மத வெறுப்பை தூண்டும் சித்தரிப்பு வீடியோக்களை சமூக ஊடகங்களில் அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம், TWITTER
- எழுதியவர், அகில் ரஞ்சன்
- பதவி, பிபிசி குளோபல்
யூடியூப்பில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு வீடியோ இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வைரலானது. 29 மில்லியன் முறைக்கு மேல் அந்த வீடியோ பார்க்கப்பட்டது.
அதில், முஸ்லிம் பெண்கள் அணியும் கருப்பு நிற ஆடையை (புர்கா) அணிந்திருக்கும் ஒரு நபரை, மற்றொரு நபர் தாக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.
தனது கையில் குழந்தை ஒன்றை வைத்திருக்கும் அந்த நபரின் முகத்தை பகிரங்கப்படுத்தும் நோக்கத்துடன், அவர் அணிந்திருந்த புர்கா வலுக்கட்டாயமாக அகற்றப்படும் காட்சியும் அதில் இடம்பெற்றிருந்தது.
அத்துடன், ‘முஸ்லிம் பெண்களைப் போல் புர்கா அணிந்து மாறுவேடத்தில் குழந்தைகளைக் கடத்தும் நபர்களிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என்று, ஹிந்தி மொழியில் எச்சரிக்கை வாசகங்களும் வீடியோவில் இடம்பெற்றிருந்தன.
ஆனால், அந்த வீடியோ உண்மையானது அல்ல; அதில் இடம்பெற்றிருந்த காட்சிகள் திட்டமிட்டு படமாக்கப்பட்டவை என்பது தெரிய வந்ததும் சமூக ஊடகங்களில் இருந்து அது நீக்கப்பட்டது.
மத வெறுப்பைத் தூண்டும் வீடியோக்கள்
பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்படும் இதுபோன்ற வீடியோக்களில் சொல்லப்படும் தகவல்கள், உண்மையெனக் கருதப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் போக்கு இந்தியாவில் இருந்து வருகிறது.
இதில் பெரும்பாலான வீடியோக்களில் மத வெறுப்பையும், பெண்கள் மீதான வெறுப்பையும் தூண்டும் விதமான காட்சிகள் பிரதானமாக இடம்பெறுகின்றன.
பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, இந்தியாவில் 2014இல் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, ஹிந்து- முஸ்லிம் சமூகத்தினருக்கு இடையே பதற்றமான போக்கை நாடு கண்டு வருகிறது.
இத்தகைய சூழலில் குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து எடுக்கப்படும் இதுபோன்ற வீடியோக்கள், அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராகவும் அமைந்து விடுகின்றன.
மொழி வேறுபாடின்றி தாக்கத்தை ஏற்படுத்தும் சித்தரிப்பு வீடியோக்கள்
சமூக ஊடகங்களில், ஹிந்தி, தமிழ், மலையாளம், குஜராத்தி, மராத்தி, தெலுங்கு என்று பல்வேறு இந்திய மொழிகளிலும் திட்டமிட்டுத் தயாரிக்கப்படும் இந்த வீடியோக்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அத்துடன், பல்வேறு உள்ளூர் ஊடகங்களிலும் இந்த வீடியோக்கள் அவ்வபோது செய்திகள் ஆகின்றன.
புர்கா அணிந்த நபர்கள் குழந்தைகளைக் கடத்துவது போன்று சித்தரிக்கப்படும் வீடியோக்களால், நிஜ வாழ்க்கையில் பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுகின்றன.
இந்த வீடியோக்களின் தாக்கத்தால், புர்கா அணிபவர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என்று நம்பும் கும்பல், அவர்களை தாக்கும் சம்பவங்கள், கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
இதையடுத்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காவல்துறையினர், இந்த வீடியோக்கள் மூலம் பரப்பப்படும் பொய் தகவல்கள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கவும், அறிவுறுத்துவும் வேண்டியிருந்தது.
இந்த வீடியோக்கள் ஏன் ஆபத்தானவை?
ஏதோவொரு நோக்கத்திற்காக திட்டமிட்டு எடுக்கப்படும் இதுபோன்ற வீடியோக்கள், சமூக ஊடகங்களிவ் பார்வையாளர்களைக் குழப்பக்கூடிய தவறான தகவல்களை உள்ளடக்கமாக கொண்டுள்ளன.
சில வீடியோக்களில் மட்டும் ‘பொறுப்பு துறப்பு’ என்ற அறிவிப்பு இடம்பெறுகிறது. இந்த அறிவிப்பும் வீடியோக்களின் நடுவிலோ, இறுதியிலோ மறைக்கப்பட்டிருக்கலாம்.
பல நேரங்களில் சித்தரிப்பு வீடியோக்களில் இடம்பெறும் உரைகள் ஆங்கிலத்தில் உள்ளன. இதனால் அதில் விவரிக்கப்படும் விஷயங்கள், பெரும்பாலான பார்வையாளர்களால் புரிந்துகொள்ள முடியாதபடி இருக்கின்றன.
கடந்த ஆண்டு வைரலான குறிப்பிட்ட வீடியோவின் உண்மைத்தன்மையை Alt News எனும் இணையதள செய்தி நிறுவனம் ஆராய்ந்தது.
அப்போது அதில், ‘இதுவொரு புனைகதை’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது தெரிய வந்தது. ஆனால், இந்த வாசகம் வீடியோவில் ஒரு வினாடி மட்டும் பட்டெனத் தெரிந்து மறைவதால், அது பெரும்பாலான பார்வையாளர்களால் கவனிக்கப்படாமல் போயிருக்கலாம்.
இன்னும் பல வீடியோ தயாரிப்பாளர்கள், சித்தரிப்பு வீடியோக்கள் எதார்த்தமானவை என்று பார்வையாளர்களை நம்ப வைக்க, அவற்றில் கண்காணிப்பு கேமராவில் (சிசிடிவி) இடம்பெறுவதைப் போன்ற காட்சிகளையும் சேர்க்கின்றனர்.
‘லவ் ஜிகாத்’
கடந்த 2021 டிசம்பரில் இதுபோன்றதொரு வீடியோ வைரலானது. அதில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் சிலர், இந்து பெண்களுக்கு உணவில் போதைப் பொருட்களை கலந்து கொடுக்க முயல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. எவ்வித ஆதாரமும் இல்லாத இந்த வீடியோ பல மொழிகளிலும் பகிரப்பட்டது.
இந்த வீடியோவை உண்மை என்று பார்வையாளர்கள் பலர் நம்பியதை, அவர்கள் பதிவிட்ட இஸ்லாமிய வெறுப்பு கருத்துகள் உணர்த்தின. அதில் ஒரு பார்வையாளர், ‘இது லவ் ஜிகாத் என்றும், இதில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ எனவும் பதிவிட்டிருந்தார்.
முஸ்லிம் ஆண்கள், இந்து பெண்களை இஸ்லாத்திற்கு மதம் மாற்றும் நோக்கில் அவர்களைக் கவர்ந்திழுக்க மேற்கொள்வதாகக் கூறப்படும் செயல்கள், ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், YOUTUBE
முஸ்லிம் தையல்காரர்; இந்து பெண் வீடியோ
ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு, வெங்கட் சீபனா என்பவரால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் பெரும்பாலானவற்றில், சிசிடிவி கேமரா காட்சிகளைப் போல பதிவு குறியீடும், வீடியோக்கள் எடுக்கப்பட்ட நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அத்தகைய 400க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இடம்பெற்றுள்ள இவரது யூடியூப் சேனலுக்கு, மொத்தம் 1.2 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.
அவரது சேனலில் இடம்பெற்றிருந்த ஒரு வீடியோவில் தையல்காரர் ஒருவர், ஒரு பெண் வாடிக்கையாளரிடம் தவறாக நடந்துகொள்வதைப் போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது.
ஒரு முஸ்லிம் ஆண் (தையல்காரர்), இந்து பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொள்ள முயல்வதாகப் புரிந்து கொள்ளப்பட்ட இந்த வீடியோ, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்டது.
“ஹிந்து சகோதரிகள் மற்றும் பெண் குழந்தைகள் முஸ்லிம்களின் கடைகளுக்குச் செல்ல வேண்டாம். அவர்கள் மோசமான மனநிலை கொண்டவர்கள்,” என்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ பதிவுக்கு கீழே, பார்வையாளர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
“இயல்பு வாழ்க்கை சூழலையை உணர்த்தவும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும்தான் இதுபோன்ற வீடியோக்கள் எடுக்கப்படுகின்றன,” என்று சீபனா பிபிசியிடம் கூறினார்.
சித்தரிப்பு வீடியோக்களின் விளைவு
இதுபோன்று சித்தரிக்கப்படும் வைரல் வீடியோக்கள், வன்முறைக்கு வழிவகுக்காது. அதுமட்டுமின்றி, சமூகத்தில் ஏற்கெனவே நிலவும் மதச்சார்புகளில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்கிறார் பத்திரிகையாளர் அலிசன் ஜஃப்ரி.
“எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், ஏற்கெனவே பிளவுபட்டுள்ள சமூகத்தில் இந்த வீடியோக்கள் மேலும் விரிசல் ஏற்படுத்தும் விதத்தில் உள்ளன. சில சமூகங்களை, குறிப்பாக முஸ்லிம்களை இலக்காக வைத்து எடுக்கப்படும் வீடியோக்கள் வைரலாகும்போது, அவை சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக்கு வழிவகுக்கின்றன,” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், TWITTER
இந்துக்களையும் விட்டுவைக்காத வீடியோக்கள்
சித்தரிப்பு நோக்கத்துடன் தயாரிக்கப்படும் வீடியோக்கள், சில நேரங்களில் பார்வையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைகின்றன. அத்துடன் குறிப்பிட்ட சமூகத்தினரை பற்றி இணையவெளியில் இன்னும் அதிக தவறான தகவல்களை பரப்பவும் வழிவகுக்கின்றன.
இந்து சமூகத்தைச் சேர்ந்த சில நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அதிக வயது வித்தியாசம் உள்ளவர்களுக்கு இடையில் தவறான உறவுகள் இருப்பதாக சித்தரிக்கப்பட்ட இரண்டு வீடியோக்கள் கடந்த மே மாதம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டன.
அதில் முதல் வீடியோ, காவி உடை அணிந்த ஒரு நபரைப் பற்றி சித்தரிக்கிறது. இந்து மதத்துடன் தொடர்புடைய காவி நிறத்தில் உடை அணிந்திருக்கும் அந்த நபர், தனது சகோதரியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறார்.
அடுத்த வீடியோவில், காவி உடை உடுத்தியிருக்கும் நபருக்கு அருகில், முந்தைய வீடியோவில் இடம்பெற்றிருந்த அதே பெண் புர்கா அணிந்த படி நின்று கொண்டிருக்கிறார். அந்தப் பெண்ணை ஹிந்து மதத்துக்கு மாற்றுவதற்காக திருமணம் செய்வதாக அந்த நபர் கூறுகிறார்.
இந்த வீடியோ காட்சிகளை ட்விட்டரில் பகிர்ந்த சிலர், ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒரு ஆண், தனது சகோதரியை முஸ்லிம் பெண்ணாக நடிக்க வைப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த இரு வீடியோக்களில் இடம்பெற்றிருந்த ஆணும், பெண்ணும் வெவ்வேறு கதாபாத்திரங்களை சித்தரிக்கும் விதத்தில் பல்வேறு வீடியோக்களில் தோன்றுகின்றனர்.
யூடியூப் சேனல் உரிமையாளர்கள் பணத்திற்காகவே இப்படி செய்கிறார்களா?
சித்தரிப்பு நோக்கத்துடன் தயாரிப்படும் வீடியோக்களை பொதுவாக பதிவிடும், 4,00,000க்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்ட ஒரு யூடியூப் சேனலின் உரிமையாளர் விக்ரம் மிஸ்ராவை பிபிசி தொடர்பு கொண்டது.
அவரது சேனலில் பதிவிடப்படும் வீடியோக்களின் உண்மைத்தன்மை குறித்து அவரிடம் பிபிசி கேள்வி எழுப்பியது.
“நாங்கள் அனைவரும் வீடியோக்கள் ஹிட் ஆக வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் செயல்படுகிறோம். இதைக் கருத்தில் கொண்டு சமூகத்தின் போக்குகளுக்கு ஏற்ப, பொதுமக்களை அதிகம் சென்றடையும் வீடியோக்களை தயார் செய்கிறோம்,” என்று மிஸ்ரா பதிலளித்தார்.
“மொத்தம் 12 பேர் கொண்ட குழுவாக எங்கள் யூடியூப் சேனல் இயங்கி வருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பணத்தை ஈட்டும் நோக்கில் பொழுதுபோக்கு மற்றும் பார்வையாளர்களை மட்டும் கருத்தில் கொண்ட வீடியோக்களை உருவாக்குகிறோம்,” என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
ஃபேஸ்புக், யூடியூப்பின் விதிமுறைகள் என்ன?
சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் பகிரப்படுவது தொடர்பான கொள்கைகள், விதிமுறைகள் குறித்து, பல்வேறு சமூக ஊடகங்களின் நிர்வாகத்திடமும் பிபிசி கேள்வி எழுப்பியது.
“வன்முறையைத் தூண்டும் எந்த உள்ளடக்கத்தையும் தடை செய்ய வகை செய்யும் தெளிவான விதிமுறைகள் ஃபேஸ்புக்கிற்கு இருக்கிறது. இந்த விதிமுறைகளை மீறி செய்யப்படும் எந்தவொரு பதிவும் நீக்கப்படும்,” என்று மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
வன்முறையைத் தூண்டும் விதத்தில் தவறான தகவல்களைக் கொண்ட உள்ளடக்கங்களைத் தடை செய்யும் கடுமையான விதிமுறைகள் தங்களிடமும் உள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உங்களை விரைவில் தொடர்பு கொள்கிறோம் என்று பிபிசியின் கேள்விக்கு ட்விட்டர் நிறுவனம் பதிலளித்துள்ளது.
இந்தியர்கள் வீடியோக்களை அதிகம் பகிர்வது ஏன்?
சமூக ஊடகங்களில் வலம் வரும் வீடியோக்களில் பல திட்டமிட்டு சித்தரிக்கப்படுவதாகத் தெரிகிறது. இதுபோன்ற வீடியோக்கள் இந்தியாவை போன்றே பிற நாடுகளிலும் தயாரிக்கப்பட்டு, பகிரவும் படுகின்றன. ஆனால், இதுபோன்ற வீடியோக்களில் சொல்லப்படும் கருத்துகள் இந்தியர்களால் நம்பப்படுகிறது மற்றும் வைரலாக பகிரப்படுகிறது.
ஏனெனில் அவை, “அதிக பழமைவாத பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் உள்ளன” என்று இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளில் செயல்பட்டு வரும் Fact Crescendo-வின் நிர்வாக ஆசிரியர் ஹரிஷ் நாயர் கூறுகிறார்.
“பொதுநலன் கருதி வெளியிடப்பட்டதாக தாங்கள் நம்பும் வீடியோக்களை இந்தியர்கள் பகிர்வார்கள்,” என்றும் அவர் கூறுகிறார்.
ஹரிஷ் நாயரை பொறுத்தவரை, சித்தரிப்பு வீடியோக்கள் பகிர்வு என்பது இந்தியாவில் நிலவும் தவறான தகவல் போக்கு அல்ல.
“இந்தியர்களின் முன்பிருக்கும் நம்பிக்கைகளை, உணர்வுகளை உறுதிப்படுத்துவதால் அவை சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.”
சித்தரிப்பு வீடியோக்களை அடையாளம் காண்பது எப்படி?
“ஊடகங்கள் குறித்து பொதுமக்களுக்கு இருக்கும் அறிவு மற்றும் புரிதல்தான் இந்தப் பிரச்னையின் முக்கிய அம்சம்” என்கிறார் டெல்லியை தளமாகக் கொண்ட டிஜிட்டல் உரிமைகளுக்காக வாதிடும் குழுவான இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷனின் கொள்கை இயக்குநர் பிரதீக் வாக்ரே.
ஆனால் தற்போது உள்ள சமூக பிளவுகள் மற்றும் ஏற்கெனவே இப்படி சிந்திக்கத் தூண்டப்பட்ட மக்கள் உள்ள சமூகத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்கிறது என்றும் கூறுகிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் காட்சிப்படுத்தப்படும் போது அவற்றின் கேமரா கோணங்கள், அவை எந்த இடங்களில் படமாக்கப்படுகின்றன, இந்த வீடியோக்களில் பயன்படுத்தப்படும் மொழி, அதற்கான எதிர்வினை உள்ளிட்டவற்றில் பார்வையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார் இந்தியாவை சேர்ந்த பன்மொழி உண்மைச் சரிபார்ப்பு ஊடகமான நியூஸ் செக்கரின் நிர்வாக ஆசிரியர் ரூபி திங்ரா அறிவுறுத்துகிறார்.
மேலும் இதுபோன்ற வீடியோக்களில் தோன்றுபவர்கள் கேமராவுக்கு முன் தைரியமாக நிற்கிறார்களா அல்லது கேமராவுக்கு பின்னால் ஓடி ஒளிந்து கொள்கிறார்களா, அவர்கள் இயல்பாகப் பேசுகிறார்களா அல்லது சத்தமாகப் பேசுகிறார்களா, அதிகம் செயல்படுகிறார்களா என்பதையும் பார்வையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
சித்தரிப்பு வீடியோக்களை போல, ஒரு சம்பவம், அதன் முழு நீளத்திற்கும், எந்த இடையூறும் இல்லாமல் பல கேமராக்களால் படம்பிடிக்கப்பட சாத்தியமில்லை என்றும் திங்க்ரா குறிப்பிடுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












