மணிப்பூர் வன்முறை, வைரல் வீடியோ குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாகப் பேசிய அமித் ஷா - முழு விவரம்

பட மூலாதாரம், ANI
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பிரதமர் நரேந்திர மோதி இன்று உரையாற்றினார். அப்போது மணிப்பூர் வன்முறை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவே தனது உரையின்போது விளக்கமாகப் பேசியதாகத் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற மக்களவையில் புதன்கிழமை உரையாற்றினார். அப்போது, மணிப்பூரில் எப்படி வன்முறை வெடித்தது என்பது குறித்து அவர் விளக்கியது என்ன?
மணிப்பூர் பிரச்னையை முன்வைத்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறிய உள்துறை அமைச்சர், மணிப்பூரின் குகி மற்றும் மெய்தேய் சமூகத்தினர் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், இருதரப்பையும் தங்களுடன் பேசுமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது, மாநில முதல்வர் என்.பிரேன் சிங்கையும் அவர் ஆதரித்துப் பேசினார்.
அமித் ஷா அவையில் பேசும்போது, மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலவரத்தைப் பற்றி மட்டும் பேசாமல், இந்தக் கொடூரமான வன்முறைக்கு வித்திட்ட சூழல் குறித்தும் விவரித்தார்.
மணிப்பூர் வன்முறையின் மூல காரணம் என்று அமைச்சர் கூறியது என்ன?
அமித் ஷா தனது இரண்டு மணிநேர உரையில், மணிப்பூரில் நடந்த வன்முறையை 2021இல் மியான்மரில் நடந்த ராணுவப் புரட்சியுடன் தொடர்புபடுத்திப் பேசினார்.
"மியான்மரில் குகி ஜனநாயக முன்னணி போராட்டத்தைத் தொடங்கியபோது, ராணுவ ஆட்சியாளர்கள் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தனர். இந்திய எல்லையில் தடுப்புவேலி இல்லாததால், ஏராளமான குகி சமூகத்தினர் மணிப்பூர் மற்றும் மிசோரமுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து உள்ளே வந்தனர்.
இந்த குகி அகதிகள் மணிப்பூர் பள்ளத்தாக்கு காடுகளில் குடியேறியதாகவும், இதனால் மக்கள்தொகைப் பகுப்பு மாறிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்ததாகவும்" அமித் ஷா கூறினார்.
மார்ச் 27 அன்று வந்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள்காட்டிய அமித் ஷா, இது 'எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது" என்று கூறினார்.
மெய்தேய் சமூகத்தைப் பட்டியல் பழங்குடியினரில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான கோப்புக்கு மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகம் பதிலளிக்கக் கோருமாறு, மணிப்பூர் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பட மூலாதாரம், GETTY IMAGES
பிரேன் சிங் குறித்து அமித் ஷா
"பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மனுவை உயர்நீதிமன்றம் திடீரென விசாரித்தது. நீதிமன்றம், பழங்குடியினருக்கான தேசிய ஆணையம், மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் அல்லது மணிப்பூர் அரசிடம் இருந்து நீதிமன்றம் பிரமாணப் பத்திரங்களைப் பெறவில்லை. எந்த சட்ட நடவடிக்கையும் இல்லாமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவால், மலைப்பாங்கான பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டது.
மே 3 அன்று வன்முறை வெடித்தது. அப்போதிருந்து மணிப்பூரில் 152 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 14,898 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 1,106 எஃப்ஐஆர்கள் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன," என்று அமித் ஷா கூறினார்.
"வன்முறையை நிறுத்துமாறு மணிப்பூரின் இரு சமூகத்தினரையும் கரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து மத்திய அரசுடன் பேசி, மணிப்பூரை முன்னேற்றம் மற்றும் செழிப்புப் பாதையில் மீட்டெடுப்பதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். பேச்சுவார்த்தையால் மட்டுமே அமைதி திரும்ப முடியும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.
மணிப்பூர் முதல்வரை ஏன் மாற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்குப் பதிலளித்த அமித் ஷா, "மே 4ஆம் தேதி, அந்த மாநில தலைமைச் செயலர் மற்றும் டிஜிபியை மாற்றினோம். ஒரு விவகாரத்தில் மாநில முதல்வர் ஒத்துழைக்காமல் போகும் நிலையில்தான் அவர் மாற்றப்படுவார்; இந்த விஷயத்தில் பிரேன் சிங் ஒத்துழைத்தார்," என்று அவர் பதிலளித்தார்.
"எதிர்க்கட்சிகளின் கருத்துடன் நான் உடன்படுகிறேன், அங்கு வன்முறை நடக்கிறது, அதை யாரும் ஆதரிக்க முடியாது. ஆனால் பிரச்னையை அரசியலாக்குவது வெட்கக்கேடானது," என்றும் தமது உரையில் அமித் ஷா கூறினார்.
இந்திய-மியான்மர் எல்லை
பாஜக அரசை ஆதரித்துப் பேசிய அவர், "காங்கிரஸ் ஆட்சியின்போது மணிப்பூரில் பல வன்முறை சம்பவங்கள் நடந்தன, ஆனால் எந்த ஒரு உள்துறை அமைச்சரும் அங்கு செல்லவில்லை. நான் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தேன், எங்கள் இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தொடர்ந்து 23 நாட்கள் அங்கு தங்கினார்," என்று குறிப்பிட்டார் அமித் ஷா.
மேலும் அவர், "மணிப்பூரில் ஆறு ஆண்டுகளாக பாஜக ஆட்சி உள்ளது, ஆனால் அங்கு ஊரடங்கு உத்தரவு நிலவிக்கொண்டிருக்கவில்லை. 2021இல் மியான்மரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராணுவ ஆட்சி வந்தது. குகி ஜனநாயக முன்னணி ஜனநாயக ஆட்சிக்கான இயக்கத்தைத் தொடங்கியது, பின்னர் மிசோரம் மற்றும் மணிப்பூரில் குகி சகோதரர்கள் அகதிகளாக வந்தனர்," என்றார்.
"கடந்த 2022ஆம் ஆண்டில், இந்தியா-மியான்மர் எல்லையில் தடுப்புவேலி அமைக்கத் தொடங்கினோம், 10 கி.மீ. தொலைவுக்கு சோதனை வேலி அமைத்துள்ளோம், மொத்தம் 60 கி.மீ. அளவுக்கு வேலிகள் அமைக்கும் பணிகள் நிறைவடையவுள்ளன," என்றும் ஷா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "ராகுல் காந்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் மணிப்பூர் குறித்து விவாதிக்க அரசு விரும்பவில்லை என்ற கருத்தைப் பரப்பினர், அதேநேரம் மணிப்பூர் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று நானே அவைக்குக் கடிதம் எழுதியுள்ளேன். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கோஷம் எழுப்ப வேண்டும் என்பதுதான்," என்று எதிர்க்கட்சிகளை சாடினார் அமித் ஷா.

பட மூலாதாரம், ANI
வைரல் வீடியோ குறித்து அமித் ஷா கூறியது என்ன?
மணிப்பூரில் மத்திய அரசு தோல்வியடைந்து வருவதாகவும், பிரதமர் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமித் ஷா, வன்முறை வெடித்த பிறகு, அன்று காலை 4 மணி மற்றும் 6.30 மணிக்கு பிரதமர் தன்னை அழைத்ததாகக் கூறினார்.
"நாங்கள் பிரதமருடன் 16 வீடியோ கான்பரன்ஸ்களை நடத்தினோம், 36,000 CAPF துருப்புகளை மணிப்பூருக்கு அனுப்பினோம், விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தினோம், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியை மாற்றினோம், பாதுகாப்பு ஆலோசகரை அனுப்பினோம். இதையெல்லாம் நாங்கள் மே 4 அன்று மாலைக்குள் செய்தோம்," என்று அமித் ஷா கூறினார்.
(மே 3 அன்று மாநிலத்தில் வன்முறை வெடித்தது).
கடந்த மாதம் மணிப்பூரில் வைரலான வீடியோ குறித்தும் அவையில் அமித் ஷா புதன்கிழமை பேசினார். அப்போது அவர் "துரதிர்ஷ்டவசமான இந்தச் சம்பவம் மே 4 அன்று நடந்தது. உலகில் எந்தப் பெண்ணுக்கும் இதுபோன்ற சம்பவம் நடப்பது மிகவும் வருத்தமளிக்கிறது," என்றார் ஷா.
துணை ராணுவப் படை
"நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக, மே 4ஆம் தேதி வீடியோ ஏன் வந்தது என்றும் கேள்வி எழுந்துள்ளது. அந்த வீடியோ யாரிடமாவது இருந்தால், அதை காவல்துறையிடம் கொடுத்திருக்க வேண்டும். மாறாக அதை இப்படி பகிரங்கப்படுத்தியவர்கள், குறைந்தபட்சம் அந்தப் பெண்களின் மரியாதை குறித்தாவது சிந்தித்திருக்க வேண்டும்," என்று அமித் ஷா வலியுறுத்தினார்.
அமைதிக்கான முயற்சிகள் குறித்து அவர் கூறுகையில், "மணிப்பூரில் மூன்று பகல் மூன்று இரவுகள் தங்கினேன். உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா 23 நாட்கள் அங்கேயே தங்கினார். இதுகுறித்து விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டது," என்று அமித் ஷா தெரிவித்தார்.
மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினர் வாழும் பகுதிகளுக்கு இடையே 36,000 துணை ராணுவ பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு செயல்முறை உருவாக்கப்பட்டுள்ளது," என்றும் அவர் பேசினார்.
"ஊடுருவலைத் தடுத்து நிறுத்துவோம், மேலும் இதுதொடர்பாக மியான்மருடன் பேசியுள்ளோம், இந்த திசையில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். மணிப்பூரில் வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை ஒப்புக்கொள்கிறேன்.
அங்கு நடந்தது வெட்கக்கேடானதுதான். ஆனால் அதில் அரசியல் செய்வது அதைவிட வெட்கக்கேடானது," என்று அமித் ஷா தமது நீண்ட உரையில் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








