தென்காசி அரசு உதவி பெறும் பள்ளியில் மதமாற்றமா?பள்ளியை விட்டு நின்ற 150க்கும் மேற்பட்ட மாணவர்கள்

- எழுதியவர், எஸ். மகேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மதமாற்ற குற்றச்சாட்டை தொடர்ந்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து போராடி வருகின்றனர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தின் மக்கள்.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா சுரண்டை அருகே உள்ள கிராமம் அச்சங்குட்டம் எனப்படும் அச்சங்குன்றம். திருநெல்வேலி சி.எஸ்.ஐ., மறைமாவட்டத்தின் கீழ் இயங்கும் திருநெல்வேலி மாவட்ட அறக்கட்டளை சங்கத்தால் (Tirunelveli District Trust Association-TDTA) நடத்தப்படும் அரசு உதவி பெறும் TDTA தொடக்கப் பள்ளி அச்சங்குன்றத்தில் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் கல்வி பயின்று வந்த அச்சங்குன்றம் ஊர் மாணவர்களை மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக பள்ளி நிர்வாகம் மீது ஊர் மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதையடுத்து இப்பள்ளியில் பயின்று வந்த அச்சங்குன்றம் மாணவர்களை 2023 மார்ச் முதல் பள்ளிக்கு அனுப்ப மறுத்து அவர்களது பெற்றோர் அவர்களது மாற்று சான்றிதழ்களையும் வாங்கி உள்ளனர். தொடர்ந்து அச்சங்குன்றம் ஊரில் அரசுப் பள்ளி அமைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது வரை 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியை விட்டு நின்றுள்ளனர்.
ஊர் மண்டபத்தில் கல்வி கற்க மாற்று ஏற்பாடு
இதற்கிடையே அந்த மாணவர்களின் தொடக்கக் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதற்காக கல்வி துறை சார்பில் இடைநின்ற மாணவர்களுக்கு சுமார் 6 கி.மீ., தொலைவில் உள்ள வீராணம் என்ற ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் பள்ளி இறுதியாண்டு தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
2023-24 கல்வி ஆண்டு துவங்கிய பின்னரும் இடைநின்ற மாணவர்களை அவர்களது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை. தற்போது அந்த மாணவர்களுக்கு அச்சங்குன்றம் ஊர் சார்பில் ஊர் திருமண மண்டபத்தில் வைத்து ஊரில் உள்ள படித்த இளைஞர்கள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
பிள்ளைகள் ஜெபம் செய்வதாக பெற்றோர் குற்றச்சாட்டு
முன்பு பள்ளி ஊருக்கு நடுவில் இருந்தது. ஆனால் சமீபத்தில் பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி, ஊருக்கு வடக்கே சற்று தொலைவில் புதிதாக கட்டடம் கட்டி அங்கே இடமாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு தான் இது போன்ற பிரச்சனைகள் எழுந்துள்ளன என்கிறார் அச்சங்குன்றம் ஊரை சேர்ந்த அழகு முத்து.
இது குறித்து பி.பி.சி., நியூஸ் தமிழிடம் அவர் பேசும் போது,
“எனது கணவர் சுப்பிரமணியம் கூலி வேலைக்கு செல்கிறார். நான் பீடி சுற்ற (பீடி தயாரிப்பு) செல்வேன். சென்ற ஆண்டு வரை இந்த பள்ளியில் தான் எனது மூத்த மகள் 4ம் வகுப்பும், இளையவள் 3 வகுப்பும் மகன் ஒன்றாம் வகுப்பும் படித்தனர்.
பள்ளி ஊரின் வடக்கே புதிய இடத்துக்கு சென்ற பிறகு குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் வர துவங்கியது. வீட்டில் சாமி கும்பிட சொன்னால் ஜெபம் செய்வோம் என கூற துவங்கினர். பள்ளிக்கு சென்று வந்த குழந்தைகளின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றம் எங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. மதம் மாற்றிவிடுவார்களோ என்ற பயத்தில் நாங்கள் எங்கள் குழந்தைகளை அதன் பிறகு அந்த பள்ளிக்கு அனுப்பவில்லை” என்றார்.
சிறுவயதில் அழகுமுத்துவும் இதே பள்ளியில் தான் படித்துள்ளார். “ நான் மட்டும் அல்ல எங்கள் ஊரில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்த பள்ளியில் தான் தொடக்க கல்வி கற்றோம். அப்போது இது போன்று பிரச்சனைகள் கிடையாது” என்றார் அவர்.
தேவாலயம் கட்ட எதிர்ப்பு
அச்சங்குன்றம் ஊரில் சுமார் 1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பான்மையாக இந்துக்களும் சிறிய எண்ணிக்கையில் கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர்.
சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் இந்த அரசு உதவி பெறும் பள்ளி இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு, பழைய பள்ளி இயங்கி வந்த இடத்தில் தேவாலயம் கட்ட பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பள்ளி அமைக்கக் கோரிக்கை
அச்சங்குன்றம் ஊரில் தொடக்கக் கல்வி கற்க இந்த ஒரு அரசு உதவி பெறும் பள்ளி மட்டுமே உள்ளது. இதை தவிர, சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் தான் வேறு பள்ளி அமைந்துள்ளது.
சிறுபிள்ளைகளை தனியாக அவ்வுளவு தூரம் அனுப்ப முடியாது எனவும், தங்கள் ஊரிலேயே அரசுப் பள்ளி அமைக்க வேண்டும் எனவும் அச்சங்குன்றம் ஊரை சேர்ந்த சவுந்தர் ராஜ் தெரிவிக்கிறார்.
ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவரது மகன், குற்றச்சாட்டுக்கு உள்ளான அந்த பள்ளியில் தான் ஒன்றாம் வகுப்பு படித்துள்ளார்.
“அந்தப் பள்ளியில் மதமாற்ற பிரச்சனை உள்ளது. மாணவர்களிடம் கிறிஸ்துவ மதம் சார்ந்த நூல்களை வாங்க வேண்டும் என கட்டாயப் படுத்தியுள்ளனர். மேலும் கல்வி கற்பித்தலும் சரியாக இல்லை. எனவே எனது மகனை அந்த பள்ளிக்கு அனுப்பவில்லை. எங்கள் ஊரில் அரசு பள்ளி அமைக்க வேண்டும். அது தான் எங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு” என்கிறார் சவுந்தர் ராஜ்.
தற்போது குற்றச்சாட்டுக்கு உள்ளான தொடக்க பள்ளியில் 20 க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மாற்றம்

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையே பள்ளி நிர்வாகம் சார்பில் அச்சங்குன்றம் TDTA தொடக்க பள்ளியின் முந்தைய தலைமை ஆசிரியர் மாற்றப்பட்டு புதிதாக மனோகர் என்பவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளி மதமாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு குறித்து தலைமை ஆசிரியர் மனோகரிடம் பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது. அப்போது பேசிய தலைமை ஆசிரியர் மனோகர் “ பள்ளியில் பிரச்சனைகளுக்கு ஏற்பட்ட பிறகு நிர்வாகம் என்னை இங்கு நியமித்துள்ளது. இதற்கு முன்பு நான் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சுமார் மூன்றாண்டு காலம் பணியாற்றியுள்ளேன். இவ்வூர் மக்களுடன் எனக்கு சுமூகமான உறவு இருந்தது. அதனால் என்னை மீண்டும் பணியமர்த்தியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், “கடந்த கல்வி ஆண்டில் 177 குழந்தைகள் எங்கள் பள்ளியில் படித்து வந்தனர். அவர்களில் 76 பேருக்கு மாற்று சான்றிதழ் (டி.சி.,) வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் ‘மாணவர் அடையாள எண் (EMIS) மூலம் வேறு பள்ளிகளுக்கு சென்று விட்டனர். தற்போது இங்கு 16 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மாணவர்கள் வராத போது அவர்களின் சான்றிதழை மட்டும் வைத்து என்ன பயன். நான் வந்த பிறகு தான் அவர்களுக்கு டி.சி., வழங்கினேன்” என்றார்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தப் பள்ளியில் இத்தனை காலமாக எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் தற்போது ஊர் மக்களின் நம்பிக்கையை பெற தான் முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். “நிச்சயமாக விரைவில் நிலைமை சரியாகி இவ்வூர் மக்கள் எங்கள் பள்ளியில் சேர வருவார்கள்” என அவர் கூறினார்.
மாணவர்களின் கல்வி தொடர மாற்று ஏற்பாடு

தற்போது, அச்சங்குன்றம் ஊர் பொதுமக்கள் தங்களுக்கு தனியாக ஒரு அரசு பள்ளி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை குறித்து விரிவான அறிக்கையை கல்வி துறைக்கு அனுப்புவோம், என்றார் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (CEO) முத்தையா.
“அரசுப் பள்ளி அமைப்பது தொடர்பாக அரசுதான் முடிவு செய்ய முடியும். ஆனால் அதுவரை அவர்களது குழந்தைகளை அவர்கள் விரும்பும் ஏதாவது பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளோம். குழந்தைகளின் மாற்று சான்றிதழை வாங்கி விட்டு அவர்களை வேறு பள்ளியில் சேர்க்காமல் வைத்திருப்பது தவறு என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்துள்ளோம்” என்றார் அவர்.
'மதமாற்ற புகார் உண்மையல்ல'
மதமாற்ற குற்றாச்சாட்டுகள் உண்மை அல்ல என்று பிபிசி தமிழிடம் பேசிய தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா தெரிவித்தார். " நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கூறும் புகார் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. "என்றார்.
மேலும், "அவர்களது கோரிக்கைகளை முழுவதுமாக அரசுக்கு அனுப்பிவிட்டோம். அது பரிசீலிக்கப்படும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வைத்திருக்கக் கூடாது. ஏற்கனவே மூன்று மாதங்கள் பள்ளிக்கு செல்லாமல் கடந்து விட்டது. ஆனால் அவர்கள் அனுப்ப மறுத்ததோடு புது அரசு பள்ளி தான் வேண்டும் என கூறுகின்றனர்.
குழந்தைகளை உடனே பள்ளிக்கு அனுப்புங்கள் அல்லது வேறு பள்ளியில் சேருங்கள் அல்லது கட்டாய கல்வி சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்போம் எனக் கூறி அவர்களுக்கு நோட்டீஸ் அளித்துளோம்", என்றார் கோட்டாட்சியர் லாவண்யா.
அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்ற குழந்தைகளில் 52 குழந்தைகளை அவர்களது பெற்றோர் அருகில் உள்ள வேறு அரசு பள்ளியில் சேர்த்து விட்டனர். தற்போது 76 குழந்தைகள் எந்த பள்ளியிலும் சேராமல் உள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறை, காவல்துறை கல்வி துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் புதன் கிழமை அச்சங்குன்றம் ஊர் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இடைநின்ற மாணவர்களை உடனடியாக வேறு பள்ளிகளில் சேர்த்து அவர்களது கல்வியை தொடர கிராம மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிக்கு அனுப்ப தேவையான போக்குவரத்து வசதிகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












