ஒரே நாளில் தென்கொரியாவை புரட்டிப் போட்ட மழை: இதுவரை 40 பேர் பலி; அதிபர் சொன்னது என்ன?

பட மூலாதாரம், Getty Images
வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகளின் விளைவாக, உலகம் இன்று பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. இவற்றில் முக்கியமானது பருவநிலை மாற்றம். இதன் காரணமாக ஏற்படும் வெப்பமயமாதலால் பருவமழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழைப் பொழிவது, பருவம் தவறி பொழியும் மழை என்று பல்வேறு இன்னல்களை உலகம் எதிர்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தென்கொரியாவில் கடந்த இரு தினங்களாக கொட்டித் தீர்த்து வரும் பருவமழை, இதுவரை குறைந்தது 40 பேரின் உயிரை பலி வாங்கி உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் முற்றிலும் முடக்கி உள்ளது.
இன்னும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று தென்கொரிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வெள்ள நீரில் மூழ்கிய போக்குவரத்து சுரங்கப்பாதை
கடந்த இரு தினங்களாக தென்கொரியா முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பேய் மழையின் விளைவாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. முக்கியமாக தென் கொரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகவும், வடக்கு சுங்சியோங் மாகாணத்தின் தலைநகராகவும் விளங்கும் சியோங்ஜி பருவமழையால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
கனமழையின் விளைவாக இந்த நகரை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக ஆற்றங்கரை உடைந்து பெருக்கெடுத்த வெள்ளம், சியோங்ஜி நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள 685 மீட்டர் (2,247 அடி) நீளமுள்ள போக்குவரத்து சுரங்கப்பாதையில் புகுந்தது.
சில நிமிடங்களில் சுரங்கப்பாதையை கிட்டத்தட்ட மூழ்கடிக்கும் அளவிற்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் ஒரு பேருந்து உட்பட குறைந்தபட்சம் 15 வாகனங்கள் சிக்கின. அப்போது வாகனங்களில் பயணித்தவர்களின் நிலை என்னவானது என்பது குறித்து போலீசாரால் இதுவரை திட்டவட்டமாக கூற இயலவில்லை. இருப்பினும் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர் என்றும், சுரங்கப்பாதை வெள்ளத்தில் இருந்து தப்பிய ஒன்பது பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், EPA
மருத்துவமனையில் குவியும் பொதுமக்கள்
இதனிடையே, சுரங்கப்பாதை வெள்ளத்தில் சிக்கியவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவலை அறிய அவர்களின் உறவினர்கள் கிட்டத்தட்ட 48 மணி நேரமாக உள்ளூர் மருத்துவமனையில் காத்துக் கிடக்கின்றனர்.
“எங்கள் மகன் உயிரோடு திரும்ப கிடைத்து விடுவான் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஆனாலும் மருத்துவமனையை விட்டு வீட்டுக்குப் போக மனம் இடம் அளிக்கவில்லை” என்று மழை வெள்ளத்தில் மகனை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பெற்றோர் ஒருவர் உள்ளூர் செய்தி நிறுவனமான யோன்ஹாப்புக்கு அளித்த பேட்டியில் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
அத்துடன், ”சுரங்கப்பாதையில் புகுந்த குளிர்ச்சியான வெள்ள நீரில் சிக்கிய எங்கள் மகன் எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பான் என்று எண்ணும் போது எங்களின் இதயம் பதைபதைக்கிறது” என்றும் அவர்கள் வேதனையுடன் கூறினர்.
மீட்புப் படையினரின் திகில் அனுபவம்
வெள்ளத்தில் மூழ்கி கொண்டிருந்த காரை சுரங்கப் பாதையில் இருந்து எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிட வேண்டும் என்று அதன் ஓட்டுநர் போராடும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவு மீட்புக் குழுவினரிடம் உள்ளது. அதை வைத்து கார் ஓட்டுநரை அவர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுவரை அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சுரங்கப்பாதையில் மற்றொரு காரின் பின்புற கண்ணாடியை உடைத்தப்படி அதனை அசுர வேகத்தில் அடித்துச் சென்ற வெள்ளக் காட்சியை பார்த்த மீட்பு குழுவினருக்கு ஏதோ திகில் படத்தை காண்பது போன்ற அச்ச உணர்வு ஏற்பட்டது.
சியோங்ஜூவில் உள்ள முக்கிய சுரங்கப்பாதைக்கு ஏற்கெனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும், அதற்கான போக்குவரத்து அணுகலை முன்னதாகவே மூடாதது குறித்து உள்ளூர் அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

பட மூலாதாரம், YONHAP/EPA
பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு
பருவநிலை மாற்றத்தால் வெப்ப மண்டல நாடுகளில் ஏற்பட்டு வரும் மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தென்கொரியா இதுவரை பெரிதாக சந்தித்து இல்லை. ஆனால் தற்போது அங்கு பெய்து வரும் தொடர் கனமழையின் விளைவாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அந்நாட்டுக்கு இயற்கை விடுத்துள்ள எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
ஜூன் மாத இறுதி முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை தென்கொரியாவின் பருவமழை காலமாக கருதப்படுகிறது. அந்நாட்டின் வானிலை ஆய்வு மைய கூற்றுப்படி, அங்கு ஆண்டுக்கு சராசரியாக 1000 மி.மீ -1800 மி.மீ வரை மழை பதிவாகும். இந்த நிலையில், தென்கொரியா முழுவதும் சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 300 மி.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.
அத்துடன், கிட்டத்தட்ட இன்னும் மூன்று வாரங்கள் பருவமழை காலம் உள்ள நிலையில், தென் கொரியாவில் தற்போதே ஆண்டு சராசரி மழை அளவைவிட அதிக மழை பொழிந்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
என்ன சொல்கிறார் தென்கொரியா அதிபர்?
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை தற்போது நாடு எதிர்கொண்டுள்ளதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல்.
“இயற்கையால் ஏற்படும் இதுபோன்ற பாதிப்புகள் தொடராத வண்ணம், பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகள் முறையாக நிர்வகிக்கப்படாததால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் பெய்த கனமழையின் பின்விளைவுகளை நிர்வகிப்பதற்கும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் இராணுவத்தை ஈடுபடுத்துமாறும் அதிபர் யூன் சுக் இயோல் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை “சிறப்பு பேரிடர் மண்டலங்கள்” என்றும் அதிபர் அறிவித்துள்ளார்.

நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலி
சுங்சியோங் மாகாணத்தை போன்றே, மத்திய தென் கொரியாவில் அமைந்துள்ள வடக்கு சியோங்காங் பகுதியும் தொடர் கனமழையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது.
மலைப்பாங்கான பகுதியான அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் குறைந்தப்பட்சம் 19 பேர் உயிரிழந்தனர்.
கோசன் அணை நிரம்பத் தொடங்கியதை அடுத்து சனிக்கிழமை அதிகாலை அப்பகுதியில் குடியிருந்த சுமார் 6,400 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும் அணைக்கு அருகில் உள்ள பல தாழ்வான கிராமங்கள் மற்றும் அவற்றை இணைக்கும் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், HOSU LEE/BBC
‘இதற்குமுன் இப்படி ஒரு பேய்மழையை கண்டதில்லை’
“எனக்கு 87 வயதாகிறது. ஆனால் இந்த வார இறுதியில் பெய்த பேய் மழையைப் போல், என் வாழ்நாளில் இதற்கு முன்னர் பார்த்ததில்லை”என்று பிபிசியிடம் கூறினார் சாங் டு-ஹோ என்ற முதியவர்.
சியோங்காங்கில் இருந்து ஒரு மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ள சிறிய விவசாய கிராமமான எஹாமில் கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் அவர்.
இவரது வீட்டிற்குள் புகுந்த மழை வெள்ளத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு விட்டன. இதனால் ஏதோ பறிகொடுத்தவர் போல தன் வீட்டு வாசலில் அமர்ந்துள்ளார் சாங் டு -ஹோ.
“சனிக்கிழமை நள்ளிரவு என் வீட்டுக்குள் மழை நீர் புகுந்தபோது நான் பயப்படவில்லை என்று சொன்னால், பொய் சொல்வதாக ஆகிவிடும். உண்மையில், இறந்துவிடுவோமோ என்ற பயம் அப்போது என்னுள் எழுந்தது. முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த என் மனைவி மற்றும் என்னை மீட்பதற்கு மீட்புக் குழுவினர் வருவதற்குள் என் இடுப்பளவுக்கு வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது” என்றார் அவர்.
“எனக்கு 74 வயதாகிறது. ஆனால் இதுபோன்ற பேரழிவை நான் பார்த்ததே இல்லை” என்கிறார் சாங் டு ஹோவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹான் சாங் ரே.
“எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் நான் இறக்கவில்லை என்பதால், அதிர்ஷ்டசாலியாக மட்டும் உணர்கிறேன்” என்றும் கூறுகிறார் அவர்.
“என் வாழ்நாளில் இதுபோன்றதொரு பேரழிவை பார்த்ததில்லை என்கிறார்” கியோங்சாங் மாகாணத்தைச் சேர்ந்த மற்றொரு முதியவரான யூன்.
“கனமழை, வெள்ளத்தில் சாய்ந்து விழுந்திருக்கும் மரங்கள் மற்றும் குப்பை குவியல்களை கடந்து சென்று கொண்டிருந்த அவர், நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள பாறைகள் மலையிலிருந்து கீழே உருண்டு வந்தபோது, நீங்கள் எவ்வளவு ஆச்சர்யப்பட்டிருப்பீர்கள்” என்று தமது கிராமவாசிகளிடம் கேட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி குறைந்தபட்சம் 11 பேர் உயிரிழந்தனர். இவர்களில் சியோல் நகரில் ஒரு அடித்தள குடியிருப்பில் சிக்கிய இரண்டு பெண்கள் மற்றும் ஒரு இளைஞரும் இறந்தனர். அதையடுத்து, ஆஸ்கார் விருது பெற்ற ‘பாராசைட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இத்தகைய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட சியோல் நகர நிர்வாகம் தடை விதித்தது.

பட மூலாதாரம், HOSU LEE/BBC
இந்தியா, சீனாவில் மழை வெள்ளம்
தென் கொரியா மட்டுமின்றி, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலும் கடந்த 15 நாட்களாக கடுமையான மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுபோன்ற கனமழை பொழிவதற்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும் பருவநிலை மாற்றமே முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மாற்றத்தால் ஏற்படும் வெப்பமயமாதலின் விளைவாக வளிமண்டலமானது தீவிர மழைப்பொழிவை அதிகப்படுத்துகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












