கூறுகையில் “ சன்ரைசர்ஸ் அணி ஸ்கோர் செய்ததைப் பார்த்தபோது 200 ரன்களை எட்டுவார்கள் என நினைத்தேன். ஆனால், நாங்கள் நெருக்கடி கொடுத்து இழுத்துப்பிடித்தோம், குறிப்பாக டெத் ஓவர்களில் கட்டுப்படுத்தினோம். ஆவேஷ்,யாஷ் சிறப்பாகப் பந்துவீசினர். பேட்டிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டோம், ஒவ்வொரு தனிநபரும் அணிக்காக ஆட வேண்டும். பூரன் இதை சிறப்பாகச் செய்தார், அபிஷேக் ஓவரில் 5 சிக்ஸர்தான் ஆட்டத்தின் திருப்புமுனை. மன்கட் ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது, இந்த வெற்றி பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது” எனத் தெரிவித்தார்

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

ப்ளே ஆப் வாய்ப்பில் லக்னெள-யாருக்கு சிக்கல்

இந்த வெற்றியின் மூலம் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 12 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகள் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது, நிகர ரன்ரேட்டையும், 0.309 என்று பிளசில் வைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்தாலும் ரன்ரேட் மைனசில்தான் இருக்கிறது.

லக்னெள அணி டாப்-4 இடத்துக்குள் வந்துவிட்டதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 5வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. ப்ளே ஆப் போட்டியில் லக்னெள இணைந்துவிட்டதால், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு தலைவலியாக மாறிவிட்டது.

அடுத்து நடக்கும் மும்பை இந்தியன்ஸ், லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டம், இருவரில் யார் ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்வார்கள் என்பதை நிர்ணயிக்கும் ஆட்டமாக இருக்கும்.

அதேநேரம், ப்ளே ஆப் சுற்றுக்கு 4வதுஇடத்தைப் பிடிக்க, ராஜஸ்தான் அணி அடுத்துவரும் இரு போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட்டைப் பொறுத்தவரை குஜராத்துக்கு அடுத்தார்போல் வலுவாக இருக்கிறது.

ராஜஸ்தான் அணி 16 புள்ளிகள் பெற்றாலும், கடைசி லீக்வரை காத்திருக்க வேண்டும். லக்னெள அணி அடுத்து ஒருபோட்டியில் தோற்றால், கடைசிலீக்கில் வென்றால் 15 புள்ளிகள்தான் பெறும். அந்த நிலை வரும்போது, ராஜஸ்தான் 16 புள்ளிகளுடன் இருந்தால், ப்ளே ஆப்சுற்றுக்குள் நுழைந்துவிடும்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

அதேநேரம், சிஎஸ்கே அணி அடுத்துவரும் 2 ஆட்டங்களிலும் வென்றால்தான் 19 புள்ளிகளுடன் டாப்-2 இடங்களைப் பெற முடியும். ஒருவேளை சிஎஸ்கே ஒரு போட்டியில் தோற்று, மற்றொரு போட்டியில் வென்றால், மும்பை அணி தனது அடுத்த 2போட்டிகளையும் வென்றால், 18 புள்ளிகளுடன் டாப்-2 இடத்துக்கு நகர்ந்துவிடும்.

சிஎஸ்கே 3வது இடத்துக்கு தள்ளப்படலாம். சிஎஸ்கே 17 புள்ளிகளுடன் இருக்கும்பட்சத்தில், லக்னெள அணியும் அடுத்த இரு ஆட்டங்களில் வென்றால் 17 புள்ளிகளுடன் சிஎஸ்கேவுக்கு நெருக்கடி தரும் சூழலும் உருவாகலாம். ஆதலால், சிஎஸ்கே அணி அடுத்த 2 ஆட்டங்களிலும் வெல்வது அவசியம்.

சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை 11 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. ப்ளே ஆப் சுற்றுக்கு சன்ரைசர்ஸ்அணி செல்வது என்பது கணிதத்தின் காகிதத்தின் அடிப்படையில்தான் சாத்தியமேத் தவிர, நிதர்சனத்தில் நடப்பது கடினம். அடுத்த 3 ஆட்டங்களையும் வென்றால்கூட 14 புள்ளிகளையே சன்ரைசர்ஸ் பெறும், இது ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல உதவாது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

மேயர்ஸ், டீகாக் ஏமாற்றம்

183 ரன்கள் இலக்கை துரத்திச் சென்ற லக்னெள அணிக்கு மேயர்ஸ், டீகாக் சிறப்பான தொடக்கம் அளிக்கவில்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் பவர்ப்ளே ஓவர்களில் சரவெடியாக இருக்கும் மேயர்ஸ் ஆட்டத்தை சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர், பரூக்கி, நடராஜன் ஆகியோர் கட்டுப்படுத்தினர்.

லக்னெள அணி தனது முதல் பவுண்டரியை, 4வது ஓவரில்தான் அடித்தது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் லைன்-லென்த்தில் துல்லியமாக வீசியதால், மேயர்ஸ், டீகாக் இருவரும் ரன் சேர்க்க மிகுந்த சிரமப்பட்டனர்.

கிளென் பிலிப்ஸ் வீசிய 4வது ஓவரில் மேயர்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் லக்னெள அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்களையே சேர்த்திருந்தது. அடுத்துவந்த மன்கட், டீகாக்குடன் சேர்ந்து நிதானமாக ஆடினார்.

சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் திணறிய டீகாக் நிலைக்கவில்லை. மார்கண்டே வீசிய சுழற்பந்தில் கேட்ச் கொடுத்து டீகாக் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு வந்த ஸ்டாய்னிஷ், மன்கட்டுடன் சேர்ந்து நிதானமாக ஆடினார். இருவரும் 34 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து மந்தமாகவே ஆடினர்.

இருவரின் மெதுவான ஆட்டத்தால், லக்னெள அணி வெற்றிக்குத் தேவைப்படும் ரன் ரேட் அதிகரித்துக்கொண்டே வந்தது, வெற்றியும் சன்ரைசர்ஸ் பக்கம் சென்றது. 14 ஓவர்களில்தான் லக்னெள அணி 100 ரன்களை எட்டியது. கடைசி 6 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 86 ரன்கள் தேவைப்பட்டது.

கணிப்பு மாறியது

ஏற்கெனவே நடராஜன், பரூக்கி, புவனேஷ் குமார் சிறப்பாக பந்துவீசி இருந்ததால் டெத் ஓவர்கள் நான்கையும் இவர்களை வைத்து வீசச் செய்யலாம் என கேப்டன் மார்க்ரம் திட்டமிட்டிருந்தார். நடராஜனுக்கு 2 ஓவர்களும், புவனேஷ், பரூக்கிக்கு தலா ஒரு ஓவரும் மீதம் இருந்தது. அபிஷேக் சர்மாவும் 2 ஓவர்களை வீசி 11ரன்கள்தான் கொடுத்திருந்தார்.

இதனால் அபிஷேக் சர்மா மீது நம்பிக்கை வைத்து பந்துவீச, மார்க்கரம் வாய்ப்பு வழங்கினார். இந்த ஓவர்தான் லக்னெளவுக்கு திருப்புமுனையாகவும், சன்ரைசர்ஸ் வெற்றியை இழக்கும் ஓவராக இருக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

5 சிஸ்கர்கள் விளாசல்

கியரை மாற்றிய ஸ்டாய்னிஷ், அபிஷேக் வீசிய இரு பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி அசத்தினார். 3வது பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற ஸ்டாய்னிஷ் 40 ரன்னில் லாங்ஆன் திசையில் சமத்தால் கேட்ச் செய்யப்பட்டார். 3வது விக்கெட்டுக்கு மன்கட், ஸ்டாய்னிஷ் இருவரும், 73 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து நிகோலஸ் பூரன் களமிறங்கினார். அபிஷேக் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே பூரன் டீப்மிட் விக்கெட்டில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். 5வது பந்தில் ஸ்ட்ரைட் திசையில் 2வது சிக்ஸரை பூரன் விளாசினார். அடுத்ததாக கடைசிப் பந்தில் மீண்டும் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸரை என பூரன் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார்.

பூரன் சிக்ஸர்களாக விளாசுகிறாரே, லைன், லென்த்தை மாற்ற வேண்டும் என்று துளியும் முயற்சி இல்லாமல் அபிஷேக் தொடர்ந்து மெதுவாக, ஸ்லாட்டில்தான் பந்துவீசினார். கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற ரீதியில் பூரன் வெளுத்துவாங்கினார். இந்த ஓவரில் மட்டும் லக்னெள அணி 31 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை கபளீகரம் செய்தது.

அதன்பின் லக்னெள வெற்றிக்கு 24 ரன்களில் 38ரன்கள் தேவைப்பட்டது. பூரன், மன்கட் ஆட்டத்தை கையில் எடுத்து தங்கள் பக்கம் திருப்பினர். நடராஜன் வீசிய 17வது ஓவரில் மன்கட் சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் விளாசினார். புவனேஷ்வர் வீசிய 18-வது ஓவரில் பூரன் இரு பவுண்டரிகள் உள்ளிட்ட 10 ரன்கள் சேர்த்து அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

12 பந்துகளில் லக்னெள வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. நடராஜன் வீசிய 19-வது ஓவரில் பூரன் சிக்ஸர் உள்ளிட்ட 10 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் லக்னெள வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது, பரூக்கி வீசிய ஓவரில் முதல் பந்தில் பூரன் 2 ரன்களும், 2வது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தனர். அற்புதமாக ஆடிய மன்கட் 45 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

சன்ரைசர்ஸ் அணி, வெற்றியை கைவசம் வைத்திருந்தும், அதை பாதுகாக்கத் தவறிவிட்டது, சன்ரைசர்ஸ் அணியிடம் இருந்து வெற்றியை ஒரே ஓவரில் லக்னெள அணி கபளீகரம் செய்துவிட்டது.

