பொது சிவில் சட்டம்: பா.ஜ.க.வுக்கு என்ன லாபம்? ஆட்சிக் காலத்தின் இறுதியில் அதுகுறித்து பேசுவது ஏன்?

பொது சிவில் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரேர்னா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பாரதிய ஜனசங்கம், 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, தனது தேர்தல் அறிக்கையில் முதன்முறையாக, `பொது சிவில் சட்டம்` என்பதைக் குறிப்பிட்டது.

ஜன சங்கம் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது. எனினும், தேர்தல் முடிவுகள் ஜனசங்கத்துக்கு எதிராக வந்தது, காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

இதற்குப் பிறகு, 1967-1980 ஆண்டுகளுக்கு இடையில், இந்திய அரசியலில் காங்கிரஸ் பிரிவினை, 1971இல் இந்திய-பாகிஸ்தான் போர், இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலை போன்ற சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தன. இதனால் பொது சிவில் சட்டம் தொடர்பான விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சி, 1980ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பிறகு மீண்டும் பொது சிவில் சட்டத்திற்கான கோரிக்கை இடம் பெறத் தொடங்கியது.

ராமர் கோவில் கட்டுதல், 370வது பிரிவு, பொது சிவில் சட்டம் ஆகியவை பாஜக அறிக்கையின் மூன்று முக்கிய அம்சங்களாக இடம் பெற்றன.

ஆனால் ஆட்சியமைத்த பின்னர் பாஜகவின் எந்த அரசும் (மோதி தலைமையிலான முதல் ஆட்சி உட்பட ) பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கவில்லை.

அதேநேரத்தில், இது தொடர்பாக அவ்வப்போது சர்ச்சைகளும், கருத்துகளும் வெளியாகி வருகின்றன. பாஜக தலைவர்கள் பொது சிவில் சட்ட பிரச்னை இன்னும் தங்கள் முன்னுரிமைகளில் ஒன்று என்று உறுதியளித்தனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோதி இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையாக எதையும் கூறாமலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில்தான், ஜூன் 28 அன்று பிரதமர் நரேந்திர மோதி முதன்முறையாக பொது சிவில் சட்டம் குறித்து விரிவாகப் பேசினார்.

பொது சிவில் சட்டம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ராமர் கோவில் கட்டுதல், 370வது பிரிவு, பொது சிவில் சட்டம் ஆகியவை பாஜக அறிக்கையின் மூன்று முக்கிய அம்சங்களாக இருந்தன

பிரதமர் மோதி பேசியது என்ன?

போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோதி, பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தும்போது, 'ஒரே குடும்பத்தில் இருவருக்கு வெவ்வேறு விதிகள் இருக்க முடியாது. இப்படி இரட்டை அமைப்புடன் வீடு எப்படி இயங்க முடியும்?` என்று கூறினார்.

"பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வாருங்கள் என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கூறி வருகிறது. எனினும், வாக்கு வங்கிக்கு ஆசைப்படுபவர்கள் அதற்குத் தடையாக இருக்கிறார்கள். ஆனால் பாஜக அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்கும் உள்ளது," என்று மோதி குறிப்பிட்டார்.

பொது சிவில் சட்டம் குறித்த பிரதமரின் கருத்துக்குப் பிறகு, பெரும்பாலான எதிர்க்கட்சிகள் 2024 தேர்தலுக்கு முன், வேலையின்மை, பணவீக்கம் போன்ற பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பவும், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தவும் பிரதமர் மோதி பொது சிவில் சட்டத்தைக் கையில் எடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டுகின்றன.

அதேநேரத்தில் ஒருசில எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாகவும் உள்ளன.

பொது சிவில் சட்டம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர்கள்

ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கட்சிகள் கட்சிகள் யாவை?

பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து வருகின்றன. பொது சிவில் சட்டம் சிறுபான்மை சமூகங்களின் மத சுதந்திரத்தை மீறும் என்றும், தற்போதைய தனிநபர் சட்டங்கள் சிறப்பாகச் செயல்படுவதால், பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்றும் இந்தக் கட்சிகள் நம்புகின்றன.

நாட்டின் மீது இந்து பெரும்பான்மைவாதத்தைத் திணிக்க ஆளும் பாஜகவால் பொது சிவில் சட்டம் பயன்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஜேடியு, சிபிஐ, ஆர்ஜேடி, சமாஜ்வாடி, சிபிஐ(எம்), திமுக ஆகியவை வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில், ஆம் ஆத்மி கட்சி 'கொள்கை' அடிப்படையில் ஆதரவளித்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும் எம்.பி.யுமான சந்தீப் பதக், "எங்கள் கட்சி கொள்கையளவில் ஆதரிக்கிறது. 44வது பிரிவும் இதை ஆதரிக்கிறது.

இது அனைத்து மதத்தினரும் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால்தான் அமல்படுத்த வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

சிவசேனாவும் (உத்தவ் தாக்கரே பிரிவு) அதே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. இதுகுறித்து அக்கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல் கூறும்போது, “அவசரப்பட்டு இவ்வளவு பெரிய முடிவை எடுக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம்," என்றார்.

"திடீரென்று ஒன்பதரை ஆண்டுகளுக்குப் பிறகு அரசு இப்போது பொது சிவில் சட்டத்தைப் பற்றி பேசுகிறது. இது தேர்தல்களை மனதில் வைத்து செய்யப்படும் அரசியல் தந்திரம்,” என்று கூறுகிறார்.

பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோதி பேசியது ஏன்?

பொது சிவில் சட்டம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதியுடன் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பாஜகவின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதி என்பதே இதற்கான எளிய பதில். எனினும், இப்போது ஏன்?

இந்தக் கேள்விக்கு மூத்த செய்தியாளர் வீர் சங்வி, ‘தி பிரிண்ட்’ செய்தி இணையதளத்திற்கு எழுதிய ‘UCC is Modi's Nuclear Button’ என்ற கட்டுரையில், “கடந்த ஒன்பது ஆண்டுகளில், அவர் இந்தப் பிரச்னை குறித்து ஒரு தீவிர விவாதத்தை எளிதாக ஏற்படுத்தியிருக்க முடியும்.

மேலும், பொது சிவில் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளித்திருக்க முடியும். அப்படியிருக்கும்போது, 9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோதி இப்போது ஏன் இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளார்?" என்று கேள்வியெழுப்பினார்.

"இதற்கான பதில், 2024 மக்களவை தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது என்பதுதான். மோதி தனது தேர்தல் மேடையில் இந்துத்துவாவை முக்கிய அங்கமாக்குவார் என்றும், பொது சிவில் சட்டம் என்பது பாஜகவின் 'அணு ஆயுத பொத்தான்' பொத்தான் என்றும் சில வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்," என்று குறிப்பிடுகிறார்.

இந்த விவகாரத்துக்குப் பின்னால், இரண்டு முக்கிய காரணங்களை பட்டியலிடுகிறார் மூத்த செய்தியாளரான பிரதீப் சிங். அதில், ஜன சங்கத்தின் காலத்திலிருந்தே பாஜகவின் மூன்று முக்கிய அம்சங்களில் பொது சிவில் சட்டம் இருந்து வருகிறது என்பது முதல் காரணம்.

சட்டப்பிரிவு 370, ராமர் கோவில் கட்டுவது போன்ற அம்சங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. எஞ்சியிருப்பது பொது சிவில் சட்டம் மட்டும்தான். இத்தகைய சூழ்நிலையில், அது எப்போது அமல்படுத்தப்படும் என்பது தொடர்பாக பாஜகவின் பிரதான வாக்காளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. எனினும் பா.ஜ.கவுக்கு இது புதிய விஷயமோ, திடீர் பிரச்னையோ இல்லை.

பொது சிவில் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

இரண்டாவது காரணம் தொடர்பாக விளக்கமாகப் பேசிய பிரதீப் சிங், “கடந்த ஜூன் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்ட நிலையில், எந்தப் பிரச்னையில் எதிர்ப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை.

எனவே பொது சிவில் சட்டம் குறித்துப் பேசியிருப்பது மூலம் எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில் பிரதமர் மோதி ஒரு அஜெண்டாவை வைத்திருக்கிறார். தற்போது மோதியின் பேச்சுக்கு அடுத்த கூட்டத்தில் அதாவது ஜூலை 13-14ஆம் தேதிகளில் பதில் அளிப்போம் என்று காங்கிரஸ் தரப்பில் இருந்து அறிக்கை வந்திருக்கிறது. அதாவது, தீவிரமாகச் செயலாற்றுவதற்குப் பதிலாக எதிர்வினையாற்றுவதில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன,” என்று குறிப்பிட்டார்.

கடந்த 1977 மற்றும் 1989 பொதுத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான சான்றுகளைக் கூறும் பிரதீப் சிங், இந்திய அரசியலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த இரண்டு தேர்தல்கள் இவை மட்டுமே என்று கூறுகிறார்.

“இதற்கு முக்கியக் காரணம் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் எமர்ஜென்சி. 1977இல் முதலில் ஊழல் விவகாரம் வருகிறது, பிறகு அவசரநிலை அதைத் தொடர்ந்து 1989இல் போஃபோர்ஸ் விவகாரம்.

பொதுமக்களின் கவனத்தைப் பெற வைக்கக்கூடிய இதுபோன்ற பிரச்னைகளைத் தற்போது எதிர்க்கட்சிகள் கண்டுபிடிக்கவில்லை . மாறாக, பொது சிவில் சட்டம் பிரச்னையை எழுப்பி, எதிர்க்கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்தியிருக்கிறார் பிரதமர்.

ஆம் ஆத்மி, சிவசேனா, என்.சி.பி ஆகிய அனைத்துக் கட்சிகளும் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர். அதாவது, பேசப்பட்டு வந்த எதிர்கட்சி ஒற்றுமை இந்தப் பிரச்னையில் சிதறிக் கிடக்கிறது,” என்று பிரதீப் சிங்.

பொது சிவில் சட்டம் குறித்துப் பேச வேண்டிய நிர்பந்தத்தில் பாஜக இருப்பதாகக் கூறுகிறார் மூத்த செய்தியாளர் ஸ்மிதா குப்தா.

ராமர் கோவில் மற்றும் 370வது சட்டப்பிரிவை தேர்தலில் பா.ஜ., பயன்படுத்திக் கொண்டதால், தற்போது மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்த அக்கட்சிக்கு ஒரு விவகாரம் தேவைப்படுகிறது.

கர்நாடக தேர்தல் தோல்விக்குப் பிறகு பாஜகவால் இப்போது எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாது. மூன்று மாநிலங்களின் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலும் நெருங்கி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், தாமதமின்றி, பாஜக தனது தேர்தல் அஜெண்டாவை வகுத்துள்ளது.

பொது சிவில் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது உண்மைதான். ஆனால் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையும் அதிகரித்து வருகிறது, அதில் மற்ற மதங்களும் அடங்கும்.

பாஜக என்ன நினைக்கிறது?

பாஜக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சின்ஹா இந்த விவகாரம் தொடர்பாகக் கூறுகையில், பாஜக எப்போதும் ஒரே நாடு, ஒரே அரசமைப்பு, ஒரே சின்னம் என்று பேசி வருகிறது. அனைவருக்கும் ஒரே மாதிரியாகப் பொது குற்றவியல் சட்டம் இருக்கும்போது, இந்திய சிவில் சட்டம் மட்டும் ஏன் மாறுபடவேண்டும்?" எனக் கேள்வி எழுப்புகிறார்.

"சிலரை திருப்திப்படுத்தும் அரசியலை எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றன. முதலில் முஸ்லிம்களை பயமுறுத்தி, பின்னர் தங்களை அவர்களின் நலம் விரும்பிகள் என்று அழைக்கின்றனர். அதேநேரம், முஸ்லிம்களிடையே பெண்களின் நிலை மோசமாக உள்ளது. குழந்தையைப் பெற்றெடுக்கும் இயந்திரமாக மட்டுமே அவர்கள் பார்க்கப்படுகின்றனர்," என்றும் அவர் விமர்சித்தார்.

“முஸ்லிம்கள் நான்கிலிருந்து ஐந்து திருமணங்களைச் செய்து, ஒவ்வொரு திருமணத்திலிருந்தும் ஐந்து முதல் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். அவர்களின் மக்கள் தொகையை அதிகரிக்கிறார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது முஸ்லிம்களின் மக்கள் தொகை மூன்று கோடியாக இருந்தது, தற்போது அவர்களுடைய மக்கள் தொகை 8% அதிகரித்துள்ளது. முஸ்லிம் பெண்கள் காப்பாற்றப்பட வேண்டும்,” என்றும் அமிதாப் சின்ஹா தெரிவித்தார்.

இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரிக்கிறதா?

இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது உண்மைதான். ஆனால் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையும் அதிகரித்து வருகிறது, அதில் மற்ற மதங்களும் அடங்கும்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் இஸ்லாமிய மக்கள்தொகை வளர்ச்சியின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 1991 முதல், இந்தியாவின் மக்கள்தொகையில் இஸ்லாமியர்களின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்பதை நீங்கள் காணலாம். 1991க்குப் பிறகு பொது மக்களின் வளர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது.

கடந்த 2019 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, முக்கிய மதக் குழுக்களிடையே இஸ்லாமிய மக்கள் அதிக கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளனர். அதேநேரத்தில், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த விகிதம் குறைந்துள்ளதையும் தரவுகள் காட்டுகின்றன.

இஸ்லாமிய பெண்களிடம் குழந்தை பிறப்பு சதவீதம் இந்துக்களைவிட அதிகமாகக் குறைந்துள்ளது. 1992இல் 4.4 ஆக இருந்த இது 2019இல் 2.4 ஆக குறைந்துள்ளது.

பொது சிவில் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொது சிவில் சட்டம் தொடர்பாக எம்.பி.க்களின் கருத்தை அறிய ஜூலை 3ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டத்தால் பாஜகவுக்கு என்ன லாபம்?

பாஜகவின் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டதே அக்கட்சிக்கான நன்மை என்கிறார் மூத்த செய்தியாளர் பிரதீப் சிங்.

“பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் என்று அரசின் பக்கம் பலவீனமாக இருப்பதாகக் கருதப்படும் பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, பாஜக விரும்பும் பிரச்னைகள் குறித்து இப்போது விவாதிக்கப்படும்,” என்று அவர் கூறுகிறார்.

அதாவது, பா.ஜ.க உருவாக்கிய ஆடுகளத்தில் எதிர்க்கட்சிகள் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்படும், மேலும் இந்த விஷயங்களில் பாஜக எப்போதும் வலுவாக இருப்பதால் அது பலனளிக்கும்.

பொது சிவில் சட்டம் என்றால் என்ன, இதுவரை என்ன நடந்தது?

பொது சிவில் சட்டம் தொடர்பாக எம்.பி.க்களின் கருத்தை அறிய ஜூலை 3ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

ஜூன் 14 அன்று, 22வது இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் பிரச்னையில் மத அமைப்புகள் மற்றும் பொது மக்களிடம் கருத்து கேட்டது. இதற்காக கமிஷன் ஒரு மாதம் அவகாசம் அளித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 21வது சட்ட ஆணையம், "இந்தக் கட்டத்தில் ஒரே மாதிரியான சிவில் கோட் அவசியமில்லை அல்லது விரும்பத்தக்கது அல்ல," என்று கூறியது.

நாட்டிலேயே தற்போது பொது சிவில் சட்டம் செல்லுபடியாகும் ஒரே மாநிலமாக கோவா உள்ளது. அதே நேரத்தில், உத்தரகாண்ட் அரசும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவைத் தயாரித்துள்ளது.

எந்த நாடுகளிலெல்லாம் பொது சிவில் சட்டம் உள்ளது?

உலகின் பல நவீன மற்றும் வளர்ந்த நாடுகளில் பொது சிவில் சட்டம் உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இதில் அடங்கும்.

மறுபுறம், இஸ்லாமிய நாடுகளைப் பற்றி பேசினால், துருக்கியை தவிர அனைத்து நாடுகளிலும் ஷரியா சட்டம் உள்ளது, இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: