செந்தில் பாலாஜி விவகாரம்: அதிமுகவை புறந்தள்ளி தி.மு.க. VS பா.ஜ.க. என அரசியல் களம் மாறுகிறதா?

செந்தில் பாலாஜி
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கும் விவகாரம் மிகத் தீவிரமான அரசியல் திருப்பத்தை எட்டியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகூட இல்லாத நிலையில், விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த விவகாரம் யாருக்கு சாதகம்?

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

அவருக்கு இதய வால்வுகளில் அடைப்பு இருப்பதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதனை காவேரி மருத்துவமனையில் செய்ய அனுமதிக்க வேண்டுமெனக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

சட்ட ரீதியான இந்த நடவடிக்கைகளை எல்லாம் தாண்டி, செந்தில் பாலாஜி விவகாரம் ஒரு அரசியல் புயலாக உருவெடுத்திருப்பதுதான் யாரும் எதிர்பாராதது.

செந்தில் பாலாஜி ஆரம்பத்திலிருந்தே ஒரு வெற்றிகரமான அரசியல்வாதி. பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திய செந்தில் பாலாஜி, 90களின் மத்தியில் தி.மு.கவில் இணைந்தார். பிறகு 2000வது ஆண்டில் போயஸ் தோட்டத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார். மார்ச் மாதத்தில் கட்சியில் இணைந்த அவருக்கு, செப்டம்பர் மாதத்திலேயே கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் பதவி கிடைத்தது.

2004ஆம் ஆண்டில் கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளரானார். 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அவருக்கு அளித்தார் ஜெயலலிதா. அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றாலும், செந்தில் பாலாஜி வெற்றிபெற்றார்.

2007ல் ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஆனவர், அடுத்த பத்து நாளில் அ.தி.மு.கவின் கரூர் மாவட்டச் செயலாளர் ஆகி, அந்த மாவட்டத்தில் இருந்த கட்சிப் பெருந்தலைகளை அதிரவைத்தார்.

2011ல் மீண்டும் சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜி, 37 வயதிலேயே போக்குவரத்துத் துறை அமைச்சரானார். அந்த காலகட்டத்தில், அ.தி.மு.க. தலைமையின் மிக நம்பகமான நபராக இருந்தார் செந்தில் பாலாஜி. ஆனால், செந்தில் பாலாஜி மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், 2015 ஜூலை 7ஆம் தேதி திடீரென அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.

இருந்தபோதும் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை செந்தில் பாலாஜிக்கு அளித்தார் ஜெயலலிதா. அதில் அவர் வெற்றிபெற்றார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் பக்கம் சென்ற செந்தில் பாலாஜி, அவர் தனிக்கட்சி ஆரம்பித்தபோதும் உடனிருந்தார். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2018 டிசம்பரில் தி.மு.க. தலைமையகமான அறிவாலயத்திற்கு வந்து அக்கட்சியில் இணைந்தார். அந்தத் தருணத்தில் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் பலவீனமாக இருந்த தி.மு.கவுக்கு செந்தில் பாலாஜியின் வருகை மிகச் சாதகமாக அமைந்தது.

செந்தில் பாலாஜி: திமுக - பாஜக

பட மூலாதாரம், Facebook/K.Annamalai

செந்தில் பாலாஜி VS அண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தலின்போது கடுமையாகப் பணியாற்றிய செந்தில் பாலாஜி, கொங்குப் பகுதியில் தி.மு.கவின் வெற்றிக்குக் கடுமையாக உழைத்தார். 18 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது, அவர்களில் ஒருவராக செந்தில் பாலாஜியும் இருந்தார். அவர் பதவியிழந்த அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றபோது, அதில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிபெற்றார்.

இதற்குப் பிறகு 2021லும் வெற்றிபெற்ற செந்தில் பாலாஜிக்கு யாரும் எதிர்பாராத வகையில் மின்சாரம், ஆயத்தீர்வை, மதுவிலக்கு ஆகிய முக்கியத் துறைகள் ஒதுக்கப்பட்டன. தி.மு.க. அமைச்சரவையில் மிகவும் சக்தி வாய்ந்த அமைச்சர்களில் ஒருவராக உருவெடுத்தார் செந்தில் பாலாஜி.

இந்தத் தருணத்தில் பா.ஜ.கவின் மாநிலத் தலைவரான கே. அண்ணாமலைக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையில் இருந்த மோதல், கிட்டத்தட்ட தனிப்பட்ட மோதல் என்று சொல்லும் அளவுக்கு மாறியது.

செந்தில் பாலாஜியும் அண்ணாமலையும் தினந்தோறும் ஊடகங்களின் மூலம் மோதிக்கொண்டனர். கடிகாரம் குறித்து கேள்வியெழுப்பியது உள்பட பல விவகாரங்களில் அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுத்தார் செந்தில் பாலாஜி.

இந்த காலகட்டத்திலேயே, செந்தில் பாலாஜி பல்வேறு மத்திய புலனாய்வு அமைப்புகளின் பார்வையின் கீழ் வந்தார். பல முறை அவர் தொடர்பான இடங்களில் ரெய்டுகள் நடந்தன. மே மாத இறுதியில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டுகளை நடத்தியது.

செந்தில் பாலாஜி: திமுக - பாஜக

பட மூலாதாரம், TNDIPR

அப்போது, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்குப் பிறகு செந்தில் பாலாஜி மீதான பிடி மேலும் இறுகியது. ஜூன் 13ஆம் தேதி அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் ரெய்டுகளை நடத்தி, நள்ளிரவில் கைதுசெய்தது.

செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் ரெய்டு, அவரது கைது போன்றவை அவருக்கான நெருக்கடி என்பதைத் தாண்டி தங்களுக்கான நெருக்கடி என்பதை தி.மு.க. விரைவிலேயே உணர்ந்ததைப் போலத் தெரிந்தது.

செந்தில் பாலாஜி விவகாரத்தை எதிர்கொள்ளத் தி.மு.க. முன்பாக இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று, சட்டரீதியாக அதனை முழுமையாக எதிர்கொள்வது. இரண்டாவது, அரசியல் ரீதியாக எதிர்கொள்வது. 2 ஜி விவகாரம் வெடித்தபோது, தி.மு.க. முழுக்க முழுக்க அதனை சட்டரீதியாகவே எதிர்கொண்டது.

ஆனால், இந்த முறை அரசியல் ரீதியாகவும் இதனை எதிர்கொள்ள தி.மு.க. முடிவுசெய்தது. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சேர்ந்ததுமே, தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் அவரைச் சென்று பார்த்து, ஆறுதல் சொன்னார்கள். முதலமைச்சரும் அவரை வந்து பார்த்தது, விவகாரத்தை வேறுவகையில் கையாள தி.மு.க. தலைமை முடிவுசெய்ததை உணர்த்தியது.

செந்தில் பாலாஜி: திமுக - பாஜக

பட மூலாதாரம், STALIN/TWITTER

வீடியோ வெளியிட்டு எச்சரித்த முதலமைச்சர் ஸ்டாலின்

செந்தில் பாலாஜி மீது கடுமையான புகார்கள் இருந்தும், இந்த விவகாரத்தை முன்வைத்து அரசியல் களத்தை சூடுபிடிக்கச் செய்ய தி.மு.க. முடிவுசெய்தது. செந்தில் பாலாஜியின் கைதை வைத்து, அகில இந்திய அளவில் பா.ஜ.கவுக்கு எதிரான உணர்வை ஒருங்கிணைத்த தி.மு.க. காங்கிரஸ், ஆம் ஆத்மி, திருணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அறிக்கை வெளியிட வைத்தது.

இதன் உச்சகட்டமாக, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ அறிக்கை அமைந்தது. அதில், பா.ஜ.கவையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்த மு.க. ஸ்டாலின், பா.ஜ.கவை எச்சரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

"முதல்வர் பேசியது செந்தில் பாலாஜிக்காக பேசியதல்ல. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதையும் மனதில் வைத்துப் பேசியதுதான். மத்திய புலனாய்வு அமைப்புகள் செந்தில் பாலாஜி தவிர, மேலும் பலரையும் குறிவைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் பேசியிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

பாஜ.க. ஆளும் மாநிலங்களில் இது போன்ற ரெய்டு நடவடிக்கைகள் கிடையாது; வழக்குகளைச் சந்திக்கும் மற்ற கட்சித் தலைவர்கள் பா.ஜ.கவில் சேர்ந்தால் தொந்தரவு இருக்காது போன்ற விஷயங்களை இந்த வீடியோவின் மூலம் மக்களிடம் கொண்டு செல்லும்போது, அதற்கு நிச்சயம் தாக்கம் இருக்கும். பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி உறுதியாக இல்லாத நிலையில், செந்தில் பாலாஜி விவகாரம் தமிழ்நாட்டிலும் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து வைக்க உதவியிருக்கிறது." என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

மற்றொரு முக்கியமான விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார் ப்ரியன். அதாவது, தமிழக அரசியல் களத்தில் இந்த முறை தி.மு.க.வின் நிலைப்பாடு அ.தி.மு.கவுக்கு எதிரானது என்பதற்குப் பதிலாக, பா.ஜ.கவுக்கு எதிரானதாக முன்வைப்பதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த நினைக்கிறது தி.முக. என்கிறார் அவர்.

"இது அகில இந்திய அளவில் எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும். தி.மு.க, ஏதோ ஒரு வகையில் பா.ஜ.கவுக்கு இணங்கிப் போக ஒப்புக்கொண்டுவிட்டது என அவ்வப்போது சொல்லப்படும் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையிலும் இந்தப் பேச்சு அமைந்திருக்கிறது. பா.ஜ.கவுக்கு எதிரான வாக்கு வங்கிதான் தனது முக்கியமான வாக்குவங்கி என்பதை தி.மு.க. இந்தத் தருணத்தில் நிலைநாட்ட முடிவுசெய்துவிட்டது. அதனால், இது பா.ஜ.கவின் அரசியல் பழிவாங்கல் என்பதை கீழ் மட்டம் வரை கொண்டுசெல்வார்கள்" என்கிறார் ப்ரியன்.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம், TNDIPR

செந்தில் பாலாஜி கைது-மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இதுபோல மத்திய அமைப்புகள் கைது நடவடிக்கையில் ஈடுபடுவது, இந்தத் தருணத்தில் பா.ஜ.கவுக்கு எதிரான சக்திகளுக்கே சாதகமாக முடியும் என்கிறார் மூத்த பத்திரிகையாளாரான ஏ.எஸ். பன்னீர்செல்வன். "கர்நாடக மாநிலத்தில் டி.கே. சிவக்குமார் கைதுசெய்யப்பட்டது திருப்பு முனையாக அமைந்தது. அதனை வைத்து தனது வாக்கு வங்கியைத் திரட்டியது காங்கிரஸ் கட்சி. தமிழ்நாட்டில், செந்தில் பாலாஜியின் கைதை வைத்து பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகள் தங்கள் வாக்குகளைத் திரட்ட முயலும். பா.ஜ.கவின் புதிதாக எந்தத் திட்டமும் கைவசம் இல்லை. அதைத்தான் இந்தச் சம்பவம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது" என்கிறார் அவர்.

செந்தில் பாலாஜியின் கைது என்பது, செந்தில் பாலாஜி தொடர்பானது என்பதைவிட, தி.மு.கவுக்கு எதிரானது என்பதை முதலமைச்சர் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்கிறார் ப்ரியன்.

"மற்ற அமைச்சர்களையெல்லாம் விட்டுவிட்டு செந்தில் பாலாஜியைக் குறிவைக்க முக்கியக் காரணம், தி.மு.க. பலவீனமாக இருந்த கொங்குப் பகுதியில் மறுபடியும் ஒரு பலமான கட்டமைப்பை அவர் உருவாக்கியதுதான். அதனால், கடந்த 5-6 மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பேசுபவர்களின் மூலம் செந்தில் பாலாஜி குறிவைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி ஆட்டத்திலிருந்து அகற்றப்பட்டால், கொங்குப் பகுதியில் தி.மு.க. பலவீனமடையும் என கருதப்பட்டது. ஆகவேதான், இதனை சட்டரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள முடிவுசெய்தது தி.மு.க." என்கிறார் அவர்.

மிக மோசமான மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் செந்தில் பாலாஜியை தி.மு.க. இந்த அளவுக்கு ஆதரிப்பது மக்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாதா? என்று கேட்டப்போது, "தமிழ்நாட்டில் ஜெயலலிதாவும் மு. கருணாநிதியும் பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்கள். ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டும் மீண்டும் முதல்வராக தேர்வானவர். ஆகவே, இந்தப் புகார் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தாது" என்கிறார் ப்ரியன்.

இந்த ஆட்டம் மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கும் மாநிலத்தில் ஆளும் தி.மு.கவுக்கும் இடையிலான மோதலாக மாறி, தாம் ஓரங்கட்டப்பட்டிருப்பதை அ.தி.மு.க. உணர்ந்துகொண்டிருப்பதைப் போலத் தெரிகிறது. இதனால், உடனடியாக செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அ.தி.மு.க., ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து இதனை வலியுறுத்தியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: