அண்ணாமலை அதிமுகவை சீண்டுவது ஏன்? பாஜக மேலிடம் கடைபிடிக்கும் அரசியல் தந்திரமா?

அதிமுகவை சீண்டுவது பாஜக தலைமை அண்ணாமலைக்கு கொடுத்துள்ள அசைன்மென்ட்டா?

பட மூலாதாரம், Getty Images

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் தொடர்ந்து வரும் பனிப்போர் அவர்களது கூட்டணியை பாதிக்குமா? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பாஜகவுக்கு அதிமுக தேவையா அல்லது அதிமுகவுக்கு பாஜக தேவையா?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தை ஆண்ட கட்சிகளின் ஊழல் குறித்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்தான் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகக் குறிப்பிடும்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியபோது, “சட்டமன்றத்துக்குள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக 4 இடங்களில் இருப்பதற்கு யார் காரணம்? அதிமுக தானே. அதையும் மறுப்பாரா அண்ணாமலை?

தமிழகத்தில் எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருக்கும்போதுதான், பாஜகவுக்கு ஓர் அடையாளம் இருக்கும்,” என்று காட்டமாகப் பேசினார்.

அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தந்து திரும்பிய உடனேயே இது நடந்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. இதுகுறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் பத்ரி சேஷாத்ரி, ஒருவேளை அதிமுகவிடம் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பாஜக தலைமை அவருக்கு வழங்கிய அசைன்மென்ட்டாக கூட இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

ஆனால், பாஜக- அதிமுக கூட்டணியில் தொடர்ந்து விரிசல் வந்துகொண்டே இருப்பதற்குக் காரணம், கூட்டணிக் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், அதிமுகவை அண்ணாமலை மிக மோசமாக நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

இன்று(ஜூன் 12) சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைக்கும் வகையில்தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் இருக்கின்றன.

அவருடைய எண்ணம் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறக்கூடாது. பிரதமராக நரேந்திர மோதி வரக்கூடாது என்பதைப் போலத்தான் அவரது செயல்பாடுகள் இருக்கின்றன.

கூட்டணியில் இருந்துகொண்டே கூட்டணியை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். ஒரு மறைந்த தலைவரைப் பற்றிப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கூட்டணியை முறிக்கின்ற செயலில் அண்ணாமலை ஈடுபடுவதை அமித் ஷாவும் நட்டாவும் கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், கூட்டணி குறித்து…” என்று காட்டமாகப் பேசிய ஜெயக்குமார், “நான் சொல்லத் தேவையில்லை. உரிய நேரத்தில் கட்சி முடிவு செய்யும்,” என்று குறிப்பிட்டார்.

பாஜக-அதிமுக: யாருக்கு யார் தேவை?

கொந்தளித்த கரு.நாகராஜன்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடையே அண்ணாமலையை விமர்சித்துப் பேசியது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், அவரது பேச்சைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், “ஆங்கில பத்திரிகைக்கு அண்ணாமலை கொடுத்த பேட்டியைக்கூட ஒழுங்காகப் படிக்காமல் ஜெயக்குமார் பிதற்றிக் கொண்டிருப்பதாக” கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், “அண்ணாமலையைப் பற்றிப் பேச அவருக்கு எந்தத் தகுதியும் இல்லையென்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அண்ணாமலை, என்றுமே உள்ளதை உள்ளபடி பேசுபவர் என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“ஜெயக்குமார் நுனி மரக்கிளையில் அமர்ந்து, கிளையின் அடிப்பகுதியை வெட்டிக்கொண்டிருக்கிறார். இதுபோன்ற பேட்டிகளால் பாதிப்பு உங்களுக்குத்தான். அவர் என்ன நிலையிலிருந்து பேசுகிறார் என்று புரியவில்லை. எங்கே தன் மகன் போட்டியிடும் தொகுதி பறிபோய் விடுமோ என்று கலங்கிப் போயிருப்பார்.

கூட்டணி என்பது எல்லோரும் இணைந்ததுதான். இதில் பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது. எனவே அண்ணாமலையின் பேட்டியை திசைதிருப்பி குழப்பம் செய்திட வேண்டும்,” என்று கரு.நாகராஜன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாஜக-அதிமுக

பட மூலாதாரம், Karu.Nagarajan/Twitter

பாஜக-அதிமுக: யாருக்கு யார் தேவை?

அதிமுகவுக்கு பாஜக தேவையே இல்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். அவர்கள் 60க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது பாஜகவின் ஆதரவால் இல்லை.

அந்தக் கட்சிக்கென தனி பலம் உள்ளது. அப்படியிருக்கும்போது அதன் கூட்டணிக் கட்சியாக இறங்கிச் செல்ல வேண்டிய நிர்பந்தம் பாஜகவுக்குத்தான் இருக்கிறது.

அப்படியிருக்கையில், ஊழல் செய்த கட்சி அதிமுக என்பதைப் போல் கூட்டணிக் கட்சியின் மாநிலத் தலைவர் பேசுவது சரியல்ல. இந்த முறையும் நேரடியாக எதிர்வினை ஆற்றாமல், ஜெயக்குமார், பொன்னையன் போன்றோரை வைத்தே பேசிக்கொண்டிருந்தால், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள் இருக்கும் செல்வாக்கு பெரியளவில் பாதிக்கப்படும்.

அப்படி அவர் எதிர்வினையாற்றவில்லை என்றால் அது அவருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளது.

ஆனால், இருவருக்குமே இருவரும் தேவை என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் பத்ரி சேஷாத்ரி, “ஒரு தரப்பு அளவுக்கு மீறி அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டே இருந்தாலும், அது பிரச்னைக்கு வழிவகுக்கலாம். அதற்காக கூட்டணியே முறிந்துவிடும் என்று சொல்ல முடியாது,” என்று கூறுகிறார்.

பாஜக-அதிமுக: யாருக்கு யார் தேவை?

பத்ரி சேஷாத்ரியின் கருத்துப்படி, கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் நிச்சயமாக இருக்கிறது என்றும் அதை நாம் பிடித்துவிடலாம் என்றும் பாஜக உறுதியாக நம்புகிறது.

இந்தச் சிந்தனை அவர்கள் இருந்தபோது நிச்சயமாக இல்லை என்று கூறும் அவர், “இப்போது அந்த வெற்றிடத்தை நிரப்ப பாஜக முயல்வதால்தான், நம்பிக்கையோடு அதிக இடங்களைக் கேட்டு அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.”

ஆகவே, “இந்த விஷயத்தில் தமிழக பாஜகவுக்கும் அதன் மத்திய தலைமைக்கும் அதிமுகவுக்கும் இடையே ஒரு குழப்பம் இருந்துகொண்டே இருக்கப் போகிறது. ஆனால், இப்போதைய சூழலில் இருவருக்குமே இருவரும் தேவைதான்,” என்று கூறுகிறார் பத்ரி சேஷாத்ரி.

அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்துகொண்டே இருப்பது ஏன்?

பத்ரி சேஷாத்ரியின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் அதிமுகவுடன் “ஓர் ஓரமாக நின்றுகொள்வோம், நம்மால் தனித்து எதுவும் செய்ய முடியாது என்ற அணுகுமுறையைத்தான் பாஜகவின் முந்தைய மாநில தலைவர்கள் கடைபிடித்தனர்.”

ஆனால், “அண்ணாமலை தலைமை ஏற்றபிறகு அந்த அணுகுமுறை மாறியது. உடனடியாக இல்லையென்றாலும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அந்த மாற்றம் நடந்தது.

பாஜக-அதிமுக: யாருக்கு யார் தேவை?

பட மூலாதாரம், Getty Images

இது அவரால் மாறியதா அல்லது அது அவருக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், தேசியக் கட்சியைப் பொறுத்தவரை மத்திய தலைமையுடனான ஒத்திசைவு இல்லாமல், மாநிலத்தில் ஒரு தலைவர் தன் இஷ்டத்திற்குப் பேசுவார் என்பதை நான் நம்பவில்லை. அப்படி இருந்தால் அவரை எளிதில் ஓரம்கட்டிவிடுவார்கள்,” என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் பத்ரி சேஷாத்ரி.

ஆனால், அண்ணாமலை கூட்டணியின் முக்கியத்துவத்தை உணராமல் விரிசலை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக விமர்சிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

அவரது கூற்றுப்படி, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி மிகவும் முக்கியம். கூட்டணிக் கட்சிகளின் துணை இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. அப்படியிருக்கும்போது பாஜக கூட்டணியை இப்படி குறைத்துப் பேசுவது, வெறும் குருட்டு தைரியம் மட்டுமே.

குபேந்திரன், “மாநிலத்தின் ஆகப் பெரிய கட்சிகளான அதிமுக, திமுக கூட கூட்டணி பலமின்றி ஆட்சி அமைப்பது கடினம். அப்படியிருக்கும்போது அண்ணாமலை கூட்டணியை மதிக்காமல் பேசுவது எப்படிப் பலனளிக்கும்?” என்று கேள்வியெழுப்புகிறார்.

அதிமுகவை சீண்டுவது அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டா?

“அண்ணாமலையின் நடவடிக்கைகள் எதுவும் தன் இஷ்டத்தில் செய்வதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அமித் ஷா சென்னை வந்துவிட்டுச் சென்றுள்ள இந்தச் சூழ்நிலையில் இப்படி நடப்பது, மத்திய தலைமைக்குத் தெரிந்தே நடப்பதாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

இப்போது அண்ணாமலையின் மூலமாக அதிமுகவுக்கு ஏற்படும் அழுத்தம், பாஜகவின் ஒரு வகை வியூகமாக இருக்கலாம் என்றுதான் கருதுகிறேன்,” என்கிறார் அவர்.

ஆங்கிலத்தில் ‘குட் காப், பேட் காப்’ என்று ஒரு சொலவடை உண்டு. அதாவது, ஒருவர் கடுமையாக நடந்துகொள்வதைப் போலச் செயல்படுவார். மற்றொருவர் மிகவும் இனிமையான, நட்புறவு மிக்க நபரைப் போல் காட்டிக்கொள்வார்.

ஒருவர் கடுமையாகப் பேசும்போது, மற்றொருவர் எதிரில் இருப்பவரைத் தேற்றி, அவருடன் நெருக்கமாகி தன் வழிக்குக் கொண்டு வருவார். இந்த அணுகுமுறை, தொழில்ரீதியிலான ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் எனப் பல விஷயங்களில் கையாளப்படும்.

இத்தகைய குட் காப்-பேட் காப் அணுகுமுறையைக்கூட பாஜக கையில் எடுத்திருக்கக்கூடும் என்று யூகிக்கும் பத்ரி சேஷாத்ரி. “ஒருபுறம் மாநிலத்தில் அண்ணாமலை கடுமையாக நடந்துகொள்வதைப் போல் காட்டிக்கொள்ள, இன்னொருபுறம் அதன் எதிர்வினையாக அதிமுக மத்திய தலைமையிடம் செல்லும்போது அவர்கள் ஆறுதல் வார்த்தைகளைப் பேசி தங்கள் வழிக்குக் கொண்டு வரலாம்” என்ற நினைப்பில் இத்தகைய அணுகுமுறையைக் கையில் எடுத்திருக்கலாம் எனக் கருதுகிறார்.

பாஜக-அதிமுக: யாருக்கு யார் தேவை?

பட மூலாதாரம், Getty Images

அண்ணாமலையின் தலைமை சரியில்லையா?

“அண்ணாமலை கட்சியைப் பற்றி தமிழ்நாடு முழுக்கப் பேச வைத்துள்ளார் என்பதாலேயே அவரைச் சிறந்த கட்சித் தலைவராக மதிப்பிட்டுவிட முடியாது.

கட்சியை அனைத்து இடங்களுக்கும் கொண்டுபோய் சேர்த்துவிட்டதாக பெருமைப்பட்டுக் கொண்டாலும், அதை ஓட்டுகளாக மாற்ற முடிந்தாலொழிய அதில் பெருமைப்பட்டுக்கொள்ள ஒன்றுமில்லை,” என்று விமர்சிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

“இப்போது தமிழ்நாட்டில் வென்ற 4 இடங்களுமே அதிமுகவின் உதவியால் கிடைத்தது. தனியாக நின்று ஒரேயொரு தொகுதியில் வெற்றி பெற்றால், அதற்குப் பிறகு அப்படிப் பெருமைப்படலாம்.

சொந்தக் கட்சிக்கு உள்ளேயும்கூட அவருக்கு ஆதரவு மிகக் குறைவாகத்தான் இருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கூட்டணிக் கட்சியாலும் அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அப்படியிருக்கும்போது, அவரது தலைமை சரியாக உள்ளது என்று எதை வைத்து மதிப்பிடுவது? என்கிறார் குபேந்திரன்.

இங்கு பிரச்னை அண்ணாமலை இல்லை என்று கூறும் பத்ரி சேஷாத்ரி, அவர் இடத்தில் வேறு யார் இருந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கான இடங்களை பொறுத்தவரை இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அணுகுறை கடைபிடிக்கப்பட்டிருக்கலாம்.

எது எப்படி இருப்பினும், “தமிழ்நாட்டில் பாஜகவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. ஆனால், அது ஏதோ உடனடியாகப் பிரகாசமாகிவிடும் நிலையில் இல்லை.

அதற்கு இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. அப்படி உழைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் அந்தப் பிரகாசத்தை அடையலாம்,” என்ற நம்பிக்கை பாஜகவுக்கு இருப்பதாக பத்ரி சேஷாத்ரி கூறுகிறார்.

இது அதிமுக, திமுக இரண்டுக்குமே அபாயம் என்றாலும்கூட, “அதற்கான சூழ்நிலை நிச்சயமாக இருக்கிறது. சித்தாந்த ரீதியாக திமுகவை போல் பாஜக மிக உறுதியாக இருப்பதால், அதை நோக்கி ஈர்க்கப்படும் இளைஞர் பட்டாளம் கட்சியில் சேரும்போது, அவர்களது உழைப்பு கட்சியின் மாநில வளர்ச்சியில் நிச்சயம் வலு சேர்க்கும்,” என்று கூறுகிறார் பத்ரி சேஷாத்ரி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: