ஜெயிலர் விமர்சனம்: நெல்சன் கூட்டணியில் திரைக்கு வந்துள்ள 'புதிய' ரஜினிகாந்த்

காணொளிக் குறிப்பு, ஜெயிலர் விமர்சனம்: இயக்குநர் நெல்சன் திரையில் 'புதிய' ரஜினிகாந்த் வெற்றி பெற்றாரா?

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் இருவருமே தங்களுக்கு ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்தின் முந்தைய படமான அண்ணாத்த, இயக்குநர் நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் என இரண்டுமே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், தற்போது இருவருக்குமே ஜெயிலர் படம் ஒரு வெற்றிப்படமாக அமைய வேண்டிய கட்டாயம் உள்ளது.

படத்தின் டீசர், டிரெய்லர் என இரண்டுமே ஜெயிலர் குறித்துப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை திரைப்படம் பூர்த்தி செய்துள்ளதா?

ஊடகங்களில் வெளியாகியுள்ள விமர்சனங்கள் என்ன கூறுகின்றன? இங்கு விரிவாகப் பார்ப்போம்...

ஜெயிலர் படத்தின் கதை என்ன?

நகரப்புறத்தில் சிலை கடத்தும் கும்பல் ஒன்று பல்வேறு கோவில் சிலைகளைத் திருடி வெளிநாடுகளுக்கு கடத்துகிறது. இதைத் தடுக்கப் பல ஆண்டுகளாக முயன்று வருகிறார் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வசந்த் ரவி.

ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது? ரஜினிகாந்த், நெல்சன் கூட்டணி சறுக்கியதா? சாதித்ததா?

பட மூலாதாரம், SUN PICTURES/TWITTER

படக்குறிப்பு, டீசர், டிரெய்லர் என இரண்டுமே ஜெயிலர் குறித்துப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை திரைப்படம் பூர்த்தி செய்துள்ளதா?
  • எதற்கும் வளைந்து கொடுக்காத அவரை சிலை கடத்தல் கும்பலின் தலைவன் கடத்திக் கொல்கிறார். இதனால் உடைந்துபோகும் வசந்த் ரவியின் தந்தையும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான முத்துவேல் பாண்டியன்(ரஜினிகாந்த்), தனது மகனுக்காகப் பழிவாங்கப் புறப்படுகிறார்.

பல சண்டைக் காட்சிகள், கொலைகளைக் கடந்து சிலை கடத்தல் கும்பலின் தலைவனை ரஜினி அடைகிறார். ஆனால், ரஜினியிடம் அந்த சிலை கடத்தல் கும்பலின் தலைவன் நெருக்கடிக்கு உள்ளாக்கி, தனக்கு ஒரு வேலையை செய்யச் சொல்கிறார்.

அந்த வேலையை ரஜினி செய்தாரா, இறுதியில் என்ன ஆனது என்பதே ஜெயிலர் படத்தின் கதை.

ரஜினிக்கு புதுமையான ஓபனிங் கொடுத்த நெல்சன்

படத்தின் தொடக்கத்தில், ஆரவாரமில்லாத குடும்பத் தலைவராக அறிமுகமாகும் ரஜினி மனதைக் கவர்வதாகவும் எந்தவித பஞ்ச் டயலாக்கும் ஓப்பனிங் பாடலும் இல்லாமல் மகனுக்கும் பேரனுக்கும் ஷூ பாலிஷ் போடும் காட்சிகளில் வரும் ரஜினி நெகிழ வைப்பதாகவும் இந்து தமிழ் திசை தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது? ரஜினிகாந்த், நெல்சன் கூட்டணி சறுக்கியதா? சாதித்ததா?

பட மூலாதாரம், SUN PICTURES/TWITTER

படக்குறிப்பு, 'திரைப்படத்தின் முதல் 40 நிமிடத்தில் வரும் மெதுவான காட்சிகளுக்கு ஈடு செய்யும் வகையில் இரண்டாம் பாதி தரமாக உள்ளது'

மேலும், மகனின் கொலைக்குக் காரணமான ஆட்களை ஒவ்வொருவராகத் தேடி பழிவாங்கும் காட்சிகள் தரமான சம்பவங்கள் என்றும் இந்து தமிழ் கூறியுள்ளது.

“சாதுவான முத்துவாக இருக்கும் ரஜினி, ‘டைகர்’ முத்துவேல் பாண்டியனாக மாறும் காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை திரைப்படம் எங்குமே தொய்வடையவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளது இந்து தமிழின் விமர்சனம்.

“இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நீடிக்கும் திரைப்படத்தில், படத்தின் கதையை நோக்கி நகர்வதற்கே 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. மற்ற ரஜினி படங்களைப் போல் இதில் மாஸ் ஓப்பனிங் காட்சிகள் இல்லை,” என்று கூறியுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

அதோடு, தினமும் பேரனுடன் யூட்யூப் வீடியோக்களை உருவாக்கிக் கொண்டும் காய்கறிகளை வாங்க உள்ளூர் சந்தைக்குச் சென்று வருவதுமாக தனது தினசரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினியாக வசீகரித்துள்ளார் என்றும் இங்குதான் இது நெல்சனின் திரைப்படம் என்பது நிலைநாட்டப்படுகிறது என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளையில், திரைப்படத்தின் இடைவேளை பகுதியும் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளும், முதல் 40 நிமிடத்தில் வரும் மெதுவான காட்சிகளுக்கு ஈடு செய்யும் வகையில் தரமாக உள்ளதென டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

நெல்சனின் டார்க் காமெடி ரக நகைச்சுவை எடுபடுகிறதா?

ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது? ரஜினிகாந்த், நெல்சன் கூட்டணி சறுக்கியதா? சாதித்ததா?
படக்குறிப்பு, 'இரண்டாம் பாதி பல மாஸ் காட்சிகளுடன் நகர்கிறது.'

நடிகர் ரஜினிகாந்த் ‘எந்தப் படங்களிலும் இல்லாத வகையில் தனது இமேஜ் குறித்துக் கவலைப்படாமல் நடித்துள்ளதாக’ இந்து தமிழ் விமர்சனம் வழங்கியுள்ளது. மேலும், யோகி பாபு அடிக்கும் கவுன்ட்டர்களை மற்ற பெரிய நடிகர்கள் ரஜினியை போல் ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகமே என்றும் இந்து தமிழ் பாராட்டியுள்ளது.

அதிலும் குறிப்பாக, யோகிபாபு உடனான காட்சிகளில் ரஜினியை வைத்து அவர் அடிக்கும் கவுன்ட்டர்களே முதல் பாதியைப் பெரியளவில் தூக்கிப் பிடித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. யோகிபாபுவும் ரஜினியும் சேர்ந்து வரும் காட்சிகளில் அரங்கம் முழுவதும் சிரிப்பலை.

மேலும், “இரண்டாம் பாதி பல மாஸ் காட்சிகளுடன் நகர்கிறது. குறிப்பாக, முத்துவேல் பாண்டியனின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி விவரிக்கும்போது திரைக்கதை அருமையாக உள்ளது.

ஆனால், சீக்கிரமே அந்த அதிரடியை இழந்து, கதை மெல்ல இழுக்கப்பட்டு, சிறிது ஏமாற்றத்தை அளிக்ககூடிய க்ளைமாக்ஸ் காட்சிகளுக்குப் படம் வந்துவிடுகிறது,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சித்துள்ளது.

ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது? ரஜினிகாந்த், நெல்சன் கூட்டணி சறுக்கியதா? சாதித்ததா?

பட மூலாதாரம், Mohan Lal/Twitter

படக்குறிப்பு, 'திரைப்படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.'

அதோடு, “முந்தைய ரஜினிகாந்த் திரைப்படங்களைப் போலவே இதிலும் லாஜிக் குறைகிறது. தமிழ் மொழியில் காட்டப்பட்டிருக்கும் டார்க் காமெடி ரக நகைச்சுவைகள் நன்கு வேலை செய்துள்ளன. அது நெல்சனின் முந்தைய படங்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கே எடுபடும்.

ஆனால், இந்த வகை நகைச்சுவை அனைவருக்குமானது இல்லை. மொழிபெயர்ப்பின்போது, மற்ற மொழிகளில் இந்த நகைச்சுவைகளின் உயிர்ப்பு இல்லாமல் போய்விடக்கூடும்,” என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி இல்லையா?

சமீபகாலமாக சில படங்கள் தவிர மற்ற தமிழ் படங்களில் பெரும்பான்மையாக வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு, முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி இல்லை என்பதே.

“இடைவேளைக்கு முந்தைய காட்சியே ஒரு க்ளைமாக்ஸ் போல் அமைக்கப்படுவதால், அதற்குப் பிறகு வரும் காட்சிகளில் வீரியம் குறைந்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதிலிருந்து ஜெயிலர் படமும் தப்பவில்லை,” என்று இந்து தமிழ் தெரிவித்துள்ளது.

இந்து தமிழ் விமர்சனத்தின்படி, இரண்டாம் பாதியில் திரைக்கதை பலவீனமாக எழுதப்பட்டுள்ளது. முதல் பாதியில் காமெடிக்கு உதவிய யோகி பாபு காணாமல் போய்விடுகிறார். “அதுவரை பழிவாங்கும் கதையாக போய்க்கொண்டிருந்த கதை, திடீரென ‘ஹெய்ஸ்ட்’ பாணிக்கு மாறுவது சுவாரஸ்யம் தரவில்லை,” என்று இந்து தமிழ் விமர்சித்துள்ளது.

மேலும், “அதற்காக வைக்கப்பட்ட காட்சிகளும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. முதல் பாதியில் அதகளமாக ஆர்ப்பரிக்க வைத்த காட்சி அமைப்புகள், இரண்டாம் பாதியில் பார்க்கும் நம்மை அமைதியாக்கி விடுகின்றன,” என்றும் இந்து தமிழ் விமர்சித்துள்ளது.

திரைப்படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது படத்தின் விளம்பரத்திற்கு மட்டுமே உதவியுள்ளதாக இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.

ரஜினிக்கு அடுத்து படத்தில் கவனம் ஈர்ப்பது யார்?

ரஜினிக்கு அடுத்து படத்தில் கவனம் ஈர்ப்பவராக வில்லன் கதாபாத்திரத்தில் வரும் விநாயகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று இந்து தமிழ் பாராட்டியுள்ளது.

ரம்யா கிருஷ்ணன், மிர்னா ஆகியோருக்கான காட்சிகள் மிகக் குறைவு. வசந்த் ரவி முகத்தில் எந்தவொரு உணர்வையும் காட்டாமல் வந்து செல்கிறார்.

ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது? ரஜினிகாந்த், நெல்சன் கூட்டணி சறுக்கியதா? சாதித்ததா?
படக்குறிப்பு, 'ரஜினி ரசிகர்கள் விசில் போடும்படியான காட்சிகளுக்குப் பஞ்சமில்லை.'

“தொழில்நுட்ப ரீதியாக குறை சொல்ல எதுவுமில்லை. அனிருத் பாடல்களில் மட்டுமின்றி பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கச்சிதம்,” என்று இந்து தமிழ் பாராட்டியுள்ளது.

ரஜினி ரசிகர்கள் விசில் போடும்படியான காட்சிகளுக்குப் பஞ்சமில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால், ரம்யா கிருஷ்ணன் போன்ற திறமைவாய்ந்த நடிகைக்குப் போதுமான காட்சிகள் வைக்காமல் விட்டது ஏமாற்றம் தருவதாகவும் அதன் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் ரஜினியிடம் ‘வயசானாலும் ஸ்டைலும் அழகும் உன்னவிட்டு போகல’ எனக் கூறுவார். 24 ஆண்டுகள் கழித்து ரஜினிக்கு இப்போதும் அதையே கூறமுடியும்,” என்று சிலாகித்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஆனால் ஜெயிலர் திரைப்படம் வெற்றிபெற அது மட்டுமே போதாது எனவும் கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: