உச்சத்தில் அதிமுக-பாஜக மோதல்: கூட்டணி முறியாதது ஏன்? ஜெயலலிதா இருந்தால் என்ன செய்திருப்பார்?

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கூட்டணியில் உள்ள மாநில தலைவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்குச் சென்றிருக்கிறது அ.தி.மு.க.

உடனடியாக பத்திரிகையாளர் சந்திப்பை வைத்து பதிலடி கொடுக்கிறது பா.ஜ.க. ஆனால், இவ்வளவுக்குப் பிறகும்கூட கூட்டணி முறியாமல் இருக்கிறதே ஏன்?

கூட்டணிக் கட்சிகளான அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே அ.தி.மு.கவிற்கும் பா.ஜ.கவிற்கும் இடையிலான உறவு அவ்வளவு நெருக்கமானதாக இல்லாத நிலையில், சமீபத்தில் ஓர் ஆங்கில நாளிதழுக்கு பா.ஜ.கவின் மாநில தலைவர் கே. அண்ணாமலை அளித்த பேட்டி, இரு கட்சிகள் இடையிலான கூட்டணியை முறிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது.

ஜூன் 12ஆம் தேதி வெளியான ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கே. அண்ணாமலை அளித்த பேட்டியில் அவரிடம், "1991-96க்கு இடைப்பட்ட காலம்தான் மிக அதிக அளவில் ஊழல் நிறைந்த காலகட்டங்களில் ஒன்று என்பதை ஏற்பீர்களா?" எனக் கேட்கப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, "தமிழ்நாட்டில் பல நிர்வாகங்கள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. ஊழலில் நம்பர் ஒன் மாநிலம் என்றுகூட சொல்வேன்," என்று பதிலளித்தார்.

இதையடுத்து, அன்று மதியமே செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சூடுபிடித்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இந்நிலையில், அ.தி.மு.கவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரமெல்லாம் நடப்பதற்கு முன்பாகவே, அதாவது ஜூன் 9ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.

ஆகஸ்ட் மாதம் மதுரையில் அ.தி.மு.கவின் மாநில மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எடப்பாடி கே. பழனிசாமி பொதுச் செயலாளரான பிறகு நடத்தப்படும் மாநாடு என்பதால், அதை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக ஆலோசிக்கவே இந்த மாவட்ட செயலாளர் கூட்டம் கூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டன.

ஆனால், அதற்கு முன்தினம் அரசியல்ரீதியாக களேபரங்கள் அரங்கேறிய நிலையில், செவ்வாய்க் கிழமை காலையிலேயே ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.கவின் தலைமையகம் சூடுபிடித்தது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அங்கு கூடியிருந்த தொண்டர்கள், அண்ணாமலையை கடுமையான சொற்களால் வறுத்தெடுத்தனர்.

மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் அண்ணாமலையைக் கண்டித்து பேட்டிகளையும் அளித்தனர். இந்த நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அண்ணாமலை அளித்த பேட்டியே முக்கிய விவாதப் பொருளாக இருந்திருக்கிறது. பல முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் கூட்டணி முறிந்துவிட்டதாக அறிவிக்க வேண்டுமெனப் பேசினர்.

ஆனால், முடிவில் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டு, கூட்டம் முடிவுக்கு வந்தது. வழக்கமாக இம்மாதிரி தருணங்களில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்திப்பது வழக்கம்.

ஆனால், இந்த முறை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அச்சிடப்பட்ட கண்டன அறிக்கையை மட்டும் வாசித்துவிட்டு, கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் சென்றுவிட்டார். அதற்குப் பிறகு, அமைச்சர்கள் யாரும் செய்தியாளர்களிடம் பேசவும் இல்லை.

எதிர்வினையாற்றிய அண்ணாமலை

அ.தி.மு.கவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே பா.ஜ.க. அதற்கு எதிர்வினையாற்றியது.

பிற்பகல் 2 மணியளவில் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

எதிர்பார்த்ததைப் போலவே, அ.தி.மு.கவின் கண்டனத் தீர்மானத்திற்குப் பதில் அளிக்கும் வகையிலேயே இந்த செய்தியாளர் சந்திப்பு அமைந்தது. அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கரு. நாகராஜன், "அண்ணாமலையின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், பொறாமைப்பட்டு, காழ்ப்புணர்ச்சியோடு, உள்நோக்கத்தோடு, சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் போன்றவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

இதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட கே. அண்ணாமலை, "கூட்டணிக் கட்சியையும், கூட்டணித் தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை," என்று குறிப்பிட்டார்.

அண்ணாமலை

ஆனால், அதோடு நிறுத்தாமல் "ஆங்கில நாளேடுக்கு நான் கொடுத்திருந்த பேட்டியில், உண்மைக்குப் புறம்பாக ஏதேனும் கூறியிருந்தேன் என்று யாராவது நினைத்தால், அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்த வேண்டும். அப்படி தெளிவுபடுத்தினால், அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை," என்றும் குறிப்பிட்டார். அதாவது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிடும் வகையில் "முன்னாள் முதல்வர்கள் ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டனர்" என்ற கருத்தை அவர் திரும்பப் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இந்த அறிக்கை காட்டியது.

மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அ.தி.மு.கவின் பொதுச் செயலாளாராக இருந்த காலகட்டத்தில் கூட்டணிக் கட்சிகள் நடந்துகொள்ள வேண்டிய விஷயத்தில் தொடங்கி, எத்தனை இடங்கள், எந்தச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது வரை அ.தி.மு.கவே முடிவெடுக்கும்.

அ.தி.மு.கவின் கூட்டணியில் உள்ள கட்சிகள், சிறு அதிருப்தியை வெளிப்படுத்தினாலும் அந்தக் கட்சி, அ.தி.மு.க. கூட்டணியில் தொடர முடியாது.

ஆனால், தற்போது அக்கட்சியின் மறைந்த முதலமைச்சரை, கூட்டணிக் கட்சியான பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டவர் என்று சுட்டிக்காட்டிப் பேசும்போதும் அ.தி.மு.க. கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்வதுதான் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

''எடப்பாடி செய்வது கட்சியை பலவீனமாக்கும்''

எடப்பாடி கே. பழனிசாமிக்கு இருக்கும் அச்சம்தான் இதற்குக் காரணம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

 ஆர்.கே. ராதாகிருஷ்ணன்
படக்குறிப்பு, ஆர்.கே. ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர்

"எடப்பாடி கே. பழனிசாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோரின் பயம்தான் இதற்குக் காரணம். இந்த மூன்று பேரின் ஜாதகமும் அமித் ஷாவிடம் இருக்கிறது. இவர்கள் கூட்டணி விஷயத்தில் முரண்டு பிடித்தால் ரெய்டு வரக்கூடும் என அஞ்சுகிறார்கள்.

சிறைக்குச் செல்ல வேண்டி வருமோ என நினைக்கிறார்கள். செந்தில் பாலாஜி தொடர்பாகவும்தான் ரெய்டு நடக்கிறது. அவர் அதைச் சந்திக்கவில்லையா? எதிர்த்து நிற்கவில்லையா? இவர்கள் அஞ்சுகின்றனர். அதனால்தான் இப்படி அறிக்கை விடுவதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்," என்கிறார் ராதாகிருஷ்ணன்.

ஆனால், இதைக் கடுமையாக மறுக்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பு செயலாளருமான வைகைச் செல்வன்.

"நாங்கள் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் என்று சொல்லியிருக்கிறோம். அண்ணாமலையை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டி வரும் எனக் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளோம்," என்கிறார் அவர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால், இப்படித்தான் இதுபோன்ற விஷயங்களை எதிர்கொள்வாரா எனக் கேட்டபோது, "தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. அண்ணா ஒரு மாதிரி, மு. கருணாநிதி ஒரு மாதிரி, மு.க. ஸ்டாலின் ஒரு மாதிரி செயல்படுவார்கள்.

அதுபோலத்தான் எம்.ஜி.ஆர். ஒரு மாதிரி செயல்படுவார். ஜெயலலிதா ஒரு மாதிரி செயல்படுவார். எடப்பாடி கே. பழனிசாமி தன் பாணியில் செயல்படுகிறார். எல்லா தலைவர்களும் ஒரே மாதிரி செயல்பட முடியது," என்கிறார் வைகைச் செல்வன்.

ஆனால், எடப்பாடி கே. பழனிச்சாமி இதுபோலவே செயல்பட்டால், கட்சி பலவீனமடையும் என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

"எடப்பாடி கே. பழனிச்சாமி இப்படி இருந்தால் சரியாக வராது. இதுபோன்ற பலவீனமான தோற்றம், மீண்டும் அதிகாரத்திற்கு வருவதைக் கடினமாக்கிவிடும். அல்லது கட்சியின் தலைமைக்கு வேறு உறுதியான தலைவர்கள் யாராவது வருவார்கள்," என்கிறார் ராதாகிருஷ்ணன்.

ஜெயலலிதா காலகட்டத்தில் அ.தி.மு.க. VS பா.ஜ.க. மோதல்கள் எப்படி இருந்தன?

கடந்த 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவும் வாஜ்பாயி தலைமையிலான பா.ஜ.கவும் கூட்டணி அமைத்திருந்தன. அந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியையும் பெற்றது. அ.தி.மு.க. 18 இடங்களையும் பா.ஜ.க. மூன்று நாடாளுமன்றத் தொகுதியையும் கைப்பற்றியது.

ஆனால், ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே பிரச்னைகள் ஏற்பட்டன. முதலில் பா.ஜ.க. அரசை வெளியில் இருந்து ஆதரிப்பதாகச் சொன்ன ஜெயலலிதா, பிறகு ஆட்சியில் பங்கேற்கச் சம்மதித்தார். இதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த தி.மு.கவை கலைக்க வேண்டுமெனத் தொடர்ந்து கோரி வந்தார் ஜெயலலிதா.

ஆனால், ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் போன்ற மூத்த தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அனுப்பி சமாதான நடவடிக்கையில் ஈடுபட்டது மத்திய அரசு. சில ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்ட பூட்டா சிங், ராமகிருஷ்ண ஹெக்டே, ராம் ஜெத்மலானி ஆகியோரை நீக்க வேண்டுமெனக் கூறினார்.

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் புலிகள் நடமாட்டம் அதிகரித்து, தீவிரவாதம் பெருகிவிட்டதால் அரசைக் கலைக்க வேண்டுமெனக் கோரினார் ஜெயலலிதா.

இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, "356வது பிரிவைப் பயன்படுத்தி எந்த மாநில அரசையும் கலைக்க மாட்டோம்" என்று பதிலளித்தார்.

அத்வானியின் கருத்துக்குப் பதிலளித்த ஜெயலலிதா, "பல பிரச்னைகளை மனதில் வைத்திருக்கும் பா.ஜ.க. தலைவர்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில் மட்டும் செலக்டிவ் அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது," என்றார்.

இதற்குப் பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார் ஜெயலலிதா. அந்த கோரிக்கையை பா.ஜ.க. நிராகரித்தது. இதற்குப் பிறகு சுப்பிரமணியன் சுவாமி 1999 மார்ச் 29ஆம் தேதி டெல்லியில் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் காங்கிரஸ் தலைவர்களுடன் கலந்துகொண்டு அதிர்ச்சியளித்தார் ஜெயலலிதா. அடுத்த சில நாட்களில் அ.தி.மு.கவின் சார்பில் மத்திய அமைச்சர்களாக இருந்த தம்பிதுரையும் கடம்பூர் ஜனார்த்தனமும் பதவி விலகினர்.

அதே ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனை சந்தித்த ஜெயலலிதா, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகக் கூறினார். பெரும்பான்மை இழந்த வாஜ்பாயி அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்ந்தது.

இந்தக் காலகட்டத்தில் பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையிலான உறவை ஜெயலலிதாவே தீர்மானித்தார். தான் விரும்பிய வகையில் நடக்காதபோது, மத்திய அரசுக்குத் தந்த ஆதரவையும் விலக்கிக்கொள்ள அவர் தவறவில்லை.

இதற்குப் பிறகு, 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் அமைந்தாலும், அந்தத் தேர்தலில் கிடைத்த தோல்விக்குப் பிறகு, கூட்டணி உடனடியாக முடிவுக்கு வந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: