எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு 'இந்தியா' என்ற பெயர் ஏன்?

பட மூலாதாரம், Getty Images
எதிர்வரும் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் நேற்று தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற முக்கியமான இந்தக் கூட்டத்தில், பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு ‘INDIA’ (Indian National Development Inclusive Alliance) (இந்தியா - இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி) என்று பெயரிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தக் கூட்டணியின் அமைப்பாளர்கள், ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ன.
தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் தொல். திருமாவளவன், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
காலை தொடங்கி மாலை நான்கு மணிவரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தனர்.
காங்கிரஸ் தலைவர் சொன்னது என்ன?

பட மூலாதாரம், Getty Images
அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது, “ எதிர்க்கட்சிகளின் கூட்டணி ‘இந்தியா’ (இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி) என்று அழைக்கப்படும்” என்று கூறினார்.
“கூட்டணிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தப் பெயரை ஏற்றுக்கொள்ள, இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன,” என்றும் அவர் தெரிவித்தார்.
“எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று தெரிவித்த கார்கே, கூட்டணியின் தேர்தல் பிரசாரங்களை நிர்வகிக்க, டெல்லியில் ஓர் செயலகம் உருவாக்கப்படும்,” எனவும் அவர் கூறினார்.
அத்துடன், “ கூட்டணியின் பிற குறிப்பிட்ட பிரச்னைகளை களைவது தொடர்பாகவும் குழுக்கள் அமைக்கப்படும்” என்றும் கார்கே தெரிவித்தார்.
‘இந்தியா’வின் முகமாக இருக்கப் போவது யார்?
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ‘இந்தியா’ என்று பெயரிடப்பட்டுள்ள இக்கூட்டணியின் முகமாக இருக்கப் போவது யார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கார்கே, “கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது, கூட்டணியை யார் முன்னெடுப்பது என்பது தான் கேள்வி. இதை கருத்தில் கொண்டே 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவினர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணியின் 11 அமைப்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதுவொரு சிறிய பிரச்னை. இதை நாங்கள் சரிசெய்வோம்” என்று கார்கே விளக்கம் அளித்தார்.
ராகுல் கூறியது என்ன?

பட மூலாதாரம், INC
கூட்டணி குறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, “இது எங்களின் இரண்டாவது சந்திப்பு. இன்றைய கூட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் நடந்துள்ளன. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. நாட்டின் அனைத்து செல்வங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் கைகளுக்கு செல்கிறது. இவை பற்றியெல்லாம் இன்றைய சந்தி்ப்பில் விவாதித்தோம். அதன்படியே, பாஜகவின் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கும் நோக்கில், எங்களின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயரிடப்பட்டுள்ளது,” என்று ராகுல் கூறினார்.
மேலும், “இந்தப் போராட்டம் எதிர்க்கட்சிகளும், பாஜகவுக்கும் இடையேயான போராட்டம் அல்ல. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், 'இந்தியா'வுக்கும் இடையேயான போராட்டம். பிரதமர் நரேந்திர மோதிக்கும், 'இந்தியா'வுக்கும் இடையேயான யுத்தம். பாஜகவின் சித்தாந்தத்திற்கும், 'இந்தியா'வுக்கும் இடையேயான போட்டி. 'இந்தியா' என்ற எங்கள் கூட்டணிக்கு எதிராக நின்று யார் வெற்றிப் பெறுவார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை” என்றும் ராகுல் காந்தி கூறினார்.
கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
இதனிடையே, பெங்களூரில் நடைபெற்று முடிந்துள்ள எதிர்க்கட்சிகளின் இரண்டு நாட்கள் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக உருவாக்கப்படும் வெறுப்பையும், வன்முறையையும் தோற்கடிக்க நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். பெண்கள், ஆதிவாசிகள், தலித்துகள், காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றங்களை களைவோம். கல்வி, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சமூகங்களின் நியாயமான கோரிக்கைகள் கேட்கப்பட வேண்டும். இதன் முதல்கட்டமாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கா்நாடகா தேர்தல் முடிவை தேசிய அளவில் பிரதிபலிப்போம்’
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பெங்களுரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக அவர், இந்தக் கூட்டம் குறித்து திங்கள்கிழமை ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “முக்கியமான இந்த தருணத்தில், பாஜகவின் ஜனநாயக விரோத போக்கிற்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியம்.
பாஜகவின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்தற்கு, கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் சிறந்த உதாரணம். இந்த முடிவை தேசிய அளவில் பிரதிபலிக்க செய்வோம்.
அனைவரும் ஒருங்கிணைந்து ஜனநாயகத்தை பாதுகாப்போம் மற்றும் நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வோம்,” என்று தமது ட்விட்டர் பதிவில் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