கோட்டைவிட்ட சன்ரைசர்ஸ் அணி

சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் பெரிதாக எந்த குறிப்பிட்ட வீரரும் அதிகமாக பங்களிப்புச் செய்யவில்லை. ஆனாலும் பேட்ஸ்மேன்கள் சராசரியாக 20 ரன்களுக்கு மேல் சேர்த்ததும், கிளாசன், அப்துல்சமது கேமியோக்களும் ஓரளவுக்கு கௌரவமான ஸ்கோரைப் பெற்றுத் தந்தது.

சன்ரைசர்ஸ் அணிக்கு வழக்கமாக நல்ல தொடக்கத்தை அளித்துவந்த அபிஷேக் சர்மா(7) ரன்னில் விரைவாக வெளியேறினார். அன்மோல்பிரீத் சிங், திரிபாதி இருவரும் பவர்ப்ளே ஓவர்களை பயன்படுத்தி ரன்களைச் சேர்த்தனர். திரிபாதி 20 ரன்னில் பவர்ப்ளையின் 6வது ஓவரில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் அணி2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்தது.

இந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சு நன்றாக எடுத்தாலும், அமித் மிஸ்ரா, பிஷ்னாய் இருவரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பந்துவீசவில்லை. இருவரும் ஸ்லாட்டிலேயே பெரும்பாலான பந்துகளை வீசியதால், கிளாசன், மார்க்ரம், அப்துல் சமது வெளுத்து வாங்கினர். அன்மோல்(36) ரன்களில் மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

குர்னால் பாண்டியா வீசிய 13வது ஓவரில் மார்க்ரம்(28), பிளிப்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், சன்ரைசர்ஸ் தடுமாறியது. அந்தநேரத்தில் கிளாசன், அப்துல் சமது ஜோடி அணியை மீட்டனர். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கிளாசன் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சேர்த்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

ஆவேஷ் கான் வீசிய 19-வது ஓவரில் 3வது பந்தை வைடு என களநடுவர் அறிவிக்க, 3வது நடுவர் அதை நிராகரித்தார். இந்த வைடு பால் தொடர்பாக பெரிய சர்ச்சை எழுந்து, நடுவர்கள் பெவிலியன் சென்று, சன்ரைசர்ஸ் பயிற்சியாளர்களிடம் பேசிவிட்டு திரும்பினர்.

16 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 145 ரன்களை எட்டியிருந்ததால், அடுத்த 4 ஓவர்களில் நிச்சயம் 50 ரன்களுக்கு குறையாமல் சேர்த்து 200 ரன்களை எட்டும் என கணிக்கப்பட்டது. ஆனால், கடைசி 5 ஓவர்களில் போதுமான ரன் சேர்க்க சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் தவறிவிட்டனர்.

அடுத்த 4 ஓவர்களில் 37 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டையும் இழந்தனர். அதிலும் கடைசி இரு ஓவர்களில் 21 ரன்கள்தான் சேர்க்கப்பட்டது. சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தால் நிச்சயம் லக்னெள அணிக்கு சவாலான ஸ்கோராக மாறியிருக்கும். அப்துல் சமது 37 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அபிஷேக் செய்த தவறு

சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் இருந்தே லக்னெள அணியை கட்டுக்குள் வைத்திருந்தனர். நடராஜன் முதல் இரு ஓவர்களை அற்புதமாக வீசினார். கடைசி இரு ஓவர்களில்தான் நடராஜன் ரன்களைக் கொடுத்தார். புவனேஷ், பரூக்கி, பிளிப்ஸ் ஆகியோர் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர்.

பிலிப்ஸ் 2 ஓவர்கள் வீசி 10ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார், அவருக்கு வாய்ப்பு வழங்காமல் அபிஷேக்கை பந்துவீசச் செய்து மார்க்ரம் தவறு செய்துவிட்டார். அணியில் அபிஷேக் சர்மா செய்த தவறு, ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் காலைப் பிடித்து பின்னுக்கு இழுத்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணியின் ப்ளே ஆப் வாய்ப்பும் மருகிவிட்டது, ஒருவேளை இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால், ஊக்கத்துடன் அடுத்த ஆட்டங்களை எதிர்கொண்டிருக்கும்

நல்ல ஸ்கோர் என நினைத்தோம்

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ நல்லஸ்கோர் என்று நினைத்தோம், நல்ல பார்ட்னர்ஷிப்அமைக்கத் தவறிவிட்டோம், கடைசியில் ரன் சேர்ப்பதிலும் தொய்வு ஏற்பட்டது. இந்த ஆடுகளத்தில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பதற்கு அபிஷேக் பாடமாக அமைந்துவிட்டார். ஸ்டாய்னிஷ், பூரன் போன்ற பிக் ஹிட்டர்ஸ் களத்தில் இருக்கும்போது, கவனமாக பந்துவீச வேண்டும், அது சோதனையாகத்தான் இருக்கும். இதில் அபிஷேக் கோட்டைவிட்டார்” எனத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: