தமிழ்நாடு காவல்துறையில் இந்துத்வா ஊடுருவலா? சென்னை, ஈரோட்டில் நடந்தது என்ன?

காவல்துறையில் இந்துத்வா ஊடுருவலா?

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ் அப் குழுமத்தில் மத துவேஷத்தோடு பேசிய சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஈரோட்டு புத்தகக் கண்காட்சியில் மதங்களை விமர்சிக்கும் புத்தகங்களுக்கான விளம்பரத்தை காவலர்கள் அகற்றச்சொல்லியிருக்கின்றனர். காவல்துறையில் என்ன நடக்கிறது?

சமீபத்தில் காவல்துறை தொடர்பாக நடந்த இரு நிகழ்வுகள், தமிழ்நாடு காவல்துறையின் மதம் சார்ந்த செயல்பாடுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. முதலாவதாக சென்னையில் நடந்த சம்பவத்தைப் பார்ப்போம்.

காவல் ஆய்வாளரின் மத துவேஷ பேச்சு

சென்னை புளியந்தோப்பு போக்குவரத்துக் காவல் நிலையத்தில், புலனாய்வுப் பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்துவருகிறார் பி. ராஜேந்திரன் என்பவர். ஓய்வுபெற்ற காவலர்கள், தற்போது பணியில் உள்ள காவலர்கள் இடம்பெற்றுள்ள ஒரு வாட்ஸப் குழுவில் இவரும் இருக்கிறார்.

அந்தக் குழுவில் சில நாட்களுக்கு முன்பாக கிறிஸ்டோபர் என்ற ஓய்வுபெற்ற ஆய்வாளர் புனித மரியன்னை குறித்த பாடல்களை பதிவுசெய்துள்ளார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஆய்வாளர் ராஜேந்திரன், மத துவேஷத்துடன் கருத்துகளை குரல் மூலம் பதிவுசெய்தார்.

அந்தக் குரல் பதிவில், "இது இந்திய நாடு. ராமஜென்ம பூமியில மசூதியை இடித்துவிட்டு கோவில் கட்டி வச்சிட்டு உட்கார்ந்துக்கிட்டிருக்கோம். ராமர் பிறந்த இடத்தில கோவில் கட்டி வச்சிட்டு உட்கார்ந்துக்கிட்டிருக்கோம். இது இந்திய நாடு. இந்தியாவில் உள்ளவர்கள்தான் கோவில்ல பூஜை பண்ணுவாங்க. கல்லு வைப்பாங்க...நாடாளுமன்றத்தில் செங்கோல் வாங்குவோம். உங்களால முடிஞ்சா தடுத்தி நிறுத்தி பாருங்களேன்பா.. கிறிஸ்துவர்னாலும், முஸ்லிம்னாலும் தடுத்தி நிறுத்திப் பாருங்களேன்... இங்கே முடியலையா.. பாகிஸ்தானுக்கோ, சவுதி பக்கம் போய் பண்ணிக்கலாமே..

இந்தியாவில் பண்ண முடியாது அது. அதனால வேண்டாம். மத துவேஷத்தை உருவாக்க வேண்டாம், கிறிஸ்டோபர். நான் ரொம்ப கடுமையாக எச்சரிக்கிறேன். ரொம்ப தப்பு இது. ராமராஜ்ஜியம் நடக்கும். எங்களுக்குப் பிடிக்குது நாங்க நடத்துறோம். நாங்க 80, நீங்க 20. அப்படி பார்த்துக்கங்க. யாரு பெருபான்மையோ அவங்கதான் ஆட்சி நடத்த முடியும். எந்த அரசாங்கமும். அதனால், கிறிஸ்டோபருக்கு பயந்து நாங்க... ரொம்ப தப்பு.. இந்த மாதிரி குரூப்ல பாட்டெல்லாம் போடக்கூடாது. நானும் போடுவேன் அதிகமா," என்று பேசுகிறார் பி. ராஜேந்திரன்.

இந்த குரல் பதிவு, குழுவுக்கு வெளியேயும் பரவ ஆரம்பித்தது. இது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் செய்தியும் வெளியானது. இதையடுத்து, சென்னை பெருநகரக் காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் போக்குவரத்து இணை ஆணையர் மயில் வாகனன், ஆய்வாளர் பி. ராஜேந்திரனை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் இந்துத்வா ஊடுருவலா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதிரிப் படம்

ஈரோடு புத்தக கண்காட்சியில் காவல்துறை அத்துமீறல்

இரண்டாவது நிகழ்வு, ஆகஸ்ட் 7ஆம் தேதி தற்போது நடந்துவரும் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பானது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் ம.தி.மு.கவின் பொருளாளர் மு.செந்திலதிபன் எழுதிய “ இந்துத்துவப் பாசிசம் வேர்களும் -விழுதுகளும்” என்ற புத்தகம், எதிர் வெளியீடு பதிப்பகத்தின் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் புத்தகங்களை விற்கக்கூடாது என்றும் அது தொடர்பான விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் எனவும் காவல் துறை கூறியதாக எதிர் பதிப்பகத்தின் வெளியீட்டாளர் அனீஸ், பிபிசியிடம் தெரிவித்தார்.

"முதலில் இரண்டு காவலர்கள் கடைக்கு வந்து பார்த்தார்கள். இந்துத்துவப் பாசிசம் நூலைப் புதிதாக வெளியிட்டிருந்தோம். இந்தப் புத்தகம் எதைப் பற்றியது, பாசிசம் என்றால் என்ன என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். புத்தகத்திலேயே அந்த விவரங்கள் எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்று கடையில் இருந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். பிறகு, அந்த புத்தகத்திற்கான போஸ்டரையும் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பிறகு ஆய்வாளர் ஒருவர் அங்கே வந்து, இந்தப் புத்தகத்தையெல்லாம் இங்கே விற்கக்கூடாது, இது போன்ற போஸ்டரையெல்லாம் வைக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். பிறகு பதிப்பாளர், எழுத்தாளர் பற்றிய விவரங்களைச் சேகரித்திருக்கிறார்," என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய அனீஸ், "இதற்குப் பிறகு திராவிடர் கழகத்தின் கடைக்குச் சென்று 'அர்த்தமற்ற இந்து மதம்' பற்றி கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தை 35 வருடமாக விற்கிறார்கள். இப்போது வந்து அந்தப் புத்தகம் பற்றிக் கேள்வியெழுப்புகிறார்கள்," என்கிறார் அனீஸ்.

காவல்துறையில் இந்துத்வா ஊடுருவலா?

பட மூலாதாரம், Getty Images

அதேபோல, மே 17 இயக்கத்தின் நிமிர் பதிப்பகத்திலும் இதுபோல காவல்துறை பிரச்சனை செய்ததாக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்தார். "ஆர்.எஸ்.எஸ். குறித்து நாங்கள் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தோம். அதன் அட்டையை பெரிதாக்கி வெளியில் மாட்டியிருந்தோம். அதனை அகற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். மறுத்தபோது, கடையில் இருந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்திருக்கிறார்கள். பிறகு விஷயம் பெரிதானதும் விட்டுவிட்டார்கள்," என்கிறார் திருமுருகன் காந்தி.

இந்த நிகழ்வுகள் நடந்த பிறகு, பலரும் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டார்கள். சிலர் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்கள். இதற்குப் பிறகு, இதில் ஈடுபட்ட ஈரோடு வடக்கு காவல் ஆய்வாளர் சண்முகம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

காவல்துறையில் இந்துத்வா ஊடுருவலா?

பட மூலாதாரம், Getty Images

"சரியான கட்டுப்பாடுகள் இல்லாததே காரணம்"

அடுத்தடுத்து நடந்த இந்த இரு நிகழ்வுகளும், காவல்துறையின் மனப்போக்கை வெளிப்படுத்துவதாக பலரும் குற்றம்சாட்ட ஆரம்பித்தனர். "திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள். அதில்தான் இப்படி நடக்கிறது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளும்கட்சிதான். யாருக்கும் கீழே இருப்பவர்கள் மீது கட்டுப்பாடுகள் இல்லையென்பதால் இது நடக்கிறது. எல்லா விஷயங்களையும் கூட்டணிக் கட்சிகள் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க முடியாது," என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன்.

புதிய போக்கு தடுக்கப்பட வேண்டியது - திலகவதி

ஆனால், தமிழக காவல்துறையைப் பொறுத்தவரை இந்துத்துவம் இருந்ததே கிடையாது என்கிறார் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான திலகவதி.

"காவல்துறைக்குள் இந்துத்துவ சித்தாந்தம் இருப்பதாகக் கூறப்படுவதை நான் முழுமையாக மறுக்கிறேன். நான் வேலூரில் பணியில் சேர்ந்தேன். அங்கே காவல்துறைக்குள்ளேயே பல மத திருவிழாக்களை எல்லோரும் ஒன்றாகத்தான் கொண்டாடுவோம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற வேறுபாடே கிடையாது. இது புதிய போக்காகத் தெரிகிறது. இது தடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். காவல்துறையில் இருப்பவர்களைப் பொறுத்தவரை, காக்கிதான் மதம், காக்கிதான் ஜாதி. வேறு ஜாதி, மத வேறுபாடே கிடையாது," என்கிறார் அவர்.

கூடுதல் பயிற்சி அளிக்கலாம் - முன்னாள் டி.ஜி.பி. ரவி

முன்னாள் டிஜிபியான ரவியும் இது ஒரு விதிவிலக்கான நிகழ்வுதான் என்கிறார். "சுமார் ஒன்றரை லட்சம் காவலர்கள் உள்ள காவல் துறை இது. யாராவது சிலருக்கு இதுபோன்ற அதீதமான நிலைப்பாடுகள் இருக்கலாம். அது தெரியவரும்போது நடவடிக்கை எடுக்கிறார்கள். அதுதான் முக்கியம். இவையெல்லாம் மிக அரிதான சம்பவங்கள். விதிவிலக்குகள்," என அவர் கூறுகிறார்.

"காவல்துறையில் இருப்பவர்கள் எந்தவிதத்திலும் அதீத நிலைப்பாடுகளை எடுக்க முடியாது. அவர்கள் சட்டத்தின்படிதான் செயல்பட முடியும். தனிப்பட்ட நிலைப்பாடு என்ற ஒன்று அவர்களுக்கு இருக்க முடியாது. பயிற்சியில் தீவிரமாக இது போதிக்கப்படுகிறது.

ஆனால், அதையெல்லாம் தாண்டி இப்படி நடக்கும்போது, சம்பந்தப்பட்ட காவலர் வளர்க்கப்பட்ட சூழல் அதற்குக் காரணமாக அமையலாம் என்றும், அம்மாதிரி தருணங்களில் கூடுதல் பயிற்சி அளிக்கலாம்" என்றும் கூறுகிறார் ரவி.

இது குறித்துப் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ராமசுப்பிரமணியன், "இதை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். தனி நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது சரி. ஆனால், இது போதாது. ஒட்டுமொத்த காவல்துறையிலும் மத உணர்வுகள் காலூன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: