ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மோதி அடிக்கடி பயணிப்பது ஏன்?

இந்தியா- அமீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல்-நஹ்யானுடன் இந்திய பிரதமர் மோதி
    • எழுதியவர், தீபக் மண்டல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பிரான்ஸைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐக்கிய அரபு அமீரக சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

ஐக்கிய அரபு டன் சனிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்திய ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நாணயமான திர்ஹாம் ஆகியவற்றில் வர்த்தகம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக மோதி தெரிவித்தார்.

இருதரப்பு வர்த்தகம் 85 பில்லியனில் இருந்து விரைவில் 100 பில்லியன் டாலராக உயரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் குறித்த அறிவிப்பு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான உறவில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மோதி மேற்கொண்ட 5-ஆவது பயணம் இதுவாகும்.

இந்தியா- அமீரகம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் குறித்த அறிவிப்பு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான உறவில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது

கடந்த சில ஆண்டுகளாகவே, இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவில் அதிகம் நேசம் தென்படுகிறது.

கடந்த முறை, மோதி அமீரகம் சென்றபோது, அதிபர் முகமது பின் சயீத் அல்-நஹ்யான் தனது பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி மோதியை வரவேற்பதற்காக அபுதாபி விமான நிலையத்திற்கே வந்திருந்தார்.

இதேபோல், அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயாத் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் பிரதமர் மோதி, வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் உறவை வளர்த்துகொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்.

2014ஆம் ஆண்டு மோதி பிரதமரானபோது, 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரம் தொடர்பாக அவரது பிம்பம், இந்தியாவுடனான வளைகுடா நாடுகளின் உறவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த பிம்பத்துக்கு மாறாக, வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் உறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

தனது எட்டு ஆண்டு கால ஆட்சியில், வளைகுடா இஸ்லாமிய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதை மோதி மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு செயலாற்றி வருகிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை, மோதி தனது முதல் பயணத்தை 2015ஆகஸ்டில் மேற்கொண்டார், இரண்டாவது பயணத்தை 2018 பிப்ரவரியிலும் மூன்றாவது பயணத்தை 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் நான்காவது பயணத்தை 2022 ஜூன் மாதத்திலும் மேற்கொண்டிருந்தார். தற்போதையது அவரது ஐந்தாவது பயணமாகும்.

2015 ஆகஸ்டில் மோதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டபோது, 34 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு மேற்கொண்ட முதல் பயணமாக அது பார்க்கப்பட்டது. மோதிக்கு முன், இந்திரா காந்தி 1981ல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றிருந்தார்.

இந்தியா- அமீரகம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தனது எட்டு ஆண்டு கால ஆட்சியில், வளைகுடா இஸ்லாமிய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதை மோதி மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு செயலாற்றி வருகிறார்.

மோதியின் வெளியுறவுக் கொள்கையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அளிக்கப்படும் கவனம் தொடர்பாக 2017 குடியரசு தினத்தன்று ஒரு பார்வை கிடைத்தது. அப்போது, முகமது பின் சயீத் அல் நஹ்யானை சிறப்பு விருந்தினராக மோதி அரசு அழைத்திருந்தது.

அந்த நேரத்தில் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருக்கவில்லை, அபுதாபியின் பட்டத்து இளவரசராக இருந்தார்.

பொதுவாக, ஒரு நாட்டின் பிரதமர் அல்லது அதிபரைத்தான் இந்தியா குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கிறது. ஆனால் 2017 குடியரசு தினத்தில் அல் நஹ்யான் தலைமை விருந்தினராக வந்தார்.

இந்தியா- அமீரகம் உறவின் அடித்தளமாக இருக்கும் மூன்று அம்சங்கள் எவை?

இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் மூன்று E-க்களை அடிப்படையாக கொண்டவது. அவை; ஆற்றல் (Energy), பொருளாதாரம் (Economy) மற்றும் அயல்நாட்டில் குடியெயர்ந்து வாழ்பவர்கள் (EXpatriate)

கடந்த நிதியாண்டில் (2022-23), ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் மூன்றாவது பெரிய நாடாக இருந்தது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் பத்து சதவீத பங்கைக் கொண்டிருந்தது.

ஆனால், தற்போது 2030-க்குள் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இருந்து எண்ணெய் அல்லாத வணிகத்தை 100 பில்லியன் டாலராக அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையிலான உறவுகளில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட CEP (விரிவான பொருளாதார கூட்டாண்மை) ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியா கையெழுத்திட்ட முதல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும். இந்தியா கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

இந்தியா - அமீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமீரகத்தில் செயல்படும் இந்திய நகை விற்பனை குழுமத்தின் கடை

100 பில்லியன் டாலர் வணிகம் இலக்கு

இந்தியா தனது பொருளாதாரத்தின் அளவை 2027-க்குள் 5 டிரில்லியன் டாலராக அதிகரிக்க விரும்புகிறது. இந்த இலக்கை அடைய, 2030-க்குள் தனது ஏற்றுமதியை ஒரு டிரில்லியன் டாலராக அதிகரிக்க விரும்புகிறது. இதில் CEP முக்கியப் பங்காற்றக்கூடும்.

ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 1970களில் வெறும் 180 மில்லியன் டாலராக இருந்தது, தற்போது அது 85 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

2021-22ல் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாக UAE உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியா அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் கூற்றுப்படி ஒரே ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்தியாவின் வர்த்தகம் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி தற்போதைய பயணத்தின் போது அமீரக அதிபருடன் எரிசக்தி, உணவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதித்தார்.

ஊடக அறிக்கைகளின்படி, 2022 இல் CEP ஒப்பந்தம் குறித்த மறுஆய்வு மோதி மற்றும் முகமது பின் சயீதின் நிகழ்ச்சி நிரலிலும் இருந்தது.

அமீரகத்துடன் இந்தியாவின் வணிக உறவுகள் வளர்ந்து வரும் வேகம் பல ஆய்வாளர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இந்தியா - அமீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமீரகத்தில் இந்தியர்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர்

இந்தியாவில் முதலீடு- 4ஆவது இடத்தில் அமீரகம்

அமீரகம் தற்போது இந்தியாவில் முதலீடு செய்யும் நான்காவது பெரிய முதலீட்டாளராக மாறியுள்ளது. தற்போது இந்தியாவில் அதன் முதலீடு 3 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.

2020-21ல் இந்தியாவில் அதன் முதலீடு $1.03 பில்லியன் ஆகும். அந்த நேரத்தில் அமீரகம் இந்தியாவில் ஏழாவது பெரிய முதலீட்டாளராக இருந்தது. தற்போது ஒரே ஆண்டில் 3 இடங்கள் முன்னேறி 4வது பெரிய முதலீட்டாளராக இருக்கிறது.

உலக விவகாரங்கள் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலைச் சேர்ந்த ஃபஸூர் ரஹ்மான் சித்திக் இது குறித்து கூறுகையில், “மோதி அரசின் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா போன்றவற்றில் உள்ள வாய்ப்புகளை பார்த்து ஐக்கிய அரபு அமீரகம் , முதலீடுகளை அதிகரித்து வருகிறது.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இதில் மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீடு மற்றும் வணிகத்தில் தொடர்ச்சியாக உள்ளது. இது ஒரு பெரிய விஷயம். ஏனென்றால் நாம் பல நாடுகளுடன் வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்கிறோம், ஆனால் முதலீடு மற்றும் வணிகத்தில் தொடர்ச்சியான ஏற்றம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் ஆழத்தை விவரிக்கிறது. இதனை தக்கவைக்க நரேந்திர மோதி மீண்டும் மீண்டும் அமீரகத்துக்கு செல்கிறார்” என்று குறிப்பிட்டார்.

இந்தியா- அமீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமீரகம் தற்போது இந்தியாவில் முதலீடு செய்யும் நான்காவது பெரிய முதலீட்டாளராக மாறியுள்ளது

இந்தியா மீது அமீரகத்தின் ஆர்வம் அதிகரித்துள்ளது ஏன்?

சவூதி அரேபியாவைப் போலவே ஐக்கிய அரபு அமீரகமும் தனது பொருளாதாரத்தை பன்முகப்படுத்த விரும்புகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தை சார்ந்திருப்பதை குறைக்க விரும்புகிறது. அதனால்தான் அது உலகம் முழுவதும் புதிய முதலீட்டு இடங்களைத் தேடுகிறது.

2031-க்குள் அதன் உற்பத்தித் துறையை இரட்டிப்பாக்க எண்ணுகிறது. இதற்காக அந்நாடு 2.7 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளது.

இதன் மூலம், உணவு வணிகம், ரியல் எஸ்டேட் மற்றும் பசுமை உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அதன் கவனம் இப்போது உள்ளது.

இந்த அனைத்து வணிகங்களுக்கும், அமீரகம் இந்தியாவை நம்பகமான கூட்டாளியாக பார்க்கிறது. அதனால்தான் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறது. மேலும் இந்தத் துறைகளில் அதன் செயல்திறனைப் பயன்படுத்திக் கொள்ளவும் விரும்புகிறது.

மேற்கத்திய நிபுணர்களுக்கான செலவு அதிகம் என்பதால், இந்திய வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அந்நாடு முக்கியத்துவம் அளிக்கிறது.

இந்தியா- அமீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐக்கிய அரபு அமீரகம் எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தை சார்ந்திருப்பதை குறைக்க விரும்புகிறது. அதனால்தான் அது உலகம் முழுவதும் புதிய முதலீட்டு இடங்களைத் தேடுகிறது

உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள்

ரஷ்யா - யுக்ரேன் போர் வளைகுடா நாடுகளை உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் தீவிரமாகச் சிந்திக்கத் தள்ளியுள்ளது.

அரபு உலகின் உணவு விநியோகத்தில் 60 சதவீதம் ரஷ்யா மற்றும் யுக்ரைனில் இருந்து வருகிறது. எனவே, இந்தப் போர் ஐக்கிய அரபு அமீரகத்தை உலுக்கியுள்ளது.

ஒருவேளை இந்த போர் நீடித்தால், தனது உணவு விநியோகம் மற்றும் அதற்கான தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் நாடுகளை பயன்படுத்துகொள்ள அமீரகம் விரும்புகிறது.

இந்தியாவில் உணவு உற்பத்தி அதிகம் என்பதோடு உணவு உபரி நாடாகவும் இருப்பதால், இதற்கு சரியான நாடாக அது இருக்கிறது.

இந்தியாவின் ஆயுதங்கள் மீது ஐக்கிய அரபு அமீரகமும் ஆர்வமாக உள்ளது. இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க விரும்புகிறது.

இதனுடன், இந்தியாவுடன் இணைந்து ராணுவ வன்பொருள் தயாரிக்கவும் விரும்புகிறது. இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு பொருந்தும் விதத்தில் இது உள்ளது.

இந்தியா - அமீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் ஆயுதங்கள் மீது ஐக்கிய அரபு அமீரகமும் ஆர்வமாக உள்ளது. இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க விரும்புகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு

பயங்கரவாதத்துக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.

இது தொடர்பாக ஃபஜ்ஜுர் ரஹ்மான் சித்திக் கூறுகையில், "இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எப்போதும் இந்தியாவை ஆதரித்து வருகிறது. பயங்கரவாதத்தை நல்லது, கெட்டது என வகைப்படுத்த அந்நாடு விரும்பவில்லை” என்று கூறுகிறார்.

இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பதுங்கியிருப்பவர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளதால், உலக அரங்கில் அதற்கு எதிராக வலுவான பங்காளியை அது தேடுகிறது.

கடந்த ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்த நரேந்திர மோதி, அதை ஒன்றிணைத்து எதிர்த்துப் போராடவேண்டும் என்று வலியுறுத்தினார்.

காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினையில் இந்தியா-அமீரகத்தின் தலைமை

கால மாற்றம் தொடர்பான பிரச்சினையில் இந்தியா தன்னை முன்னணியில் நிறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகமும் சுத்தமான எரிசக்தி பிரச்சினையில் வலுவாக குரல் எழுப்புகிறது.

இந்த முறை ஐக்கிய நாடுகளின் 28வது காலநிலை மாற்ற மாநாடான COP-28ஐ அமீரகம் ஏற்பாடு செய்கிறது.

இதன் தலைவராக அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனியின் குரூப் சிஇஓ சுல்தான் அகமது அல் ஜாபிரை ஐக்கிய அரபு அமீரகம் நியமித்துள்ளது.

இந்த மாநாடு இந்த ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெறவுள்ளது.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி, தனது தற்போதைய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தில், COP-28 இன் தலைவராக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமைக்கு முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

“மோதியின் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரக பயணம் ஒரு குறிப்பிட்ட நோக்கம் கொண்டது. உண்மையில் மோதியின் பிரான்ஸ் மற்றும் அமீரக பயணத்தின் கவனம் தெளிவாக இருந்தது. எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் பிரச்சினையை தீர்க்க, ஒரு முப்படையை உருவாக்க வேண்டும். இந்த சூழலில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது” என்று ஃபஜ்ஜுர் ரஹ்மான் கூறுகிறார்.

இந்தியா - அமீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் 35 சதவீத பங்களிப்புடன் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் உள்ளனர்.

அமீரகத்தில் உள்ள இந்திய வம்சாவளியினரின் பங்கு

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதுகெலும்பாக இந்திய சமுதாய மக்கள் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் 35 சதவீத பங்களிப்புடன் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் உள்ளனர். இவர்கள் அங்கு ஒவ்வொரு துறையிலும் வேலை செய்வதோடு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாதவர்களாக திகழ்கிறார்கள்.

வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா அதிக அந்நியச் செலாவணியை ஈட்டுகிறது. 2020 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் குடியேறிய இந்தியர்கள் 83 பில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர்.

இதில் பெரும் பகுதியினர் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள்தான். அதிக அளவிலான பணம் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களால் அனுப்பப்படுகிறது.

வெளியில் வேலை செய்பவர்கள் அனுப்பும் தொகையில் இதன் பங்கு 23.4 சதவீதம். 18 சதவீதத்துடன் அமீரகம் அடுத்த இடத்தில் உள்ளது.

2018 ஆம் ஆண்டில், வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்கள் தங்கள் வீடுகளுக்கு 79 பில்லியன் டாலர் அனுப்பியுள்ளனர்.

இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிபவர்களின் பங்கு 13.8 பில்லியன் டாலர் ஆகும்.

சவூதி அரேபியாவிலிருந்து 11.2 பில்லியன் டாலர்களும், குவைத்திலிருந்து 4.1 பில்லியன் டாலர்களும், ஓமானில் இருந்து 3.3 பில்லியன் டாலர்களும் அனுப்பப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: