இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது எப்போது? - இஸ்ரோவின் 5 முக்கிய திட்டங்கள்

பட மூலாதாரம், ISRO
- எழுதியவர், ஜான்வி மூலே
- பதவி, பிபிசி மராத்தி
சந்திரயான்-3 விண்கலம் நிலாவை நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறது. ஆனால், சந்திரயான்- 3 மட்டும் இஸ்ரோவின் லட்சியம் அல்ல, அதைத் தவிர்த்து மற்ற 5 பெரிய திட்டங்களிலும் இஸ்ரோ கவனம் செலுத்திவருகிறது.
நிலவை ஆய்வு செய்யும் திட்டம் மட்டுமல்லாமல், சூரியனை ஆய்வு செய்வதற்கான விண்கலத்தையும் இஸ்ரோ விரைவில் ஏவ உள்ளது. அதைத் தவிர்த்து செவ்வாய் மற்றும் வெள்ளி கோளை ஆய்வு செய்யும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது.
மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விண்கலம் மூலம் ககன்யான் திட்டத்தின் கீழ் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இஸ்ரோவின் எதிர்கால 5 திட்டங்கள் குறித்து சுருக்கமாக பார்ப்போம்.
ஆதித்யா-எல் 1
சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-எல் 1 விண்கலம் இந்தாண்டு ஆகஸ்ட் இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதுவரை நாசா, ஜெர்மனி, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு மட்டுமே சூரியனை ஆய்வு செய்வதற்கான விண்கலத்தை ஏவியுள்ளன.
இதன் மூலம் சூரியனை ஆய்வு செய்யும் நான்காவது விண்வெளி அமைப்பாகிறது இஸ்ரோ.
ஆதித்யா-எல் 1 என்பது சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டம். இந்த விண்கலம் நேரடியாக சூரியனுக்குச் செல்லாது. மாறாக, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீட்டர் தொலைவில் நிலைகொண்டு சூரியனை ஆய்வு செய்யும்.
விண்கலம் நிலைகொண்டு செயல்படும் பகுதி எல்-1 (லாக்ரேஞ்ச் புள்ளி - 1) எனப்படும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான இந்தக் கற்பனை பகுதியில் இருந்து சூரியன் குறித்து எந்தவித தடையும் இல்லாமல் ஆராய முடியும்.
சூரியனின் ஒளிவட்டம் குறித்து ஆய்வு செய்யும் ஆதித்யா-எல் 1, சூரியனின் காந்தப்புலம் மற்றும் சூரிய காற்றையும் ஆய்வு செய்யும்.

பட மூலாதாரம், ISRO
ககன்யான்
இந்தியாவின் விண்வெளி திட்டத்தில் மிகப்பெரிய லட்சியமாக ககன்யான் திட்டம் பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 3 விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் பத்திரமாக அழைத்துவரப்படுவர்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான திட்டத்தை 2007ஆம் ஆண்டே இந்தியா வடிவமைக்கத் தொடங்கியது. ஆனால், அப்போது பெருமளவில் நிதிப்பற்றாக்குறை இருந்தது.
அதேபோல, அதிக திறன் கொண்ட மற்றும் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையக்கூடிய ராக்கெட்டுகளின் தேவையும் இருந்தது.
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 சோதனை வெற்றிக்குப் பிறகு இந்தத் திட்டத்தை 2017ஆம் ஆண்டு இந்தியா மீண்டும் கையில் எடுத்தது.
பின்னர் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால் திட்டமிட்டபடி 2022ஆம் ஆண்டு ககன்யான் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.
2024 இறுதிக்குள் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக 2019ஆம் ஆண்டு இந்திய வான்படையைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுவருகிறது.
மங்கள்யான் - 2
இந்திய விண்வெளி வரலாற்றில் 2013-14 காலகட்டத்தில் மங்கள்யான் திட்டம் புதிய அத்தியாயத்தை உருவாக்கியது என்றால் மிகையல்ல.
கடைசியாக 2022 அக்டோபரில் தொடர்பை இழக்கும்வரை மங்கள்யான் விண்கலம் 8 ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தது.
ஹாலிவுட் படத்தைவிட குறைவான நிதியில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது செவ்வாய் கிரகத்திற்கு மீண்டும் விண்கலத்தை அனுப்ப இந்தியா தயாராகிவருகிறது. ஆனால், இது எப்படி செயல்படுத்தப்படும் என்பதற்கான திட்டம் முழுமையாக வகுக்கப்படவில்லை.
இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான விண்வெளி ஒத்துழைப்பு கொள்கையின்படி, எதிர்கால செவ்வாய் கிரக திட்டங்களில் இணைந்து செயல்படுவோம் என இரு நாடுகளும் அறிவித்துள்ளன.

பட மூலாதாரம், ISRO
சுக்ரயான்
பிரான்ஸுடனான ஒத்துழைப்பு கொள்கையில் வெள்ளி கோளை ஆய்வு செய்வதற்கான திட்டமும் உள்ளது.
வெள்ளி கோளை ஆய்வு செய்ய சுக்ரயான் திட்டத்தை இந்தியா உருவாக்கி உள்ளது.
இந்தத் திட்டத்திற்கான யோசனை 2012ஆம் ஆண்டு உருவாகினாலும், 2017ஆம் ஆண்டில்தான் முதற்கட்ட வேலைகள் தொடங்கின.
கொரோனா தொற்று ஏற்படுத்திய தாமதம் மற்றும் இஸ்ரோவின் மற்ற திட்டங்கள் காரணமாக சுக்ரயான் திட்டத்தை செயல்படுத்த இன்னும் கூடுதல் காலம் எடுக்கலாம். 2023ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 2031ஆம் ஆண்டிற்கு தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது.
நிசார்

பட மூலாதாரம், NASA
நிசார் என்பது அமெரிக்க விண்வெளி மையமான நாசாவும், இந்திய விண்வெளி மையமான இஸ்ரோவும் இணைந்து செயல்படும் கூட்டுத்திட்டம்.
இந்தத் திட்டத்தின் கீழ் பூமியை ஆய்வு செய்ய 2024ஆம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும். இதற்கான செயற்கைக்கோள் கடந்த மார்ச் 8ஆம் தேதி இந்தியா வந்தடைந்தது.
இந்த செயற்கைக்கோள், ஏவப்பட்ட 12 நாளில் மொத்த உலகத்தின் தகவலையும் சேகரிக்கும்.
நிசார் செயற்கைக்கோளால் சேகரிக்கப்படும் தகவல்கள் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பனிப்பாறைகள், காடுகள், கடல்மட்ட உயர்வு, நிலத்தடி நீர், நில நடுக்கம், சுனாமி, எரிமலை, நிலச்சரிவு குறித்து ஆராய பயன்படும்.
இந்தத் திட்டங்கள் தவிர்த்து, பல்வேறு செயற்கைக்கோள்களை இஸ்ரோ தொடர்ந்து ஏவ உள்ளது. சந்திரயான் திட்டத்தின் அடுத்த கட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபடவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












