புவி ஈர்ப்பு துளை: இந்திய பெருங்கடலில் இந்த '30 லட்சம் ச.கி.மீ.' பரப்பிற்குள் கப்பல் சென்றால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், THAT
- எழுதியவர், ஆலிஸ் ஹெர்னாண்டெஸ்
- பதவி, பிபிசி முண்டோ
பூமியின் மேற்பரப்பிலேயே மிகத்தாழ்ந்த பகுதி எங்கே இருக்கிறது தெரியுமா?
இந்தியப் பெருங்கடலில்.
இவ்விடத்தில்தான் பூமியின் புவியீர்ப்பு விசை மிகக் குறைவாகவும் உள்ளது.
அது ஏன் தெரியுமா?
இரு இந்திய ஆய்வாளர்கள் இதற்கான ஒரு புதிய விளக்கத்தை அளித்திருக்கின்றனர்.
பூமியின் உண்மையான வடிவம் என்ன?
பள்ளிக்கூடத்தில் பூமியைப்பற்றி நமக்கு இரண்டு முக்கியமான தகவல்கள் கற்றுத்தரப்பட்டிருக்கும்:
1) பூமி உருண்டையானது, அதன் துருவங்கள் சற்றே தட்டையானவை
2) பூமியின் புவியீர்ப்பு விசை அதிகரிக்கும் வேகம் நொடிக்கு 9.8மீட்டர்கள்.
ஆனால் உண்மையில், பூமி ஒரு உருளைகிழங்கைப் போன்றது. அதன் கனம் எல்லா இடத்திலும் ஒரே போன்றில்லாமல் மாறுபடுகிறது.
இதன்படி, பூமியின் வெவ்வேறு பகுதிகளின் கனம் மாறுபடுவதால், பூமியின் புவியீர்ப்பும் மாறுபடுகிறது.
பூமியில் புவியீர்ப்பு மாறுபடும் பகுதிகள் உள்ளன. இவ்விடங்களில் புவியீர்ப்பு விசை சராசரியினும் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்.
புவியீர்ப்புத் துளை என்றால் என்ன?

பட மூலாதாரம், THAT
இங்குதான் ‘புவியீர்ப்புத் துளை’ எனும் விஷயம் உள்ளே வருகிறது.
இது ‘புவியீர்ப்பில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் ஒரு பகுதி. பூமியிலேயே மிக முக்கியமான இடமும் கூட,’ என்கிறார் ஒவியேடோ பல்கலைக்கழகத்தின் புவியியல் முனைவர் பட்டம் பெற்ற கேப்ரியேலா ஃபெர்னாண்டெஸ் வியேஹோ.
ஆனால், ஒரு சாதாரணத் துளையைப் போல இத்துளையில் பொருட்கள் உள்ளே விழுவதில்லை என்கிறார். இது கண்ணுக்குத் தென்படுவதும் இல்லை என்கிறார்.
பல தசாப்தங்களுக்கு முன்னரே கப்பல்களில் இருக்கும் கருவிகள் இந்தப் புவியீர்ப்புத் துளையில் நிகழும் புவியீர்ப்பு விசை மாற்றத்தைக் கண்டுபிடித்தன. அதன்பிறகு செயற்கைகோள்கள் அதனை உறுதி செய்தன.
ஆனால் இத்தனை நாட்களாக இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
ஆய்வாளர்கள் அதனை இப்போது கண்டறிந்திருக்கிறார்கள்.
30 லட்சம் சதுர கி.மீ. பரந்திருக்கும் ‘துளை’
இந்தப் புவியீர்ப்புத் துளை இந்தியப் பெருங்கடலில் இருக்கிறது.
இதன் ஆழம் சராசரிக் கடல் மட்டத்தினும் 105மீட்டர்கள் கீழே இருக்கிறது.
இதன் பரப்பளவு 30லட்சம் சதுர கிலோமீட்டர்கள்.
இதனை இந்தியப் பெருங்கடல ஜியாய்ட் தாழ்வு (Indian Ocean Geoid Low - IOGL) என்று அழைக்கிறார்கள்.
இங்குதான் பூமியின் மிகக் குறந்த புவியீர்ப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நமது பள்ளிக்கூடப் பாடத்தை நினைவுகூர்ந்தால், குறைவான கனம் இருக்கும் இடத்தில்தான் குறைவான புவியீர்ப்பு இருக்கும்.
அப்படிப் பார்த்தால் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் இந்தப் புவியீர்ப்புத் துளையில் கனம் குறைவாக இருக்கவேண்டும்.
அது ஏன்?
இதற்கான விளக்கத்தில் புவியியல் ஆய்வாளர்கள் வேறுபடுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
பழைய விளக்கம் எங்கு தோற்றது?
இதுநாள்வரை நம்மிடம் இருந்த மாதிரிகளின் படி பார்த்தால், இரண்டு கண்டத்தட்டுகள் மோதிக்கொண்டபோது, ஒன்று மற்றொன்றுக்குக் கீழ் சென்றதாலேயே அவ்விடத்தில் கனம் குறைந்திருக்கிறது, என்கிறார் ஃபெர்னாண்டெஸ்.
இந்தியப் பெருங்கடல் தோன்றுவதற்கு 250 மில்லியன் வருடங்களுக்கு முன் இருந்த கோன்ட்வானா மற்றும் லாரேசியா எனும் பண்டைய கண்டங்களுக்கு மத்தியில் இருந்த டெதிஸ் எனும் பண்டைய கடலில் இருந்து வந்த கண்டத்தட்டுக்களின் மோதலாலேயே இது நிகழ்ந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவின் கண்டத்தட்டு கோண்ட்வானா எனும் பண்டைய கண்டத்திலிருந்து நகர்ந்த போது, டெதிஸ் கடலின் கண்டத்தட்டு கீழிறங்கியதால் உருவானதுதான் இந்தியப் பெருங்கடல்.
ஆனால் இந்த விளக்கம், இந்தியப் பெருங்கடலில் நிகழும் வேறு புவியியல் மாற்றங்களைத் திருப்திகரமாக விளக்கவில்லை.
இங்குதான் இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த தேபாஞ்சன் பால் மற்றும் அத்ரேயி கோஷ் ஆகியோரி புதிய விளக்கம் ஒன்றை அளித்திருக்கின்றனர்.
இதற்காக அவர்கள் கணினிமூலம் 19 வகையான புவியியல் மாதிரிகளை உருவாக்கினர். இதற்கு அவர்கள் பூமிப்பரப்பின் கனம், வெப்பம், மற்றும் கண்டத்தட்டுகள் சிதைவுறும் காலம் ஆகிய காரணிகளை கணக்கில் எடுத்துக்கொண்டனர்.
இதன்மூலம் அவர்கள் உருவாக்கிய 19 சாத்தியமான விளைவுகளில், 6 விளைவுகள் உண்மையாக நாம் காணக்கூடியவற்றோடு ஒத்துப்போயின.

பட மூலாதாரம், Getty Images
இந்தியர்கள் அளித்த புதிய விளக்கம்
இவர்களின் விளக்கத்தின்படி, முன்னர் கணிக்கப்பட்டதுபோல, ‘இந்தியாவின் கண்டத்தட்டு கோண்ட்வானா எனும் பண்டைய கண்டத்திலிருந்து நகர்ந்த போது உருவானதுதான் இந்தியப் பெருங்கடல்’ என்பதுவரை சரி.
ஆனால் அதற்குப்பிறகு, மற்றொரு புவியியல் பகுதி இதில் சம்பந்தப்படுகிறது: கிழக்கு ஆப்பிரிக்கா.
பல பத்து மில்லியன் ஆண்டுகளாக, குளிர்ச்சியாக இருந்த டெதிஸ் கடலின் கண்டத்தட்டு, கீழிறங்கியதோடு கிழக்கு ஆப்பிரிக்காவை நோக்கி நகர்ந்தது. அங்கிருந்த மிகச்சூடான தீக்குழம்போடு உரசியது, என்கிறார் ஃபெர்னாண்டெஸ்.
ஒரு குளிர்ந்த பொருள் மற்றும் ஒரு சூடான பொருள் ஆகியவை இணைவதனால் அதிர்வுகள் உருவாகின. இதிலிருந்து கனம் குறைந்த புவியியல் அடுக்குகள் உருவாகுன. இவை ‘புவியியல் இறகுகள்’ (mantle plumes) என்று வர்ணிக்கப் படுகின்றன.
இவற்றினாலேயே இந்தியப் பெருங்கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி கனம் குறைந்ததாகவும் அங்கு புவியீர்ப்பு விசை குறைவாகவும் இருக்கிறதென்று இந்திய ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை தெரிவிக்கின்றது.
இது புவியியல் வரலாறு, கணிதத் தரவுகள், மற்றும் புவியியல் கணினி மாதிரிகளைக் கணக்கில்கொண்டு அடந்த துணிபு என்பதால், மிகவும் ஏற்புடையதாக இருப்பதாக ஃபெர்ணான்டெஸ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












