எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு மணிப்பூர் குறித்துப் பேசிய பிரதமர் - என்ன கூறினார்?

பட மூலாதாரம், SANSAD TV
எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி மணிப்பூர் விரைவில் அமைதி நிலைக்கு திரும்பும் என்றும், மணிப்பூர் மக்களுடன் இந்த நாட்டு மக்கள் இருப்பதாகவும் உறுதியளித்தார்.
தொடர்ந்து, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடந்தது. மோதி உரையின்போதே எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், அவர் நாடாளுமன்றத்தில் அதுகுறித்து பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இந்நிலையில், விவாதத்தில் பங்கெடுத்துப் பேசுவதற்காக இன்று மாலை சுமார் 4 மணியளவில் மக்களவைக்கு வந்தார் பிரதமர் நரேந்திர மோதி.
அப்போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதிலளித்தார். தனது உரையைத் தொடங்கும்போது, நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கடவுளின் ஆசிர்வாதமாக கருதுவதாக பிரதமர் கூறினார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிக்கொண்டிருந்த மோதி, மணிப்பூர் விவகாரம் குறித்து பேசாததால், மணிப்பூர் மணிப்பூர் என எதிர்க்கட்சி எம்பி.,கள் கோஷமிட்டனர்.
மணிப்பூர் குறித்து என்ன பேசினார் மோதி ?
பிரதமர் மோதி பேசத் தொடங்கி ஒன்றரை மணி நேரத்திற்கு மேலானது. ஆனால் அவர் மணிப்பூர் என்ற வார்த்தையை ஒருமுறை கூட பயன்படுத்தவில்லை என்றும் மணிப்பூர் குறித்துப் பேச வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
தொடர்ந்து பேசி பிரதமர், "ஒரு ஏழைத்தாயின் மகன் இன்று பிரதமராக இருக்கிறேன். ஒரு ஏழைத்தாயின் மகன் பிரதமராக இருப்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை," என்றார்.
மோதி உரையின்போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
மோதி இவ்வாறு பேசியதைக் கேட்ட எதிர்க்கட்சியினர், அவர் பேசிக்கொண்டிருந்தபோதே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
“எதிர்க்கட்சிகளுக்குக் கேட்க பொறுமை இல்லை. பொய் சொல்லிவிட்டு ஓடுங்கள். இது எதிர்க்கட்சிகளின் விளையாட்டு,” என்றார் மோதி.
“எதிர்க்கட்சிகளுக்குப் பேசும் தைரியம் உள்ளது. ஆனால், கேட்கும் திறன் இல்லை,” எனவும் பிரதமர் சாடினார்.
“மணிப்பூர் விஷயத்தில் உள்துறை அமைச்சரின் பேச்சுக்கு செவி சாய்த்திருந்தால், அவர் எல்லாப் பிரச்னைகளையும் விவாதித்திருப்பார். மணிப்பூர் நிலைமை குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு மணிநேரம் விரிவாக விளக்கி, நாட்டின் கவலையை வெளிப்படுத்தினார். எதிர்க்கட்சிகள் உரையாட அவரைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்," என்றார்.
மணிப்பூரில் அமைதியான சூழல் நிலவும்: மோதி உறுதி

பட மூலாதாரம், SANSAD TV
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு மணிப்பூர் குறித்து பிரதமர் மோதி பேசினார். அப்போது அவர் மணிப்பூர் குறித்த நீதிமன்ற நடவடிக்கைகளை மிகவும் கவனமாக கவனித்து வருவதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், பெண்களுக்கு எதிராக அங்கு நடந்த குற்றங்கள் மன்னிக்க முடியாதவை எனப் பேசினார்.
“வன்முறையால் பல குடும்பங்கள் சிரமப்படுகின்றன. பலர் தங்கள் நெருங்கிய உறவினர்களை இழந்துள்ளனர்.பெண்களுக்கு எதிராக கடுமையான குற்றங்கள் நடந்துள்ளன. இந்த குற்றங்கள் மன்னிக்க முடியாதவை.
குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளின் மூலம் நிச்சயமாக விரைவில் அமைதியான சூழல் நிலவும் என நாட்டின் அனைத்த குடிமக்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன்,” என்று மோதி பேசினார்.
“இயல்பு நிலைக்குத் திரும்ப மணிப்பூர் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். நாடு உங்களுடன் இருக்கிறது என்பதை அங்குள்ள தாய்மார்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் அமைதி ஏற்படும்.
மணிப்பூர் மீண்டும் வேகமாக வளர்ச்சிப் பாதையில் முன்னேற அந்த மாநில மக்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வர் என நான் உறுதியளிக்கிறேன்,” என்றார்.
வெளியே சென்றவர்களிடம் கச்சத்தீவு பற்றி கேளுங்கள்: மோதி

பட மூலாதாரம், SANSAD TV
“திமுக.,வினரும், அவர்களது முதல்வரும், கச்சத்தீவை மீட்கக்கோரி எனக்குத் தொடர்ந்து கடிதம் எழுதுகின்றனர். ஆனால், கச்சத்தீவு எங்கிருக்கிறது. அது தமிழ்நாட்டைத் தாண்டித்தான் இருக்கிறது. யார் அதை வேறு நாட்டிற்கு கொடுத்தது? எப்போது கொடுக்கப்பட்டது ?
அங்கு பாரத மாதா இல்லையா? நீங்கள் அதை உடைத்தீர்கள். யார் அப்போது ஆட்சியில் இருந்தது? இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சிதான் அதைச் செய்தது.
இந்திய தாய்நாட்டைத் தொடர்ந்து பிரித்த வரலாறு காங்கிரஸுக்கு உண்டு. தாய்நாட்டின் மீது அவர்களுக்கு இருந்த அன்பு என்ன?” எனக் கேள்வி எழுப்பினார் பிரதமர் மோதி.
மேலும், வடகிழக்கு மாநிலங்கள் மீது எதிர்க்கட்சிகளைவிடத் தனக்கு அதிகம் அக்கறை உள்ளதாகக் கூறிய மோதி, 40 முறைக்கும் மேல் அந்தப் பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளதாகக் கூறினார்.
எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளன: பிரதமர் மோதி
மூன்று நாட்களாக எதிர்க்கட்சிகளின் முன்மொழிவு குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் அவையின் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்,” என்று பிரதமர் விமர்சித்தார்.
மேலும், “கடந்த காலங்களில் பழங்குடியினர் தொடர்பான மசோதா, டிஜிட்டல் தரவு பாதுகாப்பு மசோதா, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா எனப் பல முக்கிய மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த மசோதாக்கள் நமது மீனவர்களின் உரிமைகளுக்காகவும் கேரளாவுக்கு அதிக பலன் அளிக்கும் வகையிலும் இருந்தன. அத்தகைய மசோதா மீதான விவாதத்திலாவது கேரள எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீனவர்கள் மீது அக்கறையில்லாத வகையில் அவர்கள் மீது அரசியல் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
எதிர்காலம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும். ஆனால், உங்களுக்கு அரசியல்தான் முன்னுரிமை. ஏழைகள், பழங்குடியினர், தலித்துகளின் நலன்களைப் பற்றி விவாதிக்கும் இதுபோன்ற பல மசோதாக்கள் அவர்களுடைய எதிர்காலத்துடன் சம்பந்தப்பட்டுள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களை இங்கு அனுப்பி வைத்த பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் துரோகம் இழைத்துள்ளன,” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி தானே ? - பிரதமர்

பட மூலாதாரம், SANSAD TV
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பிரதமர் மோதி உரையாற்றி கொண்டிருந்தபோது, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இறந்து புதைக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கான இறுதி அஞ்சலி அண்மையில் பெங்களூருவில் நடந்ததாகவும் கடுமையாக தாக்கிப் பேசினார்.
இந்தியா என்றால் வடநாடு என்று திமுக அமைச்சர் பேசியது குறித்து பிரதமர் விமர்சித்துப் பேசினார். “ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர், அப்துல் கலாம் ஆகிய தலைவர்களைக் கொடுத்தது தமிழக மண். பெரிய பெரிய தலைவர்களைக் கொடுத்த மண்ணில் இருந்து இப்படியான தலைவர்களும் வந்திருக்கிறார்கள். திமுகவை பொறுத்தவரை தமிழ்நாடு இந்தியாவில் இல்லை எனக் கருதுகிறார்கள்,” என்று பிரதமர் விமர்சித்தார்.
மேலும், இந்தியாவை எதிர்க்கட்சிகளின் கூட்டணி பிளவுபடுத்திவிட்டதாக பிரதமர் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்தியா கூட்டணியில் உள்ள அனைவருக்கும் பிரதமர் ஆக வேண்டுமென ஆசை இருப்பதாகவும் கூறினார்.
அதோடு, ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியை பிரதமர் விமர்சித்தார். 2014ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று விமர்சித்த பிரதமர், ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் இருக்கும் “எதிர்க்கட்சிகள் கூட்டணியில் முரண்பாடுகள் நிறைந்துள்ளதாகவும்” பிரதமர் தெரிவித்தார்.
அம்பேத்கரை இகழ்ந்த கட்சி காங்கிரஸ்

பட மூலாதாரம், ANI
தொடர்ந்து காங்கிரஸை விமர்சித்த மோதி, "பிரிட்டிஷ் பிரஜை ஏ.ஓ.ஹியூம் தொடங்கிய கட்சி காங்கிரஸ். காந்தியின் பெயரை நேரு குடும்பத்தினர் பயன்படுத்தலாமா, அம்பேத்கரையும், பாபு ஜெகஜீவன் ராமையும் இகழ்ந்த கட்சி காங்கிரஸ்," எனக் கடுமையாக சாடினார்.
"எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு அனுகூலமானது. 2024 தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி, பழைய சாதனைகளை முறியடித்து, மக்களின் ஆசியுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்,” என்று தெரிவித்தார்.
“எதிர்க்கட்சிகள் ஒரு விஷயத்திற்காக ஒன்றிணைந்து, களத்தை வேண்டுமானால் அமைத்திருக்கலாம். ஆனால், அதில் பவுண்டரிகளும் சிக்சர்களும் இங்கிருந்து (தேசிய ஜனநாயக கூட்டணி) தான் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நோ பால்களாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள்,” என்று தெரிவித்தார் பிரதமர் மோதி.
"மோதியின் பேச்சு சலிப்பை ஏற்படுத்தியது"
“கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோதி பேசிய அனைத்து உரைகளிலும் இன்றைய உரையே மிகவும் சலிப்பை ஏற்படுத்தியது. மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டிப்பார் என்று நினைத்தோம்.
ஹரியாணா அரசின் புல்டோசர் நடவடிக்கையை கண்டிப்பார் என்று நினைத்தோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை,” என்றார் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி.
அவையில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, “மணிப்பூர் வன்முறை தொடர்பாகப் பேசுவார் எனக் காத்திருந்தோம். அவர் பேசவில்லை. வெளிநடப்பு செய்துவிட்டோம்,” என்றார்.
திமுக.,வை சாடிப் பேசியிருந்தாரே என ஏ.என்.ஐ செய்தியாளர் கேட்டபோது, “அவர் அனைவரையும் சாடினார். ஆனால், மணிப்பூர் வன்முறை குறித்து மட்டும் எந்தப் பதிலும் அளிக்கவில்லை,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












