பட்டியல் சாதி மாணவரை சரமாரியாக வெட்டிய சக மாணவர்கள் - படுகாயம் அடைந்த மாணவர் சொல்வது என்ன?

பாதிக்கப்பட்ட மாணவன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிக்க சாதி மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட 17 வயது பட்டியல் சாதி மாணவர் மற்றும் அவரது 14 வயது தங்கை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
    • பதவி, பிபிசி தமிழ்

தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று பாடநூல்கள் கூறுகின்றன. ஆனால், கல்வி பயிலச் சென்ற பள்ளியில்தான் ஒரு பட்டியலின மாணவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதையும் மீறி பள்ளிக்கு சென்றதால், அவர் வீடு புகுந்து அரிவாளால் தாக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிக்க சாதி மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட 17 வயது பட்டியல் சாதி மாணவர் மற்றும் அவரது 14 வயது தங்கை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு சிறார்களை சிறார் நீதி வாரியத்தில் திருநெல்வேலி மாவட்ட போலீசார் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய திருநெல்வேலி மாவட்ட கல்வி அதிகாரி, பாதிக்கப்பட்ட மாணவர் வேறு பள்ளியில் சேர விரும்பினால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடாமல் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

படுகாயமடைந்த மாணவர் மற்றும் அவரது தங்கையை பாதுகாப்பான முறையில் நல்லதொரு கல்வி நிறுவனத்தில் சேர்த்துப் படிக்க வைப்பது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் தனது கடமை என்று தெரிவித்தார்.

ஆனால், பள்ளியை மாற்றுவது எப்படி தீர்வாகும் என பிபிசி அவரிடம் கேட்டபோது, இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்ததாகவும், அதன்படி அனைத்துப் பள்ளிகளிலும் சுமூகமான சூழல் உருவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வீடு புகுந்து வெட்டிய சக வகுப்பு மாணவர்கள்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, பெருந்தெருவில் வசிக்கும் பிரபு(பெயர் மாற்றப்பட்டுள்ளது), வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு, அவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதே பள்ளியில் படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக வகுப்பு மாணவர்கள் பிரபுவின் வீட்டிற்குள் புகுந்து அவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதைப் பார்த்த பிரபுவின் தங்கை, அதைத் தடுக்க முயன்றுள்ளார். இருவரின் கூச்சல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த ஆதிக்க சாதி மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

வெட்டுக்காயங்களுடன் இருந்த இருவரையும், அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி செய்த பிறகு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பள்ளியிலேயே தொடங்கிய சாதிய வன்கொடுமை

போராடும் மக்கள்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, போலீசார் வரத் தாமதம் ஆனதால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூலை மாதம் இறுதியில் இருந்து பிரபு பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலும், பிறகு காட்டிலும் கிடைத்த வேலைகளைச் செய்து வந்துள்ளார்.

“நான் இதைப் பார்த்து, அவனை பள்ளிக்கூடம் போகச் சொல்லி சத்தம் போட்டேன். அவன், முதலில் எதுவும் சொல்லவில்லை. ரொம்ப அழுத்திக் கேட்ட பிறகு அழுதுகொண்டே, தன்னை தினமும் பள்ளியில் ஆதிக்க சாதி மாணவர்கள் இழிவாகப் பேசுவதாகவும், தான் கொண்டுபோகும் பொருட்களை பிடுங்கிக் கொள்வதாகவும் கூறினான்.

‘உங்க அம்மா எங்க வீடுகள்ல வேலை செஞ்சுதானே உன்னை படிக்க வைக்கிறா, அப்போ நீ எங்களுக்கு வேலை செஞ்சா என்ன ஆகிடும்’ என்றெல்லாம் ஆதிக்க சாதி மாணவர்கள் கேட்டதாகக் கூறினான்," என்று கூறுகிறார் அம்பேத்கர் தொடக்கப்பள்ளியில் சத்துணவுப் பணியாளராக உள்ள பிரபுவின் தாய்.

அதைக் கேட்டுத் தானும் செய்வதறியாது விட்டுவிட்டதாகவும் அவர் கூறுகிறார். பின்னர் மகன் படிக்கும் பள்ளியில் இருந்தே பள்ளிக்கு வராதது குறித்துக் கேட்டு அழைத்துள்ளனர்.

"ஆகஸ்ட் 9 ஆம் தேதி நானும் என் மகனை அழைத்துக்கொண்டு, பள்ளிக்குச் சென்று பள்ளி தலைமையாசிரியரிடம் நடந்ததையெல்லாம் கூறினோம். அவர்களும் அந்த மாணவர்களை அழைத்து எச்சரித்து, கடிதம் எழுதி வாங்கி வைத்துவிட்டு, அனுப்பிவிட்டனர்,” என நடந்தது குறித்து பிபிசியிடம் பிரபுவின் தாய் விவரித்தார்.

அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்ததை விவரித்த அவர், அன்று மாலையே பிரபுவை ஆதிக்க சாதி மாணவர்கள் மிரட்டியதாகக் கூறினார்.

“அந்த கடிதம் எழுதி வாங்கியதில்தான் அவர்களுக்கு ஏதோ பிரச்னைபோல. எங்களைப் பற்றியே நீ புகார் கொடுக்கிறாயா, உன்னை என்ன செய்கிறோம் பார் என அன்றைக்கு மாலையே மிரட்டியுள்ளனர்.

ஆனால், நாங்களும் இப்படி வீட்டிற்கு வந்து வெட்டும் அளவுக்குப் பெரிய பிரச்னை ஆகும் என்று நினைக்கவில்லை,” என்றார் பிரபுவின் அம்மா.

பாதிக்கப்பட்ட மாணவர் என்ன சொல்கிறார்?

பாதிக்கப்பட்ட மாணவர் என்ன சொல்கிறார்?

பட மூலாதாரம், Getty Images

வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர் பிபிசியிடம் தொலைபேசி வாயிலாகப் பேசினார். அப்போது, தான் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும், தனது பணத்தையும் ஆதிக்க சாதி மாணவர்கள் பிடுங்கிக்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

“நான் பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் என்னிடம் இருக்கும் பணத்தை பிடுங்கிக்கொண்டு அனுப்பிவிடுவார்கள். காசில்லாமல் நான் இருக்கும்போது, கடைக்கு அனுப்பி, மிட்டாய், சிகரெட் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வரச் சொல்வார்கள்.

தேர்வின்போது அவர்கள் என்னைப் பார்த்து எழுதுவதற்காக விடைத்தாளை காண்பிக்கச் சொல்வார்கள். நான் ஆசிரியர்களுக்குப் பயந்து காண்பிக்காவிட்டால், வெளியே வந்து என்னை அடிப்பார்கள்,” என்கிறார் பிரபு.

அவர்களின் துன்புறுத்தல் எல்லை மீறிச் சென்றதால்தான் அவர் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும் கூறினார். மேலும், “இவர்கள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் நான் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தேன். நான் எதற்கு பயந்தேனோ அது இப்போது நடந்துவிட்டது,” என்று கூறினார்.

பள்ளிகளில் தொடரும் தீண்டாமை

பள்ளியில் தீண்டாமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாங்குநேரியில் உள்ள பெருத்தெருவில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியல் சாதி குடும்பத்தினருக்கும் இதே நிலைதான் என்கிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த தளவாய்மணி

நாங்குநேரியில் படித்தால், அங்குள்ள ஆதிக்க சாதியினரின் இடையூறு இருக்கும் என்றுதான் பக்கத்து ஊருக்கு தன் குழந்தைகளைப் படிக்க அனுப்பியதாகச் சொல்கிறார் பிரபுவின் தாய்.

“நாங்குநேரியில் உள்ள பள்ளியிலேயே 12ஆம் வகுப்பு வரை உள்ளது. ஆனால், இங்கு இருந்தால், நாங்கள் இன்னார்தான், இந்தத் தெருவில் இருந்துதான் வருகிறோம் என்று தெரிந்துகொண்டு, எங்கள் குழந்தைகளைத் தொடர்ந்து துன்புறுத்துவர். அதனால்தான் நான் பக்கத்து ஊருக்கு என் குழந்தைகளைப் படிக்க அனுப்பினேன்,” என்றார்.

இதற்கு முன் ஒரு முறையேனும் சொந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் தன் குழந்தையைச் சேர்த்துள்ளாரா எனக் கேட்டபோது, “அதெல்லாம் முன்னாடி இங்க இருக்கின்ற பள்ளியில்தான் சேர்த்தேன். நாங்கள் யார், எந்த தெரு உள்ளிட்ட தகவல்களை வைத்துக்கொண்டு என் குழந்தைகளை துன்புறுத்தினர் என்பது அங்கு சேர்த்த பிறகுதானே தெரிந்தது. என் மகள் இந்தப் பள்ளிக்கே செல்ல மாட்டேன் எனக் கூறிவிட்டார்.

அதற்குப் பிறகுதான் வள்ளியூரில் இருக்கும் பள்ளியில் சேர்த்தேன். இப்போது, இந்த ஊர் ஆதிக்க சாதிப் பசங்க அங்கேயும் சென்றுவிட்டதால்தான், இப்போது இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது,” என்றார் அவர்.

அதையே உறுதிப்படுத்துகிறார் அந்த ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர் தளவாய்மணி.

“இவர்களுக்கு மட்டும் இல்லை. இந்த நாங்குநேரில் உள்ள பெருத்தெருவில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பட்டியல் சாதி குடும்பத்தினருக்கும் இதே நிலைதான்.

நாங்கள் இவற்றை எல்லாம் சகித்துக்கொண்டுதான் இங்கு வாழ்கிறோம். ஆதிக்க சாதியினர் தொடர்ந்து எங்களை துன்புறுத்துவதாலும், எங்கள் குழந்தைகளை பள்ளியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்குவதாலும், நாங்கள் அருகில் உள்ள வள்ளியூர், களக்காடு, காரங்காடு, இளங்குளம் பகுதிகளில் உள்ள பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கிறோம். ஆனால், இப்போது அங்கும் படிக்க முடியாத சூழலை ஆதிக்க சாதியினர் உருவாக்கி வருகின்றனர்,” என்றார்.

ஆதிக்க சாதியினர் வன்முறையை கையில் எடுப்பது ஏன்?

சாதிய படிநிலைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாதிய படிநிலைகளாகக் கருத்தப்படுபவை அனைத்தும் தகர்க்கப்படுவதால், ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஆதிக்க சாதியினர் வன்முறையை கையிலேடுப்பதாகக் கூறுகிறார் எழுத்தாளர் பாரதி தம்பி

பள்ளிகளில் சாதிப் பிரச்னை குறித்து பிபிசியிடம் பேசிய கற்க கசடற நூல் ஆசிரியரும் எழுத்தாளருமான பாரதி தம்பி, அன்றாடம் நடக்கும் சாதிப் பிரச்னைகளை இயல்பாகக் கடந்து செல்வதும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்.

“அன்றாடம் நடக்கும் சாதியக் கொடுமைகளையும், தீண்டாமைகளையும் நாம் இயல்பான ஒன்றாகக் கருதி, அதை இயல்பாக்கி, கடந்து செல்வதாலேயே, இதுபோன்ற பெரிய அசம்பாவிதங்கள் நடக்கின்றன.

மாறாக, பெரிய அசம்பாவிதங்கள் நடப்பதற்கான காரணங்களாக இருக்கும் அந்தத் தருணங்களிலேயே சரி செய்யவேண்டும். அப்போது, இதுபோன்ற சம்பவம் நடத்திருக்காது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பள்ளிகளில் சாதி என்பதைவிட, மக்கள் வாழும் ஊர் தெருக்களில் சாதி இருக்கின்றது. அங்கிருந்து வரும் மக்கள்தான் பள்ளியிலும் இருக்கிறார்கள். அதனால், ஒட்டுமொத்தமாக சமூக மாற்றம் நடந்தால் மட்டுமே பள்ளிகளிலும் சாதியை ஒழிக்க முடியும்,” என்றார்.

மேலும், அவர், “மனிதர்கள் இரட்டை நிலைப்பாட்டுடனே வாழ்கின்றனர். அந்த இரட்டை நிலைப்பாடு ஆரம்பிக்கும் இடம் பள்ளிக்கூடம்தான். பள்ளியில் ஓர் ஆதிக்க சாதி மாணவரும், தாழ்த்தப்பட்ட சாதி மாணவரும் ஒன்றாகப் பழக முடிகிறது, நண்பனாகப் பார்க்க முடிகிறது.

அவர்கள் இருவரும் பள்ளியை விட்டு வெளியே சென்று, அவர்களின் கிராமத்திற்குச் சென்ற பிறகு அவர்கள் அதே நண்பர்களாக இருக்க முடிவதில்லை. இந்த இரட்டை நிலைப்பாடுதான், அவர்கள் வளர்ந்த பிறகும் தொடர்கிறது,” என்றார்.

பட்டியல் சாதியினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறை குறித்துப் பேசிய பாரதி தம்பி கிராமங்களில் தற்போது சாதிய படிநிலைகளாக கருத்தப்படும் அனைத்தும் தகர்க்கப்படுவதால், ஆதிக்க சாதியினர் வன்முறையை கையிலேடுப்பதாகக் கூறினார்.

“ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், அவருக்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேறுகிறார். அனைத்து வகையிலும் பட்டியல் சாதியினர் ஆதிக்க சாதியினருக்கு இணையாக வரும்போது, தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட, ஆதிக்க சாதியினர் கையில் எடுக்கும் ஆயுதம்தான் வன்முறை,” என்றார்.

ஆறு சிறார்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

இதுகுறித்து குற்றம் சாட்டப்பட்ட சிறார்கள் தரப்பில் பேச பிபிசி தமிழ் தொடர்புகொண்டபோது, யாரும் பேச முன்வரவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட போலீசார் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில், சட்டத்திற்கு முரண்பட்ட சிறார்கள் ஆறு பேரை சிறார் நீதி வாரியத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட கல்வி அதிகாரி சின்னராசுவிடம் கேட்டபோது, “பாதிக்கப்பட்ட மாணவர், மாற்றுப் பள்ளியில் சேர விரும்பினால், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளிகளில் உள்ள இதுபோன்ற பிரச்னைகளில் கவனம் செலுத்தக்கோரி, தலைமை ஆசிரியர்களுடன் நடக்கும் கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளோம்,” என்றார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் வீடியோவில் என்ன பேசினார்?

பள்ளி மாணவர்களின் புத்தியை கூர்மைப்படுத்த வேண்டும் என்றுதான் தமிழக அரசு விரும்புகிறது. மாறாக, அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க விரும்பவில்லை என்று திருநெல்வேலி பள்ளியில் நிகழ்ந்த சம்பவத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பட மூலாதாரம், Anbil Mahesh Poyyamozhi/Facebook

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “சில தினங்களுக்கு முன் ஒரு பள்ளியில் (எந்த ஊர், எந்த பள்ளி எனக் கூற விரும்பவில்லை) விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் எங்களை பாதிப்பதுடன், சோர்வடையவும் செய்துகின்றன,” என்று வருத்தம் தெரிவித்தார்.

மேலும், “மாணவர்களை அறிவுசார்ந்து கொண்டு செல்ல அரசு எண்ணியிருக்கும்போது, மாணவர்களுக்குள் எழும் ஏதோ சில வேற்றுமை உணர்வுகளின் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. இந்த வேற்றுமை உணர்வை விதைக்கும் எந்த சக்தியாக இருந்தாலும் சரி அவர்களை ஒடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்துவது போல மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட மாணவரின் சகோதரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

மேலும் தாக்கப்பட்ட அந்த மாணவர் மற்றும் அவரது சகோதரியை பாதுகாப்பான முறையில் நல்ல ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்த்து படிக்க வைப்பது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் எனது கடமை என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளார்.

பள்ளியை மாற்றினால் பிரச்சனை தீருமா ?

மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து கண்காணிக்க ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது

சக மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளான மாணவரை வேறு பள்ளியில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்த நிலையில், பள்ளியை மாறுவது எப்படி தீர்வாகும் என பிபிசி சார்பில் அவர் தரப்பிடம் கேட்கப்பட்டது.

அப்போது, இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்ததாகவும், அதன்படி அனைத்துப் பள்ளிகளிலும் சுமூகமான சூழல் உருவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து கண்காணிக்க ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் உள்ள பள்ளிகளைக் கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரை உள்ளடக்கிய ஏழு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அனைத்து துறையினருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், பிரச்னைகள் உள்ள பள்ளியில் அதற்கான அடிப்படை காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும், மாணவர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலான அடையாளங்கள் அணிந்தும், குறிப்பிட்ட வண்ணக் கயிறுகள் கட்டியும், ஆடைகள், புத்தகம் மற்றும் புத்தகப் பை, சைக்கிள் போன்றவற்றில் அவ்வாறான அடையாளங்களுடனும் பள்ளிக்கு வரும் மாணவர்களைக் கண்டறிந்து அந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சூலம் நல் ஆலாசனைகள் வழங்கி மேம்படுத்த வேண்டும் என்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

“அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்!”

பா. ரஞ்சித்

நாங்குநேரியில் பள்ள மாணவர் தாக்கப்பட்டது குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர்,“ சாதி என்பது அழகிய சொல், குடி பெருமை கொள்வோம், சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் எதிர்ப்பையும் ஒன்றாகப் பார்ப்பது, சாதி மற்றும் காதலுக்கு எதிராக வெறுப்புப் பிரசாரம் செய்வது என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதிப் பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்து எடுத்ததன் விளைவாகவே நாங்குநேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

பா.ரஞ்சித்

மேலும், "கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து, அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்," எனக் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: