நிலா யாருக்குச் சொந்தம்? - சுவாரஸ்யமான வரலாறு

பட மூலாதாரம், Getty Images
1960.
அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போர் உலகையே உஷ்ணமாக்கிக் கொண்டிருந்த காலகட்டம்.
சர்வதேச அரசியலில் யாருடைய கை ஓங்கியிருக்கிறது, மற்ற நாடுகள் யார் பக்கம் நிற்கின்றன என்பதாக இருந்த இறுக்கம் இரண்டு முக்கிய வழிகளில் போட்டியாக வெளிப்பட்டது.
1) அணு ஆயுதங்களை உருவக்குவது.
2) விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேறுவது.
இவற்றில் இரண்டாவது, இப்பனிப்போரை கண்டங்கள் தாண்டி மட்டுமல்ல, பூமியையே தாண்டிக் கொண்டு சென்றது.
இப்போட்டியால், பல வானியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மட்டுமல்ல, பல சுவாரசியமன நிகழ்வுகளும் நடந்தன.
அவற்றில் ஒன்று தான் ‘நிலவு யாருக்குச் சொந்தம்?’ எனும் கேள்வி.
நிலவில் முதலில் தரையிறங்கும் போட்டியில், அமெரிக்காவை முந்திய சோவியத் யூனியன்

பட மூலாதாரம், Getty Images
விண்வெளி ஆராய்ச்சியில் எப்போதும் போலவே அப்போதும் மிகவும் கவர்ச்சிகரமான விஷயமாக இருந்தது நிலவைப் பற்றி ஆராய்ச்சி செய்வது.
அப்போது அமெரிக்காவும் சோவியத் யூனியனும் நிலவில் யார் முதலில் தரையிறங்குவது என்று கடும் போட்டியில் ஈடுபட்டிருந்தன.
அதுவரை நிலவுக்குச் செயற்கைக்கோள்கள் அனுப்ப அமெரிக்கா எடுத்தப் பல முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்திருந்தன.
இந்நிலையில்தான் சோவியத் யூனியன் 1950களின் இறுதியிலிருந்து 1960களின் மத்திவரை நிலவுக்குச் செயற்கைக்கோள்கள் அனுப்புவதில் சில வெற்றிகள் கண்டது.
1959-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சோவியத்தின் லூனா-2 (Luna-2) என்ற செயற்கைக்கோள், முதன்முதலில் நிலவின் பரப்பினைத் தீண்டியது.
அதன்பின், அதே ஆண்டு அக்டோபர் மாதம், லூனா-3 (Luna-3) என்ற சோவியத் செயற்கைக்கோள் நிலவுக்கு அருகில் சென்று, அங்கிருந்து அதனை முதன்முதலில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது.
இதற்கடுத்து, 1966-ம் ஆண்டு பிப்ரவரி , சோவியத் அனுப்பிய மற்றொரு செயற்கைக்கோளான லூனா-9 (Luna-9) முதன்முதலில் நிலவில் தரையுறங்கியது.
இதற்கு நான்கு மாதங்கள் கழித்தே அமெரிக்காவின் சர்வேயர்-1 (Surveyor-1) எனும் செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்கியது.
நிலவைச் சொந்தம் கொண்டாடுவது குறித்த பதற்றங்கள்
இந்நிலையில் தான் அமெரிக்கா உட்பட உலக நாடுகளுக்கு ஒரு பதற்றம் ஏற்பட்டதாகக் கூறுகிறார், இந்த வரலாற்றைப் பற்றி பிபிசியிடம் பேசிய விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.
இதற்குக் காரணம், காலனியாதிக்கக் காலத்தில், ஒரு நிலப்பகுதியை முதலில் கண்டுபிடிப்பவர்களே அதற்கு உரிமையாளர்கள் (Finders Keepers) எனும் எழுதப்படாத விதி கடைப்பிடிக்கப்படது. “இதனால், நிலவில் முதலில் தரையிறங்கிய சோவியத் யூனியன் நிலவுக்குச் சொந்தம் கொண்டாடிவிட்டால் என்ன செய்வது என்று அமெரிக்கா பதற்றப்பட்டது,” என்கிறார் வெங்கடேஸ்வரன்.
‘நிலா ஒப்பந்தம்’ என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணவே, உலக நாடுகள் சபை ‘நிலா ஒப்பந்தம்’ (Moon Treaty) என்ற ஒரு ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தது.
மொத்தம் 21 பிரிவுகள் கொண்ட இந்த ஒப்பந்ததின் அடிநாதம் அதன் 11-வது பிரிவின் முதல் இரண்டு ஷரத்துக்கள்.
முதல் ஷரத்து, “நிலவும் அதன் இயற்கை வளங்களும் மனிதகுலத்தின் பொதுச்சொத்து,” (The moon and its natural resources are the common heritage of mankind,) என்று சொல்கிறது.
இரண்டாவது, “நிலவு எந்த ஒரு நாட்டின் பாத்தியதைக்கும் உட்பட்டதல்ல, எந்த ஒரு நாடும் நிலவில் குடியேறுவதன் மூலமோ வேறு வகையிலோ, அங்கு தமது இறையாண்மையைச் செலுத்த முடியாது,” என்று சொல்கிறது. (The moon is not subject to national appropriation by any claim of sovereignty, by means of use or occupation, or by any other means.)
இந்த ஒப்பந்தம், 1972-ம் ஆண்டிலிடுந்து 1979-ம் ஆண்டுவரை விவாதிக்கப்பட்டு, 1979-ம் ஆண்டு நியூயார்கில் கையெழுத்தானது. ஆனால் இது செயல்படுத்தப்பட ஐந்து நாடுகளின் ஒப்புதல் தேவைப்பட்டது.
சீலே, பிலிப்பைன்ஸ், உருகுவே, நெதர்லாந்து ஆகியவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், 1984-ம் ஆண்டு ஆஸ்திரியா ஒப்புதல் வழங்கியபின் அது அமலுக்கு வந்தது, என்கிறது உலக நாடுகள் சபையின் விண்வெளி விவகாரங்களுக்கான அலுவலகம்.
ஆனால், நிலவுக்கு ஆட்களுடன்கூடிய செயற்கைக்கோள்களை அனுப்பும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை இன்னும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
ஆர்டெமிஸ்: நிலவுக்கு மனிதர்கள் செல்வதன் அடுத்த கட்டம்

பட மூலாதாரம், NASA
1960கள் 1970களில் நிலவில் மனிதர்கள் நடந்தபின், தற்போது மீண்டும் வல்லரசு நாடுகள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகள் துவங்கியுள்ளன.
அவற்றில் முதன்மையானது, அமெரிக்கா முன்னெடுத்துள்ள சர்வதேசத் திட்டமான ஆர்டெமிஸ் (Artemis) திட்டம். இத்திட்டத்தை அமெரிக்கா, கனடா, ஜப்பான், மற்றும் ஐரோப்பாவின் விண்வெளி முகமைகளுடன் இணைந்து செயல்படுத்துகிறது. இதன் முதல் கட்டம் 2022-ம் ஆண்டு ஏவப்பட்டது, இரண்டாம் கட்டம் 2024-ம் ஆண்டு ஏவப்படவுள்ளது.
இத்திட்டத்தின் பிரதான நோக்கம், நிலவில் மனிதர்களில் தொடர்ந்த இருப்பை உறுதிப்படுத்துவதும், செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல நிலவினை ஏவுதளமாகப் பயன்படுத்துவதும் ஆகும்.
ஆனால், நிலவில் மனிதர்களை தரையிறக்கும் இத்திட்டத்திற்கு, நாசா ஈலோன் மஸ்க்கின் Space X நிறுவனத்தின் Starship ராக்கெட்டைப் பயன்படுத்த முடெவடுத்து அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் Blue Origin மற்றும் Dynetics ஆகிய இரு அமெரிக்க நிறுவனங்களுடனும் இதற்காக ஒப்பந்தம் செய்திருக்கிறது.
'தனியார்' மயமாகிறதா நிலவு?

பட மூலாதாரம், Getty Images
ஆர்டெமிஸ் திட்டம், நிலா ஒப்பந்தத்தை மீறாமல், ஆனால் அதனைச் சுற்றிவளைக்கும் ஒரு போக்கு என்ற கவலைகளும் எழுந்துள்ளன.
நாடுகள் தான் நிலவில் தமது இறையாண்மையைச் செலுத்தக்கூடாது, ஆனால் SpaceX போன்ற தனியார் நிறுவனங்களை இணைத்துக்கொள்வதன்மூலம், கடந்த காலத்தின் கிழக்கிந்தியக் கம்பெனிகள் நாடுகளை ஆண்டதுபோல், தனியார் நிறுவங்கள் நிலவில் ஆதிக்கம் செலுத்த வழிவகை செய்யப்படும் என்ற கவலைகள் எழுந்துள்ளதாகக் கூறுகிறார் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன்.
அமெரிக்கா இதனை மறுத்தாலும், இத்திட்டம் பல நெறிமுறை சார்ந்த கேள்விகளை எழுப்புவதாகச் சொல்கிறார் வெங்கடேஸ்வரன்.
“உதாரணமாக, ஒரு தனியார் நிறுவனம் நிலவுக்கு மனிதர்களைக் கொண்டு சென்றபிறகு, அங்கு ஒரு பணியாளருக்கும் நிறுவனத்திற்கும் பிணக்கு ஏற்பட்டு அவர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், நிறுவனத்தின் ஆதரவின்றி அவர் என்ன செய்வார்?” என்கிறார்.
மேலும், இதுபோன்ற ஆய்வுகள் கூடவே கூடாது என்பதல்ல, அவை செயல்படுத்தப்படும் முறைதான் முக்கியம், என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












