வெளிநாட்டில் இறந்து போன மகனின் உடலை பார்க்கத் துடித்த தாய் - 8 மாத பாசப் போராட்டம் வென்றது எப்படி?

தாயின் பாசப் போராட்டம் வென்றது எப்படி?

பட மூலாதாரம், NRT Department

படக்குறிப்பு, சின்னம்மாள், செல்லையாவின் தாய்

வெளிநாட்டில் இறந்த தமிழர் ஒருவரின் குடும்பம் 8 மாத காத்திருப்புக்கு பின் அவருடைய உடலுக்கு இறுதி மரியாதை செய்கிறது. தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அந்த குடும்பத்தார், 40 ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்து காலமானவரின் ஆவணங்களில் இருந்த குழப்பத்தை நீக்கிய பின்னரே அவருடைய உடலை போராடி பெற்றுள்ளனர்.

பஹ்ரைன் காவல்துறை பதிவு செய்த பெயரும், அவரது குடும்பத்தினர் சமர்ப்பித்த ஆவணங்களில் இருந்த பெயரும் வெவ்வேறாக இருந்ததே எட்டு மாத காலப் போராட்டத்துக்கு காரணம்.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆணையம், பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம், பஹ்ரைன் அன்னை தமிழ் மன்றம் என பல்வேறு தரப்பினரின் முயற்சிக்கு பிறகே பஹ்ரைன் நீதிமன்றத்தில் இறந்தவரின் அடையாளத்தை நிரூபிக்க முடிந்துள்ளது.

இறந்துபோன 65 வயதான செல்லையாவை கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற 80 வயது தாய் சின்னம்மாளின் ஆசையை நிறைவேற்றவே குடும்ப உறுப்பினர்கள் இந்த விடாமுயற்சியை மேற்கொண்டு உடலை கடந்த புதன்கிழமை இந்தியா கொண்டு வந்துள்ளனர்.

பெயர் குழப்பம் ஏற்பட்டது எப்படி?

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் பகுதியை சேர்ந்தவர் சி. செல்லையா. குடும்ப பொருளாதார சூழல் காரணமாக அவர் தனது இளமைப்பருவத்தில் பஹ்ரைன் நாட்டில் வேலைக்கு சென்றார். அங்கேயே 40 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தவர், தனது 65வது வயதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார்.

அவரது உடலை பஹ்ரைனிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வர முயன்ற போது தான், பஹ்ரைன் காவல்துறை பதிவுகளில் அவரது பெயர் கந்தசாமி என இருப்பது தெரியவந்துள்ளது. இறந்த போன தங்கள் செல்லையா தான் அந்த கந்தசாமி என பஹ்ரைன் நாட்டில் நிரூபித்து உடலை புதுக்கோட்டைக்கு கொண்டு வர தேவைப்பட்ட காலம் எட்டு மாதங்கள் ஆகும்.

செல்லையாவின் உடலை இந்தியா கொண்டு வர உதவிய பஹ்ரைன் அன்னை தமிழ் மன்றத்தின் பொதுச் செயலாளர் தாமரைக் கண்ணன் கூறுகையில், "அவரது பெயர் செல்லையாவாக இருந்தாலும் பஹ்ரைனில் எந்த ஆவணங்களிலும் அவரது பெயர் இல்லை. அவர் இறந்த போது, காவல்துறை வழக்கமான விசாரணை மேற்கொண்ட போது, அருகில் இருப்பவர்கள் அவரை கந்தசாமி என அழைத்து வந்ததால் அந்த பெயரையே பதிந்துக் கொண்டனர். ஆனால் குடும்பத்தினர் கொடுத்த ஆவணங்களில் அவரது பெயர் செல்லையா என இருந்ததால் குழப்பம் உருவானது" என்றார்.

தாயின் பாசப் போராட்டம் வென்றது எப்படி?

பட மூலாதாரம், NRT Department

படக்குறிப்பு, செல்லையாவின் பாஸ்போர்ட்

மகனை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட தாய் ஆசை

செல்லையாவின் தாய் சின்னம்மாள் அவரது உடலை இந்தியா கொண்டு வர இருநாட்டு அரசு அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர், "எனது மகன் பஹ்ரைனிலிருந்து போன் செய்தால் வீட்டில் உள்ள அனைவரும் அவனுடன் பேசுவோம். அவன் முகத்தை என் கண்ணால் ஒரு முறை கடைசியாக பார்கக் வேண்டும்" என கோரியிருந்தார்.

வெளிநாட்டில் வேலை கிடைத்தால் பொருளாதாரத்தில் அடுத்த நிலைக்கு செல்லலாம் என்று ஆசையில் இருந்த செல்லையாவுக்கு, தெரிந்தவர் ஒருவர் பைஹ்ரனில் வேலை வாங்கி தருவதாக கூறியிருந்தார். முதலில் மும்பையில் மூன்று மாதங்கள் இருந்து விட்டு பின் அங்கிருந்து பஹ்ரைன் சென்றார். தனது இளமைப் பருவத்திலேயே பஹ்ரைன் சென்றவர், திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இந்தியாவும் திரும்பவில்லை.

அவருக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருந்தனர். குடும்ப செலவுக்கு அவ்வபோது பஹ்ரைனிலிருந்து பணம் அனுப்பி வந்தார்.

தாயின் பாசப் போராட்டம் வென்றது எப்படி?

பட மூலாதாரம், NRT Department

படக்குறிப்பு, சகோதரியுடன் சின்னம்மாள்

"பிறந்த மண்ணில் உடலை தகனம் செய்வது ஆறுதல் தருகிறது"

அவரது சகோதரியின் மகன் ராஜரத்தினம் கூறுகையில், " அவர் இறந்த பிறகு, எங்களுக்கு பணம் அனுப்பிய ரசீதை கொண்டு தான், அருகில் இருந்தவர் எங்களை தொடர்பு கொள்ள முடிந்தது. அவர் அவ்வப்போது சில ஆண்டுகள் இடையில் பேசாமலே கூட இருப்பார். கடைசியாக 2017ம் ஆண்டு அவரிடம் பேசினேன். அவருக்கு உடல் நிலை சரியில்லை. அவரை இந்தியா கூட்டி வர முயன்றேன். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை, அவருக்கும் விருப்பமில்லை. தற்போது, எட்டு மாத கால விடா முயற்சிக்கு பின் அவரது உடல் சொந்த ஊர் வந்தடைந்தது " என்றார்.

செல்லையாவின் தாயும் தனது பாட்டியுமான சின்னம்மாளின் ஆசைக்காகவே இந்த முயற்சியை எடுத்ததாக கூறுகிறார், கோயில் கட்டிட சிற்பியாக இருக்கும் ராஜரத்தினம்.

" என்னிடம் பணம் காசு இல்லை. பெற்ற பிள்ளையின் முகத்தை பார்த்து பல ஆண்டுகள் ஆன தாய்க்கு கடைசியாக பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் திடமாக இருந்தது. இன்று அவர் பிறந்த மண்ணில் அவரது உடலை தகனம் செய்வது ஆறுதலாக உள்ளது" என்றார்.

தாயின் பாசப் போராட்டம் வென்றது எப்படி?

பட மூலாதாரம், NRT Department

படக்குறிப்பு, செல்லையாவின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்ட போது எடுத்த படம்

உடலை தாயகத்திற்கு மீட்டு வருவதில் தாமதம் ஏன்?

கிராம நிர்வாகம் முதல் இந்திய தூதரகம் வரை ஆவணங்களை உறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டியிருந்தது என பஹ்ரைன் அன்னை தமிழ் மன்றத்தின் பொதுச் செயலாளர் தாமரைக் கண்ணன் கூறுகிறார்.

"முதலில் கிராம நிர்வாகத்திடம் இவர் தான் செல்லையா என தேவையான ஆவணங்களை காண்பித்து உறுதி செய்து, அதற்கான சான்றை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்றோம். பின்பு, வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆணையம் மூலம் தமிழ்நாடு அரசின் சார்பாக பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தோம். ஆவணங்களை சரிபார்த்த தூதரகம், பஹ்ரைன் நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்தது. இறுதியாக பஹ்ரைன் நீதிமன்றத்தில் இறந்து போனது செல்லையா தான் என உறுதியான பிறகு, அவரது உடலை இந்தியா கொண்டுவர அனுமதி கிடைத்தது " என்றார்.

உடலை விமானம் மூலம் அனுப்பவதற்கு தேவையான கட்டணம் ரூ.1 லட்சத்தை இந்திய தூதரகம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த எட்டு மாதங்கள் அவரது உடல் பஹ்ரைன் நாட்டு அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

உடலை இந்தியா கொண்டு வர தேவைப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசும் இந்திய தூதரகமும் எடுத்திருந்தாலும் ஒவ்வொரு கட்டத்தில் கால தாமதம் இருந்ததாக தெரிவிக்கிறார் ராஜரத்தினம். " இத்தனை காலம் ஆவதை பார்த்து பலரும் என்னை இந்த முயற்சியை கைவிட சொன்னார்கள். பஹ்ரைனிலேயே உடலை தகனம் செய்து விட சொன்னார்கள். ஆனால் நாம் சம்மதிக்கவில்லை" என்றார்.

தாயின் பாசப் போராட்டம் வென்றது எப்படி?

பட மூலாதாரம், THAMARAI KANNAN

படக்குறிப்பு, தாமரைக் கண்ணன், பொதுச் செயலாளர், பஹ்ரைன் அன்னை தமிழ் மன்றம்

"வெளிநாடுகளில் பணிபுரிய முறையாக ஆவணங்கள் அவசியம்"

ஒவ்வொரு நாட்டின் விதிகளுக்கு உட்பட்டு தேவையான உதவியை விரைந்து செய்து வருவதாக வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆணையத்தின் துணை இயக்குநர் கே.ரமேஷ் கூறுகிறார். " ஒவ்வொரு நாட்டின் விதிகளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். பெயர் மாற்றம் சில நாடுகளில் மிக பெரிதாக கருதப்படும். அதற்கான நடவடிக்கைகளுக்கு அந்த நாட்டின் விதிகளுக்கு உட்பட்டு நேரம் எடுக்கும்" என்றார்.

வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆணையத்தின் மூலம் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட மொழி மற்றும் வேலைக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட தரகர்கள் மூலம் வெளிநாடு செல்வது பாதுகாப்பானது என அறிவுறுத்தப்படுகிறது.

வெளி நாடுகளில் வேலை செய்பவர்கள் எப்போதும் முறையான ஆவணங்களை வைத்துக் கொள்வது அவசியம் என்கிறார் பஹ்ரைன் அன்னை தமிழ் மன்றத்தை சேர்ந்த தாமரைக் கண்ணன்.

“முறையான ஆவணங்கள் இல்லாமல் தரகர்கள் கூறுவதை நம்பி பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இது அவர்களுக்கே ஆபத்தாக முடியும். பணி செய்வதற்காக வருபவர்கள் அதற்கான விசாவை பெறுவதில்லை. மாறாக மூன்று மாதங்கள் தங்குவதற்காக விசா பெறுகின்றனர். மூன்று மாதங்கள் பிறகு அவர்களின் இருப்பு சட்டவிரோதமானது. கூடுதலாக இருக்கும் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ரூ.5000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் மீண்டும் நாடு திரும்பும் போது, பத்து நாட்கள் சிறையில் இருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பஹ்ரைனுக்குள் நுழைய முடியாது. பணி செய்வதற்கான விசா பெற்றிருந்தாலும் சில விதிகள் பின்பற்ற வேண்டும். ஒரு பணியிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாறும் போது, முறையாக விடுப்பு பெற்று பஹ்ரைன் தொழிலாளர் சந்தை ஒழுங்கு ஆணையத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். " என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: