எதிர்க்கட்சிகள் ஒன்றுபடத் தொடங்கியதும் வியூகத்தை மாற்றுகிறதா பா.ஜ.க.?

நாடாளுமன்ற தேர்தல் களம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஒரு காட்சி

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை எதிர்த்துப் போட்டியிட, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டணியை அமைக்க முடிவெடுத்துள்ளன. இதன் அடிப்படையில் நடைபெறும் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் தொடங்கியுள்ளது. மறுபுறம், இன்று டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

பெங்களூரு கூட்டத்திற்கு டெல்லியில் அதிகாரம் மிக்க பதவிகளை நியமிக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிர்க்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, இக்கூட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி ஒப்புக்கொண்டது.

ஜூன் 23 அன்று, பாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நடத்திய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், அடுத்த ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதேநேரத்தில், ஆளும் பாஜகவும் தனது பலத்தை வலுப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கியதுடன் கடந்த 20 நாட்களில் சில முக்கிய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் தவிர, மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, சரத் பவார், உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன், அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பலர் பாட்னா கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங்கிணைந்து கூட்டணி அமைக்க அனைத்து கட்சிகளும் முடிவு செய்தன.

மேலும், ஜூலை மாதம் எதிர்க்கட்சிகள் மீண்டும் சிம்லாவில் கூடுவது என்றும், அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

தற்போது இந்த கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் 24 அரசியல் கட்சிகள் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தியும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த இரண்டு சந்திப்புகளுக்கு இடையே கடந்த நாட்களில், இந்திய அரசியலில் சில மாற்றங்கள் நடந்தன. அவை வரவிருக்கும் பொதுத் தேர்தல்களின் கண்ணோட்டத்தில் பார்த்தால் மிக முக்கியமானவை.

இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் விரிசல் ஏற்பட, மறுபுறம், பாஜக தன் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுவந்தது.

இதுவரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை முன்னிட்டு தெருக்களில் ஒட்டப்பட்டுள்ள முன்னணி தலைவர்களின் படங்கள்

ஆளும் - எதிர் தரப்புகளில் பெரிய மாற்றங்கள்

பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்ற அன்றே, ஆம் ஆத்மி கட்சி தனது தொனியை மாற்றி, டெல்லி அவசரச் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி தெளிவாக எதுவும் கூறாததற்கு அதிருப்தி தெரிவித்தது.

இந்த கூட்டத்திற்குப் பிறகு, என்சிபியில் பிளவு ஏற்பட்டது. சரத் பவாரின் மருமகன் அஜித் பவார் தனிக்கட்சி தொடங்கி பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசில் இணைவதாக அறிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் முக்கிய முகமாக இருந்த சரத்பவாரின் கட்சியில் ஏற்பட்ட இந்த திடீர் பூகம்பம் எதிர்க்கட்சிகளை கலக்கத்தில் ஆழ்த்தியது.

வேலைக்கு நிலம் குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பெயர் இடம் பெற்றுள்ளதால், அம்மாநில அரசியலில் மெகா கூட்டணி ஒரு கடினமான பாதையில் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

இதுவரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, என்சிபியில் பிளவு ஏற்பட்ட பிறகு, சரத் பவாரின் மருமகன் அஜித் பவார் தனிக்கட்சி தொடங்கினார்

மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது நடந்த வன்முறைகள் காரணமாக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இதற்கிடையே, அவதூறு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த ராகுல் காந்திக்கு அவர் எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்கவில்லை.

மறுபுறம், பிரதமர் நரேந்திர மோதி 2024 ஆம் ஆண்டு தேர்தலைக் கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டம் குறித்துப் பேசி, தேர்தல் வியூகத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார். இது நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி முக்கிய கூட்டத்தை நடத்திய நிலையில், நாடு முழுவதும் பல மாநிலங்களில் பாஜக தனது கட்சியின் முக்கியத் தலைவர்களை மாற்றியது.

ஒரு பக்கம் எதிர்க்கட்சிகளின் அரசியல் குழுவில் சலசலப்பு நிலவி வரும் நிலையில், மறுபுறம் பாஜகவின் அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படும் அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுபடுத்துவதில் மும்முரமாக இருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமையன்று, கிழக்கு உத்தரபிரதேசத்தில் வெகுஜன ஆதரவைக் கொண்ட சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், அமித் ஷாவை சந்தித்து தேசிய ஜனநாய கூட்டணியில் சேருவதாக அறிவித்தார்.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி ஏற்கனவே மெகா கூட்டணியில் இருந்து பிரிந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்.

ஜூலை 18 ஆம் தேதி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது, இதில் பீகாரைச் சேர்ந்த ஜிதன் ராம் மஞ்சி மற்றும் லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ் பாஸ்வான்) தலைவர் சிராக் பாஸ்வான் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பார்த்தால், நாடு முழுவதும் அரசியல் சமன்பாடுகள் மிக வேகமாக மாறி வருவதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.

இதுவரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி, சரத் பவார் மற்றும் பிற தலைவர்கள் பங்கேற்றனர்

இதுவரை நடந்தது என்ன?

ஜூன் 27, 2023: ஜூன் 27 அன்று, முதல் முறையாக, பிரதமர் நரேந்திர மோதி பொது சிவில் சட்டம் பற்றி விரிவாகப் பேசினார். போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோதி, ஒரே குடும்பத்தில் இருவருக்கு வெவ்வேறு சட்ட விதிகள் இருக்க முடியாது என்று கூறினார். இப்படி இரட்டை சட்டங்களுடன் ஒரு வீடு எப்படி இயங்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜூலை 3, 2023: வேலைக்காக நிலம் பெற்றது தொடர்பான வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிகையை ஜூலை 3 அன்று சிபிஐ தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் முதல்முறையாக தேஜஸ்வி யாதவும் குற்றம் சாட்டப்பட்டார். தேஜஸ்வி யாதவ் பீகாரில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறார்.

ஜூலை 4, 2023: மக்களவைத் தேர்தலுக்கு முன், பல மாநிலங்களின் மாநிலத் தலைவர்களை பாரதிய ஜனதா கட்சி மாற்ற முடிவெடுத்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜுலை 4ம் தேதி முதல் நடந்துவருகின்றன. இதில் தெலுங்கானா, ஜார்கண்ட், ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் அடங்கும். ஜார்கண்ட் மாநிலத் தலைவராக பாபுலால் மராண்டியும், பஞ்சாப் மாநிலத் தலைவராக சுனில் ஜாகரும், தெலுங்கானாவில் பாஜக தலைவராக மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டியும் நியமிக்கப்பட்டனர்.

ஜூலை 7, 2023: பிரதமர் மோதியின் சாதிப் பெயரைப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ராகுல் காந்தியின் சிக்கல்கள் தொடரும் என்பதே பொருள்.

மோதியின் சாதிப்பெயர் வழக்கில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்காக குற்றவியல் அவதூறு வழக்கின் கீழ் குற்றவாளி என்று ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் களம்

பட மூலாதாரம், Getty Images

அதே நாளில், ராஜஸ்தான் தேர்தலை முன்னிட்டு அம்மாநில காங்கிரஸ் மேலிட தலைவர்களின் கூட்டத்தை அக்கட்சி நடத்தியது. இந்த சந்திப்பின் போது, முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை சரிசெய்யும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இம்முறை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் போட்டியிட அக்கட்சி முடிவு செய்தது.

ஜூலை 09, 2023: மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறை மோதல்கள் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மம்தா பானர்ஜியை பாஜக கடுமையாக விமர்சித்தது. மேலும், ராகுல் காந்தியையும் அக்கட்சி குறி வைத்துள்ளது. பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவது குறித்து ராகுல் காந்தி பேசியுள்ள நிலையில், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை ஏற்க முடியுமா என்று அவரிடம் கேள்வி எழுப்பினார்.

போபாலில் பேசிய, ஸ்மிருதி இரானி, மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதை அதிர்ச்சியுடன் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கும் போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸும் கைகோர்த்து வருவதாக விமர்சித்தார்.

ஜூலை 12, 2023: டெல்லி அவசரச் சட்டம் குறித்த விவகாரத்தில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வரை எதிர்க்கட்சிகளின் எந்தக் கூட்டத்திலோ அல்லது இரவு விருந்திலோ கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது.

முன்னதாக, பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு ஒரு அதிர்ச்சியை அளித்ததுடன், டெல்லி அவசரச் சட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் தெளிவுபடுத்தும் வரை இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறியது.

இதற்கிடையே பெங்களூரு கூட்டத்துக்கு முன்பாக, இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி கட்சியின் எதிர்பார்ப்பை காங்கிரஸ் கட்சி பூர்த்தி செய்துள்ளது.

இதுவரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி பேசியதால் நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்தன

பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து வருகின்றன. ஆனால், ஆம் ஆத்மி கட்சி அதற்கு ஆதரவளித்துள்ளது.

அக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சந்தீப் பதக், “எங்கள் கட்சி கொள்கையளவில் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 44வது பிரிவும் இதை ஆதரிக்கிறது. இது அனைத்து மதத்தினரும் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பின்னர் தான் இச்சட்டத்தை அமல்படுத்தவேண்டும்," என்றார்.

சிவசேனாவும் (உத்தவ் தாக்கரே பிரிவு) அதே அணுகுமுறையைக் கொண்டுள்ளது.

ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், அனைவரும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டதாகவும், ஆனால் எந்த அடிப்படையில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு முன், பிரதமர் பொது சிவில் சட்டப் பிரச்சினையை எழுப்பி புதிய விவாதத்துக்கு வித்திட்டார்.

இதற்கு, அடுத்த கூட்டத்தில் பதில் அளிக்கப் போவதாக காங்கிரசில் இருந்து அறிவிப்பு வெளியானது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுக்கொன்று ஆதரவாகச் செயல்படாமல், எதிர்வினையாற்றி வருவதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் மற்றும் தேசிய முற்போக்கு கூட்டணி கூட்டத்திற்கு பின்னர், வரும் நாட்களில் அரசியல் சூழல் இன்னும் தெளிவாகத் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தனித்தனி கூட்டங்களில் என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் அது எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: