தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு தனிக்கட்சியா? பா.ஜ.க.வில் என்ன நடக்கிறது?

பாஜக, தமிழ்நாடு, அண்ணாமலை
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியில் பிராமணர்கள் ஒதுக்கப்படுவதாக சலசலப்பு எழுந்திருக்கிறது. பிராமணர்களின் நலனுக்கென தனிக்கட்சி துவங்கலாமா என ஆலோசிக்கப்பட்டுவருவதாகவும் சொல்கிறார் எஸ்.வி. சேகர். இந்த விவகாரத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?

தமிழ்நாடு அரசியல் களத்தைப் பொறுத்தவரை, பிராமணர்களின் சித்தாந்த எதிரியாகவும் அரசியல் எதிரியாகவும் சுட்டிக்காட்டப்படும் கட்சி தி.மு.கதான். இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது போன்ற பல விஷயங்கள், பிராமணர்களை தி.மு.கவிடமிருந்து முற்றிலுமாக விலக்கி வைத்தன.

2014ல் இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் பல பிராமணர்கள் பா.ஜ.கவை தங்களுக்கான கட்சியாக பார்த்தனர். 2016ல் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அக்கட்சியில் இருந்த பிராமணர்களில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையினரும் பா.ஜ.க பக்கம் திரும்பினர்.

2019ஆம் ஆண்டு தேர்தலில் சமூக வலைதளங்களில் தங்களை பிராமணர்களாக வெளிப்படுத்திக் கொண்டவர்கள், பா.ஜ.கவிற்காக தீவிரமாக பணியாற்றினர். இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் பா.ஜ.க. சார்பில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட உமா ஆனந்தனின் வெற்றி, குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தது.

ஆனால், பா.ஜ.கவில் பிராமணர்களை ஒதுக்குவதாக குரல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, பா.ஜ.கவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை வந்த பிறகு பிராமணர்களை குறிவைத்து ஒதுக்குவதாக எஸ்.வி. சேகர் உள்ளிட்டோர் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த வாரம் முழுக்க ட்விட்டர் தளத்தில் உள்ள 'ஸ்பேஸ்'ல் பல பிராமணர்கள் கூட்டங்களை நடத்தினர்.

இதில் சில கூட்டங்களில் எஸ்.வி. சேகர், காயத்ரி ரகுராம் போன்றவர்கள் பங்கேற்றனர். இதில் பேசியவர்கள், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் தோல்விக்காக பணியாற்ற வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு பலர் கோபத்தை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில் கூட்டம் ஒன்றில் பேசிய கே. அண்ணாமலை தமிழ்நாட்டில் பிராமணர்கள் ஒடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். "எப்போது பார்த்தாலும் பிராமிண்... பிராமிண்... பிராமண மேலாதிக்கம் என்று பேசுகிறார்கள்.

இதையெல்லாம் உடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று குறிப்பிட்டார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் பிராமணர்கள் யூதர்களைப் போல நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

அண்ணாமலையின் பேச்சை ட்விட்டரில் பகிர்ந்த எஸ்.வி. சேகர், "நாக்கில் தேனையும் நாடி நரம்புகளில் பிராமண எதிர்ப்பையும் கொண்டு, மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தால் பேசவைக்கப்பட்ட ஓட்டு வங்கி" என்று குறிப்பிட்டார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

இதற்குப் பிறகு நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், பிராமணர்களுக்கு எதிராகச் செயல்படுவதாக எஸ்.வி. சேகர் குற்றம்சாட்டுவது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, "யாருக்கு பிடிக்கவில்லையோ, டில்லிக்குப் போகச் சொல்லுங்க. ஆறாயிரம் ரூபாய்தான் டிக்கெட். பழைய பஞ்சாங்கத்தையெல்லாம் வச்சு கட்டுப்படுத்த முடியாது. எஸ்வி சேகருக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும்தான் சொல்றேன். டிக்கெட் வாங்க முடியவில்லையென்றால், நானே டிக்கெட் போட்டுத்தர்றேன்" என்று குறிப்பிட்டார்.

பா.ஜ.கவில் பிராமணர்களை ஒடுக்குவதாக ஏன் சொல்கிறீர்கள், அப்படி என்ன நடந்தது என திரைக் கலைஞர் எஸ்.வி. சேகரிடம் கேட்டபோது, விரிவாக பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

"அண்ணாமலை வந்த பிறகு பா.ஜ.கவில் பதவியில் இருந்த பல பிராமணர்கள் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள் அல்ல. இப்போது ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் பதவி கொடுக்கப்படுகிறது.

அண்ணாமலை மாநிலத் தலைவராக வந்த பிறகு குண்டர் சட்டத்தில் உள்ளே இருக்க வேண்டியவர்கள், என்கவுன்டரில் போட வேண்டியவர்கள், சமூக விரோதிகளை கட்சியில் சேர்த்து பதவி கொடுத்து வருகிறார். பா.ஜ.க. வரலாற்றில் இதுபோல நடந்ததே கிடையாது.

பாஜக, தமிழ்நாடு, அண்ணாமலை

பட மூலாதாரம், TWITTER

கட்சிக்குள் இருக்கும் எல்லா பிராமணர்களையுமே ஒதுக்குகிறார் அவர். சென்னையில் ஒரே ஒரு பிராமண கவுன்சிலர் உமா ஆனந்த். ஆனால், அவர் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளிலேயே அவரது பெயரை போஸ்டர்களில் போடுவதில்லை. சேலத்தில் மகேஷ், ஈரோட்டில் உமா போன்ற பிராமணர்களை இதுபோலத்தான் ஒதுக்கினார்கள். கே.டி. ராகவன் நிர்மலா சீதாராமனோடு நல்ல அறிமுகம் உடையவர். அதனால், ஒரு வீடியோவை வெளியிடவைத்து அவரை காலி செய்தார்.

ஆனால், ஒரு கூட்டத்தில் பேசும்போது தமிழ்நாட்டில் யூதர்களைப் போல பிராமணர்களை நடத்துவதாகச் சொல்கிறார். தமிழ்நாட்டில் என்ன பிராமணர்களை வெட்டினார்களா, கொன்றார்களா?

என் வாழ்வில் பத்தாண்டுகளை இங்கே வீணடித்துவிட்டேன். மோதி ஆதரவாளர் என்பதால் பல படங்களில் என்னை நடிக்க வைப்பதைத் தவிர்த்துவிட்டார்கள். ஃபேஸ்புக்கில் நான் ஒரு செய்தியை ஃபார்வர்டு செய்து சர்ச்சையானபோது, கட்சி என் பக்கம் நிற்கவில்லை. அண்ணாமலையை மாற்றினால் தவிர பா.ஜ.க. இங்கே ஜெயிக்க முடியாது" என்று அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார் எஸ்.வி. சேகர்.

இது குறித்து அண்ணாமலையிடமே பேச முயற்சிக்கலாமே என்று கேட்டபோது, "ஆரம்பத்தில் அவரிடம் இதைப் பற்றிப் பேச நேரம் கேட்டேன். அப்போது 10 அல்லது 11ஆம் தேதி சந்திக்கலாம் என்றார். பத்தாம் தேதி போன் செய்தபோது போனை எடுக்கவில்லை. வெளியூரில் இருந்ததாக அவருடைய பி.ஏ. சொன்னார். அதற்குப் பிறகு, அவர் சந்திப்பதையே தவிர்த்துவிட்டார்" என்கிறார் எஸ்.வி. சேகர்.

எஸ்.வி. சேகர் இதுபோல மாநிலத் தலைவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கும் நிலையில், அவர் தலைமையில் பிராமணர்களுக்கென கட்சி ஒன்றைத் துவங்கப்போவதாக பேச்சுகள் அடிபட ஆரம்பித்திருக்கின்றன.

பாஜக, தமிழ்நாடு, அண்ணாமலை

பட மூலாதாரம், FACEBOOK

"பிராமணர்கள் கட்சி ஆரம்பிப்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை. ஆனால், அவர்கள் இந்த நிகழ்வால் மிகவும் தூண்டப்பட்டுள்ளனர். ஐயாயிரம் பேர் இரவும் பகலும் வேலை பார்க்கிறார்கள். அடுத்த தேர்தலில் 5 லட்சம் பிராமணர்கள் வாக்களித்தால்கூட பிராமணர்கள் சக்தியை நிரூபிக்க முடியும்.

பிராமணர்கள் கட்சி துவங்குவதை யாரும் தடுக்க முடியாது. தேர்தல் ஆணையத்தில் செய்யவேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்தாகிவிட்டது. நான் வர வேண்டுமென அவர்கள் அழைத்தால் நான் செல்வேன். முக்கியமான பிராமணப் பிரமுகர்கள், இந்தக் கட்சியின் ஆலோசனைக் குழுவில் இருப்பார்கள். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம். அதில் எங்கள் பலத்தை நிரூபித்து, எங்களுக்கு 10 இடங்களை தரும் கட்சியோடு கூட்டணி அமைப்போம்.

பா.ஜ.கவைவிட்டு பிராமணர்கள் விலகிச் சென்றால் 1.2 சதவீத ஓட்டுகள் போய்விடும் என்பதை உணர்ந்த தில்லி தலைமை அண்ணாமலையை கூப்பிட்டு சத்தம் போட்டிருக்கிறார்கள். இதனால்தான் ஒரு ஐ.டி. விங் கூட்டத்தில் சம்பந்தமில்லாமல் பிராமணர்களுக்கு ஆதரவாக இருப்பதைப்போல பேசினார் அண்ணாமலை" என்கிறார் எஸ்.வி. சேகர்.

சேலம் மாவட்டத்தில் அண்ணாமலையால் ஒதுக்கப்பட்டதாக எஸ்.வி. சேகரால் சுட்டிக்காட்டப்பட்டவர் மகேஷ். இவர் மாநில பிரச்சாரப் பிரிவு துணைத் தலைவராக இருந்தவர். இப்போது அந்தப் பதவியில் இல்லை. மகேஷிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசியபோது, அவர் விரிவாகப் பேச மறுத்துவிட்டார். "எஸ்.வி. சேகர் சொன்னது உண்மைதான். ஆனால், இதைப் பற்றிப் பேசினால் 2024ல் பா.ஜ.கவின் வாய்ப்புகளைப் பாதிக்கும். எனக்கு அநீதி நடந்திருந்தாலும் அதைப் பற்றி பேச வேண்டாமென்றே நினைக்கிறேன்" என்று மட்டும் சொல்கிறார் மகேஷ்.

ஆனால், அவரைப் பொறுத்தவரை பிராமணர்களுக்குக் கட்சி பதவி கொடுக்கப்படாதது ஒருபுறமிருக்க, அவர்கள் திட்டமிட்டு பொதுவெளியில் அவமானப்படுத்தப்படுவதாகக் கருதுவதாகத் தெரிகிறது. அதற்கு உதாரணமாக கே.டி. ராகவன், காயத்ரி ரகுராம் விவகாரம் போன்றவை சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த மகேஷ் கொரோனா காலகட்டத்தில் 'மோடி இட்லி' என்ற பெயரில் சேலம் பகுதியில் பத்து ரூபாய்க்கு நான்கு இட்லிகளை வழங்கியதன் மூலம் அப்பகுதியில் கவனத்தை ஈர்த்தவர். ஆனால், கட்சியினரே அவர் மீது சம்பந்தமில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தியதாலும் எம்.எல்.ஏ சீட்டிற்காக இவற்றைச் செய்ததாக கூறியதாலும் மனம் நொந்து பதவியிலிருந்து விலகிவிட்டதாக அவர் தரப்பினர் கூறுகின்றனர்.

பாஜக, தமிழ்நாடு, அண்ணாமலை

காயத்ரி ரகுராமிடம் இது குறித்துக் கேட்டபோது, "நான் இதைப் பற்றி சொல்ல வேண்டியவற்றையெல்லாம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இப்போது சொல்வதற்கு எதுவுமில்லை" என்று கூறினார்.

பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜாவிடம் கேட்டபோது, "இது போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை" என்று கூறிவிட்டார்.

அண்ணாமலை மீது கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, "கட்சியில் நிர்வாகிகளாக இல்லாதவர்கள், கட்சியிலேயே இல்லாதவர்கள் இப்படிச் சொல்வது வேடிக்கை. இது அகில இந்திய கட்சி. இங்கே ஜாதி பார்த்து பொறுப்பு கொடுப்பது, அரசியல் செய்வதெல்லாம் நடக்காத விஷயம். நான் 37 வருடமாக இந்தக் கட்சியில் இருக்கிறேன். இதுபோல இங்கே நடக்கவே நடக்காது. ஒரு சிலருடைய தவறான யூகத்தால், காழ்ப்புணர்ச்சியால் இப்படியெல்லாம் நடப்பதாக சித்தரிக்கப்படுகிறது. இதில் சிறிதளவும் உண்மை கிடையாது" என்று தெரிவித்தார்.

ஆனால், கே.டி. ராகவன், காயத்ரி ரகுராம், எஸ்.வி. சேகர் போன்றவர்கள் ஓரம்கட்டப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து கேட்டபோது, "கே.டி. ராகவன் அவருடைய சொந்தக் காரணங்களால் கட்சி பதவியை ராஜினாமா செய்தார். கே.டி. ராகவன் பதவி விலக வேண்டுமென யாரும் நிர்பந்தம் செய்யவில்லை. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர், தனிப்பட்ட காரணங்களால் பதவி விலகினார். இதில் ஜாதி எங்கிருந்து வந்தது? தான் குற்றமற்றவன் என நிரூபித்துவிட்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் நிச்சயம் வருவார்.

காயத்ரி ரகுராமைப் பொறுத்தவரை, கட்சித் தலைவரைப் பற்றி பொதுவெளியில் விமர்சித்ததால், இடைநீக்கம் செய்யப்பட்டார். அது சரியான நடவடிக்கைதான். ஆனால், கட்சியை விட்டு விலகியது அவரே எடுத்த முடிவு.

எஸ்.வி. சேகர் எந்தப் பொறுப்பிலும் இல்லை. கட்சியின் தினசரி நடவடிக்கைகளில் ஈடுபடவும் இல்லை. ஒருவரை ஜாதியின் அடிப்படையில் எப்படி தவிர்க்க முடியும்? அண்ணாமலை மீது குற்றம் சொல்கிறவர்கள், எந்த அடிப்படையில் அந்தக் குற்றச்சாட்டை சொல்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். அண்ணாமலைக்கும் ஜாதி அடிப்படையிலான எந்த விஷயத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை" என்கிறார் நாராயணன்.

பிராமணர்களுக்கான தனிக் கட்சி சாதிக்குமா?

பிராமணர்கள் தங்களுக்கென ஒரு கட்சி ஆரம்பிக்கப்போவதாகச் சொல்வது குறித்து கேட்டபோது, "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். ஜாதியை வைத்து ஆட்சி அமைக்க முடியாது. அப்படி கட்சி துவங்கி நடத்துபவர்கள், வெற்றி பெற முடியாது. ஏனென்றால் இந்தியா நூற்றுக்கணக்கான ஜாதிகளால் கட்டமைக்கப்பட்ட நாடு. ஜாதிக்கொரு கட்சி என்று வந்தால் தோல்வியில்தான் அது முடியும்" என்கிறார் அவர்.

பிராமணர்களுக்கான தனிக் கட்சி குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என். நாராயணனிடம் கேட்டபோது, "தமிழக பிராமணர்களுக்கென தனிக்கட்சி துவங்குவது தவறான அணுகுமுறை. நடைமுறை சாத்தியமில்லாதது. பிராமணர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பில் உள்ளனர். இதனால், தனிக் கட்சி முயற்சிகள் வெற்றிபெறுவதில்லை. பிராமணர்கள் பல்வேறு தொகுதிகளில் பரவலாக இருப்பதால், ஒரு பெரிய தாக்கம் எதையும் உருவாக்கிவிட முடியாது" என்று தெரிவித்தார்.

2006ஆம் ஆண்டில் நாராயணன், பிராமணர்களுக்கென தான் ஒரு கட்சியைத் துவங்கி அது தோல்வியில் முடிவடைந்ததையும் குறிப்பிடுகிறார். பிராமணர்களுக்கான பிரத்யேகக் கொள்கைகளை முன்னிறுத்தப்போவதாகக் கூறி, 2006ல் மக்கள் தேசிய ஜனநாயகக் கட்சி என்ற கட்சியை நாராயணன் ஆரம்பித்தார்.

இந்தக் கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து 2006 சட்டமன்றத் தேர்தலில் சென்னை தியாகராய நகரிலும் தஞ்சாவூர் திருவிடைமருதூரிலும் போட்டியிட்டது. தியாகராய நகரில் இக்கட்சியின் சார்பில் முக்தா ஸ்ரீநிவாஸன் போட்டியிட்டார். திருவிடைமருதூர் தொகுதியில் பி சௌரிராஜன் போட்டியிட்டார். பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிட்ட இந்தக் கட்சி தியாகராய நகர் தொகுதியில் ஐந்தாவது இடத்தையும் திருவிடைமருதூரில் ஏழாவது இடத்தையுமே பிடித்தது.

"இந்த இரண்டு தொகுதிகளிலும் உள்ள பிராமண வாக்காளர்கள்கூட இந்தக் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்பது புரிந்தது. அந்த முயற்சியை அதோடு கைவிட்டுவிட்டோம்" என்கிறார் நாராயணன்.

மாறாக, கிறிஸ்தவ வாக்கு வங்கி, இஸ்லாமிய வாக்கு வங்கியைப் போல பிராமண வாக்கு வங்கியை உருவாக்குவது வேண்டுமானால், ஓரளவுக்கு சாத்தியம் என்கிறார் அவர். அதாவது, சட்டமன்றத் தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் யாரை ஆதரிப்பது என முடிவெடுத்து அறிவிக்கலாம். இதுபோலச் செய்வதுதான் சரியாக இருக்கும் என்கிறார் நாராயணன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: