ஆன்லைன் கேம்களுக்கு 28% ஜிஎஸ்டி: பிரதமரின் டிஜிட்டல் பொருளாதார கனவை பாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நிகில் இனாம்தார் மற்றும் மெரில் செபாஸ்டியன்
- பதவி, பிபிசி செய்திகள்
ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவு மிகவும் மோசமானது என்று விமர்சித்துள்ள நிபுணர்கள், வளர்ந்து வரும் இந்தத் துறைக்கு அரசின் முடிவு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இந்த எச்சரிக்கை ஒருபுறம் இருக்க, அரசின் இந்த முடிவை அடுத்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்த பந்தயங்களை நடத்தும் மையங்களின் (கேசினோ) பங்குகள் மதிப்பு அதிரடியாக சரிந்துள்ளது.
நாட்டில் 900க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல்வேறு ஆன்லைன் விளையாட்டுகளை வழங்கி வருகின்றன. இதற்காக, இந்நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து வரும் சேவைக் கட்டணத்தில் சிறிய அளவு தொகையை அரசுக்கு வரியாகச் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் செலுத்தும் முழு கட்டணமும் வரி வரம்புக்குள் வரும்.
ஐம்பது சதவீதத்திற்கும் மேல் வரி
ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலின் சமீபத்திய முடிவு செயல்படுத்தப்பட்டால், ஜிஎஸ்டி, இந்த கேம்களை வழங்கும் ஆன்லைன் நிறுவனங்களுக்கான சேவைக் கட்டணம், டீடிஎஸ் என்று ஆன்லைன் கேமிங்கில் வெற்றி பெறும் ஒருவர் பெறும் பரிசுத் தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது ஆன்லைன் விளையாட்டில் பங்கு பெறும் ஒருவர் பரிசாகப் பெறும் ஒவ்வொரு 100 ரூபாயில் 28 ரூபாய் ஜிஎஸ்டி, 5-15 ரூபாய் நிறுவன சேவைக் கட்டணம் மற்றும் 30 சதவீதம் டீடிஎஸ் (TDS) செலுத்த வேண்டி வரும்.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கான இயங்குதள கட்டணம் அல்லது கமிஷன் மீது குறைந்த அளவு வாட் வரி அல்லது ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது, “இந்த விளையாட்டுகளுக்கான உலகளாவிய தர நிலைக்கு முற்றிலும் முரணானது; ஆன்லைன் கேம்களை விளையாடுபவர்களின் ஊக்கத்தையும் குறைத்துவிடும்,” என்றார் கார்ப்பரேட் சட்ட நிபுணரான சுதிப்தா பட்டாச்சார்ஜி.
“அரசின் இந்த முடிவு இந்தத் துறையை முற்றிலும் முடக்கிவிடும் அபாயம் உள்ளதுடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் விதத்தில் உள்ளது,” என்றும் அவர் எச்சரிக்கிறார்.
ஐந்து ஆண்டுகளில் அபார வளர்ச்சி
ஆன்லைன் கேமிங் தொழில் இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது. இதன் 'ஆண்டு கூட்டு வளர்ச்சி' விகிதம் 28-30 சதவீதமாக உள்ளது. ஸ்மார்ட்ஃபோன்கள் மலிவு விலையில் கிடைப்பதும், குறைந்த கட்டணத்தில் மொபைல் டேட்டா வசதி கிடைக்கப் பெறுவதும் ஆன்லைன் கேமிங்கின் அபரிமிதமான வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
இதன் பயனாக, ‘டைகர் குளோபல்’ போன்ற பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிடம் இருந்து இந்தத் துறை 2.5 பில்லியன் டாலர்கள் அளவுக்கு தொழில் முதலீட்டை ஈர்த்துள்ளது.
ஆனால், ஜிஎஸ்டி கவுன்சிலின் சமீபத்திய முடிவு ஆன்லைன் கேமிங் துறையில் இயங்கி வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பயனர்கள் தளத்துக்கான வருவாய் மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் ஆன்லைன் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நிறுவனமான 'கேமர் ஜி'யின் (Gamer Ji) தலைமை செயல் அதிகாரி சோஹம் தாக்கர்.
அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு முடிவால், “முதலீட்டாளர்கள் திசை திரும்புவதைத் தடுக்கும் விதத்தில், பல ஆன்லைன் விளையாட்டு தொழில் நிறுவனங்கள், இந்தியாவுக்கு வெளியே தங்களின் வணிகத்தை இடமாற்றம் செய்யலாம்,” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்?
“ஆன்லைன் கேம்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி என்ற ஒரேயொரு முடிவால் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்தத் தொழில் துறையை அரசு நசுக்கிவிட்டது,” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார் போக்கர் ஹை (Poker High) நிறுவனத்தைச் சேர்ந்த கௌரவ் கக்கர்.
அத்துடன், “அரசின் இந்த முடிவு நாட்டில் சட்டவிரோதமாக இயங்கி வரும் ஆன்லைன் விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கக்கூடும்,” என்றும் அவர் கூறுகிறார்.
“அரசின் இந்த முடிவு அரசமைப்புக்கு முரணானது; பகுத்தறிவுக்கு புறம்பானது” என்று சாடியுள்ளது அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு (All India gaming Federation).
திறன் அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டுகளை, சூதாட்டத்துடன் இணைப்பதன் மூலம், இதுதொடர்பான நீதித் துறையின் முடிவை இந்திய அரசாங்கம் புறக்கணித்துள்ளது என்றும் இந்த அமைப்பு விமர்சித்துள்ளது.
வாய்ப்பு அடிப்படையிலான விளையாட்டாகக் கருதப்படும் சூதாட்டம், இந்தியாவில் பல மாநிலங்களில் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திறன் அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டுகளை பல மாநிலங்கள் அனுமதித்துள்ளன.
ஆனால், ஆன்லைன் கேம்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி என்ற முடிவால், இந்தத் துறையில் பணிபுரிந்து வரும் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கக்கூடும் என்று துறை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஆன்லைன் கேம்களை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தற்போது 50 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். 2028க்குள் இந்தத் துறையில் 3.5 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகளும், 10 லட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் டிஜிட்டல் பொருளாதார கனவை பாதிக்குமா?
மத்திய அரசின் இந்த முடிவு, தொழில்துறை மீதான அதன் நிலையற்ற தன்மையைக் காட்டுவதாக உள்ளது என்று பிபிசியிடம் பேசிய பல கேமிங் நிறுவனங்கள் அதிருப்தியுடன் கூறியுள்ளன.
“தொழில் துறைக்கு ஊக்கமளிக்கப்பட்டு வரும் வேளையில் அரசின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது. சட்டரீதியாக எதிர்கொள்ள முடியாத விதத்தில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது,” என்கிறார் அகில இந்திய கேமிங் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான ரோலண்ட் லேண்டர்ஸ்.
“பிரதமர் நரேந்திர மோதியின் ஒரு ட்ரில்லியன் டிஜிட்டல் பொருளாதாரக் கனவுக்கு இது பங்கத்தை ஏற்படுத்தும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்திய ஆன்லைன் கேமிங் துறையை பிரதமர் மோதி பலமுறை பாராட்டியுள்ளார். உலகளாவிய சந்தை தேவையைப் பூர்த்தி செய்யும் இந்தத் துறை, பல்லாயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் படைத்தது என்கின்றனர் நிபுணர்கள்.
ஒருவரை மிரட்டி பணம் பறிப்பதைப் போன்ற இந்த வரி விதிப்பு திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் பட்டாசார்ஜி.
மத்திய, மாநில அரசுகள் இந்த வரி விதிப்பைச் செயல்படுத்தினால், ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் அவர்.
ஆனால், ஒருமித்த கருத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவோ, திரும்பப் பெறவோ வாய்ப்பில்லை என்று மத்திய வருவாய்த் துறை செயலர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அரசின் முடிவுக்கு வரவேற்பு
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு என்ற முடிவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை ( ஜூலை 11) இரவு அறிவித்தார்.
மத்திய மற்றும் மாநிலங்களின் நிதியமைச்சர்களைக் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு தொழில்துறையை வீழ்த்த விரும்பாது. ஆனால், “அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான அளவுக்கு அவற்றை (ஆன்லைன் கேம்கள்) ஊக்குவிக்க முடியாது,” என்று நிதியமைச்சர் அப்போது தெரிவித்திருந்தார்.
ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது சரியான முடிவு என்று பிபிசியிடம் தெரிவித்தார், இந்த விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க கோரி சட்டப் போராட்டம் நடத்தி வரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சித்தார்த்தா ஐயர்.
“யூகத்தின் அடிப்படையிலான இந்த விளையாட்டுகளில் ஈடுபட்டு, கடனாளியாவதன் விளைவாக, ஒவ்வொரு வாரமும் நாட்டில் ஏதோவொரு பகுதியில் யாரோ ஒருவர் தற்கொலை செய்துகொள்வது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது,” என்கிறார் அவர்.
ஆன்லைன் விளையாட்டுகள் 28 ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏனெனில், அவற்றை அரசு சூதாட்டமாகக் கருதுகிறது. அரசின் இந்தப் புரிதல் சரியானதுதான் என்கிறார் ஐயர்.
“ஏனெனில் ஆன்லைன் விளையாட்டில் பங்கேற்கும் ஒருவர், அவரது கட்டுப்பாட்டில் இல்லாத ஓர் அம்சத்தின் மீது பந்தயம் கட்டுகிறார்,” என்று அவர் விளக்கம் அளிக்கிறார்.
“மது, சிகரெட் பயன்பாட்டை பொதுமக்கள் மத்தியில் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் இவற்றின் மீது அதிக வரி விதிக்கப்படுகிறது. இதேபோன்றுதான் தற்போது ஆன்லைன் கேம்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது,” என்று அரசின் முடிவை வரவேற்கிறார் அவர்.
ஆன்லைனில் ரம்மி விளையாடி 2022ஆம் ஆண்டு 4 லட்சம் ரூபாயை இழந்து தவிக்கும் பைசல் மக்பூல் போன்றவர்கள் இதில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்கின்றனர்.
“இதுவொரு போதை. அதிக வரி விதிப்புடன் வயது, வருமானம் உள்ளிட்ட பிற அம்சங்களையும் கருத்தில் கொண்டு ஒருவர் இந்த விளையாட்டுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படும் விதத்தில் அரசாங்கம் கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும்.
குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினரை பாதிக்கும் ஆன்லைன் கேம்களுக்கு முழுமையாகத் தடை விதித்தாலும் தகும்,” என்று பிபிசியிடம் கூறினார் மக்பூல்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












