பண வாட்டம்: சீனாவில் பொருட்களின் விலை மளமளவென சரிவது ஏன்? இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

சீனாவின் பணவாட்டம்- இந்தியா மீது என்ன தாக்கம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவை தற்போது வாட்டுவது, பணவாட்டம், அதாவது பொருட்களின் விலைகள் மளமளவென சரிந்து வருகின்றன.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான சீனா, தற்போது தீவிர சிக்கலில் உள்ளது. பொதுவாக பணவீக்கம், அதாவது பொருட்களின் விலையேற்றத்தால் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும். ஆனால் சீனாவை தற்போது வாட்டுவது, பணவாட்டம், அதாவது பொருட்களின் விலைகள் மளமளவென சரிந்து வருகின்றன.

கடந்த 18 மாதங்களாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா திணறிக்கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் தலை கீழ் நிலைமை நிலவுகிறது. மக்களும் தொழில் நடத்துபவர்களும் பணத்தை செலவு செய்வதில்லை. இது, deflation எனப்படும் பண வாட்டத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.

கடந்த பல மாதங்களில் சீனாவில் வாடிக்கையாளர் விலைகள் மிக அரிதாகவே உயர்ந்தன. இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஜூலை மாதத்தில் விலைகள் சரிய தொடங்கின. தொழிற்சாலைகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் கிடைக்கும் மொத்த விலை முந்தைய ஆண்டு இருந்ததை விட குறைய தொடங்கியது. வீட்டு மனை துறை ஆட்டம் காண ஆரம்பித்தது.

பணவாட்டம் என்றால் என்ன?

பண வீக்கத்துக்கு எதிரான நிலையே பணவாட்டம். பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை நாடு முழுவதும் குறைந்து, வாங்கும் சக்தியை தற்காலிகமாக அதிகரிக்கும். இதை, நாட்டின் பொருளாதாரத்துக்கான எச்சரிக்கை மணியாகவே கருத வேண்டும். இவை தொடர்ந்து நீடித்தால், பொருளாதார மந்த நிலையை அடையும்.

ஜப்பானில் பல ஆண்டுகள் இருந்தது போல குடும்பங்களில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி, பெற்ற கடன்களை திரும்ப செலுத்த மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும். இது போன்ற பணவாட்டம், குறிப்பாக சீனா போன்று கடனில் இருக்கும் நாடுகளுக்கு பெரும் ஆபத்தானதாகவே கருதப்படுகிறது.

பணவாட்டம் ஒரு பிரச்னையா?

மேலோட்டமாக பார்க்கும் போது, விலைகள் குறைவது நல்ல செய்தி போல் தெரிந்தாலும், அது உண்மை அல்ல. விலைகள் குறைவதால், பொருளாதாரத்தில் தேவை குறையும். தொடர்ந்து தேவை குறைந்தால் உற்பத்தி குறையும். உற்பத்தி குறையும் போது தொழில் வருவாய்கள் குறையும், இதனால் வேலை இழப்புகள் அதிகமாகும், பொருளாதார சிக்கல் ஏற்படும்.

சீனாவின் பணவாட்டம்- இந்தியா மீது என்ன தாக்கம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவில், பெருந்தொற்றுக்கு பிறகு, விலைகள் உயரவில்லை. மாறாக குறைய தொடங்கின.

கொரோனாவின் தாக்கம்

பல வளர்ந்த நாடுகளில், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, மக்கள் அதிக அளவில் பணத்தை செலவு செய்ய தொடங்கினர். பணத்தை சேமித்து வைத்திருந்தவர்களுக்கு, அதை முதலீடு செய்யவும், செலவு செய்யவும் முடிந்தது. அதிகரிக்கும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய தொழில்கள் போராடிக் கொண்டிருந்தன.

பொருட்களின் தேவை அதிகமானதாலும், ரஷ்ய-உக்ரைன் போருக்கு பிறகு எரிசக்தி விலை உயர்ந்ததாலும், விலை ஏற்றத்துக்கு அது வழி வகுத்தது. ஆனால் சீனாவில், பெருந்தொற்றுக்கு பிறகு, விலைகள் உயரவில்லை. மாறாக குறைய தொடங்கின.

கொரோனா பெருந்தொற்று பரவாமல் இருக்க, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்த நாடு சீனா. இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3% ஆக மட்டுமே இருந்தது. 1976க்கு பிறகு, மிக குறைந்த வளர்ச்சி சதவீதம் இதுவாகும். இந்த ஆண்டு மே, ஜூன், ஜூலை என தொடர்ந்து மூன்று மாதங்களாக சீனாவின் ஏற்றுமதிகள் குறைந்தன.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு ஏற்றுமதிகள் கடுமையாக குறைவது இது தான் முதல் முறையாகும். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதி 23.1% குறைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 20.6% குறைந்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஆகியுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதாரம் சீராகி வருவதாக தெரிந்தது. ஆனால் தற்போது மீண்டும் மந்த நிலையை எட்டியுள்ளது.

என்னவெல்லாம் விலை குறைந்துள்ளது?

சீனாவின் பணவாட்டம்- இந்தியா மீது என்ன தாக்கம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவின் முக்கிய உணவான பன்றிக் கறியின் விலை 26%, காய்கறிகளின் விலை 1.5% குறைந்தன.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், வாடிக்கையாளர் விலை குறியீடு 0.3% குறைந்துள்ளது. உணவு, போக்குவரத்து, வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் ஜூலை மாதத்தில் குறைந்தன. சீனாவின் முக்கிய உணவான பன்றிக் கறியின் விலை 26%, காய்கறிகளின் விலை 1.5% குறைந்தன. கார்களின் விலை கடுமையாக குறைந்துள்ளது.

வீட்டு மனை சந்தை சரிவு

சீனாவில் சுமார் ஐந்தில் மூன்று குடும்பங்களின் சொத்துகள் வீடுகளிலும் வீட்டு மனைகளிலும் உள்ளன. தற்போது வீட்டு மனை சந்தையின் பெரும் வீழ்ச்சி சீனாவை கடுமையாக பாதித்து வருகிறது. சீனாவில் 100 நகரங்களில் உள்ள வீடுகளின் விலைகள், 2021ம் ஆண்டு இருந்த விலைகளை விட 14% குறைந்துள்ளது. வீட்டு வாடகைகள் 5% குறைந்துள்ளது. வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், கடன் பெறுவதற்கு நிறுவனங்களும் மக்களும் முன்வரவில்லை.

பண வாட்டத்தால் சீனாவுக்கு என்ன பாதிப்பு?

சீனாவின் பணவாட்டம்- இந்தியா மீது என்ன தாக்கம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவின் ஏற்றுமதி 14.5% சரிந்துள்ளது, அதே போன்று இறக்குமதி 12.4% குறைந்ததுள்ளது என சீனா அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் பொருளாதாரத்தில் பண வாட்டம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

  • பெருந்தொற்றுக்கு பிறகு, எதிர்பார்த்ததை விட குறைவான வேகத்திலேயே சீனாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.
  • சீனாவின் ஏற்றுமதி 14.5% சரிந்துள்ளது, அதே போன்று இறக்குமதி 12.4% குறைந்ததுள்ளது என சீனா அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
  • சீனாவின் வீட்டுமனை சந்தை திணறி வருகிறது. சீனாவின் மிகப்பெரிய வீட்டு மனை நிறுவனமான எவர்கிராண்டே மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
  • எண்ணெய் முதல் செம்பு வரை பொருட்களின் விலை சரிந்தன. சீனாவில் முதலீடு செய்ய வேண்டும் என காத்திருந்த ஆடம்பர பொருட்களின் உற்பத்தி நிறுவனமான எல் வி எம் எச்-ன் பங்குகள் குறைந்தன.
  • ஏற்கெனவே உற்பத்தித் துறையில் சீனாவுக்கு மாற்றை அமெரிக்காவும் ஜெர்மனியும் தேடி வரும் நிலையில், பண வாட்டம் சீனாவுக்கு மேலும் சிக்கலையே உருவாக்கும்.

சீனாவில் 2009 மற்றும் 2012 இதே போன்ற பணவாட்டம் ஏற்பட்ட போது அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாமல் சீனா தவிர்த்து விட்டது. தற்போது சீனாவுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், அதன் முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கை உருவாக்கி, பொருளாதாரத்தில் பண சுழற்சியை ஏற்படுத்துவதே ஆகும்.

சீனாவின் பணவாட்டம்- இந்தியா மீது என்ன தாக்கம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவின் பொருளாதார மந்த நிலையை எட்டினால், உலக உற்பத்தி சந்தையில் ஏற்படும் வெற்றிடத்தை இந்தியா நிரப்ப முடியும்.

இந்தியாவின் மீது என்ன தாக்கம்?

சீனாவின் பொருளாதார மந்த நிலையை எட்டினால், உலக உற்பத்தி சந்தையில் ஏற்படும் வெற்றிடத்தை இந்தியா நிரப்ப முடியும். வளர்ந்த நாடுகளும் கூட சீனாவின் ஆதிக்கத்தை உற்பத்தித் துறையில் தவிர்க்க வேண்டும் என்று எண்ணம் நிலையில் இது இந்தியாவுக்கு சாதகமாக அமையலாம்.

அதே நேரம், இந்தியாவிலிருந்து இரும்பு தாது பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடு சீனா. சீனாவின் தேவையில் 70% இரும்பு தாதுவை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. சீனாவின் இறக்குமதிகள் குறைந்து வரும் நிலையில், இது இந்திய பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

உலக நாடுகள் மீது என்ன தாக்கம்?

உற்பத்தித் துறையில் உலகில் கோலாச்சி வரும் நாடு சீனா. சீனாவில் பண வாட்டம் நீடித்தால், பிரிட்டன் உட்பட உலகின் பிற பகுதிகளில் நிலவும் விலை ஏற்றம் குறையும். ஆனால் சீனாவின் விலை குறைவான பொருட்கள் உலக சந்தையில் பெருகினால் பிற நாடுகளின் உற்பத்தியாளர்கள் மீது அது தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தொழில் முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் பாதிக்கும். நலிந்த சீன பொருளாதாரம் உலக பொருளாதாரத்தில் தேவையை குறைக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: