விடுவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடியிடம் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்துவது ஏன்?

விடுவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடியிடம் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை வழக்கு மோசமாக விசாரிக்கப்பட்டதாக நீதிபதி கருத்து
படக்குறிப்பு, சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு ஒன்றிலிருந்து வேலூர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை கடந்த மாதம் விடுவித்திருந்தது. அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கு மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டிருப்பதால் வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை கையாளும் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் பொன்முடியை விடுவிக்கும் 228 பக்க தீர்ப்பை எப்படி நான்கு நாட்களில் எழுதி முடித்தார் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது நீதித்துறையில் சாதனையாக கருதப்பட வேண்டும் என சாடியுள்ளார்.

ஒருபுறம் அமலாக்கத்துறை செம்மண் குவாரி வழக்கை கையில் எடுத்திருக்கும் நிலையில், முடிந்ததாக நினைத்த சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருப்பது அமைச்சர் பொன்முடிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. நீதிமன்றம் இது போன்று தாமாக முன்வந்து விசாரிப்பது வழக்கமான செயல் அல்ல என்பதால் இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

விடுவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடியிடம் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை வழக்கு மோசமாக விசாரிக்கப்பட்டதாக நீதிபதி கருத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூருக்கு கடைசி நேரத்தில் வழக்கை மாற்றியது ஏன் என நீதிபதி கேள்வி.

20 ஆண்டுகளாக நடந்த வழக்கு

1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ 1.36 கோடி மதிப்பிலான சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, திமுக ஆட்சி விலகி அதிமுக ஆட்சி தொடங்கிய போது, அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் 2002ம் ஆண்டு போடப்பட்டதாகும்.

இந்த வழக்கின் விசாரணை முதலில் விழுப்புரத்தில் நடைபெற்று வந்தது. பின் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஜூன் 28ம் தேதி அவரையும் அவரது மனைவியையும் விடுவித்திருந்தது.

தமிழக அரசின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறை அவரது விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இதனை தாமாக முன்வந்து நேற்று (ஆகஸ்ட் 10)விசாரித்தார்.

விடுவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடியிடம் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை வழக்கு மோசமாக விசாரிக்கப்பட்டதாக நீதிபதி கருத்து
படக்குறிப்பு, 228 பக்க தீர்ப்பை வேலூர் நீதிபதி எப்படி நான்கு நாட்களில் எழுதினார் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி.

வழக்கை கடைசி நேரத்தில் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? - நீதிபதி கேள்வி

அப்போது இந்த வழக்கு ஏன் மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்ற விளக்கத்தை தனது 17 பக்க உத்தரவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கினார். தான் பார்த்ததில், மிகவும் மோசமான வழக்கு என நீதிபதி தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

நீதிபதியின் உத்தரவில், விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு விசாரணை முடியும் தருவாயில் வழக்கு மாற்றப்பட்டிருப்பதில் முறையான நடவடிக்கைகள் கடைப்பிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“விழுப்புரம் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணை பெரும்பங்கு முடித்து, முடியும் தருவாயில் இருந்த போது வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடைசி நேரத்தில் இப்படி மாற்றப்பட்டதுக்கு பின்பற்றிய நடைமுறையில் தவறு இருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கின் இறுதி வாதங்கள் எழுத்து வடிவில் ஜூன் 23ம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கே நாட்களில் 28ம் தேதி , 228 பக்க தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார். அதன் பின் ஜூன் 30 ம் தேதி பதவி விலகியுள்ளார். வேலூர் நீதிமன்ற வழக்கின் விசாரணை கோப்புகளை ஆய்வு செய்த போது இந்த நீதிமன்றத்தின் சந்தேகங்கள் சரி என்பது தெரியவருகிறது” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்தின் 109 பிரிவின் கீழ் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, அவரது மாமியார் பி சரஸ்வதி, பொன்முடியின் நண்பர்கள் மணிவண்ணன், நந்தகோபால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 228 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு, 318 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும் அந்த உத்தரவில், “இரண்டு நீதிபதிகள் கொண்ட நிர்வாகக் குழு இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியிருக்கிறது, இப்படி செய்வதற்கு நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் கிடையாது. உயர்நீதிமன்றமே வழக்கை மாற்றும் அதிகாரத்தை கொண்டுள்ளது” என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நான்கு நாட்களில் எப்படி 228 பக்கத் தீர்ப்பு தயாரானது? - நீதிபதி காட்டம்

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு எப்படி வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டவுடன் வேகமாக நகர ஆரம்பித்தது என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு கேள்வி எழுப்பியுள்ளது.

“ஜூன் 2023-ல் குற்றம் சாட்டப்பட்டவரின் (பொன்முடியின்) நட்சத்திரங்கள் அவருக்கு சாதகமாக கட்சிதமாக அமைந்தன,அதுவும் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியின் ஆசியுடன். ஜூன் 23ம் தேதி எழுத்துபூர்வமான வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நான்கு நாட்களில் 176 சாட்சியங்கள், 381 ஆவணங்களை சரி பார்த்து நீதிபதி 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். இது சாதனையாகும், அரசியல் சாசன நீதிமன்றங்களில் இருப்பவர்கள் கூட இது போன்ற சாதனை படைக்க கனவு மட்டுமே காண முடியும். இரண்டு நாட்கள் கழித்து நீதிபதி நிம்மதியாக பணி ஓய்வு பெற்றுவிட்டார்.” என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொன்முடிக்கு நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் அமலாக்கத்துறையால் பொன்முடியை விசாரணைக்கு அழைத்துச் சென்றது இதிலிருந்து மாறுபட்ட வழக்காகும். 2006-2011ம் ஆண்டுகளில் கனிமவளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி இருந்த போது, விதிகளை மீறி செம்மண் குவாரிகளுக்கு அனுமதி அளித்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது குறித்தான வழக்கையே அமலாக்கத்துறை கையில் எடுத்திருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: