அமலாக்கத்துறை சோதனையின்போது என்ன நடக்கும்? பூட்டை உடைக்கும் அதிகாரம் உண்டா?

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமாக சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீதான சோதனை தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமலாக்கத்துறை எந்த நேரத்திலும் எந்த தனிநபருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தலாமா? சோதனை செய்யும் இடத்தில் அவர்களின் விசாரணை எப்படி நடைபெறும் என்பது தொடர்பான பல கேள்விகள் எழுகின்றன.
அமலாக்கத்துறை இந்தியாவில் மத்திய நிதிஅமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு விசாரணை அமைப்பு. பண மோசடி மற்றும் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கான முதன்மையான விசாரணை அமைப்பு என்று அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ வலைதளம் கூறுகிறது.
இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும், அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், தனியார் நிறுவனங்களை நடத்துபவர்கள், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றவர்கள் என பலதரப்பட்ட நபர்களிடம் அமலாக்கத்துறை சோதனை செய்வது அவ்வப்போது செய்தியாகின்றது.
அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் பற்றியும் அந்த அமைப்பு செயல்படும் விதங்கள் குறித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி கே.சந்துருவிடம் கேட்டோம்.
''எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், தங்களுக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சோதனை செய்யும் அதிகாரம் கொண்டது இந்த அமலாக்கத்துறை. இந்தியாவில் 1956ல் இருந்துசெயல்பட்டு வரும் அமலாக்கத்துறை முதலில் டெல்லியில் செயல்பட்டாலும், தற்போது மும்பை, சென்னை, சண்டிகர், கொல்கத்தா, டெல்லி ஆகிய ஐந்து இடங்களில் மத்திய அலுவலகங்களைக் கொண்டு செயல்பட்டுவருகிறது. பொருளாதார குற்றங்கள் தொடர்பாக, தனிநபர்கள் யாரை வேண்டுமானாலும் சோதனை செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது,'' என்றார் நீதிபதி சந்துரு.

அமலாக்கத்துறையின் முக்கிய அதிகாரங்கள் என்ன?
- பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பொருளாதார குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உண்டு.
- சட்டவிரோதமான வழிகளில் பெறப்பட்ட சொத்துக்கள், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சோதனை செய்து கணக்கிட்டு, அவற்றை பறிமுதல் செய்யலாம்.
- பணமோசடி அல்லது பிற பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கலாம்.
- இந்தியாவின் நிதி அமைப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள நபர்களை சர்வதேச காவல்துறையிடம்(இன்டர்போல்) தகவல் கொடுத்து, அவர்களை கண்டறியலாம்.
- கால வரையறை இல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பணப்பரிமாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு சோதனை நடத்தமுடியும். ஒரு தனி நபரின் வருமானம் எவ்வளவு, ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது என்று ஆராயலாம், வருமானத்திற்கான மூலதனம் எது என்று கேட்டு அதற்கான ஆவணங்களைப் பெறலாம்.
- அமலாக்கத்துறையில் ஒவ்வொரு விசாரணைக்கும் தனி குழுக்கள் அமைக்கப்படும். விசாரணை செய்யும் இடத்தில் கிடைக்கும் நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் போன்றவற்றை மதிப்பீடு செய்வதற்கு அந்த குழுவில் நகைமதிப்பீட்டாளர்கள் இருப்பார்கள். வருமானம், சொத்துக்களை கணக்கிட வருமானவரித்துறை அதிகாரிகள் இருப்பார்கள். ஒவ்வொரு சோதனைக்கும் தேவைப்படும் நிபுணர்களை கொண்டு சோதனையை அமலாக்கத்துறை நடத்தும்.
- சோதனை செய்யும் இடங்களில் கிடைத்த ஆதாரங்களை வைத்து அமலாக்கத்துறை ஒரு அறிக்கை ஒன்றை தயார் செய்யும். அந்த அறிக்கையின் அடிப்படையில், தனிநபர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

பட மூலாதாரம், ANI
அமலாக்கத்துறையின் சோதனையின்போது அனுமதிக்கப்பட்ட அதிகாரங்கள்
பணமோசடி தடுப்புச் சட்டம், 2002ன் கீழ், குற்றத்தின் பதிவுகள் அல்லது வருமானங்கள் வைக்கப்பட்டுள்ளன என்று சந்தேகிக்கப்படும் கட்டடம், இடம், கப்பல், வாகனம் அல்லது விமானத்தில் நுழைந்து தேடுதல் நடத்தலாம்.
கதவு, பெட்டி, லாக்கர், அலமாரிகளின் சாவிகள் கிடைக்காத பட்சத்தில் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி பூட்டை உடைத்துத் திறக்கலாம். பிரேக் ஓபன்(Break open) என்ற முறையையும் கடைபிடிக்கலாம். அதாவது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனில், அந்த நபருக்கு சொந்தமான இடத்தில் பூட்டை உடைத்து உள்ளே செல்லமுடியும்.
அத்தகைய தேடுதலின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்ட ஏதேனும் பதிவேடு அல்லது சொத்தை பறிமுதல் செய்யலாம்.
சோதனையின்போது என்ன நடக்கும்?
விசாரணையின் போது, சந்தேகிக்கப்படும் நபர் மற்றும் அந்த இடத்தில், அலுவலகம் அல்லது வீட்டில் உள்ள நபர்கள் வெளியேறமுடியாது.
வீட்டிற்குள் அல்லது சோதனை நடைபெறும் இடத்திற்குள் எந்த புது நபரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அங்குள்ள தொலைப்பேசி இணைப்புகள் துண்டிக்கப்படும். அவர்களின் அலைபேசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். அவரச கால அழைப்புகள் தேவைப்படும் பட்சத்தில், அதிகாரிகளின் மேற்பார்வையில் இருந்து அவர்கள் பேசலாம்.
சோதனை தொடங்கிய நேரம் முதல், அது முடிந்து, அதிகாரிகள் சோதனை முடிந்தது என்று அறிவித்து, கோப்புகளில் கையெழுத்து வாங்கும்வரை சோதனை நடைபெறுவதாக அர்த்தம். அதனால், ஒரு நாள் தொடங்கி பல மணிநேரம், பல நாட்கள் கூட அந்த சோதனை நடக்கலாம். கால வரையறை கிடையாது.
சோதனையில், ஆதாரங்கள் இருப்பதாக தெரியவந்தால், அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது இயக்குநருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி, பின்னர் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்படுவர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார். அதன்பின்னர், நீதிமன்ற காவலில் விசாரணையை தொடங்கலாம்.

பட மூலாதாரம், ANI
முக்கிய சட்டங்களின் கீழ் சோதனை
அமலாக்கத்துறை மூன்று முக்கிய சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு சோதனைகளை நடத்துகிறது. இந்த மூன்று சட்டங்களில் உள்ள சரத்துகளை கொண்டு சோதனை செய்து, ஆதாரங்களைத் திரட்டி, சொத்துக்களை அல்லது பணத்தை மீட்கும் வேலையைச் செய்கிறது. அதேநேரம் சட்டமீறலுக்கான அபராதத்தையும் அமலாக்கத்துறை விதிக்கமுடியும் என்கிறார் நீதிபதி சந்துரு.
அந்த சட்டங்களின் விவரம்:
பணமோசடி தடுப்புச் சட்டம், 2002: இது பணமோசடி செய்வதைத் தடுக்கவும், பணமோசடி செய்வதிலிருந்து பெறப்பட்ட அல்லது சம்பந்தப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும், அதனுடன் தொடர்புடைய விஷயங்களுக்காகவும் இயற்றப்பட்ட குற்றவியல் சட்டமாகும். இதன் அடிப்படையில் வருமானத்திற்கான ஆதாரம், பணமோசடி நடந்தது எப்படி என்று சோதனை செய்வதற்கு அதிகாரம் உள்ளது.
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம், 1999 (FEMA): அந்நியச் செலாவணி சட்டங்கள் மற்றும் பொருளாதார சட்ட மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கும், சட்டத்தை மீறியதாக தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் மீது அபராதம் விதிக்கும் பொறுப்பு அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம், 2018 (FEOA): இந்தியாவிலிருந்து தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யமுடியும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












