கடன் வாங்கிய நபரிடம் பணத்தை வசூலிக்கும்போது வங்கி அவரை எப்படி நடத்த வேண்டும்?

கடன், வங்கி, நிதி நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

நடுத்தர குடும்பங்களைப் பொருத்தவரை பெரும்பாலான குடும்பங்களில் ஏதாவது ஒரு கட்டத்தில், கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும்.

தனிநபர் கடன், வீட்டுக் கடன், தொழில் தொடங்குவதற்கு கடன், தொழிலை விரிவுபடத்துவதற்கான கடன் என ஏதாவது தேவைக்காக கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

கடன் வாங்கிய பிறகு, அதன் தவணைகளைச் சரியான நேரத்தில் செலுத்தும் வரை எல்லாமே சரியாக நடக்கும். ஆனால், அது தவறும்போது தான் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்?

அதை வங்கிகளோ நிதி நிறுவனங்களொ எப்படி வசூலிக்க வேண்டும்?

கடன் வாங்கியவர்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன?

இங்கு விரிவாகப் பார்ப்போம்...

கடன் தவணையை திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன ஆகும்?

பொதுவாக, கடன் தவணைகளைச் சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை நன்றாக வைத்திருக்க அவசியமானது. தவணைகளைச் செலுத்துவதில் ஏதேனும் தடங்கல்கள் இருந்தால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.

நீங்கள் தவணைகளைத் தவறவிட்டால், கடன் மீட்பு செயல்முறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில நேரம், கடனை வசூலிக்க வங்கிகள் சட்டத்தை மீறிய வழிமுறைகளையும் பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணத்திற்கு, சுரேஷ் என்ற நபர் கடன் வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

வருமானம் இல்லாமல் போவது அல்லது வேலை இழப்பு போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் அவரால் கடனைச் செலுத்த முடியாமல் போனால், வங்கிக் கடன் வசூல் பிரச்னையை எதிர்கொள்கிறது. அப்போது அவரது வங்கி அவரது தவணைத் தொகையைக் குறைக்கலாம், திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்கலாம்.

சில நேரங்களில் வங்கிகளும் சிறப்புச் சலுகைகளை வழங்குகின்றன. சுரேஷ் கடனை திருப்பிச் செலுத்த கூடுதல் கால அவகாசம் பெறலாம். அல்லது எதிர்காலத்தில் தவணைகளை முறையாகச் செலுத்த முடியும் என்று வங்கி உறுதியாக நம்பினால், சில நேரங்களில் சிறிய தள்ளுபடியும் வழங்கப்படலாம்.

ஆனால், இவை அனைத்தும் சுரேஷின் கிரெடிட் ஸ்கோரை நிச்சயமாகப் பாதிக்கும்.

கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்து, கடன் திருப்பிச் செலுத்துவதிலும் நிச்சயமற்ற நிலை இருந்து, சுரேஷ் கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் போனால், அவருக்கு எந்தத் தள்ளுபடியும் கிடைக்காது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், வங்கி சுரேஷ் அடமானம் வைத்த சொத்தை விற்று அதன்மூலம் பணத்தை மீட்கும். இதில் கடன் தொகையைவிட அதிகமான பணம் கிடைத்தால், மீதி சுரேஷுக்கு வழங்கப்படும்.

கடன் மீட்பு முகவர்கள் யார்?

இப்போதெல்லாம் சில நிதி நிறுவனங்கள், கொடுத்த கடனை வசூலிப்பதற்கு முகவர்களை நியமிக்கின்றன.

இந்த முகவர்களின் செயல்பாடுகள் அச்சம் அல்லது பீதியான சூழலை உருவாக்குவதைப் பற்றிய செய்திகளை நாம் பார்க்கிறோம். சில இடங்களில் இந்த முகவர்களின் மோசமான நடவடிக்கைகள் காரணமாக அல்லது அது பற்றிய பயம் காரணமாக, கடன் வாங்கியவர்கள் தவறான முடிவுகள் எடுத்த செய்திகளையும் பார்க்கிறோம்.

ஆனால் இந்த முகவர்களுக்கும் ரிசர்வ் வங்கி விதிகளை வகுத்துள்ளது.

கடன், வங்கி, நிதி நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடன் மீட்பு முகவர்களின் செயல்பாடுகள் அச்சம் அல்லது பீதியான சூழலை உருவாக்குவதைப் பற்றிய செய்திகளை நாம் பார்க்கிறோம்

கடன் வாங்குபவருக்கு உள்ள உரிமைகள் என்ன?

கடனைத் திரும்பப் பெறுவதற்கான நேரம் வந்தால் என்ன செய்வது என்று வங்கி தயாராக இருக்க வேண்டும். மீட்புச் செயல்முறை திடீரென இருக்கக்கூடாது. அதன் செயல்முறை நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நிதி நிறுவனம் அதன் முகவர் பற்றிய விவரங்களை கடன் வாங்குபவருக்கு வழங்க வேண்டும். திடீரென்று யாரேனும் சென்று வசூல் செய்வது சட்ட விரோதம்.

முகவர் கடன் வாங்குபவரின் வீட்டிற்கு வசூலிக்கச் செல்லும்போது, முகவர் வங்கியில் இருந்து நோட்டீஸ் மற்றும் வங்கியில் இருந்து அவர் அங்கீகரிக்கப்பட்ட முகவர் என்று ஒரு கடிதம் வைத்திருக்க வேண்டும்.

கடன் வாங்கியவர் புகார் அளித்தால், புகார் தீர்க்கப்படும் வரை வங்கியால் ஒரு முகவரை நியமிக்க முடியாது. அந்தப் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது வங்கியின் கடமை.

கடன் வாங்குபவருக்கும் சில உரிமைகள் வழங்கப்படுகின்றன. அவருக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும், அவரது தரப்பு வாதம் கேட்கப்பட வேண்டும், அவரது குறைகளைக் கேட்க வேண்டும், அவரை கண்ணியமாக நடத்த வேண்டும்.

எந்தவொரு நிதி நிறுவனத்திற்கும் சட்ட விதிகளை மீறிச் செயல்படவோ, கடன் வாங்கியவரை கட்டாயப்படுத்தவோ உரிமை இல்லை.

டிஜிட்டல் தளங்களில் கடன் பெறும்போது தெரிந்துகொள்ள் வேண்டியவை

இப்போதெல்லாம் பல டிஜிட்டல் தளங்களில் மக்கள் கடன் வாங்குகிறார்கள்.

குறைந்த நேரத்தில் கடன் பெற இந்தத் தளங்கள் பயன்படுத்தப்படுகிறன.

இவற்றுக்கும் ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

பெரும்பாலும் இந்த நிறுவனங்கள் தாமே கடன் வழங்குவதாகப் பாசாங்கு செய்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு உண்மையில் கடன் வழங்கும் வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனம் பற்றிய தகவல்களை வழங்குவதில்லை. இந்தத் தகவலைப் பகிர்வது அவசியம்.

புகார் தெரிவிக்க வாடிக்கையாளர்கள் இதை அறிந்திருக்க வேண்டும்.

மேலும், இந்த நிறுவனங்கள் தங்கள் பரிவர்த்தனைகளை வெளிப்படைத்தன்மையுடன் வைத்திருப்பது, ஒழுங்காக நடந்துகொள்வது, வட்டியை மரியாதையாக வசூலிப்பது ஆகியவை மிகவும் அவசியம்.

வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இதுபோன்ற டிஜிட்டல் தளங்களை வைத்திருந்தால், அவற்றின் தகவல்களை தங்கள் இணையதளத்தில் வழங்குவது அவசியம்.

கடன் வசூலிக்க வரும் முகவர்கள், யாருக்காக வேலை செய்கிறார்கள் என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். கடன் அனுமதிக்கப்பட்டு, கடன் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதும், வங்கியின் லெட்டர்ஹெட்டில் ஒப்புதல் கடிதம் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் அனைத்து விதிமுறைகளுடனும் கடன் ஒப்பந்தத்தின் நகலையும் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.

நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பது தொடர்பான புகார்களை வாடிக்கையாளர்கள் இங்கே கொடுக்கலாம் - https://cms.rbi.org.in/cms/indexpage.html#eng

கடன், வங்கி, நிதி நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூன்று தவணைகள் கடன் செலுத்தத் தவறியிருந்தால், அவரது கணக்கு செயல்படாத கணக்கு, அதாவது செயல்படாத சொத்து (Non Performing Asset – NPA) என அறிவிக்கப்படும்

சொத்துகளை வங்கி எப்படி விற்கும்?

கடன் மீட்பு செயல்முறை பற்றி மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கணேஷ் சவானி பிபிசிக்கு கூடுதல் தகவல்களை வழங்கினார்.

பொதுவாக, கடன் வாங்குபவர், கடன் வாங்கும்போது வங்கியில் எதையாவது அடமானம் வைத்திருப்பார். அவர் மூன்று தவணைகள் கடன் செலுத்தத் தவறியிருந்தால், அவரது கணக்கு செயல்படாத கணக்கு, அதாவது செயல்படாத சொத்து (Non Performing Asset – NPA) என அறிவிக்கப்படும், என்றார்.

“பின்னர் அந்த வழக்கு பத்திரமயமாக்கல் சட்டத்தின் பிரிவு 13இன் கீழ் அந்தப் பகுதியின் தலைமை அமர்வு நீதிபதியிடம் தாக்கல் செய்யப்படும். நோட்டீஸ் அனுப்பிய பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், வழக்கு Debts Recovery Appellate Tribunal (DRT), அதாவது கடன் மீட்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்குச் செல்கிறது,” என்றார் சவானி.

மேலும் பேசிய அவர், “கடன் வாங்கியவர் இந்த வழக்கில் எதிர்த்து வாதம் செய்வார். அது தோல்வியுற்றால், அவரது சொத்து ஏலம் விடப்படும். அதற்கான அறிவிப்பு பிராந்திய மற்றும் ஆங்கில நாளிதழ்களில் கொடுக்கப்படுகிறது. பின்னர் இ-டெண்டர், இ-ஏலம் மூலம் அந்தச் சொத்து அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இது உள்ளூர் சார் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டுகிறது," என்றார்.

ஆனால் இந்தச் செயல்முறைகளுக்கு எல்லாம் முன்னர், வேறு பல வழிமுறைகள் பரிசீலிக்கப்படும் என்கிறார் சவானி. கடனை மொத்தமாகத் திருப்பிச் செலுத்தும் (One Time Settlement – OTS) முறையும் அதில் ஒன்று. பல வங்கிகள் வட்டியைக் குறைக்கின்றன. “ஆனால் இந்த நிலைமை ஒவ்வொரு வழக்கிற்கும் மாறுபடும்," என்கிறார் சவானி.

எந்த நிதி நிறுவனமும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீற முடியாது?

கடனை வசூலிப்பது தொடர்பாக, மும்பை உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் இந்திரஜித் ஜோஷி பிபிசியிடம் பேசினார்.

கடன் வசூல் பற்றி யோசிக்கும்போது, அது எந்த வகையான கடன் என்பதைப் பார்க்க வேண்டும், என்கிறார் அவர்.

“ஒரு சொத்து அடமானம் வைக்கப்பட்டிருந்தால், அதை விற்று பணம் திரும்பப் பெறப்படுகிறது. தனிநபர் கடனாக இருந்தால், அது காப்பீடு செய்யப்படுகிறது. காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் காப்பீட்டுக்கான பணம் கடன் தவணைகளில் இருந்து பெறப்படுகிறது. பெரும்பாலும் கடன் வாங்குபவர்களுக்கு இது தெரிவதில்லை,” என்கிறார் ஜோஷி.

மேலும் பேசிய அவர், சில கடன்களுக்கு உத்தரவாததாரர்கள் எனப்படும் guarantors உள்ளனர். பணத்தை அவர்களிடமிருந்து எடுக்கலாமா அல்லது கடன் வாங்கியவரிடமிருந்தே எடுக்க வேண்டுமா என்பதை வங்கி தீர்மானிக்கும் என்கிறார்.

“எந்தவொரு நபரும் கடன் வாங்கும்போது, அதன் ஒப்பந்தத்தில் அதற்கான அத்தனை விதிமுறைகளும் நிபந்தனைகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். நிச்சயமாக, எந்தவொரு வங்கியும், நிதி நிறுவனமும் இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அதை மீறி எந்தச் செயல்முறையையும் பின்பற்ற முடியாது,” என்கிறார் ஜோஷி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: