அமெரிக்கா உடனான வர்த்தகம் மூலம் இந்தியா சீனாவை முந்துமா? அதில் உள்ள சிக்கல்கள் என்ன?

பட மூலாதாரம், REUTERS/ELIZABETH FRANTZ
- எழுதியவர், ஜுபைர் அகமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் `இந்தியா- அமெரிக்கா இடையிலான பொருளாதார நல்லுறவு வேகமாக வளர்ந்து வருகிறது` என்று குறிப்பிட்டார்.
கடந்த பத்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் என்பது இரண்டு மடங்கு உயர்ந்து 191 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது என்றும் தனது பேட்டியின்போது அவர் தெரிவித்தார்.
இது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி, “இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கூட்டாண்மை இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்துக்கும் முக்கியமானது,” என்று வலியுறுத்தினார்.
மோதியுடைய பயணத்தின்போது, ஜெனரல் எலக்ட்ரிக் (ஜிஇ) மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) ஆகியவை இணைந்து இந்தியாவில் எஃப்414 ஜெட் இஞ்சினை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த இஞ்சின் போர் விமானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் கண்காணிப்பு திறன்களை வலுப்படுத்தும் நோக்கில், குறிப்பாக சீனாவுடனான அதன் எல்லையில், MQ-9B பிரிடேட்டர் ட்ரோன்களைப் பெறுவதற்கு, ஜெனரல் அட்டாமிக்ஸ் உடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்த ஆளில்லா விமானம் ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஒரு கூட்டறிக்கையில், "இந்தியாவில் புதிய செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் சோதனை வசதியை உருவாக்க 825 மில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்வதாக மைக்ரோன் டெக்னாலஜி அறிவித்திருப்பதை இரு நாட்டின் தலைவர்களும் வரவேற்றனர்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
"இன்றைய ஒப்பந்தம், நமது பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான, கடந்த இரண்டு ஆண்டுகளாக, அமெரிக்க-இந்திய வர்த்தகக் கொள்கை மன்றம் உட்பட, தீவிர இருதரப்பு கூட்டாண்மையின் விளைவாக ஏற்பட்டது," என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், MICHAEL REYNOLDS/EPA-EFE/REX/SHUTTERSTOCK
தனது அமெரிக்க அரசு பயணத்தின்போது, ஏராளமான அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை பிரதமர் மோதி சந்தித்தார்.
இதில் டெஸ்லாவின் ஈலோன் மஸ்க், அடோப் சிஸ்டம்ஸ் சிஇஓ சாந்தனு நாராயண், விசா சிஇஓ ரியான் மெக்இனெர்னி, மாஸ்டர்கார்டு சிஇஓ மைக்கேல் மேபேக் மற்றும் கோகோ கோலா சிஇஓ ஜேம்ஸ் குயின்சி ஆகிய குறிப்பிடத்தக்கவர்களும் அடங்குவர்.
வாஷிங்டனில் உள்ள கென்னடி மையத்தில் நடைபெறும் மோதியின் நிகழ்ச்சியில் பங்கேற்க சில பிரபல நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன.
பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம் ஒரு மைல்கல் என்று பல நிபுணர்கள் வர்ணிக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் ஆழமடைந்துள்ளன.
தொழில்நுட்பத் துறையில் கூட்டாண்மை வலுப்பெற்றுள்ளது, இருதரப்பு வர்த்தகத்தில் சிறப்பாக எதுவும் நடக்கவில்லை என்றாலும் அதை ஒரு புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வது உறுதி என்று அவர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா- சீனா வர்த்தக உறவு
மோதி- பைடன் இடையிலான சந்திப்பும் இந்தக் காலக்கட்டத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களும், 2000ஆம் ஆண்டு, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் அயராத முயற்சிகளுக்குப் பிறகு, 2001இல் உலக வர்த்தக அமைப்பில் (WTO) சீனா இணைந்த சம்பவத்தை நினைவூட்டுகிறது.
இது உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட தேசமான சீனாவுடன் அமெரிக்க உறவுகளை மேம்படுத்தும், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் நலன்களை முன்னேற்றுவதற்கு சுதந்திர வர்த்தகத்தைப் பயன்படுத்துவதற்கான தனது சொந்த மரபை உறுதிப்படுத்தும் என்று கிளின்டன் நம்பினார்.
அப்போது இந்த நடவடிக்கைக்குப் பல எம்.பி.க்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், சீனாவில் முதலீடு செய்து பெரும் லாபம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அந்நாட்டின் பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர்.
அவரது முயற்சிகள் சீனா ஓர் உலகளாவிய உற்பத்தி மையமாகவும், உலகின் நம்பர் ஒன் ஏற்றுமதியாளராகவும் மாற உதவியது. ஆனால் அதிபர் கிளிண்டன் எதிர்பார்த்தபடி சீனா தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றவில்லை.

பட மூலாதாரம், REUTERS/KEVIN LAMARQUE
இன்றைய காலகட்டத்தை வைத்துப் பார்த்தால், அமெரிக்காவின் மிகப்பெரிய போட்டியாளராக சீனா உருவெடுத்துள்ளது.
கிளின்டனை விமர்சிக்கும் அமெரிக்க நிபுணர்கள் பலர், சீனாவுக்கு உதவியதன் மூலம், அமெரிக்காவுக்கு நேரடியாக சவால் விடும் 'பிசாசு' ஒன்றை முன்னாள் அதிபர் உருவாக்கி விட்டதாகக் கூறுகிறார்கள்.
மோதியின் தற்போதைய அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இந்தியாவை அமெரிக்கா இருகரம் நீட்டி வரவேற்பதாகத் தெரிகிறது.
இத்தகைய சூழ்நிலையில், அடுத்த 10-15 ஆண்டுகளில், அமெரிக்காவின் பொருளாதார, வணிக மற்றும் அரசியல் பங்கேற்புடன், இந்தியாவும் சீனாவைப் போல பொருளாதார வல்லரசாக மாற முடியுமா?
இந்தியாவின் முக்கிய தேவைகள் என்ன?
அமெரிக்காவுக்கு இந்தியா சவாலாக மாறும் நாள் வெகு தொலைவில் உள்ளது என்கிறார் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனில் வெளியுறவுக் கொள்கைத் துறையில் துணைத் தலைவராக உள்ள பேராசிரியர் ஹர்ஷ் வி. பந்த்.
"இப்போது இந்தியாவின் கவலை சீனா தொடர்பானது, அடுத்த 10-20 ஆண்டுகளில் சீனா எங்கும் செல்லாது. குறுகிய காலத்தை வைத்து நீங்கள் பார்த்தால், இந்தியா அமெரிக்காவிற்கு சவால் விடும் வாய்ப்பு குறைவு என்று நான் நினைக்கிறேன். உள்நாட்டு வளர்ச்சிக்கு முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு இதில்தான் கவனம் செலுத்த வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது இந்தியா அமெரிக்காவிற்கு சவால் விடும் நிலையை அடைவது சாத்தியமா?
"நீண்ட காலத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது இந்தியா அமெரிக்காவுக்கு சவால் விடுமா என்பதைச் சொல்ல முடியாது. அதே நேரத்தில், முன்புடன் ஒப்பிடும்போது அமெரிக்காவின் அதிகாரமும் குறைந்து வருகிறது. எனவே, புதிய பங்காளியைத் தேடுவது அதற்கு அவசியமானது. அப்படிப் பார்க்கும்போது, இந்தியா அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது," என்கிறார் பேராசிரியர் பந்த்.
உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியாவின் பொருளாதாரம் உள்ளது. அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியபோதுகூட மோதி, இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையைக் கோடிட்டுக் காட்டினார்.
"நான் பிரதமராக இருந்தபோது (2014இல்) முதல் முறையாக அமெரிக்கா சென்றேன். அப்போது, இந்தியா உலகின் பத்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்தது. இன்று இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. விரைவில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். வளர்ச்சி வேகமாக நடந்து வருகிறது," என்றார்.

பட மூலாதாரம், REUTERS/KEVIN LAMARQUE
மிகப்பெரிய வர்த்தகப் பங்காளி
இரண்டு ஆண்டுகளுக்கு முன், சீனாவை விட்டுவிட்டு, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக அமெரிக்கா மாறியது. அதாவது இந்தியாவுடனான வர்த்தகப் பரிவர்த்தனைகளில், சீனாவை அமெரிக்கா முந்தியது.
இரு நாடுகளுக்கு இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டு 190 பில்லியன் டாலர்களாக இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருட்கள் வர்த்தகம் மட்டும் 130 பில்லியன் டாலர்கள் அளவில் நடந்துள்ளது. அதே நேரத்தில், கடந்த ஆண்டு சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகம் 700 பில்லியன் டாலர்கள்.
இதைப் பார்க்கும்போது, இந்திய-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகக் கூட்டாண்மை சீன-அமெரிக்க கூட்டாண்மையை எட்டுவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்பது தெளிவாகிறது.
இருப்பினும், கடந்த ஆண்டு ஓர் அறிக்கையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், 2030-க்குள் இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தகம் 500-600 பில்லியன் டாலர்களை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால், இது மிகப் பெரிய ஆசை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே செழிப்பான உறவுகள் இருந்தபோதிலும், வர்த்தக உறவுகளின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் வர்த்தக பதற்றங்கள், வேறுபாடுகள் நிறைய உள்ளன.
நீண்ட நெடிய வணிக முரண்பாடுகள்
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தகம் அதிகரித்துள்ளதால், வர்த்தக பதற்றமும் அதிகரித்துள்ளது. அமெரிக்க - இந்திய அதிகாரிகள் வரிகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வரம்புகள் மற்றும் பிற சிக்கலான பிரச்னைகளில் பல ஆண்டுகளாக உடன்படவில்லை, குறிப்பாக விவசாயம் சார்ந்த வர்த்தகத்தில்.
அறிவுசார் சொத்துரிமைகள் (IPR) 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் ஒரு கவலையாக உள்ளது. அதே நேரத்தில் மருத்துவ சாதனங்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளன.
இதற்கு மேல், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் இருதரப்பு வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் புதிய கட்டணங்களை விதிப்பது உள்ளிட்ட புதிய இக்கட்டான சூழ்நிலைகளை உருவாக்குவதன் மூலம் பதற்றங்களை அதிகரித்தது. பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கத்தைப் பதிலடி கொடுக்கும்படி தூண்டியது.
வரலாற்றுரீதியாக, சர்வதேச பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, சமீபத்தில், இந்தியாவின் எரிசக்தி அமைச்சர் ஆர்.கே. சிங், "பைடன் நிர்வாகத்தின் பணவீக்கக் குறைப்புச் சட்டத்தைத் தூய்மையான பாதுகாப்புவாதம், இது வளரும் நாடுகளுக்கு பசுமை எரிசக்திக்கு மானியம் வழங்குவதைத் தடுக்கிறது," என்று அழைத்தார்.
ஆனால் இந்தியாவுக்கு பாதுகாப்புவாதத்தால் பாதிப்பு இல்லை என்று அமெரிக்கா வாதிடுகிறது.
கடந்த ஆண்டு, இந்தியா சோலார் பேனல் இறக்குமதிக்கு 40 சதவீத சுங்க வரியை விதித்தது. உள்நாட்டு திறன் குறைப்பைத் தொடர்ந்து இது பாதியாகக் குறைக்கப்படும் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியா அதிக அளவில் சோலார் பேனல்களை இறக்குமதி செய்கிறது.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க- இந்திய வர்த்தகத்தில் உள்ள பிரச்னைகள்
"இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த வர்த்தக வேறுபாடுகள் அவ்வளவு எளிதில் தீர்க்கப்படாது. நமது தொழில் மற்றும் வர்த்தகத்தைப் பல துறைகளில் பல வழிகளில் பாதுகாக்க விரும்புகிறோம். ஆனால், விவசாயம் போன்ற சில துறைகளில் அமெரிக்கா தனது நலன்களைப் பாதுகாக்க விரும்புகிறது. எனவே இந்த விஷயங்களில் நாம் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும்," என்று பேராசிரியர் ஹர்ஷ் பந்த் கருதுகிறார்.
மேலும், "இரு நாடுகளிலும் பொருளாதாரம் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. நாம் பல பகுதிகளில் அணுகலை விரும்புகிறோம், ஆனால் அமெரிக்கா கொடுக்கவில்லை, அதே நேரத்தில் நாம் அனுமதிக்காத பல பகுதிகளில் இந்தியாவுக்குள் நுழைய அமெரிக்கா விரும்புகிறது," என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வர்த்தக வேறுபாடுகள் சீனா மற்றும் இந்தியாவிலிருந்து வேறுபட்டவை என்கிறார் பேராசிரியர் ஹர்ஷ் பந்த்.
"வித்தியாசம் என்னவென்றால், இந்தியா சட்டத்தை மதிக்கும் நாடு என்று அமெரிக்கா இன்னும் நம்புகிறது. எனவே வேறுபாடு இருந்தால், சர்ச்சை நடந்தால், உலக வர்த்தக அமைப்பிடம் (WTO) அமெரிக்கா செல்லும். இங்கு எட்டப்படும் தீர்வை இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்றுக்கொள்ளும். வித்தியாசம் என்னவெனில், சீனா உலக வர்த்தக அமைப்பின் பேச்சைக் கேட்பதே இல்லை," என்று அவர் குறிப்பிடுகிறார்.
"சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல்கள் மிகப்பெரியவை, அது அவர்களின் உறவை மோசமாக்கியுள்ளது. இது இந்தியாவுக்குப் பொருந்தவில்லை என்றால், வர்த்தகத் துறையில் சர்ச்சைகள் மற்றும் வேறுபாடுகள் தொடரும். இந்த வர்த்தக மோதல்கள் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயும் கூட உள்ளன," என்றும் அவர் மேற்கோள் காட்டுகிறார்.
மோதியின் காலத்தில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் வர்த்தகத்தில் உள்ள வேறுபாடுகள் புறக்கணிக்கப்படும் அல்லது ஓரங்கட்டப்படும் என்று கூறுகிறார் பேராசிரியர் ஸ்டீவ் எச். ஹான்கே.
ஜூன் 22 ஆம் தேதி இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உலக வர்த்தக அமைப்பில் நிலுவையில் உள்ள 6 சர்ச்சைகளைத் தீர்க்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகள் உலக வர்த்தக அமைப்பின் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது நீதிமன்றத்துக்கு வெளியே இந்த விவகாரத்தைத் தீர்த்துக்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
சில காலமாக சீனாவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளில் அமெரிக்கா கடைப்பிடித்து வரும் கொள்கைக்கு 'இடர் நீக்குதல்' என்று பெயர் சூட்டப்பட்டு வருகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, இடர் நீக்கம் என்பது நிதி நிறுவனங்களின் அபாயத்தைக் குறைப்பதாகும்.
அமெரிக்கா சீனாவிற்குப் பதிலாக ஒரு புதிய கூட்டாளரைத் தேடுகிறது, இந்தியாவை அந்த கூட்டாளராகப் பார்க்கிறது.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா ஷங்கர் கூறுகையில், "உலகப் பொருளாதாரத்தை சீனாவின் அபாயத்திலிருந்து விடுவிக்க அமெரிக்கா ஒரு புதிய வரிசையை உருவாக்க முயல்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட இது ஒரு வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை இது இருவருக்கும் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












