ராம்சரண், உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை: தொப்புள் கொடி ரத்தம் ஏன் சேமிக்கப்படுகிறது? செலவு என்ன?

பட மூலாதாரம், FACEBOOK/ UPASANA KONIDELA
- எழுதியவர், பெடகாடி ராஜேஸ்
- பதவி, பிபிசி செய்திகள்
நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதியினருக்கு நேற்று குழந்தை பிறந்ததாக தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது.
இந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் சேமிக்கப்படுவதாக உபாசனா ட்வீட் செய்துள்ளார்.
பாலிவுட் நடிகைகள் கஜோல் மற்றும் ஷில்பா ஷெட்டியுடன், நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா ஷிரோத்கரும் தங்கள் குழந்தைகளின் தொப்புள் கொடியில் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்தத்தை பாதுகாத்து வருகின்றனர்.
தொப்புள் கொடியின் இரத்தத்தைப் பாதுகாப்பது என்றால் என்ன, அதை ஏன் பாதுகாக்கவேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.

பட மூலாதாரம், Getty Images
1. தொப்புள் கொடி என்றால் என்ன?
தொப்புள் கொடி என்பது குழந்தையின் வயிற்றை தாயின் வயிற்றில் உள்ள நஞ்சுக்கொடியுடன் இணைக்கிறது. இதன் மூலம், தாயின் உடலில் இருந்து குழந்தைக்கு ஆக்ஸிஜன், குளுக்கோஸ் மற்றும் சத்துக்கள் கிடைக்கின்றன.
தொப்புள் கொடியில் இரண்டு ரத்த நாளங்கள் (ஒரு தமனி, ஒரு சிரை) உள்ளன. இந்த தமனிகள் யூரியா மற்றும் கார்பன் டை ஆக்சைடை குழந்தையிலிருந்து தாயின் ரத்த நாளங்களுக்கு கொண்டு செல்கின்றன.
அதே நேரம், ஆக்ஸிஜன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் சிரை வழியாக குழந்தையின் உடலுக்குச் செல்கின்றன.
தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வந்த பிறகும், அதன் தொப்புள் கொடி, தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
நஞ்சுக்கொடியிலிருந்து குழந்தையைப் பிரிக்க மருத்துவர்கள் தொப்புள் கொடியை வெட்டி அதை ஒரு முடிச்சு போட்டு கட்டிவிடுவார்கள். இதற்கு தொப்புள் கொடி 'கிளிப்பிங்' என்று பெயர். குழந்தையின் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கவே இந்த 'கிளிப்பிங்' செய்யப்படுகிறது.
கிளிப்பிங் செய்த பின் குழந்தையின் தொப்புளில் இருந்து நீண்டிருக்கும் மீதமுள்ள சிறிய தொப்புள் கொடி, 5 முதல் 15 நாட்களில் காய்ந்து கருப்பாக மாறி, தானாகவே உதிர்ந்துவிடும்.

பட மூலாதாரம், Getty Images
2. தொப்புள் கொடி ரத்தம் ஏன் முக்கியமானது?
இருப்பினும், குழந்தை பிறந்த பிறகு தொப்புள் கொடி மற்றும் நஞ்சுக்கொடியில் கொஞ்சம் ரத்தம் இருக்கும். இந்த ரத்தம் தொப்புள் கொடி ரத்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் இந்த தொப்புள் கொடி மற்றும் நஞ்சுக்கொடி ஆகியவை கழிவுப் பொருட்கள் என கருதப்பட்டன. எனவே அவை மருத்துவக் கழிவுகளுடன் கவனமாக வெளியேற்றப்பட்டன. ஆனால் மருத்துவ ஆராய்ச்சிகளில், குறுத்தணுக்களான 'ஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல்கள்' (HSCs) அல்லது 'ஹெமாட்டோபாய்டிக் ப்ரோஜெனிட்டர்' செல்கள் (HPCs) ஆகியவை இதில் அடங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
உயிரணுக்கள் உருவாகும் போது எலும்பு மஜ்ஜையில் இதே போன்ற செல்களாகத் தான் உருவாகின்றன.

பட மூலாதாரம், Getty Images
3. இந்த ஸ்டெம் செல்களால் (குறுத்தணுக்கள்) என்ன பயன்?
குழந்தை பிறந்த பிறகு தொப்புள் கொடி மற்றும் நஞ்சுக்கொடியில் இருந்து ஸ்டெம் செல்களை (குறுத்தணுக்களை) சேமித்து வைப்பதற்கென்றே தனியாக "ரத்த குறுத்தணு வங்கிகள்" செயல்படுகின்றன.
குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் 'அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஏஏபி),' அந்த குழந்தைக்கு எதிர்காலத்தில் ஏற்படும் சில சிக்கலான நோய்களுக்கான சிகிச்சையில் இந்த குருத்தணுக்கள் மிகுந்த பயனுள்ளவையாக இருக்கும் என்று கூறுகிறது.
லியூக்கீமியா, தலசீமியா, சிக்கிள் செல் அனீமியா, மைலோமாஸ் மற்றும் லிம்ஃபோமா போன்ற நோய்களுக்கான சிகிச்சைகளை இதற்கு சில உதாரணங்களாகக் கொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images
4. குறுத்தணுக்களை எப்படி சேமிப்பது?
தொப்புள் கொடி மற்றும் நஞ்சுக்கொடியிலிருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டவுடன், அது உடனடியாக ஆய்வகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு தேவையான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. பின்னர் இந்த ரத்த அணுக்களை சேமிக்க பிளாஸ்மா டெப்ளீஷன் (PD) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை அகற்றி விட்டு, ரத்த அணுக்கள் அனைத்தையும் பாதுகாப்பதே பிளாஸ்மா டெப்ளீஷன் எனப்படுகிறது.
இப்படி பிரித்தெடுக்கப்பட்ட ரத்த அணுக்கள் அது ஒரு திரவ நைட்ரஜன் கன்டெய்னரில் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையில் சேமிக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Alamy
5. குருத்தணுக்களை சேமிக்க எவ்வளவு செலவாகும்?
ஒவ்வொரு நிறுவனமும் தொப்புள் கொடி ரத்தத்தை சேமிப்பதற்கு வெவ்வேறு வகையான கட்டணங்களை வசூலிக்கிறது. இந்த ரத்தத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருவர் பாதுகாக்க விரும்புகிறார் என்ற காரணியும், அதை சேமிக்க ஆகும் செலவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உதாரணமாக, 25 வருடங்களுக்கு இந்த குறுத்தணுக்களைப் பாதுகாக்கும் கட்டணமாக ஒரு நிறுவனம் ரூ. 55,000 வசூல் செய்கிறது. அதே குறுத்தணுக்களை 75 ஆண்டுகளுக்கு சேமிக்கவேண்டுமென்றால் ரூ.70,000 வரை கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.
இந்த தொப்புள் கொடி ரத்தத்தை எடுப்பதற்கும், குறுத்தணுக்களைப் பிரித்தெடுப்பதற்குமான கட்டணங்களை காப்பீடு மூலமும் பெறமுடியும்.

பட மூலாதாரம், Getty Images
6. சேமிப்பதை விட கொடையாக அளிப்பது சிறந்த சேவையாக இருக்கும்
அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஏஏபி) இந்த தொப்புள் கொடி ரத்தத்தை குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும் நோக்கில் சேமித்து வைப்பதை விட, அதை கொடையாக அளிப்பது ஒரு சிறந்த சேவையாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறது.
"இந்த தொப்புள் கொடி ரத்த அணுக்கள் மற்ற ரத்த அணுக்களாக மாறும் ஆற்றல் கொண்டவை. எனவே அவை, புற்று நோய் உள்பட சில சிக்கலான நோய் பாதிப்பில் இருப்பவர்களுக்கு மிகுந்த பயன்களை அளிப்பவையாக இருக்கின்றன. எனவே அது போல் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த தொப்புள் கொடி ரத்தத்தை கொடையாக அளிக்கலாம்,” என்று ஏஏபி கூறுகிறது.

பட மூலாதாரம், FACEBOOK/ UPASANA KONIDELA
7. ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?
தொப்புள் கொடியில் இருந்து ரத்தத்தை சேகரிப்பதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானிய மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மருத்துவர் பிரதீபா லட்சுமி தெரிவிக்கிறார்.
"எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. ஏனெனில் அந்த ரத்தம் நஞ்சுக்கொடி மற்றும் தொப்புள் கொடியிலிருந்து சேகரிக்கப்படுகிறது," என்று பிரதிபா லட்சுமி கூறினார். அவர் தெரிவித்த தகவல்களுடன் மருத்துவர் சிரிஷாவும் உடன்படுகிறார்.
ஆனால், “அந்த ரத்தத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் (குறுத்தணுக்கள்) மூலம் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, நோய்கள் குணப்படுத்தப்பட்டதாக அண்மைக்காலங்களில் தகவல்கள் இல்லை. இந்த குறுத்தணுக்களை வைத்து ஒரு சிலர் சிக்கலான நோய்களிலிருந்து மீண்டு வந்திருக்கலாம். ஆனால், குறுத்தணுக்களைச் சேமிப்பது ஒரு வியாபாரமாக மாறிவிட்டது,'' என்றார் ஷிரிஷா.
8. குருத்தணுக்களைப் பாதுகாப்பது எந்த அளவுக்கு பயன் அளிக்கும்?
இப்படி தொப்புள் கொடி ரத்தத்தைப் பாதுகாப்பதன் மூலம் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்ற விவரங்களை மருத்துவர் பிரதீபா லட்சுமி விளக்கினார்.
இது போல் சேமிக்கப்படும் குறுத்தணுக்களை, உடன் பிறந்தவர்களுக்கு ஏதேனும் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டால் அதைச் சரிசெய்வதற்காகப் பயன்படுத்தலாம். வேறு வகையில் பெரிய பயன்கள் கிடைப்பதில்லை என்றார் அவர்.
மேலும், ரத்த அணுக் குறைபாடுகள் மிக அரிதாக ஏற்படும் நோய் என்பதால், "நீங்கள் செலவழிக்கும் தொகையுடன் ஒப்பிடும் போது அதற்கேற்ற நன்மைகள் அதிகமாக இருக்காது," என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












