பூமியில் 11 கி.மீ. ஆழத்துக்கு கிணறு தோண்டும் சீனா: என்ன கிடைக்கப் போகிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அதவால்பா அமரைஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பூமிக்கு அடியில் 11 கிலோ மீட்டர் ஆழத்துக்கு குழி தோண்டும் பணியை சீனா தொடங்கியுள்ளது.
இந்த துளை 10 க்கும் மேற்பட்ட பூமியின் அடுக்குகள் வழியாக சென்று பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் காலக்கட்டத்தில் தோன்றிய அடுக்குகளை அடையும் என்று சீனாவின் அரசு செய்தி நிறுவனமான Xinhua தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் 457 நாட்களை எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரேட்டர்கள் 2,000 டன்களுக்கும் அதிகமான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை இந்த திட்டத்தின்போது கையாளுவார்கள்.
பூமிக்கு அடியில் 10,000 மீட்டருக்கு மேல் தோண்டப்படவுள்ள இத்திட்டம், சீனாவின் மிகப்பெரிய குழி தோண்டுதல் திட்டமாக பார்க்கப்படுகிறது.
இதுதான் மிக ஆழமான துளையா?
சீனா தோண்டவுள்ள இந்த பள்ளம்தான் மனிதன் தோண்டியதிலேயே மிக ஆழமானதாக இருக்குமா என்றால், நிச்சயம் இல்லை. அந்த சாதனையை ரஷ்யாவில் உள்ள கோலா சூப்பர்-டீப் டிரில்லிங் கிணறு வைத்துள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பள்ளம் தோண்டப்பட்டு, 1989-இல் 12,262 மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. இதுவே பூமியில் மனிதர்களால் ஆழமாக துளையிடப்பட்டது ஆகும்.
சர்வதேச அளவில் தொழில்நுட்பத்திலும் அறிவியல் சக்தியிலும் வலிமையானதாக தன்னை காட்டிக்கொள்வதில் முக்கிய நடவடிக்கைகளை சீனா எடுத்துவரும் சூழலில் இந்த முன்னெடுப்பும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கிணறை தோண்டும் பணியைத் தொடங்கிய அதே நாளில், 2030க்குள் நிலவில் காலடி எடுத்துவைக்க வேண்டும் என்ற தங்களின் திட்டத்திற்காக மூன்று வானியல் ஆய்வாளர்களை தனது விண்வெளி ஆய்வு மையத்திற்கு சீனா அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தை முன்னெடுத்துவரும் சீன பெட்ரோகெமிக்கல் கார்ப்பரேஷன் சினோபெக், புவியியல் ஆய்வில் "ஆழத்தின் வரம்புகளை விரிவாக்கம் செய்வதே" தங்களின் இலக்கு என்று அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
11 கிலோ மீட்டர் ஆழத்தில் என்ன கிடைக்கும்?
சீனாவின் அதிபரான ஷி ஜின்பிங் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் ஆழத்தை ஆராய்வது தொடர்பான முன்னெடுப்புகளை உள்ளூர் விஞ்ஞானிகள் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த ஆழமான துளையிடும் பணியை சீனா தொடங்கியுள்ளது.
இத்திட்டம் குறித்து பேசும்போது, "பூமிக்கு அடியில் துளையிடுவதற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன: முதலாவது அறிவியல் ஆராய்ச்சிக்கானது, மற்றொன்று எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளதாக என கண்டறிவதற்கு " என்று சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சீனா நேஷனல் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் (CNPC) பிரதிநிதி லியு சியாகாங் கூறியுள்ளார்.
இந்த திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் வீடியோவில், ஆழமான அகழ்வாராய்ச்சி மற்றும் புதிய இயந்திரங்களை தயாரிப்பதில் பெட்ரோசீனாவின் (ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள CNPC கட்டுப்பாட்டில் உள்ள வணிக நிறுவனம்) தொழில்நுட்ப திறன்களை வலுப்படுத்த இந்த திட்டம் உதவும் என்று அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
11 கிலோ மீட்டர் ஆழத்தில் எண்ணெய் கிடைக்குமா?
" பூமியின் மேற்பரப்பிற்கு மிக நெருக்கமான 10 கிலோமீட்டர்களை ஆய்வு செய்ய, நில அதிர்வு டோமோகிராபி மற்றும் பிற நுட்பங்களை நாம் வழக்கமாகப் பயன்படுத்துகிறோம். இந்த வகையான திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அவை இந்த ஆய்வை வலுபடுத்துவதற்கான ஆதாரங்களை வழங்குகின்றன" என்று சிலியைச் சேர்ந்த புவி இயற்பியலாளர் கிறிஸ்டியன் ஃபரியாஸ் பிபிசி முண்டோவிடம் விளக்கினார். இவர் டெமுகோ கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் குடிமைப் பணிகள் மற்றும் புவியியல் இயக்குநராக உள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சீனாவின் திட்டம் "மிகவும் புதுமையான தொழில்நுட்ப முன்னேற்றங்களை சோதிக்க அனுமதிக்கிறது", எனவே " இது மிகவும் சுவாரஸ்யமான ஆய்வு காலமாக இருக்கும்" என்றும் குறிப்பிட்டார்.
துளையிடுதலுக்கான இரண்டாவது நோக்கத்தைப் பொறுத்தவரை, சீனாவின் வடமேற்கில் புதிய அதி ஆழமான எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை ஆராய்வதாக CNPC குறிப்பிட்டுள்ளது.
தரைப் பரப்புக்கும் அதன் அடியில் உள்ள கடினப் பாறைக் கும் இடைப்பட்ட மண் படுகையான அடிமண்ணின் தீவிர ஆழத்தில் ஹைட்ரோகார்பன் படிவுகள் (பொதுவாக 5,000 மீட்டருக்குக் கீழே ) பொதுவாக சமுத்திரம் போன்ற கடல் பரப்புகளில் அமைந்திருக்கும். அதேநேரம் அவை வடிநிலங்கள் போன்ற சில நிலப்பரப்பு பகுதிகளிலும் காணப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
தக்லமாகன் பாலைவனம் அமைந்துள்ள தாரிம் படுகையின் நிலையும் இதுதான். இப்பகுதி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் பெரிய இருப்புக்களைக் கொண்டுள்ளது.
எனினும், அதிக அழுத்தம் மற்றும் தீவிர வெப்பநிலை போன்ற கடினமான நிலத்தடி நிலைமைகளால் துளையிடுதலில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப சிக்கல்கள் வல்லுநர்களால் முன்வைக்கப்படுகின்றன.
"துளையின் நிலைத்தன்மையும் ஒரு பெரிய சவாலாகும்" என்கிறார் பேராசிரியர் ஃபரியாஸ்
முன்னாள் சோவியத் யூனியன் பூமியில் துளையிட்டு 12 கிலோமீட்டர் ஆழத்தைத் தாண்டியிருந்தாலும், பூமிக்கு அடியில் அத்தகைய குறைந்த மட்டத்தை அடைவது இன்று மிகவும் சிக்கலானதாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
"இந்த துளையிடல் திட்டத்தின் கட்டுமான சிரமம் இரண்டு மெல்லிய இரும்பு கேபிள்களில் பெரிய டிரக்கை ஓட்டுவது போன்றது" என்று சீன பொறியியல் அகாடமியின் விஞ்ஞானி சன் ஜின்ஷெங் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இதற்கு மத்தியில், தக்லமாகன் பாலைவனம் வேலை செய்வதற்கு மிகவும் கடினமாக பகுதியாக கருதப்படுகிறது. குளிர் காலத்தில் அதன் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு குறைந்து போகிறது. அதே நேரத்தில் கோடைக்காலத்தில் 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு வெயில் சுட்டெரிக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












