சர்வதேச யோகா தினம்: யோகா எப்படியெல்லாம் செய்யக்கூடாது? தவறாக செய்தால் என்ன ஆபத்து?

international yoga day 2020

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பா.காயத்திரி அகல்யா
    • பதவி, பிபிசி தமிழ்

ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த நாளில் உலகின் பல பகுதிகளை அனைவரும் ஒன்று சேர்ந்து யோகா பயிற்சிகள் மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக யோகா நிகழ்ச்சிகள் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படவில்லை.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலர் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதால் உடற்பயிற்சி, யோகா என பலவற்றை இணையத்தில் பார்த்து கற்றுக்கொண்டு தங்கள் உடல் நலனை பாதுகாக்கும் முயற்சியில் அனைத்து வயதினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

யோகா பயிற்சியின்போது பொதுவாக சிலர் மேற்கொள்ளும் தவறுகள் என்னென்ன, யோகா மேற்கொள்ளும்போது நாம் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை என்னென்ன? பிபிசியிடம் பேசிய யோகா தெரபிஸ்ட் முத்துலட்சுமி வெங்கடேசன் விளக்குகிறார்.

எப்படியெல்லாம் யோகாசன பயிற்சி செய்யக் கூடாது?

  • பாடல் அல்லது இசையைக் கேட்டுக்கொண்டு யோகா பயிற்சி மேற்கொள்ளவதால் மனம் அமைதி அடையும் என பலர் கருதுகிறார்கள். ஆனால் அவ்வாறு யோகாசனம் மேற்கொள்ளும்போது நம் கவனம் இசையில் மூழ்கிவிடலாம். அப்போது உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து செயல்பட முடியாது. உடலும் மனமும் ஒன்றிணைந்து செயல்படுவதே யோகா. அதனால் சற்று அமைதியான சூழலில் யோகா மேற்கொள்ள வேண்டும்.
  • அனைவரும் அதிகாலை எழுந்து யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்த முடியாது. ஆனால் உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் யோகா பயிற்சி மேற்கொள்ள கூடாது. உணவு உட்கொண்டு இரண்டு மணி்நேரத்திற்கு பிறகு தான் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • 8 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆசனங்கள் மேற்கொள்ள கூடாது. குழந்தைகள் தானாக முன்வந்து ஆர்வம் காட்டினால் பெற்றோரின் கண்காணிப்பில் எளிமையான யோகாசனங்கள் மேற்கொள்ளலாம்.

பயிற்சியாளர்கள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும்

சர்வதேச யோகா தினம் : எப்படியெல்லாம் யோகா பயிற்சி மேற்கொள்ள கூடாது ?

பட மூலாதாரம், Getty Images

பர்வதாசனம் என்ற ஆசனத்தால் உடல் எடை குறையும்; பெரும்பாலும் தன்னிடம் வரும் பெண்கள் இந்த ஆசனத்தை விரும்பி மேற்கொள்வார்கள் என்கிறார் முத்துலட்சுமி.

காரணம் மலை வடிவில், உடலை வணங்கி நிற்க வேண்டும். தலைப்பகுதி கீழ் நோக்கி இருக்கும்போது நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். இதனால் தலை முடி கொட்டாமல் நன்கு வளரும். எனவே பலர் இந்த ஆசனத்தை வீட்டிலும் சென்று காலை ஒரு முறை மாலை ஒரு முறை மேற்கொள்வார்கள்.

ஆனால் ஆரம்பகட்டத்தில் இந்த பயிற்சி மேற்கொள்ளும்போது 3 வினாடிகள் அல்லது 5 வினாடிகள்தான் மலை வடிவில் நிற்க வேண்டும். இந்த ஆசனத்தை இரண்டு அல்லது மூன்று முறை மேற்கொள்ளலாம். பலர் உடனடியாக பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்ப கட்டத்திலேயே பயிற்சியாளருக்கு தெரியப்படுத்தாமல் 15 வினாடிகள் முதல் 30 வினாடிகள் வரை இந்த ஆசனத்தை மேற்கொள்கிறார்கள்.

இதனால் தலை வலி, முதுகு வலி என பல உடல் பிரச்சனைகள் ஏற்படும். எனவே பயிற்சியாளர்கள் சொல்லும் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்கிறார் முத்துலட்சுமி.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் யோகா பயிற்சியை தவிர்ப்பது நல்லது

பொதுவாக மாதவிடாய் காலத்தில் 3 நாட்களுக்கு யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டாம். குறிப்பாக உடல் தலைகீழாக இருக்கும் நிலையில் உள்ள எந்த ஆசனமும் மேற்கொள்ள கூடாது. தலைகீழாக இருக்கும் அத்தனை ஆசனங்களாலும் உடலில் அதிக வெப்பம் உண்டாகும். இது மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தும்.

ஆனால் மாதவிடாய் காலத்தில் கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறவர்கள், வஜ்ராசனம், பத்ராசனம் உள்ளிட்ட ஆசனங்களை மேற்கொள்ளலாம். மேலும் பத்ராசனா என்று கூறப்படும் பட்டர்ஃபிலை ஆசனம் மேற்கொள்ளும்போது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியில் இருந்து விடுபடலாம்.

இருதய பிரச்சனைகள் உள்ளவர்கள் உடலை பின்பக்கம் வளைக்கும் ஆசனங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதே போல முதுகு வலி பிரச்சனைகளுடன் இருப்பவர்கள் இந்த ஆசனங்கள் மேற்கொள்ளும்போது, பயிற்சியாளர்கள் அறிவுரையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

முதுகு வலி மற்றும் பிற உடல் வலிகள் உள்ளவர்கள் முதல் கட்டமாக பிராணயாமம் போன்ற முச்சு பயிற்சிகளை மேற்கொண்டு தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்வதில் கவனம் செலுத்தலாம் என்கிறார் முத்து லட்சுமி.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

ஆனால் இதே பிராணயாம முச்சு பயிற்சியை கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயிற்றில் புண் (அல்சர்) இருப்பவர்கள் மேற்கொள்ள கூடாது என கூறுகிறார் யோகா பயிற்சியாளர் சித்ரா தேவி.

கபால பாத்தி போன்ற மூச்சு பயிற்சியை வயிற்றில் புண் (அல்சர்) இருப்பவர்கள் நிச்சயம் மேற்கொள்ள கூடாது. முதல் கட்டமாக எளிய ஆசனங்களை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

உடல் எடையை குறைக்க யோகா பயிற்சி

தன்னிடம் உடல் எடையை குறைக்க வருபவர்கள் மேற்கொள்ளும் தவறுகளை சித்ரா தேவி, பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.

''சூரிய முத்ரா பயிற்சி மேற்கொள்வதால், உடல் எடை குறையும். ஆனால் 15 நிமிடத்திற்கு மேல் இந்த பயிற்சியை மேற்கொள்ள கூடாது என அறிவுறுத்தினோம். ஆனால் உடல் எடையை குறைக்கும் ஆசனம், முத்ரா என எதுவாக இருந்தாலும் மக்கள் அதில் அதிக கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், ஆர்வ மிகுதியில் அதிக நேரம் அந்த பயிற்சியை மேற்கொண்டு உடனே உடல் எடை குறைந்து விட்டதா, மெலிந்துவிட்டோமே என்பதை காண ஆர்வம் காட்டுகிறார்கள்.''

''அவ்வாறு என்னிடம் வந்த பெண் ஒருவர் அதிக நேரம் சூரிய முத்ரா பயிற்சி மேற்கொண்டு, வயிறு வலி மற்றும் வாய் கசக்கிறது, எந்த ருசியையும் உணர முடியவில்லை என கூறினார். காரணம் நீண்ட நேரம், அளவுக்கு அதிகமாக சூரிய முத்ரா பயிற்சி மேற்கொண்டதன் விளைவுதான் இது.''

யோகா

பட மூலாதாரம், Getty Images

''சூரிய முத்ரா மேற்கொள்வதனால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். மேலும் காலை 5 முதல் 8 மணிக்குள் இந்த சூரிய முத்ரா பயிற்சி மேற்கொள்ளலாம் அல்லது மாலை 4ல் இருந்து 6 மணிக்குள் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த சூர்ய முத்ராவை 15 நிமிடங்கள் மேற்கொண்டால் போதும். அதற்கு மேல் இதே பயிற்சியை மேற்கொண்டால் உடல் வெப்பம் அதிகரித்து உடலில் பல பிரச்சனைகள் உண்டாகும். என்னிடம் கற்றுக்கொண்ட பெண்ணும் குறிப்பிட்ட நேரத்தைவிட அதிக நேரம் இந்த பயிற்சியை மேற்கொண்டதால்தான் அவதிக்குள்ளானார். பிறகு இந்திர முத்ரா என்ற பயிற்சியை மேற்கொள்ள சொன்னோம். இந்த முத்ரா உடலை குளுமைபடுத்தும். அடுத்த சிறை நேரத்தில் அவர் உடலில் உள்ள வெப்பம் தணிந்து உடல் குளுமை ஆனது.''

''சூர்ய முத்ராவை அதிக நேரம் செய்ததால், பிரச்சனைகள் ஏற்பட்டது போல இந்திர முத்ராவை அதிகநேரம் மேற்கொண்டால் அளவுக்கு அதிகமாக உடல் குளுமை அடையும். அதனால் சளி, தலை வலி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் வரலாம். எனவே ஏற்கனவே சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்திர முத்ராவை தவிர்ப்பது நல்லது.''

இணையம் மூலம் யோகா கற்கலாமா?

நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுக்கொள்பவர்களே இவ்வாறு தவறுகள் மேற்கொண்டு, பிறகு அந்த தவறுகளை சரி செய்ய தங்கள் பயிற்சியாளர்களை அணுகி அதற்கேற்ப ஆசனங்களையும் முத்ராகளையும் கற்றுக்கொண்டு உடல் நல பாதிப்பில் இருந்து விடுபடுகிறார்கள்.

ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடியே பலர் புதிதாக இணையம் மூலம் யோகா பயிற்சியை கற்றுக்கொண்டு, அதை அன்றாடம் பின்பற்ற துவங்கியுள்ளார். இவர்களுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள் என யோகா பயிற்சியாளர் தன்ராஜிடம் கேட்டோம்.

சர்வதேச யோகா தினம் : எப்படியெல்லாம் யோகா பயிற்சி மேற்கொள்ள கூடாது ?

பட மூலாதாரம், Getty Images

இது குறித்து தன்ராஜ் கூறுகையில், ''இணையம் மூலம் பலர் தற்போது யோகா கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. பொதுவாக யோகா மையங்களில் 40 பேருக்கு மேல் அமர்ந்து யோகா பயிற்சி மேற்கொள்ளும்போதே தனி நபருக்கு உள்ள உடல் நல பிரச்சனைகளை கேட்டறிந்து அதை குணப்படுத்த தேவையான ஆசானங்களை சொல்லிக்கொடுப்பதில் சிரமம் உள்ளது. 10 பேருக்கு ஒரு யோகா பயிற்சியாளர் இருந்து கவனிப்பதே சரியாக இருக்கும். மேலும் பயிற்றுனர் இன்றி ஒருவர் தானாக யோகா கற்றுக்கொள்ளும்போது அது பல உடல் நல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

எடுத்துக்காட்டாக கபாலபதி பிராணாயாமம் மேற்கொள்வது எப்படி என்பதை நாம் காணொளியில் பார்க்க முடியும். ஆனால் நாம் உண்மையில் அதை சரியாக பின்பற்றுகிறோமா என்பதை ஓர் ஆசிரியர்தான் சொல்ல முடியும். கபாலபதி மிகவும் பயனுள்ள மூச்சு பயிற்சி; ஆனால் இதை இதயநோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் அளவுக்கு அதிகமாக இந்த முச்சு பயிற்சி மேற்கொண்டால் ஹெர்னியா, நுரையீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இந்த பயிற்சிக்கான பலன்கள் நல்ல முறையில் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், தனிநபர் கவனம் செலுத்தும் ஆசிரியர்கள் தேவை,’’ என்கிறார் யோகா பயிற்சியாளர் தன்ராஜ்.

'டிவி பார்த்துக்கொண்டே யோகா - வலியுடன் வருகிறார்கள்' - மருத்துவர்

தொலைக்காட்சியில் யோகா பயிற்சி அளிக்கும் காணொளிகளை பார்த்து தவறாக ஆசனங்கள் மேற்கொண்டு மிகுந்த கை, கால் வலியுடன் மருத்துவர்கள் உதவியை நாடுபவர்கள் உண்டு.

சர்வதேச யோகா தினம் : எப்படியெல்லாம் யோகா பயிற்சி மேற்கொள்ள கூடாது ?

பட மூலாதாரம், Getty Images

முதலில் டிவி பார்த்து யோகா செய்வதை மக்கள் நிறுத்த வேண்டும். யோகா நிபுணர்களின் கண்காணிப்பில் மட்டுமே யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சிலர் உடல் வலியில் இருந்து வெளிவர யோகா கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அந்த வலி ஏற்பட்டதன் காரணத்தை கண்டறிந்து பிறகு யோகா கற்றுக்கொண்டு, அதன் மூலம் தீர்வு காண்பதே நன்மை அளிக்கும்.

தவறாக யோகா பயிற்சி மேற்கொண்டு வலியில் வருபவர்களுக்கு முதலில் வலியில் இருந்து விடுபட தேவையான மருத்துவ உதவியை வழங்குவோம். ஆனால் ஒரு நோய் பாதிப்பு ஏற்பட்டவுடன் முழுமையாக அதை குணப்படுத்த யோகா பயிற்சி மேற்கொள்வதற்கு பதிலாக, எந்த உடல் நல பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க எளிய முறையில் நோய் தடுப்பு பயிற்சியாக யோகா மேற்கொள்வது நல்லது.

நிபுணர்களின் உதவியுடன் யோகாவை சிகிச்சை முறையாக பலர் பின்பற்றுகிறார்கள் ஆனால் நோய் தடுப்பிற்காகவும் ஊட்டச்சத்து அதிகரிக்கவும் யோகா கற்றுக்கொள்வது இன்னும் அதிக சிறப்பாக அமையும் என்கிறார் விளையாட்டு மருத்துவர் நிபுணர் டாப்சன் டோமினிக்.

"ஒரு காலகட்டத்தில் யோகா பயிற்சியை தவறாக மேற்கொண்டால் தீவிர உடல் பாதிப்புகள் ஏற்படும் என்பதை சொல்ல யோகா நிபுணர்கள் தயங்கினார்கள். ஏனென்றால், இவ்வாறான பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்கினால் பலர் யோகாவின் பலனை முழுமையாக பெறுவதற்குள் அதை நிறுத்தி விடுவார்கள் அல்லது யோகா பயிற்சி மேற்கொள்வதை முயற்சிக்காமலே விட்டுவிடுவார்கள் என்ற அச்சம் நிலவியது."

"தற்போது பின்விளைவுகளை பற்றிய பயம் இல்லாமல் பலர் நிபுணர்களின் அறிவுரை இன்றி தாங்களாகவே இணையம் மூலம் ஆசனங்கள் கற்றுக்கொண்டு மேற்கொள்ள துவங்கிவிட்டனர். அதனால், தவறாக செய்வதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து சொல்ல யோகா பயிற்சியாளர்கள் விரும்புகிறார்கள். இணையம் மூலம் கற்றுக்கொள்வது ஒரு வகையில் சிலருக்கு நன்மை அளித்தாலும், சிலரின் உடல் திறனை பொறுத்து இன்னும் சிலருக்கு ஆபத்தாக அமையலாம்," என்கிறார் யோகா தெரபிஸ்ட் முத்துலட்சுமி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: