மணிப்பூர்: வன்முறையால் கைவிடப்பட்ட கிராமங்கள் - ஒரே இரவில் மாறிப்போன சூழல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
இந்தியாவின் வடகிழக்கில் மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த மாநிலமான மணிப்பூர், இன வன்முறைகள் காரணமாக கொந்தளிப்பில் சிக்கித் தவிக்கிறது.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக மெய்தேய் மற்றும் குகி சமூக மக்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்களால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவது மட்டுமல்ல, இருதரப்பினருமே தனித்துவிடப்பட்டதாக உணர்கின்றனர்.
இரு சமூகத்தினரின் கிராமங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. வன்முறைகள் மற்றும் கலவரங்களின் போது தாக்குதலுக்கு உள்ளான மெய்தேய் சமூகத்தினரின் இயற்கை எழில் கொஞ்சும் பள்ளதாக்கு பகுதிக்கு பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ் பயணம் மேற்கொண்டார்.
மே மாதம் ஒரு இருள் சூழ்ந்த இரவு நேரத்தில் மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்குப் பகுதிக்கு வந்து தாக்குதல் தொடுத்த மக்கள் பல்வேறு முழக்கங்களுடன் அந்த இரவின் அமைதியைத் தகர்த்தனர்.
துப்பாக்கி சத்தங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தன. அவர்களில் சிலர் வாள்களைக் கைகளில் ஏந்தியிருந்தனர். சிலர் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பப்பட்ட பாட்டில்களை வைத்திருந்தனர்.
"அவர்களைக் கொல்லுங்கள், தீயிட்டு கொளுத்துங்கள்" போன்ற கோஷங்கள் காற்றில் தொடர்ந்து எதிரொலித்தன.
இந்த கோஷங்கள் அனைத்தும் குனைஜம் பகுதியைச் சேர்ந்த சாந்தியின் நினைவில் அழுத்தமாகப் பதிவாகின.
இன வன்முறை பற்றிய செய்திகள், வதந்திகள், மற்றும் பல்வேறு தகவல்கள் மொபைல் ஃபோன்கள் மூலம் காட்டுத்தீ போல பரவியதால் அவரும் சக கிராம மக்களும் 'ஒரு தாக்குதல் நடக்கப்போகிறது என்பதை அறிந்து' அஞ்சினர்.
நள்ளிரவில் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் அவர்கள் வன்முறையில் இருந்து தப்பமுடிந்தது.
மே மாதம் 3ம் தேதியன்று இந்த வன்முறைகள் தொடங்கின. இதுவரை நடந்த தாக்குதல்களில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மட்டுமின்றி சுமார் அறுபதாயிரம் பேர் சொந்த நிலத்திலேயே அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ANSHUL VERMA
எரிந்த குப்பைகளால் நிரம்பிக் கிடக்கும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள்
பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் மெய்தேய் சமூக மக்கள் மணிப்பூர் பள்ளத்தாக்கு பகுதியில் பரந்துவிரிந்து கிடக்கும் தலைநகர் இம்பால் மற்றும் பல கிராமங்களில் வசிக்கின்றனர். பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருக்கும் குகி இன மக்கள் மலைப்பகுதியில் வசிக்கின்றனர்.
நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் துரதிரஷ்டவசமாக இந்த இரு இன மக்களின் பிரிவுக்கு வித்திட்டுள்ளது என்று நம்பும் அளவுக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.
சாந்தி வசித்துவந்த டோலைதாபி, இந்த பாதிப்புக்களில் சிக்கிய நான்கு கிராமங்களில் ஒன்றாக இருக்கிறது. எகோய், யாங்காமன் மற்றும் லீடன்போக்பி ஆகியவை பிற மூன்று கிராமங்கள்.
இக்கிராமங்கள் இம்பாலின் கிழக்கு மாவட்டத்தில் உள்ளன.
இங்கு தான் குகி இன மக்கள் இரவு நேரத்தில் புகுந்து தீ வைத்தல், கொள்ளையடித்தல் போன்ற வன்முறைகளைத் தொடங்கிவைத்தனர்.
பெரும்பாலும் மெய்தேய் சமூக மக்களின் இந்த கிராமங்களில் சுமார் 3,000 பேர் வாழ்ந்துவந்தனர்.
குறிப்பாக இந்த கிராமங்கள் பாதுகாப்பு குறைவான பகுதிகளாகவும் உள்ளன.
மேலும், இவை குகி மக்களின் வசிப்பிடங்களுக்கு மிக அருகில் மலை அடிவாரத்தில் வலைபோல் பின்னப்பட்ட பகுதியில் இருக்கின்றன.
இந்த இரு சமூக மக்களும் வசிக்கும் பகுதிகள் வெறும் ஒன்றரை கிலோ மீட்டர் இடைவெளி மூலம் பிரிக்கப்பட்டுள்ளன.
இங்கும், பதற்றம் உள்ள மேலும் பல இடங்களையும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு மண்டலங்களாகப் பிரித்து, அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருதரப்பிலும் தங்களுக்குத் தாங்களே "கிராம பாதுகாப்புப் படையினர்" என அறிவித்துக்கொண்ட ஆயுதமேந்திய தன்னார்வலர்கள் பதுங்கு குழிகளை ஏற்படுத்தி, காவலிருந்து வருகின்றனர்.
உண்மையிலுமே அமைதியான, இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமப் பகுதிகள் இது போன்ற கொந்தளிப்பான நிலையில் உள்ளன என்பது நம்பமுடியாததாகவே உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அணையைக் கடந்து பாய்ந்து ஓடும் இரில் என்ற ஆற்று நீர் சாய்வான மலைப்பகுதியைக் கடந்து, தகர வீடுகளுக்கு அருகே அதன் வேகத்தில் இயற்கையாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சமதளப் பகுதி நெல் வயல்கள் முதல் வானளாவ உயர்ந்து நிற்கும் ஓக், பைன் மரங்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய பகுதியாக இந்த கிராமங்கள் உள்ளன.
"இது மலைகளால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கு என்பது மட்டுமல்ல, பாதுகாப்பு குறைந்த பகுதியாகவும் இருக்கிறது.
இந்தப் பகுதியை குகி இன மக்கள் தெளிவாகக் காணமுடியும்.
மலைப்பகுதியில் இருந்து அவர்கள் மிக எளிதாகத் தாக்கும் ஆபத்தும் இருக்கிறது.
எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம்," என மணிப்பூரின் ராணுவ போலீஸின் உயர் அலுவரான லெனின் லமாபம் தெரிவித்தார்.
அவரும், அவரது தலைமையில் 80 வீரர்களும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து இப்பகுதியில் அமைதியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பட மூலாதாரம், ANSHUL VERMA
போதையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மணிப்பூர்
மே மாதம் வன்முறைகள் தொடங்கிய பின், ஆங்காங்கே நடந்த தாக்குதல்களினால், இங்கே வாழ்ந்துகொண்டிருந்த மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அவர்களுடைய உறவினர் வீடுகளிலும், பாதுகாப்பு முகாம்களிலும் தஞ்சம் புகுந்தனர்.
அவர்களுடைய வீடுகள் அழிக்கப்பட்டன.
தானியங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.
ஒரு அற்புதமான பகுதி தற்போது எரிக்கப்பட்ட வீடுகள், வாகனங்கள், குப்பைகளால் சூழப்பட்ட பகுதியாக மாறியுள்ளது.
இருதரப்பைச் சேர்ந்த விவசாயிகளும் தங்கள் நிலங்களில் வேலை செய்துகொண்டிருந்தபோது துப்பாக்கி சூட்டுக்கு இரையான சம்பவங்களும் நடந்த நிலையில், தற்போது சில ஆண்கள் மட்டும் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு பகல்வேளைகளில் வந்து விவசாயப் பணிகளைக் கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
தற்போது நிவாரண முகாமில் வசிக்கும் கணவரை இழந்த 60 வயது சனம் தாபா கூறுகையில், "எங்கள் வழக்கமான நாட்கள் எப்படி இவ்வளவு வேகமாக மோசமான மாற்றத்துக்கு உள்ளாகின என்பதை இன்னும் என்னால் புரிந்துகொள்ளக் கூட முடியவில்லை," என்றார்.(வன்முறை காரணமாக இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மெய்தேய் சமூக மக்கள் என ஒரு அதிகாரி தெரிவித்தார்.)
பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் வெறிச்சோடிக் கிடக்கும் லீடாங்போக்பியில் மொத்தமாக 100 வீடுகளும், இரண்டு மருந்தகங்களும், ஒரு தொடக்கப்பள்ளியும் தான் இருந்தன.
இங்கே சேதமடைந்த வீடுகளில் ஒரு வீட்டு தகர கதவில் ஒட்டப்பட்டுள்ள ஒரு விளம்பரத்தில் "போதைக்கு எதிரான போர்" என்ற அமைப்பினர் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தனர்.
அதில், 'பாப்பி சாகுபடியை நிறுத்தி நமது சமூகத்தைக் காத்திட உதவுங்கள்' என அச்சிடப்பட்டிருந்தது. (பாப்பி செடியில் ஒருவகை போதைப் பொருளை தயாரிக்கலாம்)
தற்போதைய மணிப்பூர் வன்முறைகளுக்கு பல ஆழமான காரணங்கள் உள்ளன.
அவற்றில், சமீபத்திய ஆண்டுகளில் போதைப் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் முக்கியமானவையாக இருக்கின்றன.
மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த முதலமைச்சர் பைரென் சிங் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு, பாப்பி சாகுபடிக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை சர்ச்சைக்கு வித்திட்டது.
2017ம் ஆண்டுக்குப் பின்னர் அவருடைய அரசு, 18,600 ஏக்கர் பரப்பளவுள்ள பாப்பி சாகுபடியை அழித்துவிட்டது.
அதில் பெரும்பான்மையான நிலங்கள் குகி சமூகத்தினருக்குச் சொந்தமான பகுதியில் உள்ளன. (இந்தியாவின் வடகிழக்கில் மியான்மர் எல்லையை ஒட்டி இருக்கும் நான்கு மாநிலங்களில் உலகிலேயே இரண்டாவது அதிக அளவு போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், மணிப்பூரில் நீண்டகாலமாகவே போதைக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.)

பட மூலாதாரம், SOUTIK BISWAS
பாப்பி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு (பெரும்பாலும் குகி சமூகத்தினர்) ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள அரசின் சலுகைகள் பறிக்கப்படும் என்றும் பைரென் சிங் எச்சரித்தார்.
மேலும், குகி இன மக்கள் போதைப் பொருள் தொழில் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
ஆனால், இதற்குப் பதிலடி கொடுத்த குகி இனமக்கள், முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும், அவர் குறிப்பிட்ட சமூக மக்களை இலக்கு வைத்து இது போன்ற குற்றச்சாட்டுக்களை எழுப்பிவருவதாகவும் கூறிவந்தனர்.
ஆனால், முதலமைச்சர் இதை மறுத்துவந்தார்.
லீடாங்போக்பியில், மலைப்பகுதியில் உள்ள நிலங்கள் பாப்பி விளைவிப்பதற்காகவே சுத்தம் செய்யப்பட்டு வந்ததாக மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
மெய்தேய் இனத்தின் பெரும்பாலான ஆண்கள் விவசாயம் மற்றும் விறகு விற்பனை செய்துவருபவர்களாக உள்ளனர்.
குகி மக்களின் நிலங்களை மூன்று ஆண்டு குத்தகையின் பேரில் எடுக்கும் மெய்தேயி சமூக ஆண்கள், அங்குள்ள பட்டுப்போன மரங்களை வெட்டி, அவற்றை விறகாக மாற்றி சந்தையில் விற்பனை செய்துவந்தனர் என உள்ளூரில் முன்பு ஆசிரியராகப் பணியாற்றிய தருன் நாங்கோம் தெரிவிக்கிறார்.
"ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இந்தப் பணிகளின் வேகம் கொஞ்சம் குறையத் தொடங்கியுள்ளன. ஏனென்றால் அப்பகுதியில் இருக்கும் பல கிராமங்களில் பாப்பி சாகுபடி தொடங்கியுள்ளது," என்றார் அவர்.
ஆனால், இத்தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.
மலைப்பகுதியில் பாப்பி எவ்வளவு பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
அதிகாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் இம்பாலின் கிழக்கு மாவட்டத்தில் மட்டும் 2017க்குப் பின்னர் 730 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பாப்பி அழிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் மட்டும் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையான 33 லட்சம் பேரில் நாகா, மெய்தேய் சமூகத்தினர், நேபாளத்தில் இருந்து வந்தவர்கள் என 16 சதவிகிதம் பேர் வசிக்கின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தின் இப்பகுதியில் மியான்மருடன் சுமார் 400 கிலோ மீட்டர் (248 மைல்) நீள எல்லை இருக்கும் நிலையில், அங்கிருந்து சட்டவிரோதமாக ஏராளமான பொதுமக்கள் எல்லை கடந்து வந்து இப்பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மெய்தேய் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் என பெரும்பாலான பகுதிகளில் "பர்மிய அகதிகளே, திரும்பிச் செல்லுங்கள்" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
மியான்மரில் உள்நாட்டுப் போர் நடைபெறும் நிலையில், அங்கிருந்து எல்லை கடந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுபவர்கள் குறித்தும் முதலமைச்சர் அடிக்கடி பேசிவந்துள்ளார்.
மியான்மரில் இருந்து இப்படி எல்லை கடந்து வந்தவர்கள் குகி இனத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். (மிசோரம் மாநிலத்துக்குள்ளும் இது போல் 40,000க்கும் மேற்பட்டவர்கள் மியான்மரில் இருந்து வந்து வசித்துவருகின்றனர்.)
கடந்த ஏப்ரல் மாத இறுதி வரை மியான்மரில் இருந்து இப்படி மணிப்புர் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களுக்கு 2,187 பேர் சட்டவிரோதமாக வந்துள்ளதாக மாநில அரசு கண்டுபிடித்துள்ளது.
இது போல் சட்டவிரோதமாக மணிப்பூருக்குள் நுழைந்த போதைப் பொருள் விற்பனைக் கும்பல்கள் தான் தற்போதைய வன்முறைகளைத் தூண்டிவிட்டதாகவும் மாநில அரசின் செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.
இதில் பாப்பி சாகுபடி செய்பவர்கள் மற்றும் போதைப் பொருள் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களும் இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ANSHUL VERMA
ஆனால், இந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள் இதுவரை அமைதியான நட்பு ரீதியிலான உறவுகளைக் கொண்டிருந்ததாகவே இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
மலையடிவாரத்தில் அமைந்துள்ள கிராமங்களில் இருந்து மெய்தேய் இன மக்கள் மலைப்பகுதிக்குச் செல்வதும், மலைப்பகுதிகளில் இருந்து குகி இன மக்கள் சமவெளிகளுக்குச் செல்வதும் தங்குதடையின்றி இத்தனை ஆண்டுகளாக நடந்து வந்துள்ளன.
மலைப்பகுதிக்குச் செல்லும் மெய்தேய் மக்கள் பட்டுப்போன மரங்களை வெட்டி எடுத்துவர சாலைகளை அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இதே போல் மலைப்பகுதியில் வாழும் குகி இனத்தவர்கள் கீழே வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
"எங்கள் இன மக்களும், குகி இன மக்களும் பல ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம்," என்கிறார் சாந்தி. "நாங்கள் அவர்களுடைய கிராமங்களுக்குச் செல்வோம். அவர்கள் எங்கள் கிராமங்களுக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள். உள்ளூரில் செயல்படும் சிறு சேமிப்புத் திட்டங்களில் எங்கள் இருதரப்பினரும் பல நேரங்களில் ஒன்றாக இணைந்து முதலீடு செய்துள்ளோம்."
"ஆனால் எங்கள் நண்பர்களும், அண்டை கிராமத்தினருமான அவர்கள் எப்படி ஒரே இரவில் எங்கள் எதிரிகளானார்கள்?" என அவர் கேள்வி எழுப்பினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












