ஹரியாணா: முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள் - தாக்கப்பட்ட மசூதிக்குள் பெண்களை பாதுகாத்தது எப்படி?

முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
படக்குறிப்பு, சோஹ்னாவின் ஜமா மசூதி
    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர், சோஹ்னாவிலிருந்து
  • ஹரியாணாவில் உள்ள நூஹ் நகரில் ஜூலை 31 ஆம் தேதி ஒரு சமய யாத்திரைக்கு பஜ்ரங் தளம் ஏற்பாடு செய்தது.
  • ஆயிரக்கணக்கான பஜ்ரங்தள தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்றனர்.
  • நூஹ்வில் உள்ள கோவிலில் இருந்து யாத்திரை புறப்பட்ட சிறிது நேரத்தில் கல் வீச்சு தொடங்கியது. அதன் பின்னர் தீயிடலும் ஆரம்பமானது.
  • வன்முறை கும்பல், நகரின் தெருக்களிலும் கோவிலுக்கு வெளியேயும் துப்பாக்கிகளால் சுடத்தொடங்கியது.
  • ஏராளமான மக்கள் கோயிலில் சிக்கிக்கொண்டனர். நிர்வாகத்தின் உதவியுடன் அவர்கள் மாலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
  • நூஹ்விலிருந்து தொடங்கிய வன்முறைக்குப் பிறகு உருவான பதற்றம் மாலைக்குள் ஹரியாணாவின் சோஹ்னா மற்றும் குருகிராம் ஆகிய இடங்களை அடைந்தது.
  • இந்த வன்முறையில் இதுவரை இரண்டு ஊர்க்காவல் படையினர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • நூஹ் வன்முறைக்குப் பதிலடியாக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
  • பெரும் எண்ணிக்கையில் மக்களை போலீசார் கைது செய்துள்ளனர். நூஹ்வின் பல பகுதிகளில் புல்டோசர்கள் மூலம் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
  • நூஹ்வில் ஆகஸ்ட் 8ம் தேதி வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
படக்குறிப்பு, மசூதியின் இமாம் கலீம் காஷ்ஃபியின் குடும்பத்தினர் அருகில் உள்ள கிராமங்களில் தஞ்சமடைந்துள்ளனர்

ஜூலை 31 ஆம் தேதி ஹரியாணா மாநிலம் நூஹ் பகுதியில் நேரிட்ட வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது.

இங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோஹ்னாவிலும் நிலைமை பதற்றமாக இருந்தது.

நகரின் மிகப் பெரிய மசூதியும், இந்த வட்டாரத்தில் உள்ள மிகப்பழமையான மசூதிகளில் ஒன்றுமான ஷாஹி ஜமா மசூதியின் இமாம் கலீம் காஷ்ஃபிக்கு, ஏதோ நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வு ஏற்பட்டது.

ஆனால் தனது குடும்பம் பல தசாப்தங்களாக வாழும் பகுதியில் தங்களுக்கு ஏதாவது நடக்கக்கூடும் என்பதை நம்புவதற்கு அவரது இதயம் தயாராக இல்லை.

நூஹ்வின் நிகழ்வுகளுக்குப் பிறகு கலீம் காஷ்ஃபி எச்சரிக்கையானார். சில நாட்களுக்கு வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு சுற்றியிருந்தவர்களும் அறிவுறுத்தினர்.

ஆனால் ஆகஸ்ட் 1 ஆம் தேதி சோஹ்னாவில் அமைதிக் குழுவின் (பல்வேறு மதங்களின் தலைவர்கள் மற்றும் காவல்துறை நிர்வாகத்தின் தலைவர்கள் அடங்கிய குழு) கூட்டம் நடைபெற்றது. நகரத்தில் சகோதரத்துவத்தை பராமரிக்க ஒன்றிணைந்து செயல்பட அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இமாம் கலீம் காஷ்ஃபியின் குடும்பத்தை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்ப வேண்டும் என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிராந்திய கவுன்ஸிலரின் கணவர் குர்வச்சன் சிங் முன்பே எச்சரித்திருந்தார்.

ஆனால் 'இப்போது நிலைமை மேம்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன' என்று கூட்டத்திற்குப்பிறகு கலீம் காஷ்ஃபியிடம் அவர் கூறினார்.

முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
படக்குறிப்பு, தாக்குதலில் சேதமடைந்த வாகனம்.

கும்பல் மசூதியைத் தாக்கிய போது நடந்தது என்ன?

இமாம் மற்றும் அவரது சகோதரர்களின் குடும்பங்கள் ஷாஹி மசூதி வளாகத்தின் ஒரு பகுதியில் வசிக்கின்றன.

நூஹ்வில் நடந்த சம்பவத்தையடுத்து மசூதியின் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

“நிர்வாகமும் சுற்றியிருந்த மக்களும் எங்களுடைய பாதுகாப்பிற்கு உறுதியளித்தனர். போலீஸாரும் அங்கே இருந்ததால் எங்கள் பயத்தை ஒதுக்கிவிட்டு நாங்கள் குடும்பத்துடன் இங்கே தொடர்ந்து இருந்தோம்,” என்று கலீம் காஷ்ஃபி கூறினார்.

சோஹ்னாவில் குறைந்த அளவு முஸ்லிம்களே உள்ளனர். ஷாஹி ஜமா மசூதியைச் சுற்றி முஸ்லிம்களின் சில வீடுகளே உள்ளன.

மசூதியின் இமாமின் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 40 பேரைத் தவிர அக்கம்பக்கத்தில் ஒரு சில முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர்.

ஷாஹி ஜமா மசூதியின் சரியான வரலாறு கிடைப்பதற்கு இல்லை. ஆனால் கட்டிடத்தைப் பார்த்தால், இந்த மசூதி பல நூற்றாண்டுகள் பழமையானது என்று தெரிகிறது.

முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
படக்குறிப்பு, மசூதி தாக்கப்பட்டபோது அங்கு சிக்கியிருந்தவர்களைக் காப்பாற்ற சீக்கியர்கள் வந்தனர் என்கிறார் குர்வச்சன் சிங்.

இந்த மசூதி பேரரசர் அலாவுதீன் கில்ஜியின் உத்தரவின் பேரில் கட்டப்பட்டது என்று இமாம் கலீம் காஷ்ஃபி தெரிவிக்கிறார்.

மூன்று பெரிய குவிமாடங்கள் கொண்ட இந்த மசூதி உயரமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

அதன் ஒரு பக்கத்தில் பன்னிரெண்டு தூண்களைக் கொண்ட ஒரு பெரிய குவிமாடம் மற்றும் அதை ஒட்டி கல்லறை போன்ற ஒரு கட்டிடம் உள்ளது. அதில் இமாமும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இப்போது வசிக்கின்றனர்.

செவ்வாய்கிழமை மதியம் சுமார் ஒரு மணியளவில் இமாம் காஷ்ஃபிக்கு, மசூதி தாக்கப்படலாம் என்ற தகவல் வர ஆரம்பித்தது.

அவர் தனது குடும்பத்தினரை அறைகளில் பூட்டி வைத்தார்.

மதியம் ஒரு மணியளவில் சில இளைஞர்கள் மசூதிக்குள் நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர்.

“இரண்டு மூன்று இளைஞர்கள் மசூதியின் சுவரைத் தாண்டி குதித்து உள்ளே வந்தபோது போலீஸார் அவர்களை விரட்டியடித்தனர். இது குறித்து உடனடியாக உள்ளூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தோம். காவல் நிலைய உயர் அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து மசூதியைத் தாக்க வந்த இளைஞர்களின் சிறிய குழுவை விரட்டியடித்தார்,” என்று கலீம் காஷ்ஃபி தெரிவித்தார்.

முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
படக்குறிப்பு, சோஹ்னாவின் ஜமா மசூதி.

“ஆனால் சில நிமிடங்களுக்குப்பிறகு ஒரு பெரிய கூட்டம் மறுபக்கத்திலிருந்து மசூதியைத் தாக்கியது. போலீஸாரால் எதுவுமே செய்ய முடியவில்லை.”

இளைஞர்கள் கூட்டம் முன்னோக்கி நகர்ந்தபோது மசூதி வளாகத்தில் காஷ்ஃபியின் சகோதரரின் மகன் சாதிக் இருந்தார்.

கூட்டத்தை பார்த்ததும் அவர் குடியிருப்பு பகுதியின் கதவை மூடிவிட்டார். கும்பல் தாக்குவதை தனது வீட்டின் சமையலறையில் போடப்பட்டிருந்த வலை ஜன்னல் வழியாக அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

“வீட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டோம். தாக்குபவர்கள் அவர்களைப் பார்க்க முடியாதபடி உள்ளே இருந்து கதவை மூடி அவர்களை குவிமாடத்தின் மேல் ஒளித்து வைத்தோம். உள்ளே யாரும் இல்லை என்று கூட்டம் நினைக்கும் வகையில் வெளியில் இருந்து கதவைப் பூட்டிவிட்டோம்” என்று சாதிக் தெரிவித்தார்.

முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
படக்குறிப்பு, தாக்குதலுக்குப் பிறகு சாதிக் அலுவலகம் செல்வதில்லை

மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலின் ஒரு சிறிய வீடியோவையும் சாதிக் எடுத்தார். தாக்குதல் நடத்தியவர்கள் கைகளில் ஆயுதங்களுடன் மசூதியை சேதப்படுத்துவதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

இதற்குள் இமாம் மற்றும் அவரது குடும்பத்தினர் மசூதியில் சிக்கியுள்ள செய்தி உள்ளூர் கவுன்ஸிலரின் கணவர் குர்வச்சன் சிங்குக்கு தெரியவந்தது.

அவர் உடனே அருகிலிருந்த சீக்கிய இளைஞர்களை திரட்டி மசூதியை நோக்கிச் சென்றார்.

'உயிர்களைக் காப்பாற்றுவது எங்கள் மிகப்பெரிய கடமை'

“உள்ளூர் போலீஸார் கலவரக்காரர்களின் கும்பலை கலைக்க முயன்றனர். ஆனால் போலீஸாரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. நாங்கள் முன்னேறிச் செல்வதைப் பார்த்து போலீஸாரும் உற்சாகமடைந்தனர். நாங்கள் மசூதி வளாகத்திற்குள் நுழைவதற்குள், கலவரக்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர்,” என்று குர்வச்சன் விளக்கினார்.

“நாங்கள் போலீஸாருடன் சேர்ந்து இமாம் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றோம். இமாம் எங்களுடன் இருக்க விரும்பினால் அவர் தாராளமாகத் தங்கலாம் என்று கூறினோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது குர்வச்சன் சிங்கிற்கு பயம் ஏற்பட்டதா?

இந்தக்கேள்விக்கு பதிலளித்த அவர், “உயிர்களைக் காப்பாற்றுவது எங்கள் மிகப்பெரிய கடமை. சிறு வயதிலிருந்தே இமாமையும் அவரது குடும்பத்தினரையும் எங்களுக்குத் தெரியும். நாங்கள் எங்கள் கடமையைச் செய்தோம்,” என்றார்.

மசூதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கணிசமான எண்ணிக்கையில் சீக்கியர்கள் வாழ்கின்றனர். இங்கு சுமார் 300 சீக்கிய குடும்பங்களும் ஒரு பெரிய குருத்வாராவும் உள்ளது.

“முஸ்லிம் சகோதரர்களின் உயிருக்கு ஆபத்து என்பதால் இங்குள்ள சீக்கியர்கள் அவர்களுக்கு உதவச் சென்றனர். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமில்லை. அவர்களின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே முக்கியம்,” என்று தனது பெயர் வெளியிடப்படக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஒரு சீக்கியர் தெரிவித்தார்.

முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்

இந்த சம்பவத்தை உறுதி செய்த சாதிக், “கலவரக்காரர்களை போலீசார் துரத்திக் கொண்டிருந்த போது, அருகில் வசிக்கும் சீக்கியர்கள் இங்கு வந்து எங்களின் நலம் விசாரித்தனர். யாருக்கும் காயம் ஏதும் இல்லையே என்று வினவினர். எங்காவது செல்ல விரும்பினால் தங்கள் வாகனங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டனர். ஆனால் நிர்வாகம் பின்னர் பேருந்துக்கு ஏற்பாடு செய்தது. எனவே போலீஸாருடன் சேர்ந்து அவர்களும் எங்களுடன் பயணம் செய்து எங்கள் குடும்பத்தை பத்திரமான இடத்திற்கு அழைத்துச்சென்றனர்,” என்று குறிப்பிட்டார்.

“எங்கள் அண்டை அயலார் எங்களுடன் துணை நிற்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். தாக்குதலின் போது சீக்கிய சகோதரர்கள் இங்கு வந்தனர். பக்கத்தில் ராணுவ மருத்துவமனை உள்ளது. அங்கிருந்தவர்களும் எங்களிடம் வந்து எங்கள் நிலை குறித்துக் கேட்டறிந்தனர்,” என்று இமாம் கலீம் காஷ்ஃபி கூறினார்.

”கடந்த 50 ஆண்டுகளாக எங்கள் குடும்பம் இங்கு வசித்து வருகிறது. 1947 பிரிவினைக்குப் பிறகு இந்த மசூதி மூடிக் கிடந்தது. என் தாத்தா இங்கு வந்து அதைத் திறந்தார். 1992ல் கலவரம் நடந்தது ஆனால் இங்கு எதுவும் நடக்கவில்லை. பதற்றமான சூழ்நிலை முன்பும் பலமுறை ஏற்பட்டுள்ளது. ஆனால் எப்போதுமே மசூதி தாக்கப்பட்டதில்லை,” என்றார் அவர்.

இந்த தாக்குதலின் போது மசூதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் பிற வாகனங்களை கலவரக்காரர்கள் உடைத்தனர்.

மசூதியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குளிரூட்டிகள், நாற்காலிகள், மின்விசிறிகளும் உடைக்கப்பட்டன. தாக்குதலுக்குப் பிறகு மசூதி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதலின் தடயங்கள் இப்போதும் காணப்படுகின்றன.

பிரசங்க மேடை (இமாம் நின்று பிரசங்கம் செய்யும் இடம்) இடிந்து கிடக்கிறது.

மின் பலகைகள் பிடுங்கப்பட்டுள்ளன. வலுவான கதவுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மசூதியில் உள்ள கடிகாரம் தடியால் அடிக்கப்பட்ட அந்த நேரத்தில் நின்று போயுள்ளது. அது இப்போதும் மதியம் 1:30 மணியைத்தான் காட்டுகிறது.

முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
படக்குறிப்பு, சோஹ்னாவில் உள்ள குருத்வாரா.

’போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் விட்டிருந்தால் என்ன நடந்திருக்குமோ?’

“தாக்குதல் நடத்தியவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்தனர். எங்கள் வீட்டுப் பெண்கள் உள்ளே சிக்கியிருந்தனர். எல்லோரும் பயத்தில் இருந்தனர். நாங்கள் உள்ளே இருப்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தால் கதவை உடைக்கக்கூட அவர்கள் முயற்சித்திருப்பார்கள்,” என்று சாதிக் கூறுகிறார்.

சாதிக் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தாக்குதல் சமபவத்திற்குப்பிறகு அவர் அலுவலகத்திற்கு செல்லவில்லை.

அவர் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்கிறார்.

”இந்த தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு ஈடுசெய்யப்பட்டுவிடும். ஆனால் எங்கள் மனதில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவது அவ்வளவு எளிதல்ல” என்கிறார் சாதிக்.

சாதிக்கின் அத்தையின் மகன் சுஹைலும் அதே வளாகத்தில் வசிக்கிறார். அவர் குருகிராமில் வேலை செய்கிறார்.

தாக்குதலின் போது சுஹைலும் இங்கு இருந்தார். இப்போது அவர் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்.

“இந்த சம்பவத்தை மறப்பது அவ்வளவு எளிது அல்ல. போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கும்,” என்று சுஹைல் தெரிவித்தார்.

முஸ்லிம்களை காத்த சீக்கியர்கள்
படக்குறிப்பு, சாதிக்கின் அத்தையின் மகன் சுஹைல்.

"எனக்கு பல முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். அவர்கள் இப்போது குருகிராமில் இருந்து திரும்பிச்சென்றுவிட்டனர்," என்கிறார் அவர்.

ஜமா மசூதியில் தற்போது போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இங்கு தற்போது பதற்றமான அமைதி நிலவுகிறது.

இமாமின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் ஒரு கல்வி அமைப்பின் வளாகத்தில் தங்கியுள்ளனர்.

"கூடிய விரைவில் குடும்பத்துடன் வீடு திரும்ப நான் விரும்புகிறேன்," என்கிறார் கலீம் காஷ்ஃபி.

ஆனால் அவரது மனதில் இருந்து பயம் போகுமா?

“இந்த தாக்குதல் நாங்கள் நினைத்துப் பார்க்காத ஒன்று. மரணம் கண் முன்னே கடந்து செல்லும் போது பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் மசூதியை விட்டு எங்கே செல்வது? இந்தப் பாரம்பரியத்தை யாரிடம் ஒப்படைப்பது?,” என்று கலீம் வினவினார்.

இந்த தாக்குதல் தொடர்பாக குருகிராம் போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

“இப்போது நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கூறுகிறார் சோஹ்னாவின் காவல்துறை துணை ஆணையர் நவீன் சிந்து.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: