அங்கிதா: கல்லீரல் தானம் செய்த பிறகும் தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் சாதனைப் பெண்

பட மூலாதாரம், ANKITA SRIVASTAVA
- எழுதியவர், சாம்ரா பாத்திமா
- பதவி, பிபிசி உருது, லண்டன்
“நாங்கள் காரில் பயணிக்கும் போதெல்லாம் வாகனம் வேகத்தடையை கடக்கும்போது கல்லீரல் மேலும் கீழும் ஏறி, இறங்கும். வயிற்றின் இடப்புறமும், வலப்புறமும் அதிகம் இடம் இருக்கும் என்பதால் கல்லீரல் இருபக்கமும் உருளும். இதன் காரணமாக இரவில் மட்டும் நேராக தூங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தேன்” தனது தனித்துவமான கதையை விவரிக்கும் போது இவ்வாறு கூறுகிறார்
மத்தியப் பிரதேச மாநிலம், போபாலை சேர்ந்த தடகள வீராங்கனை அங்கிதா ஸ்ரீவஸ்தவா.
18 வயதில் அங்கிதா தனது கல்லீரலில் 74 சதவீதத்தை தன் தாய்க்கு தானம் செய்தார். அதன் பிறகும் தடகளப் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகிறார். இன்று பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உரிமையாளராக இருக்கும் இவருக்கு இந்த வெற்றிகள் எல்லாம் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை.
சிறு வயதில் எடுத்த மிகப்பெரிய முடிவு
அங்கிதாவுக்கு 13 வயதாக இருந்தபோது, அவரின் அம்மா கல்லீரல் அழற்சி எனப்படும் ‘லிவர் சிரோசிஸ்’ (Liver Cirrhosis) என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே இந்த நோய்க்கு நிரந்தர தீர்வு என்று மருத்துவர்கள் கூறிய அடுத்த கணமே, தனது கல்லீரலை தாய்க்கு தானம் செய்வதாக அங்கிதா கூறினார். ஆனால் அப்போது அவருக்கு 13 வயது தான் என்பதால், கல்லீரல் தானத்திற்காக அவர் 18 வயது வரை காத்திருக்க வேண்டியதானது.

பட மூலாதாரம், ANKITA SHRIVASTAVA
அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட சிக்கல்கள்
இந்த இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் கல்லீரல் தானம் செய்ய வேறொரு நபரை அங்கிதாவின் குடும்பத்தினர் தேடி வந்தனர். ஆனால் அந்த தேடல் நிறைவடையாததால், முன்பு திட்டமிட்டபடியே 18 வயதில் அங்கிதா தன் தாய்க்காக கல்லீரலை தானம் செய்தார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக உற்சாகத்துடன் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைந்த தனது உடல்நிலை, அறுவை சிகிச்சைக்கு பிறகு மோசமானது என்கிறார் அங்கிதா.
மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு அங்கிதா சுயநினைவுக்கு திரும்பிய போது அவரது உடல் முழுவதும் பல்வேறு விதமான குழாய்களும், சிறிய மருத்துவ உபகரணங்களும் பொருத்தப்பட்டிருந்தன. முக்கியமாக ‘மோர்பின்’ என்னும் வலி நிவாரண மருந்தை செலுத்துவதற்கான குழாய் அங்கிதாவின் கையில் பொருத்தப்பட்டிருந்தது. அவர் வலியால் முனகும் போதெல்லாம் செவிலியர்கள் அந்த ஊசியை அவருக்கு செலுத்தினர். பல நாட்கள் இப்படியே வலியுடன் நகர்ந்தன. நான்கில் மூன்று பங்கு கல்லீரல் அகற்றுப்பட்டிருந்தால், அதிகம் அசைவதற்கே அங்கிதா சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

பட மூலாதாரம், ANKITA SHRIVASTAVA
காப்பாற்ற முடியாமல் போன தாயின் உயிர்
“அறுவை சிகிச்சை வலியில் இருந்து முழுமையாக மீள்வதற்குள், சிகிச்சை முடிந்து இரண்டு மூன்று, மாதங்களில் என் தாய் இறந்துவிட்டார். ஏற்கனவே உடலளவில் வலியை அனுபவித்து வந்த எனக்கு அம்மாவின் மரணம் மனதளவில் கடுமையாக பாதித்தது” என்கிறார் அங்கிதா.
அவரின் கூற்றுப்படி, தாயின் மரணத்திற்கு பிறகு அவரையும், அவரது சகோதரிகளையும் ஒன்றாக வசிக்க அங்கிதாவின் தந்தை அனுமதிக்கவில்லை. சகோதரிகள் அவர்களின் தாத்தா பாட்டியுடன் வசிக்கும்படி பணிக்கப்பட்டதால், பேத்திகளுக்கான வீட்டு செலவையும் அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டியதானது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு வரை அங்கிதா தேசிய அளவில் நீச்சல் மற்றும் கால்பந்து வீராங்கனையாக திகழ்ந்தார். ஆனால், கடினமான இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் தன்னால் மீண்டும் விளையாட முடியும் என்று எண்ணவில்லை என்று கூறும் அங்கிதா, உடல் மற்றும் மன ரீதியாக எவ்வளவு சிரமங்கள் இருந்தபோதும், தானொரு விளையாட்டு வீராங்கனை என்ற ஆழமான எண்ணம் மட்டும் தன் மனதில் இருந்து அகலவில்லை என்கிறார் பெருமை பொங்க அவர்.

பட மூலாதாரம், ANKITA SHRIVASTAVA
வெற்றியின் திறவுகோலான விடாமுயற்சி
மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு வாழ்க்கை எப்படி திடீரென மாறியது என்பதை அவர் அனுபவப்பூர்வமாக உணர்ந்தார்.
“நான் குணமடைய ஒன்றரை ஆண்டுகள் ஆயின.. அதன் பிறகு, மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்காக நடத்தப்படும் உலக அளவிலான பிரத்யேக தடகளப் போட்டிகளை பற்றி அறிந்து கொண்டேன். அத்துடன் அந்தப் போட்டிகளில் இந்திய அணியின் சார்பாக பங்கேற்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்” என்கிறார் அங்கிதா ஸ்ரீவஸ்தவா.
“ஆரோக்கியமான ஒரு நபருடன் ஒப்பிடும்போது, இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்பது எனக்கு எவ்வளவு கடினமான விஷயம் என்பதை அப்போது உணர்ந்தேன். ஆனால் விடாமுயற்சியே வெற்றிக்கான திறவுகோல் என்பதையும் அறிந்திருந்தேன். நீங்கள் ஒரு விஷயத்தை ஆர்வமுடன் தொடர்ந்து மேற்கொண்டால், ஒரு நாள் அதில் நிச்சயம் வெற்றி பெறலாம்” என்கிறார் அவர் தன்னம்பிக்கையுடன்.
ஒருபுறம் விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருந்த அவர், மறுபுறம் தமது அலுவலக பணிகளையும் மீண்டும் கவனிக்க தொடங்கினார்.
காலையில் சில மணி நேரம் பயிற்சி மேற்கொண்ட பின் அலுவலகம் சென்றுவிடுவதாகவும், பணி முடித்து மாலை வீடு திரும்பியதும் மீண்டும் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்கிறேன் என்றும் அங்கிதா பூரிப்புடன் கூறுகிறார்.
மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின், 2019 இல் பிரிட்டனிலும், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் நடைபெற்ற உலக மாற்று அறுவை சிகிச்சை விளையாட்டு போட்டிகளில் அங்கிதா பங்கேற்றார். அத்துடன் நீளம் தாண்டுதல் மற்றும் எறிபந்து போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களையும், மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் வென்று அசத்தி உள்ளார் அங்கிதா.

பட மூலாதாரம், ANKITA SHRIVASTAVA
அங்கிதாவின் பன்முகத் திறமை
அங்கிதா இன்று ஓர் சர்வதேச வீராங்கனையாக அறியப்படுகிறார். அத்துடன் தொழிலதிபர், ஊக்கமளிக்கும் பேச்சாளர் என்று அவருக்கு பல முகங்கள் உள்ளன.
மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கியுள்ள அவர், எதிர்காலத்தில் இன்னும் நிறைய சாதிக்க விரும்புவதாக கூறுகிறார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் அங்கிதாவின் வாழ்வில் பல பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த சிகிச்சைக்குப் பின் அவர் வீட்டுக்கு வெளியே பீட்சா, பர்கர் என்று எந்த உணவை உட்கொள்வதில்லை.
தனது தோழிகளுடன் வெளியே செல்லும்போதும், வீட்டில் இருந்து உணவு வகைகளையும், உலர் பழங்களையும் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனாலும் இத்தனை இன்னல்களுக்கு இடையேயும் வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களை எதிர்கொண்டு, கடந்து செல்ல வேண்டும் என்ற வேட்கை மட்டும் அவரிடம் மேலோங்கி உள்ளது.
அது தொழில்முறை விளையாட்டாக இருந்தாலும் சரி… ஆகாயத்தில் இருந்து குதிப்பது ( Sky Diving), ஆழ்கடலுக்குள் நீந்துவது (Deep Sea Diving) போன்ற சாகசங்களாக இருந்தாலும் சரி.. சுவாரஸ்யமான அனுபவங்களை பெறுவதில் இருந்து அவர் விலகி ஓடுவதே இல்லை.
அம்மாவின் டைரி
“என் அம்மா கருப்பு நிறத்திலான ஒரு நாட்குறிப்பை வைத்திருந்தார். அதில் என் சகோதரியின் திருமணம் எப்படியெல்லாம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும், அந்த வைபவத்திற்கு யாரெல்லாம் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட வேண்டும், அலுவலகத்தில் நான் என்ன செய்ய வேண்டும், யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்பன போன்ற பல விஷயங்களை தன் நாட்குறிப்பில் அவர் எழுதி வைத்திருந்தார். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் அவர் இறந்து போனார்” என்று வருத்தத்துடன் கூறும் அங்கிதா, வாழ்க்கையின் மீதான தனது தீராத வேட்கைக்கு இதுதான் காரணம் என்கிறார்.
“தூக்கத்திலேயே பலர் இறந்து விட்டால் அவர்களின் கனவும் நனவாக முடியாமல் போய்விடுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழிக்கும் போதும் இதை நான் நினைவூட்டி கொள்கிறேன். இந்த நாளை பெற்றுள்ளதற்காக மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணரும் நான், இதை ஏதாவதொரு வகையில் அர்த்தமுள்ள தினமாக மாற்ற முயற்சிக்கிறேன்” என்கிறார் அங்கிதா நம்பிக்கையுடன்.
"இதன் மூலம் வாழ்வில் பல்வேறு புதிய அனுபவங்களை பெற முடிவதாக கூறும் அவர், வெற்றி, தோல்விகள் மற்றும் பல நல்ல விஷயங்களால் நிரம்ப பெற்றதே வாழ்க்கை” என்கிறார்.

பட மூலாதாரம், ANKITA SHRIVASTAVA
பிறர் சொல்வதைக் கேட்க வேண்டும்
வாழ்க்கை யாருக்கும் அவ்வளவு எளிதானதல்ல. எனவே நாம் பிறரிடம் அன்புடனும், கருணை உணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று தத்துவத்தையும் உதிர்க்கிறார் அங்கிதா.
“ஒருவர் தனது பிரச்னை குறித்து உங்களிடம் கூறும்போது, நீங்கள் சந்தித்த பிரச்னைகளை ஒப்பிடும்போது இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற ரீதியில் அவர்களிடம் பேசக்கூடாது” என்று அறிவுறுத்துகிறார். பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்கும் பழக்கத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
பொதுமக்கள் எந்த நோய்க்கும் சிகிச்சை பெறுவது கடினமான விஷயமாக இருக்க கூடாது. இதை கருத்தில் கொண்டு சுகாதாரத் துறையில் எதிர்காலத்தில் தன்னாலான பங்களிப்பை அளிக்க விரும்புவதாக கூறுகிறார் அங்கிதா ஸ்ரீவஸ்தவா.
மீண்டும் கல்லீரல் தானம்
“சாமானிய மக்கள் இன்னும் எளிதாக அணுகக்கூடிய வகையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையங்களை மாற்ற முயற்சித்து வருகிறோம். இதன் பயனாக புற்றுநோய் பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை மாறும்” என்கிறார் அவர்.
தன் தாயின் உயிரை காப்பாற்ற முடியாமல் போயிருந்தாலும், அவருக்கு கல்லீரல் தானம் செய்ய வேண்டும் என்று தான் எடுத்த முடிவுக்காக வருந்தவில்லை என்று கூறுகிறார் அங்கிதா. அத்துடன் தன் தாயைப் போல, மற்றொரு உயிரை காக்கும் முயற்சியாக மீண்டும் கல்லீரல் தானம் செய்ய வேண்டி வந்தால், நிச்சயம் அதை செய்வேன் என்கிறார்.
வாழ்வில் இன்னும் நிறைய நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்பதே அங்கிதாவின் விருப்பமாக உள்ளது. “நான் தொழிலதிபராக இருந்தால் என்ன? என்னால் விளையாட முடியாதா? நான் விரும்பினால் எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும். இதுவே என் வாழ்வின் தத்துவம். இந்த தத்துவத்தால் சிலராவது ஈர்க்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்” என்கிறார் சாதனைப் பெண் அங்கிதா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












