சென்னை - போடி புதிய ரயில்: எந்தெந்த ஊருக்கு போகலாம்? எவ்வளவு கட்டணம்?

- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஜூன் 15-ம் தேதியன்று போடி ரயில் நிலையமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம் என்று அங்கே களை கட்டியிருந்தது.
சிறுவர்கள், முதியவர்கள், வர்த்தகர்கள் என கூட்டம் கூட்டமாக அங்கு சென்றுகொண்டிருந்தனர். போடி - சென்னை நேரடி ரயில் சேவை தொடக்கத்தைத் தான் தேனி சுற்றுவட்டார மக்கள் இப்படி கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
தேனி மக்களின் நீண்டநாள் கனவு, இந்த புதிய ரயில் சேவை இயக்கம். போடி - சென்னை நேரடி ரயில் சேவை இயக்கத்தினால் தேனி மக்களின் வாழ்வாதாரங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் இந்த ரயில் சேவை பெரியளவில் பயனளிக்கும் என அவர்கள் நம்பிக்கைகொள்கின்றனர்.
"எங்க ஊருக்கும் ரயில் வந்துவிட்டது"
அங்கிருந்த பொதுமக்களில் ஒருவரை வழிமறித்து 'எங்கு செல்கிறீர்கள்' கேட்டபோது, “எங்க ஊருக்கும் ரயில் வரப் போகுதுல்ல. போடியில் இருந்து மெட்ராஸுக்கு ரயில் இன்னைக்கு கிளம்புதாம். அதைத்தான் பாக்கப் போறோம்.
இனிமேல் நாங்களும் மெட்ராஸுக்கு போகலாம்ல” என்று கண்களில் மகிழ்ச்சியுடன், வார்த்தைகளில் உற்சாகம் தெறிக்கப் பேசிவிட்டு நடந்தார்.
போடி-சென்னை ரயில் சேவை தொடக்க விழா, போடி ரயில் நிலையத்தில் எளிமையாக நடந்தாலும், அங்கே திரண்டிருந்த மக்கள் கூட்டம் அதனை ஒரு திருவிழா போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது.
ரயில் சேவையை தொடங்கி வைத்து பேசிய மத்திய தொலைத்தொடர்பு, ஒலிபரப்பு அமைச்சர் எல்.முருகன், 'மக்கள் இந்த ரயில் சேவைக்காக எத்தனை ஆண்டுகள் காத்திருந்திருப்பார்கள் என்பதை மக்களின் இந்த உற்சாகம், மகிழ்ச்சியின் மூலம் உணர்கிறேன்' என்று குறிப்பிட்டார்.
ரயில் கனவு நிறைவேறியது
போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு போடி-மதுரை இடையே தினசரி பயணிகள் ரயில்வே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, தற்போது வாரத்துக்கு 3 நாட்கள் இயக்கப்படும் போடி-சென்னை இடையிலான சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியுள்ளது.
இந்த ரயில் போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு வாரத்தில் செவ்வாய், வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளிலும், சென்னையில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான சென்னைக்கு நேரடி ரயில்வே சேவை கிடைக்கப்பட்டதை அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்.

போடி-சென்னை ரயில் எந்த வழியாக, எங்கு நின்று செல்லும்?
மதுரை மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி கோபிநாத் ரயில் கட்டணம் குறித்து பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில் “ரயில் எண் 06701 போடி முதல் சென்னை வரையிலான ரயில் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறுகளில் இயக்கப்படும். அதேபோல் ரயில் எண் 20601 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-போடி அதிவிரைவு ரயில் வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும். போடியிலிருந்து புறப்படும் ரயில் தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி, பெரம்பூர், வழியாக சென்னை செல்லும்.
சென்னையிலிருந்து இரவு 10.30க்கு புறப்படும் ரயில் மதுரைக்கு காலை 7.10 க்கு வரும், உசிலம்பட்டிக்கு காலை 8 மணிக்கும், ஆண்டிபட்டிக்கு காலை 8.20க்கும், தேனிக்கு 8.38க்கும் வரும்.போடிக்கு 9.35 மணிக்கு சென்றடையும். அதேபோல போடியிலிருந்து இரவு 8.30 மணிக்குப் புறப்படும் ரயில் மதுரைக்கு 10.45 மணிக்கு செல்லும்.
போடி-சென்னை ரயில் கட்டணம் எவ்வளவு?
போடி-சென்னை ரயில் கட்டணம் குறித்து ரயில்வே பிஆர்ஓ கோபிநாத் கூறுகையில் “ முன்பதிவில்லாத பெட்டியில் செல்பவர்களுக்கு டிக்கெட் ரூ.210 வசூலிக்கப்படுகிறது.
2ம் வகுப்பு படுக்கைவசதிக்கு ரூ.390 கட்டணமும், 3ம்வகுப்பு ஏ.சி.க்கு ரூ.1,020 கட்டணமும், 2ம்வகுப்பு ஏசிக்கு ரூ.1,445 கட்டணமும், முதல்வகுப்பு ஏசிக்கு ரூ.2,390 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
பயணிகள் விரைவு ரயில்
மதுரை முதல் போடி வரையிலான விரைவு பயணிகள் ரயில் மதுரையிலிருந்து தினசரி காலை 8.20க்கு புறப்பட்டு போடிக்கு 10.30க்கு சென்றடையும். உசிலம்பட்டிக்கு காலை 9.04க்கும், ஆண்டிபட்டிக்கு 9.24க்கும், தேனிக்கு 9.42க்கும் சென்றடையும்.
அதேபோல மாலை 5.50 மணிக்கு போடியிலிருந்து புறப்படும் ரயில் தேனிக்கு 6.13 மணிக்கும், மதுரைக்கு 7.50 மணிக்கும் சென்றடையும்” எனத் தெரிவித்தார்.
அகல ரயில் பாதை பணிக்காக 2010-ல் ரயில் சேவை நிறுத்தம்
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம் கேரள மாநிலத்தின் நுழைவு வாயில். இயற்கை எழில் சூழ்ந்த மலைகள், செழிப்பான விவசாயம், புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள், சபரிமலைக்கு செல்லும் முக்கியப் வழித்தடமாக தேனி மாவட்டம் இருந்து வருகிறது.
ஏலக்காய் விளைச்சலிலும், வர்த்தகத்திலும் இடுக்கி மாவட்டத்துக்கு அடுத்தபடியாக தேசிய அளவில் போடிநாயக்கனூர் விளங்கி வருகிறது. இந்த மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு வாழை, பன்னீர் திராட்சை, ஏலக்காய், மா, இலவம் பஞ்சு போன்றவை அதிகளவில் ஏற்றுமதியாகிறது.
மேகமலை, இரங்கவங்கலார், மூனாறு, தேக்கடி, போன்ற சுற்றுலாத் தளங்களுக்குச் செல்ல தேனி மாவட்டமே பிரதான வழித்தடமாகும். மேலும், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் போன்ற ஆன்மீக தலங்களும் தேனிமாவட்டத்தில் புகழ்பெற்றவை.
இத்தனை சிறப்புகள் இருந்தபோதிலும் இந்த மாவட்டத்துக்கு ரயில் சேவை கடந்த 10 ஆண்டுகளா இல்லை. போடி-மதுரை இடையே சென்று வந்த மீட்டர்கேஜ் ரயிலும் கடந்த 2010ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடந்தது.
ரயிலில் செல்ல வேண்டுமென்றால் 100 கி.மீ பயணித்து மதுரை அல்லது திண்டுக்கல் செல்ல வேண்டிய நிலையில்தான் தேனி மாவட்ட மக்கள் இருந்தனர். தங்கள் மாவட்டத்துக்கு ரயில் இல்லையே என்பது மக்களின் நீண்டகால ஏக்கமாக இருந்தது.
"சென்னை எழும்பூரில் இருந்து சென்ட்ரல் செல்லவே ஒரு வாரமாகும்"
போடி-சென்னை ரயில் சேவை கிடைத்தது குறித்து போடிநாயக்கனூரைச் சேர்ந்த ஏலக்காய் விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.வி.சுப்பிரமணியன் பிபிசி செய்திகளிடம் கூறுகையில் “ நான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏல விவசாயத்தில் இருக்கிறேன். முன்பெல்லாம் ஏலக்காய் விளைந்தபின் அதை விற்று பணமாக மாற்றுவதற்குள் எங்கள் சிரமங்களை சொல்லி மாளாது.
போடி-மதுரை மீட்டர் கேஜ் ரயில்பாதை இருந்தபோது, வெளிமாநிலங்களுக்கு போடியிலிருந்து ரயிலில் ஏலக்காய் அனுப்பினால் மதுரை சென்று, அங்கிருந்து சென்னை எழும்பூர் சென்று, அங்கிருந்து சென்ட்ரல் ரயில்நிலையம் சென்று அதன்பின் உரிய வாங்குவோருக்கு செல்லும். சில நேரங்களில் எழும்பூரில் இருந்து சென்ட்ரலுக்கு செல்லவே ஒருவாரம் ஆகும்.
இந்த இடைப்பட்ட நாட்களில் சந்தையில் ஏலக்காய் விலைவாசி குறைந்தால் விவசாயிகள் இழப்பைச் சந்திக்க வேண்டும். விளைச்சலான ஏலக்காயை உரிய இடத்தில் கொண்டு சேர்க்க பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது” என்று தெரிவித்தார்

"விவசாயிகள் வாழ்க்கை செழிக்கும்"
போடி-சென்னை ரயில் சேவையால் கிடைக்கும் நன்மை குறித்து எஸ்வி சுப்பிரமணியன் கூறுகையில் “ போடி-சென்னை நேரடி ரயில் சேவை ஏல விவசாயிகளுக்கு மட்டுமின்றி காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கும் மிகப்பெரிய நன்மையைக் கொடுக்கும். குறிப்பாக டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு ஏலக்காய் இனி சில நாட்களில் சென்றுவிடும், விவசாயிகளுக்கும் பணம் விரைவாகக் கிடைக்கும். காலதாமதமும், இழப்பும் இனிமேல் தவிர்க்கப்படும்.
முன்பு ஏலக்காய் விளைச்சல் குறைவு, ஆனால் இப்போது ஏலக்காய் விளைச்சல் அதைவிட 5 மடங்கு அதிகம். விலையும் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் இருக்கிறது. உடனுக்குடன் விளைபொருட்கள் விற்றால்தான் விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும், அதற்கு இந்த ரயில் சேவை முக்கியமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்
ரயில் சேவை வரப்பிரசாதம்
போடி மலைப்பகுதி ஏலக்காய் முதல்தரமனது, எனக் கூறும் சுப்பிரமணியன் “ ஏலக்காய் உலகிலேயே இந்தியா, குவாதமாலா ஆகிய நாடுகளில் மட்டுமே விளைகிறது. அதிலும் இடுக்கி, போடி மலைப்பகுதியில் விளையும் ஏலக்காய்தான் மணம், நிறம், சுவையில் முதல்தரமானவை என்பதால் எப்போதும் கிராக்கி இருக்கும். இப்படிப்பட்ட விளைபொருளை விரைவாக சந்தையில் சேர்க்க ரயில்சேவை உதவியாக இருக்கும்.
இந்த ரயில் சேவையால் ஏல விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் ஏற்படும் இழப்பு இனிமேல் தடுக்கப்படும். அதேபோல வடமாநிலங்களில் இருந்து பல்வேறு உணவு தானியங்கள், உணவுப் பொருட்களை எளிதாக இனிமேல் போடிநாயக்கனூர்வரை குறைந்த செலவில் கொண்டுவர முடியும். சாலைப் போக்குவரத்துக்கு அதிகமாக செலவிடுவது இனிமேல் குறையும்.
போடி-சென்னை ரயில் சேவை எங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். ரயில் சேவை இல்லாமல் மக்கள் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பேருந்துகளில் இனி பயணிக்க வேண்டியதில்லை, குறைந்த கட்டணத்தில் ரயிலில் வசதியாக பயணிக்க முடியும். ஒட்டுமொத்தத்தில் தேனி மாவட்டத்தின் பொருளாதாரம், மக்களின் போக்குவரத்து வசதி, வியாபாரம் இனி செழிப்பாக மாறும்” எனத் தெரிவித்தார்.
"போடி - மதுரை காலை நேர ரயில் சேவை அவசியம்"
தேனி மாவட்டத்தில் மீண்டும் ரயில் சேவை கொண்டுவர வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்திய திண்டுக்கல்-குமுளி அகல ரயில்பாதைத் திட்ட போராட்டக்குழுத் தலைவர் சங்கரநாராயணன் பிபிசி செய்திகளிடம் பேசுகையில் “நாங்கள் இரு கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தோம். முதலாவது திண்டுக்கல்-லோயர் கேம்ப் ரயில்பாதை, போடி-மதுரை இடையே அகலரயில்பாதை கொண்டுவருவதாகும். இதில் முதலாவதாக போடி-சென்னை, போடி-மதுரை அகல ரயில்பாதை சேவை தொடங்கியுள்ளது.
எங்கள் போராட்டத்துக்கு 50% கிடைத்த வெற்றி என்றாலும், நாங்கள் தேனி மாவட்ட மக்களுக்கு ரயில் போக்குவரத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களையும் போராட்டத்தில் பங்கேற்கவைத்தோம். அனைவரின் முயற்சியால்தான் இந்தத் திட்டம் நிறைவேறியுள்ளது. மதுரையில் இருந்து போடிக்கு காலையில் ரயில் இயக்கப்படுவதைப் போல் போடியிலிருந்தும் மதுரைக்கும் காலை நேரத்தில் ரயில் சேவை இயக்க கோரிக்கை விடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்

சென்னைக்கு நேரடி ரயில் - போடிக்கு என்ன பலன்?
தேனி மாவட்டத்தின் அடுத்தக் கட்டவளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்து சங்கரநாராயணன் கூறுகையில் “தேனி மாவட்டம் வேளாண் சார்ந்தது. பெரும்பாலான விளைபொருட்கள் லாரி மூலமே கொண்டு செல்லப்படுகிறது, போக்குவரத்துக்கு கனிசமாக விவசாயிகள் செலவு செய்தனர். பல விவசாயிகள் செலவுக்கு அஞ்சி உள்ளூரிலேயே கிடைத்த விலைக்கு விற்கும் அவலமும் இருந்தது.
இனிமேல் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ரயிலில் குறைந்த செலவில் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பு முடியும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும், விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும், சேமிப்பு அதிகரிக்கும்.
பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உணவுப் பொருட்கள், தானியங்கள், தொழில்சார்ந்த பொருட்கள் இனிமேல் எளிதாக தேனிக்கு அனுப்ப முடியும். தொழில்வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி இனிமேல் அடுத்தக் கட்டத்துக்குச் செல்லும்.
பெங்களூரு, ஹைதராபாத், உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள், ஏராளமானோர் வேலை செய்கிறார்கள். அவர்கள் சொந்த ஊருக்குவருவதற்கு சிரமங்களைச் சந்திக்கிறார்கள். இனிமேல் அந்த சிரமங்கள் குறையும்” எனத் தெரிவித்தார்
திண்டுக்கல் - லோயர் கேம்ப் ரயில் எப்போது?
திண்டுக்கல்-லோயர் கேம்ப் ரயில் திட்டத்தையும் அடுத்ததாக நிறைவேற்ற போராடப் போவதாக சங்கரநாராயணன் தெரிவித்தார். அவர் கூறுகையில் “ திண்டுல்கல்-லோயர் கேம்ப் திட்டத்தை திண்டுக்கல்-சபரிமலை என பெயர்மாற்றினார்கள். ஆனால், சபரிமலைவரை ரயில்பாதை வந்தால் மகிழ்ச்சிதான். ஆனால், ரயில்பாதை அமைப்பது கடும் சிரமமானது.
ஆதலால்தான் இந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முடியாத திட்டப்பட்டியலில் சேர்த்துவிட்டது. ஆனால், நாங்கள் திண்டுக்கல்-லோயர் கேம்ப்வரை திட்டத்தை நிறைவேற்றுங்கள் என வலியுறுத்தி வருகிறோம். இந்தத் திட்டத்துக்கு தேனிமாவட்ட மக்கள் மட்டுமல்ல, கேரளாவின் இடுக்கி, கோட்டயம் மாவட்ட மக்களும் ஆதரவாக உள்ளனர்” எனத் தெரிவி்த்தார்.
போக்குவரத்துச் செலவு குறையும்
தேனி மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது, வர்த்தகம், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்று தேனி மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் கே.எஸ்.கே. நடேசன் தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.கே.நடேசன் பிபிசி செய்திகளிடம் அளித்த பேட்டியில் “13 ஆண்டுகளுக்குப்பின் எங்களுக்கு ரயில் சேவை கிடைத்துள்ளது.
தினசரி 100 ஆம்னி பஸ்கள் தேனி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு செல்கிறது, மக்கள் டிக்கெட்டுக்காக அதிக அளவில் செலவிடுகிறார்கள். ரயில் சேவை வந்துவிட்டதால் இனிமேல் சென்னைக்கு குறைந்த செலவில் செல்ல முடியும்.

விலைவாசி குறையும்
சென்னைக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், மருத்துவ சிகிச்சைக்குச் செல்பவர்கள், முதியோர்கள் இனிமேல் குறைந்த கட்டணத்தில் வசதியாகச் செல்ல முடியும்.
வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இந்த ரயில்சேவை வரப்பிரசாதம். தேனி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய், கிராம்பு, பட்டை உள்ளிட்ட வாசனைப் பொருட்கள், வாழை, திராட்சை போன்ற தோட்டப்பயிர்களை இனிமேல் குறைந்த செலவில்பல்வேறு மாநிலங்களுக்கு விரைவாக அனுப்ப முடியும், பல்வேறு மாநிலங்களில் இருந்து குறைந்த செலவில் இங்கு உணவுப்பொருட்கள், தானியங்களையும் கொண்டு வர முடியும்.
உதாரணமாக குஜராத்தில் இருந்து ஒரு லோடு லாரி பஞ்சு இறக்குமதி செய்ய லாரி வாடகை மட்டும் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகிறது. ரயில்சேவை வந்திருப்பதால், இனிமேல் இதன் செலவு பாதியாகக் குறையும்.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேனி மாவட்டத்துக்கு பருப்பு வகைகள் லாரியில் வருகின்றன. லாரிக்கான போக்குவரத்துச் செலவு உயர்வாக இருக்கிறது. ரயிலில் இனிமேல் இந்த பொருட்கள் வந்தால், செலவு பாதியாகக் குறையும், இதனால் விபாயாரிகள் விலையைக் குறைத்து மக்களுக்கு வழங்க முடியும். உணவுப் பொருட்கள் விலை கனிசமாகக் குறையவும் வாய்ப்புள்ளது ” எனத் தெரிவித்தார்
சுற்றுலா, சபரிமலை சீசன் களை கட்டும்
ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருக்கும் நடேசன் சுற்றுலாத் துறை வளர்ச்சி குறித்து பேசுகையில் “ தேனி மாவட்ட சுற்றுலாத்துறை இனிமேல் வேகமாக வளரும்.
சபரிமலை சீசனில் மட்டும் 2 லட்சம் பேர் தேனிமாவட்டத்தைக் கடந்து செல்கிறார்கள். கேரளாவில் மூனாறு, இடுக்கி, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தேனிதான் மையமாகும்.
இந்த ரயிலால் இனிமேல் சுற்றுலாத்துறையில் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலைக்குச் செல்பவர்கள் ரயிலிலேயே தேனிவரை வர முடியும்.
இதனால் அவர்களுக்கும் போக்குவரத்துச் செலவு குறையும், தேனியின் நகரமும் விரிவாகி, வளர்ச்சி அடையும். பல்வேறு மாநிலங்களில் இருந்து தேனிக்கு ரயில்களை இயக்கினால் தேனி மிகப்பெரிய வர்த்தக முனையமாகவும், சுற்றுலா மையமாகவும் மாறும்” எனத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












