உலகின் எட்டாவது அதிசயம் என போற்றப்பட்ட அமெரிக்க ரயில் பாதை

பட மூலாதாரம், Johnny Stockshooter/Alamy
- எழுதியவர், ட்ரேசி டியோ
- பதவி, பிபிசி செய்திகள்
கடலின் மேற்பரப்பில் அற்புதமான பொறியியலின் துணை கொண்டு சுமார் 181 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலை நம்மைப் பிரமிக்கவைக்கிறது.
மெக்சிகோ வளைகுடாவுக்கும், அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நான் காரில் பயணம் மேற்கொண்ட சென்றபோது, எனது தலைக்கு மேல் கடற்பறவைகள் கீச்சிட்ட சத்தம் மட்டுமே கேட்டது. ஆழமற்ற கடற்பகுதியான அங்கே, பவளம் மற்றும் சுண்ணாம்பு தீவுகளுக்கு இடையே, நீலவண்ண வானமே கடலில் மூழ்கியது போல் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை காட்சியளித்தது.
நான் என் சன்கிளாஸை சரிசெய்தபோது, என் கண்களின் ஓரத்திலிருந்து ஒரு காட்சி நழுவிச் சென்றது. அங்கே மங்கலாகத் தெரிந்த காட்சியில் ஒரு பாட்டில்நோஸ் டால்ஃபின் உற்சாகமாக கடல் நீரில் அங்குமிங்கும் சுற்றித் திரிந்தது. அந்த டால்பினைச் சுற்றிலும் அதன் நண்பர்கள் இருந்ததைப் பார்த்தேன்.
அலைகளின் ஊடாக அவை மேலே வருவதும் பின்னர் கடலில் மூழ்குவதும் என பல விந்தைகளை நிகழ்த்தின. எனது பாதையின் இருபுறமும் மீன்பிடிப் படகுகள் அங்குமிங்கும் தண்ணீரில் வழுக்கிக்கொண்டிருந்தன. அப்போது நான் 80 கி.மீ. வேகத்தில் கார் ஓட்டிக்கொண்டிருந்ததால் என்னால் அவற்றைப் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லை.
மையாமியில் இருந்து புளோரிடாவின் கீ வெஸ்ட் தீவுக்கு 20ம் நூற்றாண்டின் இறுதியில் பயணம் செய்திருந்தால் அது இன்று இருக்கும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்திருக்காது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், வடஅமெரிக்க கண்டத்தின் தெற்குப் பகுதிக்கு பயணம் செய்வதற்கான ஒரே வழி ஒரு நாள் முழுவதும் நீளமான படகில் சவாரி செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
அதுவும், தட்பவெப்பநிலை மோசமாக இருந்தாலோ, கடலில் அலைகள் சீறிக்கொண்டிருந்தாலோ, அவ்வளவு எளிதாகப் பயணம் செய்வதற்கு வாய்ப்புக்கள் இருந்திருக்காது. ஆனால் இன்று வெப்பம் சூழ்ந்த 44 தீவுகள், 42 பாலங்களைக் கடந்து 181 கிலோ மீட்டருக்கும் மேல் எளிதாகப் பயணம் செய்து வடஅமெரிக்க கண்டமும், கரீபிய கடல் பகுதியும் சந்திக்கும் இடத்தை அடையலாம். இது பொறியில் துறையின் பிரமிப்பூட்டும் அற்புதத்தின் விளைவாகக் கிடைத்த வரப்பிரசாதமே ஆகும்.

பட மூலாதாரம், Robert Zehetmayer/Alamy
நெடுஞ்சாலையாக மாறிய ரயில் பாதை
இந்த ஓவர்சீஸ் ஹைவே திட்டம் முதன்முதலில் ஓவர்சீஸ் ரயில் பாதை திட்டமாகத் தான் உருவெடுத்தது. இத்திட்டத்தை நவீன ஃப்ளோரிடாவின் தந்தை என வர்ணிக்கப்படும் ஹென்றி மோரிசான் ஃப்லாகர் என்பவர் உருவாக்கினார். 1870ல் ஜான் டீ ராக்ஃபெல்லருடன் இணைந்து ஹென்றி மோரிசான் ஃபால்கர் உருவாக்கிய ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலகின் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.
ஃப்ளோரிடாவுக்கு வந்து, அந்த மாநிலத்தின் அருமை பெருமைகளை உணர்ந்த ஹென்றி மோரிசான் ஃப்லாகர், சுற்றுலா தொடர்பான தொழிலை அங்கு மேற்கொண்டால் அது ஒரு சிறந்த தொழிலாக இருக்கும் என நம்பினார். இதனையடுத்து, ஏராளமான முதலீடுகளை அங்கு குவிக்கத் தொடங்கினார்.
இதில் நவீன வசதிகளுடன் கூடிய ரிசார்ட்டுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. ஏழை மாநிலமாக இருந்த ஃப்ளோரிடாவை ஒரு பணக்கார மாநிலமாக மாற்றிய பெருமை ஹென்றி மோரிசான் ஃப்லாகரையே சாரும்.
அதன் பின் 1885ம் ஆண்டில் ஃப்ளோரிடாவின் வடபகுதியில் உள்ள ஜாக்சன்வில்லேவிலிருந்து மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள மையாமி வரை துண்டு துண்டாகக் கிடந்த ரயில் பாதைகளை இணைக்கும் பணிகளை ஹென்றி மோரிசான் ஃப்லாகர் மேற்கொண்டார்.
மயாமியுடன் அந்த ரயில் பாதை நிறைவடைந்திருக்கவேண்டும் என்ற நிலையில், 1904ம் ஆண்டு பனாமா கால்வாயை அமெரிக்க அரசு கட்டத் தொடங்கிய பின், அப்பகுதியில், அமெரிக்காவுக்கு மிக அருகில் இருந்த அந்நாட்டின் ஒரு பகுதியான கீ வெஸ்ட் வரை இணைப்புச் சாலை அமைத்தால் ஏராளமான தொழில் வளங்கள் குவிந்திருந்ததை ஹென்றி மோரிசான் ஃப்லாகர் கண்டுபிடித்தார்.
மீன்பிடி தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களால் அப்பகுதி எப்போதும் பரபரப்பாகக் காணப்பட்ட பகுதியாகவே இருந்தது. (1900ம் ஆண்டு வரை கீ வெஸ்ட் நகரம் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகமாக இருந்த போதிலும், அங்கிருந்து வடபகுதிகளுக்கு பொருட்களை அனுப்புவது மிகப்பெரும் செலவு பிடிக்கும் நிலையில் இருந்தது.)
இதனால் கீ வெஸ்ட் வரை ரயில் பாதையை நீட்டிக்க முடிவெடுத்த ஹென்றி மோரிசான் ஃப்லாகர், அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டார். ஆனால், அவ்வளவு தொலைவுக்கு கடல் வழியாக ரயில் பாதையை அமைப்பது சாத்தியமற்ற பணிகள் என பலரால் விமர்சிக்கப்பட்டது. ஹென்றி மோரிசான் ஃப்லாகரைப் பற்றி எதிர்மறையாக விமர்சனம் செய்து வந்தவர்கள், இத்திட்டத்தை 'ஹென்றியின் முட்டாள்தனம்' என்றே கூறினர்.
இருப்பினும் கட்டுமானப் பணிகளை முடுக்கிவிட்ட ஹென்றி ஃப்லாகர், தொடர்ந்து அப்பணிகளை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்தினார். இப்பணிகளின் போது 1905 முதல் 1912ம் ஆண்டு வரை மூன்று முறை பெரும் புயல் மற்றும் சூறாவளி தாக்கியதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட 100 பேர் உயிரிழந்தனர்.
இருப்பினும் அவர் தைரியமான இப்பணிகளை மேற்கொண்டார். இப்பணிகளை முடிக்க 7 ஆண்டுகள் ஆன நிலையில் இதற்காக அப்போது 50 மில்லியன் (தற்போதைய மதிப்பில் 156 கோடி டாலர்)டாலர் தொகை செலவிடப்பட்டது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், பஹாமியர்கள் மற்றும் ஐரோப்பாவிலிருந்து குடியேறிய 400 பேர் இந்த ரயில் பாதை கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாம்புகள், தேள்கள், கடல் பல்லிகள் போன்ற ஆபத்து மிக்க ஜந்துகளுடன் இணைந்து பயணித்து இப்பணிகளை முடிக்கும் நிலை காணப்பட்டது.
1912ல் இந்த ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்ட போது, அது உலகின் எட்டாவது அதிசயம் என்றே வர்ணிக்கப்பட்டது. இந்த பாதையில் முதன்முதலாகப் பயணித்த ரயில், மரங்களை எரித்து அதன் மூலம் கிடைத்த வெப்பத்தைப் பயன்படுத்தி இயக்கப்பட்டது. அந்த ரயிலில் ஒரு சிறப்பு கோச்சில் பயணம் செய்து கீ வெஸ்ட்டில் முதன்முதலாகக் கால் பதித்த 82 வயது ஹென்றி மோரிசான் ஃப்லாகர் அவரது நண்பரிடம் சொன்னார், "எனது கனவு நனவாகிவிட்டது. நான் மிகுந்த மனநிறைவுடன் இருக்கிறேன். இப்போதே உயிரை விடவும் தயாராக இருக்கிறேன்!"

பட மூலாதாரம், State Archives of Florida / Florida Memory/Alamy)
"ஹென்றி மோரிசான் ஃப்லாகர் 30 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை தனது சொந்த நிதியிலிருந்து செலவழித்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றினார் என்பது எப்போதும் நினைத்துப்பார்க்கவேண்டிய விஷயம்," என்கிறார் வரலாற்று ஆசிரியரான ப்ராட் பெர்டெல்லி. "இன்றைய காலகட்டத்தில், ஜெஃப் பெசோஸ் அல்லது பில் கேட்ஸ் போன்றவர்களே இத்திட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கு நிதி ஒதுக்கும் நிலையில் இருக்கின்றனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய எலான் மஸ்க்கை வேண்டுமானால் ஹென்றி மோரிசான் ஃப்லாகருடன் ஒப்பிடக்கூடிய மிகச் சிறந்த ஒப்பீடாகக் கருதலாம்."
இந்த ரயில் பாதை 1935ம் ஆண்டு வரை வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அப்போது உருவான, நூறாண்டுகளில் இல்லாத மோசமான புயல் காரணமாக ரயில் பாதையின் பெரும் பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இந்த ரயில் பாதையை சீரமைப்பதற்குப் பதிலாக, இதன் மறு அவதாரமாக இதே பகுதியில் நெடுஞ்சாலையை அமைக்கும் பணிகளை அமெரிக்க அரசு 1938ம் ஆண்டு தொடங்கியது.
ஹென்றி மோரிசான் ஃப்லாகர் அமைத்திருந்த பாலங்களைப் பயன்படுத்தி உலகின் மிக நீளமான சாலையை அமைப்பதே இத்திட்டத்தின் நோக்கம். 325 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றடித்தாலும் தாங்கக்கூடிய வகையில் இருந்த அந்த பாலங்களைப் பயன்படுத்தி இப்பணிகளை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன் பின் கார் போன்ற வாகனங்கள் பயணிக்கும் வகையில் இந்தச் சாலை அமைக்கப்பட்டது.
மிகவும் தொலைவில் இருந்து, கடினமான பயணங்களின் மூலம் மட்டுமே சென்று சேரக்கூடிய வகையில் இருந்த கீ வெஸ்ட், தற்போது எளிமையாக கடந்து செல்லும் பாதையில் பயணித்தாலே அங்கே போய்ச்சேர முடியும் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது. மேலும் தற்போது கீ வெஸ்ட் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகவும் மாறியுள்ளது.
ரயில் பாதை அமைக்கப்பட்டு நூறாண்டுகளைக் கடந்தும் அப்போது கட்டப்பட்ட 20 பாலங்கள் இன்றும் பயணிகளுக்குப் பயன் அளிக்கும் விதத்தில் இருக்கின்றன என்பதே ஆச்சரியமளிக்கும் விஷயமாக இருக்கிறது. இந்த பாதை மூலம் ஒருவர் 4 மணிநேரப் பயணத்தில் கீ வெஸ்ட் நகரை அடையமுடியும். அதே நேரத்தில் இந்த சாலையில் சென்றுவிட்டுத் திரும்புவதே ஒரு முழுமையான சுற்றுலா அனுபவத்தை அளிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்த பாதை முழுவதும் பல இடங்களில் வண்டியை நிறுத்தி மீண்டும் பயணம் செய்யும் வகையில் மிகவும் அருமையான சாலையாக இது உள்ளது.
மையாமியிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் போது, 111வது கிலோ மீட்டரில் கீ லார்கோ என்ற நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பாதையை அமைத்த போது, பாம்பு உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் பெரும் ஆபத்துக்களாக இருந்திருக்கும் என்றாலும், தற்போது மிக எளிதாக இப்பகுதிக்கு யாரும் வந்து செல்ல முடிகிறது. இந்த கீ லார்கோதான் உலகின் மிகமுக்கிய 'டைவிங் ஸ்பாட்டாக' உள்ளது. இங்கே உள்ள கடல் வளங்களைக் காண்பதே ஒரு அளப்பரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இப்பகுதியில் அமைந்துள்ள பவளப்பாறைகளும், இயற்கை வளங்களும், இப்பகுதியை சொர்க்க பூமியாக மாற்றியுள்ளன.
கடல் ஆமைகள், விதவிதமான மீன்கள், கடல் பசுக்கள் என ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இங்கே இயற்கையாகவே அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன. ஆனால், கடந்த 1965ம் ஆண்டு தண்ணீருக்குள் மூழ்கிவைக்கப்பட்ட 9 அடி உயர ஏசுநாதரின் சிலை இருக்கும் பகுதிக்கு நீந்திச் செல்வது தான் இங்கு அனைவரையும் கவரும் அம்சமாக உள்ளது.

பட மூலாதாரம், Jeffrey Isaac Greenberg 8+/Alamy
நீங்கள் அனைத்தையும் பார்த்து ரசித்த பின், மையாமி மற்றும் கீ வெஸ்ட் நகரங்களுக்கு இடையே பாதி தொலைவில் உள்ள இஸ்லாமொராடாவுக்குச் செல்லுங்கள். அங்கே கீ வெஸ்ட் சாலையின் வரலாறு மற்றும் பல்வேறு தகவல்கள் அடங்கிய 35 நிமிட செய்திப் படம் உங்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். கீ வெஸ்ட் நகருக்கு ரயில் பாதை அமைத்தபோது எதிர்கொண்ட தடைகள், இடையூறுகள் மற்றும் பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ளலாம். அங்குள்ள அருங்காட்சியகத்தில் இந்த ரயில் பாதை, ஒரு காலத்தில் வளம் கொழித்த போக்குவரத்து திட்டமாக இருந்த வரலாற்றைப் பற்றிய தகவல்களை உங்கள் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும். மிகக்குறைந்த விலையில் உணவுப் பொருட்களும் அங்கே கிடைக்கும்.
இங்கே இஸ்லமொராடாவிலிருந்து தெற்கில் சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் 1908 முதல் 1912ம் ஆண்டு வரை 400 தொழிலாளர்கள் வசித்துவந்தனர். அவர்கள் தான் அந்த ரயில் பாதையின் கடினமான கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்கள். இரண்டு பகுதிகளை இணைக்கும் சுமார் 13 கிலோ மீட்டர் நீளமுள்ள பாலம் அப்போது தான் அமைக்கப்பட்டது.
1909ம் ஆண்டு கட்டட பொறியாளர் வில்லியம் ஜே க்ரோம், சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவுக்கான பாதையை நடுக்கடலில் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். கட்டுமானத் தொழிலாளர்கள் 24 மணிநேரமும் பணியாற்றினர். 700க்கும் மேற்பட்ட தூண்கள் அப்போது நிறுவப்பட்டன. சில பகுதிகளில் கடல் நீருக்குள் 30 அடி ஆழத்தில் பணிகள் நடைபெற்றன. ரயில் பாதையின் சுமையைச் சுமக்கும் அளவுக்கான கட்டுமானங்களை உருவாக்க கடல் நீருக்குள் மூழ்கிப் பணியாற்றும் தேவையும் அப்போது பெரிய அளவில் இருந்தது.
மராத்தானிலிருந்து பீஜியன் கீ வரை பயணம் மேற்கொண்டால், தற்போது மிஞ்சியிருக்கும் பழைய கட்டுமானங்களை நாம் காணமுடியும். இப்பகுதிக்குச் செல்லும் பாதை 44 மில்லியன் டாலர் செலவில் புதுப்பிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரியில் தான் திறக்கப்பட்டது.
ஒரு காலத்தில் மிக மோசமாக அழிந்துவிட்ட பகுதியாக கருதப்பட்ட இப்பகுதி தற்போது அனைவரும் எளிதில் சென்றடையும் விதத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கண்ணாடி போல் தெரியும் கடல் நீருக்கு கீழே கடல் ஆமைகள் உள்ளிட்ட கண்களுக்கு விருந்தளிக்கும் ஏராளமான காட்சிகள் புதைந்து கிடக்கின்றன.
பீஜியன் கீயில் தற்போதைய நிலையில், நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் நான்கு பேர் மட்டுமே. ஐந்து ஏக்கர் பரப்பளவுள்ள இத்தீவில், முழுக்க முழுக்க சூரிய மின்னாற்றல் பயன்படுத்தப்படுகிறது. 11 கிலோ மீட்டர் தொலைவுக்கான பாலத்தைக் கட்டியவர்கள் குடியிருந்த வீடுகள் தற்போது ஒரு அருங்காட்சியகமாக மாறியுள்ளன. அங்கே ஏராளமான விஷயங்களை அறிந்துகொள்ளலாம்.

பட மூலாதாரம், FL Stock/Alamy
இந்த ஓவர்சீஸ் நெடுஞ்சாலையில் முழுமையாகப் பயணிக்க விரும்புவர்கள், தற்போது கீ வெஸ்ட் நகரில் உள்ள உள்ள முதல் மைல்கல் வரை பயணம் செய்யவேண்டும். இப்பகுதிக்கு வந்துவிட்டால், க்யூபாவிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவிலும், மையாமியிலிருந்து வடக்கே சுமார் 212 கிலோ மீட்டர் தொலைவிலும் இருப்பார்கள்.
ஆனால் கீ வெஸ்ட் நகரின் முக்கிய பகுதியான துவால் தெருவுக்கு அல்லது 'ஏர்னெஸ்ட் ஹைவே ஹோம் அண்டு மியூசியத்துக்கு' பெரும்பாலான பயணிகள் முதலில் செல்கின்றனர். இங்கே, சிறிதாக இருந்தாலும் ஏராளமான விஷயங்களை நமக்கு அளிக்கும் 'செய்ல்ஸ் டூ ரெயில்ஸ்' என்ற அருங்காட்சியகம் மிக முக்கியமான ஒன்றாகும்.
இந்த அருங்காட்சியகத்தில் கீ வெஸ்ட்டின் 500 ஆண்டு கால வரலாறு குறித்த தகவல்கள் உள்ளன. ஒரு காலத்தில் கொள்ளையர்களின் புகலிடமாக விளங்கிய 18 சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இத்தீவு, எப்படி படிப்படியாக பல மாற்றங்களை எதிர்கொண்டு ஒரு மிக முக்கிய சுற்றுலாத் தலமாக, ஒரு வர்த்தகத் தலமாக, தற்போதைய நிலைக்கு உயர்ந்தது என்ற வரலாற்றை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
இங்கே ரயில் பாதை அமைக்கப்பட்ட போது, தொழிலாளர்களுக்கு ஊதியம் தருவதற்காக ஒரு மொபைல் வங்கியாகச் செயல்பட்ட காரையும் காணமுடியும். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த தொழில் நுட்பங்களை வைத்துக்கொண்டு, எத்தனை சிரமங்களைக் கடந்து, நவீன உலகின் எட்டாம் அதிசயமான அந்த ரயில் பாதை அமைக்கப்பட்டது என்பதையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
ஃப்ளோரிடாவின் தந்தை ஹென்றி மோரிசான் ஃப்லாகர்
"ஃப்ளோரிடா கீஸ் குறித்த வரலாற்றில் ஒரே ஒரு முக்கிய விஷயத்தை மட்டும் நான் தனியாகச் சொல்லவேண்டுமானால், அது ஹென்றி மோரிசான் ஃப்லாகர் இந்த ரயில் பாதை திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதே ஆகும்," என்கிறார், நூலாசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான டாக்டர் கோரி கன்வெர்ட்டிட்டோ. "அவருடைய தொலைநோக்குப் பார்வை, இலட்சியம், தொழில் ஆர்வம் போன்ற காரணங்களாலேயே ஃப்ளோரிடா கீஸ் முதன்முறையாக அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
இத்தீவுக்கு வரும் பயணிகளின் சிரமங்கள், பயணச் செலவைக் குறைத்ததன் பின்னணியில் இந்த ரயில் பாதைத் திட்டம் மட்டுமே உள்ளது என்றால் அது மிகையாகாது. இன்று இத்தனை பேர் இத் தீவினால் பயன் அடைகின்றனர் என்றால், அதில் எப்போதும் அந்த ரயில் பாதை திட்டத்துக்கு முழுப்பங்கு உண்டு."
அதனால் தான், ஹென்றி மோரிசான் ஃப்லாகர், 'ஃப்ளோரிடாவின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












