அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை: வழக்கின் பின்னணி என்ன?

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை திங்கள்கிழமை தனது சோதனைகளை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சென்னை, விழுப்புரம் உட்பட நான்கு இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையின் ஏழு அதிகாரிகள் இந்த சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனைக்கான காரணங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.
செம்மண் குவாரி வழக்கு
எனினும், 2012ம் ஆண்டு பதியப்பட்ட செம்மண் குவாரி குறித்த வழக்குகள் உடன் தொடர்புடையதாக இந்த சோதனைகள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான செம்மண் எடுத்து, தமிழ்நாடு சிறு கனிம சலுகைச் சட்டத்தை மீறியதாக 2012ம் ஆண்டு வழக்கு பதிவு செயப்பட்டது.
2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த க.பொன்முடி, கனிமவளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் , விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் பூத்துறை என்ற இடத்தில் செம்மண் எடுப்பதற்கு உரிமம் வழங்கியதில் சட்ட விதிமீறல்கள் இருப்பதாக பொன்முடி மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் தனது மகன், மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவாக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக, 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்த போது, அவரது மகன் கவுதம சிகாமணி, மற்றும் ராஜ மகேந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு செம்மண் குவாரியின் உரிமத்தை வழங்கியுள்ளார். இதில் விதிமீறல்கள் இருப்பதாக வானூர் தாசில்தார் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குவாரியில் 20 அடி ஆழத்துக்கு மட்டுமே செம்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 90அடி ஆழம் வரை செம்மண் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
தமிழ்நாடு சிறு கனிம சலுகைச் சட்டட்தின் பிரிவு 36 அ, சுரங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் பிரிவு 4, ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
செம்மண் குவாரி அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆழமாக இருந்ததால் அதிக வளங்கள் சட்டத்துக்கு புறம்பாக சுரண்டப்பட்டுள்ளன என்பது குற்றாச்சாட்டாகும். 2007ம் ஆண்டு முதல் ஏற்பட்ட தொடர் சட்ட விதிமீறல்கள் காரணமாக, 2.64 லட்சம் லோடு லாரி செம்மண் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு 28.37 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவரது மகன் கவுதம சிகாமணி, தற்போது கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர், இந்த வழக்கில் இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபராகும். இந்த வழக்கில் 2012ம் ஆண்டில் பொன்முடி கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு தடை வழங்க முடியாது- நீதிமன்றம்
விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமும் இதுவே.
இந்த நீதிமன்றத்தின் முன் இருக்கும் வழக்கு விசாரணையை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி, வழக்கில் இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஜூன் 19ம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,
அளிக்கப்பட்ட அனுமதியை மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கில் இதுவரை கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை வைத்துப் பார்க்கையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்,வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் குற்றங்களை செய்திருப்பதற்கான முகாந்திரம் இருக்கலாம் என தோன்றுகிறது என நீதிபதி தெரிவித்தார்.
மேலும், ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 19 (3) (c) வின் படி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்.
இந்த வழக்கின் விசாரணையை தள்ளுபடி செய்யக் கோரி அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

கவுதம சிகாமணி மீது அமலாக்கத்துறை சோதனை
2020ம் ஆண்டு அமலாக்கத்துறை கவுதம சிகாமணிக்கு சம்பந்தமான இடங்களில் நடத்திய சோதனைகள் மூலம் 8.6 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவை அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்துக்கு விரோதமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது அமலாக்கத்துறையின் சோதனைகள் நடைபெறுகின்றன.
கடந்த காலத்தில் பொன்முடி மீது வழக்குகள்

ஊழல், சொத்து குவிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு வழக்குகள் கடந்த காலங்களில் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்டுள்ளன.
1996-2001ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, சென்னை சைதாப்பேட்டை ஶ்ரீநகர் காலனியில் 3ஆயிரத்து 630 சதுர அடி அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து 2004ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கிலிருந்து பொன்முடியும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒன்பது பேரும் சிறப்பு நீதிமன்றத்தால் இரண்டு வாரங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் 2011ம் ஆண்டு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 1.36 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமானத்துக்கு மீறி குவித்ததாக பொன்முடி மீதும் அவரது மனைவி மீதும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கிலிருந்து வேலூர் நீதிமன்றம் அவரையும் அவரது மனைவியையும் கடந்த மாதம் விடுவித்தது.
ஆனால் செம்மண் குவாரி வழக்கு விசாரணைக்கு தடை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது அமலாக்கத்துறை சோதனையும் விசாரணையும் தொடர்கின்றன.

இந்த வழக்கில் சாட்டப்பட்டிருக்கும் குற்றங்களுக்கு ஆதாரங்கள் இல்லை என திமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணன் கூறுகிறார். “இந்த வழக்கில் 2012ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிறகு மீண்டும், சி வி சண்முகம் சட்டத்துறை அமைச்சராக இருந்த போது, 2020ம் ஆண்டு மறு விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட நிலம், கவுதம சிகாமணியின் சொந்த நிலமாகும். இந்த நிலத்தை இதற்கு முன்னால் வைத்திருந்தவர்களால் எடுக்கப்பட்டவையும் சேர்த்து தப்பாக கணக்கிடப்பட்டுள்ளது. எந்த வழக்காக இருந்தாலும் இரவு 3 மணி வரை விசாரணை செய்ய வேண்டிய அவசியம் என்ன? 72 வயதான அவரை மாலை வீட்டுக்கு அனுப்பி அடுத்த நாள் விசாரணைக்கு வர சொல்லலாமே.” என்று தெரிவித்தார்.
தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பண மோசடி வழக்குகள் தண்டிப்பதற்கு அல்லாமல் மிரட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்.
மேலும், மாநில அரசின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மத்திய அரசின் அமைப்புகள் பண மோசடி வழக்குகளாக பதிவு செய்கின்றன. இதனால் அந்த வழக்குகளில் நேரடியாக கைது செய்வது உள்ளிட்ட சில நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள முடிகிறது என்கிறார் அவர்.
“ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டால் பல நடைமுறைகளை ஒவ்வொரு கட்டத்திலும் பின்பற்றப்பட வேண்டியிருக்கும். ஆனால் பண மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் போது அதன் அணுகுமுறை வேறு விதமாக இருக்கும். தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பண மோசடி வழக்குகளை தண்டிப்பதற்கு அல்லாமல் மிரட்டுவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால், காவல்துறையினர் முன் கொடுக்கப்படும் வாக்குமூலம் இந்திய சாட்சிச் சட்டம் பிரிவு 25-ன் கீழ் ஏற்றுக் கொள்ளப்படாது. ஆனால் பண மோசடி வழக்கில் அது ஏற்றுக்கொள்ளப்படும். அந்த வாக்குமூலத்தை பொய் என கூற விரும்பினால் அதை நிரூபிப்பது குற்றம் சாட்டப்பட்டவரின் பொறுப்பாகும்.” என்கிறார் கே.எம்.விஜயன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












