மணிப்பூர் பெண்களுக்கு இது மூன்றாவது போர் - ராணுவத்தை எதிர்த்து நிற்கும் 'மகளிர் படை'

ராணுவத்துக்கு எதிராகத் திரும்பிய பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கை கோரி தீப்பந்தங்களுடன் இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி நியூஸ்

வன்முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் காட்சிப்படுத்தப்பட்ட வீடியோ ஒன்றை இந்திய ராணுவம் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ காட்சிகள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இரண்டு நிமிடம் 14 விநாடிகள் கொண்ட அதில் நிராயுதபாணிகளான பெண்கள் ஒரு பரபரப்பான தெருவில் ராணுவ வீரர்களை எதிர்த்து வாக்குவாதம் செய்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

போக்குவரத்து நெரிசல் மிக்க ஒரு சாலையில் மண் தோண்டும் ஓர் இயந்திரத்தைச் சுற்றி பெண்கள் கூடியிருந்ததும், சொகுசு கார்கள் அந்தச் சாலையில் சென்றுகொண்டிருந்த காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இரு சமூகங்களுக்கு இடையே தொடங்கிய வன்முறைகள் இன்னும் தொடர்ந்துகொண்டிகின்றன. பெரும்பான்மையான மெய்தேய் மற்றும் பழங்குடி குகி சமூகங்களுக்கு இடையிலான மோதல்களில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த வன்முறையால் 60,000 பேர் இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து வருகின்றனர். பெரும்பான்மை மெய்தேய் சமூகத்தினரும் குகி இன மக்களும் வாழும் மணிப்பூரில் பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் படை வீரர்கள் இருந்தபோதிலும், இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

வன்முறையாளர்களை பெண்கள் காப்பாற்றுகிறார்களா?

ஆழமான பிளவுகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையற்ற நிலை காணப்படும் மணிப்பூர் பள்ளத்தாக்கில் அமைதியை மீட்டெடுப்பது மெதுவான மற்றும் கடினமான பயணம் என்பதை அந்த வீடியோ காட்டுகிறது.

'மணிப்பூர் பெண்கள் தலைமையிலான போராளிகள் அமைதியான முறையில் களத்தில் நிற்கின்றனர் என்ற கட்டுக்கதையை முறியடிக்கும் காட்சிகள்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெண்களுக்கு எதிரான சில ஆச்சரியமேற்படுத்தும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.

"வன்முறையில் ஈடுபடுபவர்கள் தப்பி ஓட உதவுகிறார்கள்" என்பது தான் பெண் எதிர்ப்பாளர்கள் அதில் முக்கிய குற்றச்சாட்டாக இடம்பெற்றுள்ளது.

வன்முறையாளர்கள் பலதரப்பட்ட வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களில் தப்பிச் செல்ல இப்பெண்கள் உதவுவதாகவும், மண் தோண்டும் இயந்திரங்களைக் கொண்டு பாதுகாப்புப் படையினரின் பாதைகளில் பள்ளங்களை உருவாக்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க இரவும் பகலும் பணியாற்றி வரும் பாதுகாப்புப் படையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அந்த வீடியோ நிறைவடைகிறது.

ராணுவத்துக்கு எதிராகத் திரும்பிய பெண்கள்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 2004ஆம் ஆண்டு ராணுவத்துக்கு எதிராகப் போராடிய பெண்கள் தங்கள் ஆடைகளைக் களைந்து உலகையே திகைப்படையச் செய்தனர்

இரண்டாவது வீடியோ, கிளர்ச்சியடைந்த பெண்களின் குழுவிற்கும் ஒரு பொறுமையான ராணுவ வீரருக்கும் இடையிலான பதற்றமான உரையாடலைக் காட்டுகிறது.

"அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் இங்கிருந்து போகலாம்," என்று ஒரு பெண் அந்த ராணுவ வீரரிடம் கூற, மற்ற பெண்கள் அவரைச் சுற்றி கூடி நின்றனர்.

ராணுவம் கடந்த வாரமும் இதேபோல் ஒரு ட்விட்டர் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தது.

அதில், வன்முறையாளர்களைத் தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்த நேரத்தில், மணிப்பூர் தலைநகர் இம்பாலின் கிழக்கு மாவட்டத்தில் சுமார் 1,500 பெண்கள் ராணுவ வீரர்களைச் சூழ்ந்துகொண்டு 12 வன்முறையாளர்களை விடுவித்ததாகத் தெரிவித்திருந்தது.

சுமார் 33 லட்சம் மக்கள் வாழும் மணிப்பூரில், 6% பேர் இந்த மாவட்டத்தில்தான் வசிக்கின்றனர்.

மெய்ரா பைபிஸ் என்ற மகளிர் அமைப்பு

கொந்தளிப்பில் சிக்கித் தவிக்கும் மணிப்பூர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படைகளுக்கு சவால் விடும் பெண்களில் பலர் மெய்ரா பைபிஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

'தீப்பந்தம் ஏந்திய பெண்கள்', 'இமாஸ்' அல்லது 'மணிப்பூரின் மாதாக்கள்' எனப் பல பெயர்களில் இந்த மெய்ரா பைபிஸ் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் அழைக்கப்படுகிறார்கள். 2004ஆம் ஆண்டில், 32 வயது பெண் ஒருவரை துணை ராணுவப் படையினர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சாட்டி, இந்தப் பெண்கள் ஒரு போராட்டம் நடத்தினர்.

தலைநகர் இம்பாலில் உள்ள ஒரு ராணுவ முகாமிற்கு வெளியே நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, 'இந்திய ராணுவம் எங்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நடத்துகிறது' என்ற பதாகையை ஏந்தி நிர்வாணமாக அவர்கள் நின்றது உலகையே திகைக்க வைத்தது.

மெய்ரா பைபிஸ் அமைப்பில் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த பெண்களே பெரிதும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் பொதுவாக திருமணமான பெண்களாகவும், 30 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்த மகளிர் அமைப்பில் இணைந்து அவர்கள் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டதால் அவர்களை 'கட்டமைப்புடன் கூடிய பாதுகாப்புப் பணியாளர்கள்' என வரலாற்றாசிரியர் லைஷ்ராம் ஜிதேந்திரஜித் சிங் கூறுகிறார்.

இந்த மெய்ரா பைபிஸ் அமைப்பு, கடந்த 1900களின் முற்பகுதியில் உருவானதாகக் கருதப்படுகிறது. அந்தக் காலகட்டங்களில் 17 முதல் 60 வயதுடைய ஆண்களுக்கு சம்பளம் எதுவும் தராமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் அவர்களைக் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தினர்.

இதைக் கண்டித்து அப்போது ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட ஏராளமான பெண்கள் ஒன்றிணைந்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்திக் காட்டினர். இதிலிருந்துதான் மெய்ரா பைபிஸ் அமைப்பு தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ராணுவத்துக்கு எதிராகத் திரும்பிய பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மணிப்பூர் வன்முறை காரணமாக 60,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறிய நிலையில், முகாம் ஒன்றில் அமர்ந்திருந்த பெண்

கடந்த 1949இல் மணிப்பூர் இந்தியாவுடன் இணைந்ததில் இருந்து, மெய்ரா பைபிஸ் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் எதிர்ப்பு குறித்து இடைவிடாத பிரசாரம் மேற்கொண்டதற்காக பொதுமக்களிடையே முக்கியத்துவம் பெற்றனர்.

"இணக்கமாக இருப்பது மற்றும் பிடிவாதமற்ற தன்மையுடன் அவர்கள் செயல்பட்டு வருவதால் அவர்கள் சமூகம் தொடர்பான எந்தவொரு பிரச்னையிலும் தலையிட முடிகிறது.

இது, 'மெய்ரா பைபிஸ் அமைப்பு பெண்களின் பிரச்னைகளுக்காக மட்டும் போராடும் அமைப்பு' என்ற நிலையிலிருந்து, 'அனைத்து பிரச்னைகளுக்காகவும் போராடும் அமைப்பு' என்ற நிலைக்கு எடுத்துச் செல்கிறது," என்று மணிப்பூரில் பெண்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யும் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தின் ஸ்ருதி முகர்ஜி குறிப்பிடுகிறார்.

கடந்த 1980இல் இன மோதல் மற்றும் வன்முறையில் மணிப்பூர் சிக்கித் தவித்தபோது, ​​அமைதியை மீட்டெடுத்ததில் இந்தப் பெண்கள் பெரும் பங்காற்றினர். 1958ஆம் ஆண்டில், இந்தியா சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) இயற்றியது.

பாதுகாப்பு வீரர் ஒருவர் தவறுதலாக அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒரு குடிமகனைக் கொன்றுவிட்டால் அவரை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. ஆனால் இந்தச் சட்டத்தை அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்காகவே கருதி, அப்பாவிப் பொதுமக்களை பல சந்தர்ப்பங்களில் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மணிப்பூரில் 1979 முதல் 2012ஆம் ஆண்டு வரை பாதுகாப்புப் படையினரால் போலி என்கவுன்டர்கள் மூலம் 1,528 பேர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டனர். 1980ஆம் ஆண்டில், மெய்ரா பைபிஸ் அமைப்பினர் ஒரு காவல் நிலையத்திற்கு பேரணியாகச் சென்று, அங்கு தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபரை விடுதலை செய்தனர்.

மேலும், இந்த அமைப்பைச் சேர்ந்த பெண்கள், அவர்கள் வசித்த பகுதியில் இரவு நேரத்தில் பாதுகாப்புப் படையினர் சில இளைஞர்களைக் கைது செய்ய முயன்றபோது, "இரவு முழுவதும் எரியும் தீப்பந்தங்களுடன் அங்கேயே இருந்து அந்தக் கைது நடவடிக்கையைத் தடுத்தனர்.

அப்போது மின்கம்பங்களைத் தட்டி, அல்லது மூங்கில் கம்புகளை தரையில் தட்டி பலத்த ஓசை எழுப்பி பாதுகாப்புப் படையினருக்கு எதிராக காவலில் நின்றார்கள்," என்று லைஷ்ராம் ஜிதேந்திரஜித் சிங் கூறுகிறார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கிளர்ச்சியால் கொதித்தெழுந்த மணிப்பூர் மாநிலத்தில், மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஆழமாக வேரூன்றிய பகை உணர்வு நீடிக்கிறது.

இந்நிலையில், கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறைகளை அடுத்து, உள்ளூர் காவல்துறையின் அதிவிரைவுப் படையைச் சேர்ந்த மூன்று காவலர்கள் வீடுகளுக்குத் தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

வன்முறையாளர்கள் சில கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, ​​ஒரு சமூகத்தினுடைய விசுவாசத்தின் காரணமாக சில துணை ராணுவ வீரர்கள் இதுபோன்று சட்டவிரோதமாகச் செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ராணுவத்துக்கு எதிராகத் திரும்பிய பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்களால் நடத்தப்படும் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய சந்தை ஒன்று இம்பாலில் செயல்பட்டு வருகிறது

மெய்ரா பைபிஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தோங்கம் ஜாய்மாலா, "ராணுவத்தின் செயல்பாடுகளில் பெண்கள் மகிழ்ச்சியடையவில்லை" என்கிறார்.

"மலைப்பகுதியில் மறைந்திருக்கும் ஆயுதம் ஏந்திய குகி இன குற்றவாளிகளை பாதுகாப்புப் படையினரால் இதுவரை தடுக்க முடியவில்லை. அதனால் பள்ளத்தாக்கில் அவ்வப்போது பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது போன்ற குற்றவாளிகளை பாதுகாப்புப் படையினர் மட்டுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

மேலும் மலைப்பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில் நாங்கள் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மாட்டோம்," என்று அவர் கூறுகிறார்.

அமைதிக்கான வடகிழக்கு இந்திய பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பினாலக்ஷ்மி நேப்ரமும் இதேபோன்ற கருத்தை முன்வைக்கிறார்.

"பாதுகாப்புப் படைகளின் ஒரு பிரிவினர் வேண்டுமென்றே பிரிவினையையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்த முயல்கிறார்கள். இதனால்தான் மெய்ரா பைபிஸ் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மணிப்பூரை பாதுகாக்கும் உணர்வுடன் களத்தில் இறங்கியுள்ளனர்," என்று அவர் கூறுகிறார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் மணிப்பூர் வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் மணிப்பூர் வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை பகிர்வதற்குப் பதிலாக, மெய்ரா பைபிஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ராணுவம் தன்னுடைய "தைரியத்தைக் காட்டியிருக்க வேண்டும்" என்று நெப்ராம் கூறுகிறார்.

அதோடு மெய்ரா பைபிஸ் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குகி இன பெண்களுடன் இணைந்து பணியாற்றி அமைதியை மீட்டெடுக்க ராணுவம் உதவ வேண்டும் என்றும் நெப்ராம் கூறுகிறார். "மணிப்பூர் பெண்களைச் சேர்க்காமல், மாநிலத்தில் நிலையான அமைதியை மீட்டெடுக்க முடியாது."

ஆனால் சிலர் அதை மறுப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. தாய்வழி சமூகமாக இல்லாவிட்டாலும், மணிப்பூரில் எப்போதுமே பெண்கள் பொது விவகாரங்களில் தீவிரமாகப் பங்கேற்கின்றனர்.

இம்பாலில், தெற்காசியாவிலேயே மிகப் பெரிய பெண்கள் சந்தையையும் அவர்கள் நடத்தி வருகிறார்கள். ஆயுதப்படைகளின் அட்டூழியங்களை எதிர்த்து, இரோம் ஷர்மிளா என்ற சமூக ஆர்வலர் 16 ஆண்டுகள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்தார்.

இம்பாலில் உள்ள மருத்துவமனை அறையில் ஆயுதம் ஏந்திய காவலர்கள், செவிலியர்களுக்கு இடையே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவர் மனம் தளராமல் தமது போராட்டத்தைத் தொடர்ந்தார்.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம், ANI

இது மட்டுமின்றி, சுற்றுப்புறங்களில் எப்போதும் தாக்குதல்கள், மோதல்கள் நிகழும் ஆபத்து உள்ள போதிலும், உள்ளூர் பெண்கள் இப்போது ரோந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மணிப்பூரில் உள்ள பெண்கள் 1904 மற்றும் 1939ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக 'நுபி லான்' அல்லது பெண்கள் போர் என அழைக்கப்படும் இரண்டு பெரிய தாக்குதல் நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.

"மணிப்பூரின் தீப்பந்தப் போராளிகளுக்கு இது மூன்றாவது போர் நடவடிக்கை என்பதுடன், இது தைரியமான பெண்களின் ஒரு போர் நடவடிக்கை என்பதே உண்மை" என்கிறார் நேப்ராம்.

மெய்ரா பைபிஸ் அமைப்பினர் அமைதியை நாடுகின்றனர் என்கிறார் ஜாய்மாலா.

"எங்கள் விவசாயிகள் தங்கள் வயல்களுக்குச் செல்ல முடியாத நிலையில், எங்கள் பெண்கள் சந்தைக்குச் செல்ல முடியாத நிலையில் எங்கள் பிழைப்பைத் தொடர முடியாத அளவுக்கு ஒரு முற்றுகையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்."

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: