குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தால் ஸ்ரீஹரிகோட்டாவை விட இஸ்ரோவுக்கு கூடுதல் லாபம் - எப்படி தெரியுமா?

இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரப்பட்டினம் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஒரேயொரு ராக்கெட் ஏவுதளம் உள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளன.

இஸ்ரோவுக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் இங்கிருந்து விண்ணில் ஏவப்படுகின்றன.

இஸ்ரோ நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது. அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம்.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நூறு சதவீதம் நிறைவடைந்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் சமீபத்தில் தெரிவித்தார்.

இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் - குலசேகரப்பட்டினம்
படக்குறிப்பு, ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நூறு சதவீதம் நிறைவடைந்துள்ளது.

அதைத் தொடர்ந்து தற்போது அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகளுக்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அங்கு ராக்கெட்ஏவுதளம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏவுதளத்திற்கு அருகில்தான் விண்வெளி தொழில் பூங்காவைத் தொடங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க குலசேகரபட்டினத்தை இஸ்ரோ தேர்வு செய்தது ஏன்? இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டனவா?

இதுகுறித்து முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் பிபிசி தமிழிடம் பேசினார்.

ஸ்ரீஹரிகோட்டாவிற்கு முன்பாகவே தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாட்டின் வாலிநோக்கம்

ஸ்ரீஹரிகோட்டாவிற்கு முன்பாகவே தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாட்டின் வாலிநோக்கம்

பட மூலாதாரம், Getty Images

“கடந்த 1960களின் இறுதியில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க தமிழ்நாடுதான் முதலில் கருத்தில் கொள்ளப்பட்டது.

இதற்காக கீழக்கரை, சாயல்குடிக்கு அருகில் இருக்கும் வாலிநோக்கம் என்ற இடத்தில் ஏவுதளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன," என்று கூறுகிறார் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன்.

அப்போது இஸ்ரோ தலைவராக இருந்த சதீஷ் தவான் தலைமையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்பட பலர் அடங்கிய குழு அங்கு சென்று ஆய்வு செய்தது.

"அங்கிருந்த தேவாலயத்தினரும் கிராம மக்களும் மாலை அணிவித்து வரவேற்றனர், ஆனால் சில காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

அதற்குப் பிறகுதான் ஸ்ரீஹரிகோட்டா தேர்வு செய்யப்பட்டு அங்கு விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டது,” என்று இளங்கோவன் தெரிவித்தார்.

குலசேகரப்பட்டினம் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?

இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரப்பட்டினம் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?

நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ தூத்துக்குடியில் உள்ள குலசேகரபட்டினத்தை தேர்ந்தெடுத்தது குறித்துப் பேசும்போது அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளதாக விஞ்ஞானி இளங்கோவன் தெரிவித்தார்.

அவை, "பொதுவாக ஒரு ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருக்க வேண்டும். ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் விண்கலங்கள் தென்துருவத்தை நோக்கி, கிழக்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து ஏவப்பட வேண்டும்.

அப்போதுதான் பூமியின் சுழல் வேகமான 0.5 கிமீ/செகண்ட் கூடுதலாக கிடைக்கும் (நமக்கு தேவை 8 கி மீ/செகண்ட்)," என்று அவர் விளக்கினார்.

இஸ்ரோ

பட மூலாதாரம், BBElangovan Rajagopalan

இவ்வாறு ஏவப்படும்போது ஒரு ராக்கெட்டின் முழு ஆற்றலும் பயன்படுத்தப்படும் என்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைக் கூட எளிதாக ஏவ முடியும் என்று அவர் விளக்கினார்.

இந்தக் காரணத்திற்காக பல நாடுகள் வேறு கண்டங்களில் இருந்துகூட தங்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகின்றன. "எடுத்துக்காட்டாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்கலங்கள் தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகின்றன.

ஏவுகலங்களில் இருந்து பிரிந்து வரும் பாகங்கள் (உதாரணமாக சில பாகங்கள் ஏறக்குறைய 20 மீட்டர் நீளமும் 3 மீட்டர் விட்டமும் கொண்டவை) கடலில்தான் விழ வேண்டுமே தவிர மக்கள் வசிக்கும் நிலபரப்பின் மீது விழக்கூடாது. அப்படி விழுந்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்த விதி மிக முக்கியமானது," என்கிறார் விஞ்ஞானி இளங்கோவன்.

இந்த விதியை கருத்தில் கொண்டு, "ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளின் பாகங்கள் இலங்கை நாட்டின் மீது விழுந்து விடக்கூடாது என்பதால் ராக்கெட்டுகள் 'Dogleg maneuver' எனும் முறையில் விண்ணில் ஏவப்படுகின்றன.

ஆனால், இந்த முறையில் ஏவும்போது எரிபொருள் அதிகமாக செலவாகும். எனவே புதிய ஏவுதளம் இலங்கை நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், எரிபொருளையும், செலவுகளையும் மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்."

அதுமட்டுமின்றி, ஏவுதளம் அமைக்கப்படும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார் இளங்கோவன். மேலும், அந்தப் பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடிய பகுதியாக இருக்கக்கூடாது எனவும் புயல், மின்னல், மழையின் தாக்கமும் அங்கு குறைவாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

"தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரபட்டினம், மேலே சொன்ன அனைத்து அம்சங்களையும் கொண்ட ஓர் இடமாக உள்ளது. எனவே தான் இஸ்ரோ இதைத் தேர்வு செய்துள்ளது,” எனக் கூறினார்.

பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ள குலசேகரபட்டினம்

பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினம்

பட மூலாதாரம், BBElangovan Rajagopalan

“ஸ்ரீஹரிகோட்டா, பூமத்திய ரேகை பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆனால், குலசேகரபட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. எனவே, குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவும்போது அதிகளவில் எரிபொருள் மிச்சமாகும்.

அதோடு, ராக்கெட்டின் வேகத்தை நொடிக்கு அரை கிலோ மீட்டர் வீதம் அதிகரிக்க முடியும்,” என்று கூறுகிறார் மூத்த விண்வெளி விஞ்ஞானி நெல்லை சு.முத்து.

“வழக்கமாக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கை மீது பறந்துவிடாமல் இருக்க அல்லது ராக்கெட்டுகளில் இருந்து பிரிந்து விழும் பாகங்கள் இலங்கை மீது விழாமல் இருக்க, கிழக்கு நோக்கி ஏவப்பட்டு பின்னர், தென் துருவம் நோக்கித் திருப்பப்படுகிறது.

ஆனால், குலசேகரபட்டினத்தில் இருந்து ஏவும்போது இந்த பிரச்னை எழாது. ராக்கெட்டுகள் நேராக தென் திசையை நோக்கி ஏவப்படும். இது இஸ்ரோவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்கிறார் அவர்.

திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் இஞ்ஜினின் எரிபொருளான திரவ ஹைட்ரஜனும் கேரள மாநிலம் தும்பாவில் ராக்கெட் பாகங்கள் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன.

குலசேகரப்பட்டினம் சர்வதேச அளவில் கவனம் பெறும்

பட மூலாதாரம், Getty Images

அங்கிருந்து வெகு தொலைவில், ஆந்திராவில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அவற்றைக் கொண்டு செல்வதில் கால தாமதம், பாதுகாப்பு பிரச்னை, கூடுதல் செலவு, சேதம் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

ஆனால், மகேந்திரகிரி மற்றும் தும்பாவுக்கு ஓரளவு அருகில் குலசேகரப்பட்டினம் இருப்பதால் இந்த பிரச்னைகள் ஏற்படாது,” எனக் கூறினார்.

குலசேகரபட்டினம் சர்வதேச அளவில் கவனம் பெறும்

“குலசேகரபட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைப்பதன் மூலம் பல்லாயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். குலசேகரபட்டினம் உலக விண்வெளி அறிவியல் வரைபடத்தில் முக்கிய இடம் பெறும்," என்று கூறுகிறார் நெல்லை சு. முத்து.

குலசேகரபட்டினம் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. போன்ற சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதே இஸ்ரோவின் திட்டம். சிறிய ரக ராக்கெட் பாகங்களை உருவாக்குவதும், ஒன்று சேர்த்து ஏவுவதும் எளிதானது என்பதால், "அத்தகைய சிறிய ராக்கெட்டுகளுக்கான ஒரு சிறப்பு விண்வெளி ஆய்வு மையம் அமைப்பது மிகவும் முக்கியம்," என்கிறார் அவர்.

இதன்மூலம் பெரிய ராக்கெட் தயாரிப்புக்கு நீண்ட காலம் காத்திருக்காமல் "தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் சிறிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இது வர்த்தகரீதியாக மிகப்பெரிய லாபம் அளிக்கும்,” என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: