பறக்கும் முத்தம்: ராகுல்காந்தி மீது சபாநாயகரிடம் பெண் எம்.பி.க்கள் புகார் - என்ன நடந்தது?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், SANSAD TV

மணிப்பூருக்கு பிரதமர் ஏன் இன்னும் செல்லவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். சில நாள்களுக்கு முன்பு தாம் மணிப்பூருக்குச் சென்றதாகவும் ஆனால் பிரதமர் இன்னும் அங்கு செல்லவில்லை என்றும் கூறிய ராகுல் காந்தி, "அவர்களைப் பொறுத்தவரை மணிப்பூர் இந்தியாவின் அங்கம் இல்லை" என்றும் கூறினார்.

"மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள. மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம் இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்லர். துரோகிகள்" என்றார் ராகுல்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி பேசி முடித்ததும் பறக்கும் முத்தம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக சபாநாயகரிடம் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டது ஏன்?

நரேந்திர மோதி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். பதவி நீக்கம் ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு அவர் ஆற்றும் முதல் உரை இதுவாகும்.

"கடந்த ஆண்டு 130 நாட்கள் இந்தியாவின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு சென்றேன். தனியாக இல்லை, பலருடன் சென்றேன். யாத்திரையின் போது பலரும் என்னிடம் ராகுல் ஏன் நடக்கிறீர்கள், உங்கள் நோக்கம் என்ன என்று கேட்டனர். ஏன் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் செல்கிறீர்கள் என்று கேட்டனர்.

இந்தியாவைப் புரிந்து கொள்ள வேண்டும், மக்களைச் சந்திக்க வேண்டும் என்று அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். நான் ஆழமாக புரிந்து கொள்ள விரும்பினேன். தினமும் 10 கிலோமீட்டர் ஓடுவேன். அதனால் 25 கிலோமீட்டர் நடப்பதில் என்ன பெரிய விஷயம் என்று நினைத்தேன். பயணத்தின் போது விவசாயியின் கண்களில் இருந்த வலி, என் கண்களுக்குப் புலப்பட்டது." என்று ராகுல் காந்தி பேசினார்.

பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள் - ராகுல்

மேலும் தொடர்ந்த அவர், "இந்தியா ஒரு குரல். இந்தியா நமது மக்களின் குரல். இதயத்தின் குரல். அந்தக்குரலை நீங்கள் மணிப்பூரில் கொலை செய்துள்ளீர்கள். இந்தியத்தாயை நீங்கள் மணிப்பூரில் கொன்றுள்ளீர்கள்.

இந்திய தாயை, மணிப்பூர் மக்களை கொன்று நீங்கள் இந்தியாவை கொன்றுள்ளீர்கள். நீங்கள் தேச துரோகி. நீங்கள் தேச பக்தர் அல்ல. நாட்டை நேசிப்பவர் அல்ல. நீங்கள் தேச துரோகி. நீங்கள் நாட்டை மணிப்பூரில் கொன்றுள்ளீர்கள்.

சபாநாயகர் அவர்களே, இவர்கள் மணிப்பூரில் இந்தியாவை கொன்றுள்ளனர். இவர்களின் ஆட்சியில் மணிப்பூரை மட்டுமல்ல, இந்தியாவை கொன்றுள்ளனர். அரசியலில் மணிப்பூரை அல்ல, இந்தியாவை மணிப்பூரில் கொன்றுள்ளனர். இந்தியாவை கொன்றுள்ளனர். இந்தியாவை மர்டர் செய்துள்ளனர்." என்று கூறினார்.

"பிரதமர் மோதியைப் பொறுத்தவரை மணிப்பூர் என்பது இந்தியாவின் அங்கம் இல்லை" என்று பேசிய ராகுல் காந்தி, பிரதமர் ஏன் இன்னும் மணிப்பூருக்குச் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

"அதானி பற்றி பேசியதால் வருத்தம் இருக்கலாம்"

"நான் மணிப்பூர் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். ஆனால் இன்றைய உண்மை என்னவென்றால் மணிப்பூர் அழிந்துவிட்டது. மணிப்பூரை நீங்கள் இரண்டாக பிளவுபடுத்திவிட்டீர்கள். மணிப்பூரை பிரித்துவிட்டீர்கள். உடைத்துவிட்டீர்கள்.

சபாநாயகர் அவர்களே, என்னை மீண்டும் மக்களவை உறுப்பினராக பணியமர்த்தியதற்கு முதலில் நன்றிகூற விரும்புகிறேன். நான் கடந்த முறை பேசியபோது, நான் அதானி பற்றி வலுவாகப் பேசியதால் உங்களுக்கு கஷ்டம் ஏற்படுத்தியிருக்கலாம். உங்கள் உயர் தலைவரின் மனம் வருந்தியிருக்கக் கூடும்" என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி உரையாற்றிய போது மோதியும், அமித் ஷாவும் அவையில் இல்லை. எனினும் பாஜக உறுப்பினர்கள் ராகுலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி பேசி முடித்ததும் அவையில் இருந்து வெளியேறினார்.

ராகுலுக்கு ஸ்மிருதி இரானி பதில்

ஸ்மிருதி

பட மூலாதாரம், SANSAD TV

படக்குறிப்பு, ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ராகுல்காந்தி பறக்கும் முத்தம் கொடுத்தாரா?

ராகுல் பேசி முடித்ததும் அவருக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார். ஆனால் அப்போது அவையில் ராகுல் இல்லை.

இந்தியா எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகிறது என்று கூறிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இனியும் அப்படியே தொடரும் என்று தெரிவித்தார்.

சீக்கிய கலவரத்தையும் காஷ்மீர் பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறியதையும் குறிப்பிட்டு இரானி பேசினார்.

ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ஸ்மிருதி இரானி குறிப்பிட்டார். அப்போது திமுகவையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அத்துடன், "எனக்கு முன் பேசிய நபர் அவையில் இருந்து புறப்படும் முன் அநாகரீகமாக நடந்து கொண்டார். பெண் உறுப்பினர்கள் அமர்ந்துள்ள நாடாளுமன்றத்திற்கு பறக்கும் முத்தம் கொடுக்க ஒரு பெண் விரோதப் போக்கு கொண்ட ஆணால் மட்டுமே முடியும். இதுபோன்ற கண்ணியமற்ற நடத்தை, இந்த நாடாளுமன்றத்தில் இதற்கு முன் ஒருபோதும் நடந்ததே இல்லை" என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.

சபாநாயகரிடம் தே.ஜ.கூ. பெண் எம்.பி.க்கள் புகார்

நாடாளுமன்றத்திற்குள் ராகுல்காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டி ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் அநாகரிகமாக சைகை காட்டி, அவைக்குள் மோசமான நடத்தையை வெளிப்படுத்திய ராகுல்காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்பது என்ன?

நாடாளுமன்ற ஜனநாயகத்தில், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவையில் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே அரசு ஆட்சியில் இருக்க முடியும்.

அரசியலமைப்பின் 75(3) பிரிவின்படி, அமைச்சர்கள் குழு மக்களவைக்கு கூட்டாகப் பொறுப்பாகும். இந்தக் கூட்டுப் பொறுப்பை சோதிக்க மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்ற தனி விதி உள்ளது. இந்தத் தீர்மானம், மக்களவையில் அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதைச் சோதிப்பதற்காகப் பயன்படுகிறது.

50 எம்.பி.க்களின் ஆதரவைக் கொண்ட மக்களவை உறுப்பினர், எந்த நேரத்திலும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாம். இந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும். இதில் கட்சிகள் சார்பில் உறுப்பினர்கள் பேசுவார்கள்.

இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு சார்பில் பிரதமர் பதில் அளிப்பார்.

அதன் பிறகு மீது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர் அரசுக்கு எதிராக வாக்களித்தால், அரசு கவிழும்.

மோதி

பட மூலாதாரம், Getty Images

நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்காக மோதி அரசு கவலைப்பட வேண்டுமா?

மக்களவையில் பெரும்பான்மைக்கு 272 எம்பிக்கள் தேவை. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 331 எம்பிக்கள் உள்ளனர். பாஜகவுக்கு மட்டுமே 303 எம்பிக்கள் உள்ளனர். அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லாத அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் மோதி அரசைக் கவிழ்க்க முடியாது.

26 கட்சிகளின் “இந்தியா” கூட்டணிக்கு மக்களவையில் 144 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். பிஜேடி, பிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு 70 எம்பிக்கள் உள்ளனர்.

அரசு விவாவதத்தைத் தவிர்க்கும் ஒரு பிரச்னையில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் விவாதம் நடத்த விரும்பும்போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையும் அந்த வகையிலேயே நம்பிக்கையில்லாத் தீர்மானம் பயன்படுத்தப்படுகிறது.

அனைத்து எதிர்க்கட்சிகளும் எண்ணிக்கை அடிப்படையில் மோதி அரசைக் கவிழ்க்க முடியாது என்று அறிந்திருந்தாலும், பிரதமர் நரேந்திர மோதியை அவை பேசவைக்க வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை கையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: