மோதி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்தில் ராகுல் காந்தி பேசாதது ஏன்?

பட மூலாதாரம், ANI
நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதிக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளித்துள்ளார்.
மக்களவையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய், தீர்மானத்தை முன்வைத்து, அதன் மீது முதலாவதாக உரையாற்றினார்.
மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை தொடர்பாக கொண்டு வரப்பட்ட இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி முதல் உரையை ஆற்றுவார் என நம்பப்பட்டது, ஆனால் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், கவுரவ் கோகோய் தீர்மானத்தின் மீது பேசத் தொடங்கினார்.
கௌரவ் கோகோய் சொந்த மாநிலமான அசாம், மணிப்பூரைப் போலவை இந்தியாவின் வடகிழக்கில் உள்ளது. அதனால்கூட ராகுலுக்கு பதிலாக கவுரவ் கோகாயை காங்கிரஸ் முன்னிறுத்தியிருக்கக் கூடும்.
விவாதத்தைத் தொடங்க கவுரவ் கோகோய் எழுந்து நின்றபோது, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “ராகுல் காந்திக்கு என்ன ஆனது, நாங்கள் காத்திருக்கிறோம்” என்று கேட்டார்.

பட மூலாதாரம், ANI
அவதூறு வழக்கில் கடந்த மார்ச் 24ஆம் தேதி ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றத்தில் இதற்கு நிவாரணம் பெற்று மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்கிய கவுரவ் கோகோய், பிரதமர் நரேந்திர மோதியிடம் மூன்று கேள்விகளை கேட்டார்.
பிரதமர் நரேந்திர மோதி இதுநாள் வரை மணிப்பூருக்கு ஏன் வரவில்லை?
இந்த வன்முறை குறித்து பிரதமர் மோதி ஏன் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை?
மணிப்பூர் முதல்வரை பிரதமர் பதவி நீக்கம் செய்யாதது ஏன்?
ஒவ்வொரு முக்கியமான பிரச்னையிலும் பிரதமர் மோதி மௌனம் சாதிக்கிறார் என்று கோகோய் கூறினார். தேசிய விவகாரமாக இருந்தாலும் சரி, சர்வதேசப் பிரச்னையாக இருந்தாலும் சரி பிரதமர் மோதி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மவுனம் காக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. கூறினார்.
"பாஜக ஒரே இந்தியா பற்றி பேசுகிறது. ஆனால் அது இரண்டு மணிப்பூர்களை உருவாக்கியுள்ளது. பாஜக தனது அதிகாரத்திற்காக நாட்டின் ஒருமைப்பாட்டை ஆபத்தில் தள்ளுகிறது” என்றார் கோகோய்.
கவுரவ் கோகோய்க்கு பதில் அளிக்க நிஷிகாந்த் துபேயை பாஜக களமிறக்கியது. எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியில் உள்ளவர்கள் தங்களுக்குள் பல மோதல்களைக் கொண்டுள்ளனர் என்று அவர் பேசினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும் துபே குறைகூறினார்.
பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டு மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. ஆந்திராவுக்கு மோதி அரசு நிதி ஒதுக்கவில்லை என்று கூறி இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பட மூலாதாரம், ANI
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்பது என்ன?
நாடாளுமன்ற ஜனநாயகத்தில், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவையில் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே அரசு ஆட்சியில் இருக்க முடியும்.
அரசியலமைப்பின் 75(3) பிரிவின்படி, அமைச்சர்கள் குழு மக்களவைக்கு கூட்டாகப் பொறுப்பாகும். இந்தக் கூட்டுப் பொறுப்பை சோதிக்க மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்ற தனி விதி உள்ளது. இந்தத் தீர்மானம், மக்களவையில் அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதைச் சோதிப்பதற்காகப் பயன்படுகிறது.
50 எம்.பி.க்களின் ஆதரவைக் கொண்ட மக்களவை உறுப்பினர், எந்த நேரத்திலும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாம். இந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும். இதில் கட்சிகள் சார்பில் உறுப்பினர்கள் பேசுவார்கள்.
இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு சார்பில் பிரதமர் பதில் அளிப்பார்.
அதன் பிறகு மீது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர் அரசுக்கு எதிராக வாக்களித்தால், அரசு கவிழும்.

பட மூலாதாரம், Getty Images
நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்காக மோதி அரசு கவலைப்பட வேண்டுமா?
மக்களவையில் பெரும்பான்மைக்கு 272 எம்பிக்கள் தேவை. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 331 எம்பிக்கள் உள்ளனர். பாஜகவுக்கு மட்டுமே 303 எம்பிக்கள் உள்ளனர். அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லாத அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் மோதி அரசைக் கவிழ்க்க முடியாது.
26 கட்சிகளின் “இந்தியா” கூட்டணிக்கு மக்களவையில் 144 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். பிஜேடி, பிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு 70 எம்பிக்கள் உள்ளனர்.
அரசு விவாவதத்தைத் தவிர்க்கும் ஒரு பிரச்னையில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் விவாதம் நடத்த விரும்பும்போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையும் அந்த வகையிலேயே நம்பிக்கையில்லாத் தீர்மானம் பயன்படுத்தப்படுகிறது.
அனைத்து எதிர்க்கட்சிகளும் எண்ணிக்கை அடிப்படையில் மோதி அரசைக் கவிழ்க்க முடியாது என்று அறிந்திருந்தாலும், பிரதமர் நரேந்திர மோதியை அவை பேசவைக்க வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை கையில் எடுக்கப்பட்டிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












