சென்னை தாழங்குப்பத்தில் கழிவறை குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு: தீண்டாமை காரணமா? கள ஆய்வு

சென்னை தாழங்குப்பத்தில் கழிவறை குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு: சாதி வேறுபாடு காரணமா?
படக்குறிப்பு, தாழங்குப்பம் என்பது 150 தலித் குடும்பங்கள் வசிக்கும் பகுதி. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொது கழிவறையைப் பயன்படுத்துகிறார்கள்.
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னை எண்ணூர் அருகே தாழங்குப்பம் பகுதியில் உள்ள தலித் குடியிருப்புக்கான பொது கழிவறையில் புதிதாக கழிவுநீர் குழாய் பொருத்துவதற்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதிரீதியாக எதிர்ப்பு தெரிவிப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.

தாழங்குப்பத்தின் பின்புறத்தில் உள்ள நெட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மாற்று சமூக மக்கள் புதிய குழாய் அமைப்பதைத் தடுக்க சுவர் எழுப்பியுள்ளதாகவும் படங்கள் வெளியாகின.

உண்மையில், சாதிரீதியான காரணங்களுக்காக கழிவுநீர் குழாய் அமைப்பது தடுக்கப்படுகிறதா, குழாய் அமைப்பதைத் தடுக்க சுவர் கட்டப்பட்டதா என்று தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் நேரடியாகச் சென்று அங்கு கள ஆய்வு நடத்தியது.

தாழங்குப்பம் என்பது 150 தலித் குடும்பங்கள் வசிக்கும் பகுதி. இங்குள்ள சில வீடுகளில் தனி கழிவறைகள் உள்ளன. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொது கழிவறையைப் பயன்படுத்துகிறார்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் கழிவறை புதுப்பிக்கப்பட்டாலும், கழிவுநீர் வெளியேறுவதற்காக பொருத்தப்படவேண்டிய கழிவுநீர் குழாய் கொண்டு செல்லும் பணி தாமதிக்கப்பட்டு வருகிறது.

கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாகவும், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் பகுதி மக்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கழிவுநீர் குழாய் அமைப்பது தாமதமானது எனவும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். இரண்டு பகுதி மக்களும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், சாதிரீதியான காரணங்களால்தான் தங்கள் பகுதியில் உள்ள கழிவறை நீர் நெட்டுக்குப்பத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது என தலித் குடியிருப்பு பகுதியினர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். இதை நெட்டுக்குப்பம் மக்கள் முற்றிலும் மறுக்கின்றனர்.

அறுபது வயதான கருப்பாயி பல ஆண்டுகளாக தாழங்குப்பத்தில் வசிப்பவர். அவர் பேசுகையில், ''எங்கள் ஊரில் எல்லோருடைய வீட்டிலும் கழிவறை வசதி இல்லை. இந்தப் பொது கழிப்பிடத்தை எங்களைப் போன்றவர்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறோம்.

இந்த கழிவறையில் புதிதாக பைப் போட பின்பகுதியில் இருப்பவர்கள் அனுமதி மறுக்கிறார்கள். எங்களை சாதிரீதியாக மோசமாகப் பேசுகிறார்கள்,'' என்றார்.

பொது கழிவறை
படக்குறிப்பு, சுமார் 40 ஆண்டுகளாக இந்த கழிவறை இங்குள்ளதாக, இந்தப் பொது கழிவறையைப் பயன்படுத்தி வரும் மலர் கூறுகிறார்.

பொது கழிவறையைப் பயன்படுத்தும் மற்றொரு பெண்ணான மலர், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அந்த கழிவறையை சில ஆண்டுகள் பயன்படுத்தினார்கள் என்கிறார்.

நெட்டுக்குப்பதில் உள்ள வீடுகளில் உள்ள கழிவறை நீர் வெளியேறுவதற்கு பாதாள சாக்கடை இணைப்பு உள்ளதால், பொது கழிவறையைப் பயன்படுத்துவதை அவர்கள் நிறுத்திவிட்டனர் என்கிறார்.

''சுனாமிக்கு பின்னர், இந்த கழிவறையை புனரமைத்துக் கொடுத்தார்கள். 40 ஆண்டுகளாக இந்த கழிவறை இங்குள்ளது. ஆரம்பத்தில் எல்லோரும் இதைப் பயன்படுத்தினார்கள். தற்போது எங்கள் ஊரில் உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்துகிறோம்.

தற்போது கழிவுநீர் வெளியேறி நெட்டுக்குப்பதில் உள்ள பாதாள சாக்கடை வழியில்தான் சென்று சேரும் என்பதால், இந்த பைப் அமைப்பதைத் தடுக்கிறார்கள். தலித் மக்கள் பயன்படுத்தும் கழிவறை நீர் அவர்கள் பகுதிக்கு வரக்கூடாது என்கிறார்கள்,'' என்றார்.

அவர் மேலும், கழிவறை நீர் செல்லும் குழாய் அமைக்கப்படும் பாதை ஒன்றில் சுவர் அமைக்கப்பட்டுள்ளதை நமக்குச் சுட்டிக்காட்டினார்.

சென்னை-பொது கழிப்பிடம்
படக்குறிப்பு, சுவர் கட்டியுள்ள இடம் தங்கள் குடும்பத்திற்குச் சொந்தமானது என்றும் ஆடு, மாடுகள் நுழையாமல் இருப்பதற்காக சுவர் கட்டியிருப்பதாகவும் கூறுகிறார் பூங்கொடி

கழிவறை குழாய் அமைப்பதில் உள்ள பிரச்னை சாதி பிரச்னையாக எப்போது மாறியது என்று கேட்டபோது, பல பெண்களும் கடந்த மூன்று மாதங்களாகத்தான் பிரச்னை இருப்பதாகத் தெரிவித்தனர். தாழங்குப்பத்தில் உள்ள ஆண்கள் இந்த விவகாரம் குறித்துப் பேச முன்வரவில்லை. அவர்கள் நெட்டுக்குப்பதில் உள்ள மக்களுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதால், அவர்களுக்குப் பதிலாக தங்களது பகுதியைச் சேர்ந்த பெண்கள்தான் பேசுவார்கள் என்று தெரிவித்தனர்.

கழிவறையின் பின்புறம் நெட்டுக்குப்பத்தில் வசிக்கும் மாற்று சமூகத்தினரைச் சந்திக்கச் சென்றோம். முதலில் பேச மறுத்த பெண்கள் பின்னர், கழிவுநீர் குழாய் வருவதை எதிர்ப்பதற்குப் பல காரணங்களை அடுக்கினர். கழிவுநீர் குழாய் அமைப்பதைத் தடுக்கும் விதத்தில் சுவர் கட்டியுள்ள வீட்டின் உரிமையாளர் பூங்கொடியைச் சந்தித்தோம்.

''இந்த இடம் எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமானது. இது எங்கள் வீடு. என்னிடம் இப்போது காசு இல்லை என்பதால் அந்த இடத்தை விட்டு வைத்திருக்கிறேன். அவர்கள் சொல்வதுபோல, இது பொதுவழி இல்லை.

என்னிடம் காசு இருக்கும்போது இந்த இடத்தில் வீட்டை விரிவுபடுத்திவிடுவேன். தெருவில் வரும் ஆடு, மாடுகள் நுழையாமல் இருப்பதற்காக சுவர் கட்டியிருக்கிறேன். சாதி பிரச்னை எதுவும் இல்லை,'' என்கிறார் பூங்கொடி.

சென்னை-பொது கழிப்பிடம்
படக்குறிப்பு, "சாதி பிரச்னை எதுவும் இங்கே இல்லை. இங்கு இருப்பவர்கள் அங்கு பெண் கொடுத்திருக்கிறார்கள். அங்கிருந்து பெண் எடுத்தும் உள்ளார்கள்," எனக் கூறுகிறார் நெட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கலா

சாதி பிரச்னை காரணமாகத்தான் சுவர் கட்டப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, இதில் சாதி வேறுபாடு எதுவும் இல்லை என்று நெட்டுக்குப்பம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

''சாதி பிரச்னை எதுவும் இங்கே இல்லை. இங்கு இருப்பவர்கள் அங்கு பெண் கொடுத்திருக்கிறார்கள். அங்கிருந்து பெண் எடுத்தும் உள்ளார்கள். எங்கள் வீட்டு விழாவிற்கு அவர்களை அழைப்போம்.

இந்த புதிய பைப் போட்டால், கழிவுநீர் அதிகளவில் இங்குள்ள பாதாள சாக்கடை குழியில் நிரம்பும். ஏற்கெனவே இந்த பாதாள சாக்கடை அடிக்கடி நிரம்பி எங்கள் தெருவில் பிரச்னை ஏற்படுகிறது என்பதால்தான் இதை எதிர்க்கிறோம்.

மழைக் காலத்தில் இங்கு வந்து பாருங்கள். சாக்கடை இங்கு மிதக்கும். ஆனால் சாதி பிரச்னையாக மாற்றினால், உடனடியாக குழாய் போடுவார்கள் என்பதால் இப்படிச் சொல்கிறார்கள்,'' என்கிறார் கலா.

சென்னை-பொது கழிப்பிடம்
படக்குறிப்பு, நெட்டுக்குப்பம் பகுதியில் சுவர் எழுப்பப்பட்டுள்ள இடம் 'தோராய பட்டா' என்ற வகையில் தனிநபருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாதி பிரச்னை மட்டுமல்லாமல், பொது வழி அடைக்கப்பட்டு சுவர் கட்டப்பட்டுள்ளதாக பரவிய தகவல் உண்மையா என்று தெரிந்துகொள்ள மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகளிடம் பேசினோம்.

நெட்டுக்குப்பம் பகுதியில் சுவர் எழுப்பப்பட்டுள்ள இடம் பொது இடமா தனிநபருக்கு சொந்தமான இடமா என்று கேட்டபோது, சுவர் அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு 'தோராய பட்டா' என்ற வகையில் தனிநபருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்தது.

இந்த 'தோராய பட்டா' என்பது தற்காலிக பட்டா என்றும் அரசின் தேவைக்காக அந்த பட்டா மாற்றப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிபிசி தமிழிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தனிநபர் பயன்பாட்டில் தற்போது அந்த இடம் இருந்தாலும், சென்னை மாநகராட்சி கழிவுநீர் குழாய் அமைத்துக் கொடுப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

''சாதிரீதியான பிரச்னை உருவாகவில்லை. நெட்டுக்குப்பம் பகுதியில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். எல்லோரும் அவர்கள் வசிக்கும் பகுதியில் குப்பை தேங்கினால், சாக்கடை நீர் தேங்கினால் எதிர்ப்பார்கள்.

இந்த விவகாரத்தில், தாழங்குப்பம் மேடு பகுதியாகவும், நெட்டுக்குப்பம் பள்ளத்தில் இருக்கும் பகுதியாகவும் இருப்பதால்தான் இந்தப் புதிய கழிவறை குழாய், நெட்டுக்குப்பத்தில் அமைக்கப்படுகிறது. வேறு காரணங்கள் இல்லை,'' என்கிறார் ஆணையர் ராதாகிருஷ்ணன்.

சென்னை மாநகராட்சி

அதேநேரம், அடிப்படை வசதிகள் கோரி கிளம்பும் பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படவில்லை எனில், அவை சாதி பிரச்னையாக வடிவம் எடுக்கிறது என்பதற்கு தாழங்குப்பம் பிரச்னை சாட்சியாக இருக்கிறது என்கிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த சாமுவேல்ராஜ்.

''தாழங்குப்பத்தில் பிரச்னை ஏற்பட்ட உடன் தீர்வு கிடைத்திருந்தால், அங்கு சாதி வேறுபாடுகள் அதிகரித்திருக்காது இதுபோன்ற பிரச்னைகளில் ஒருநாள் தாமதம் செய்தால்கூட அந்த விவகாரம் பெரிய பிரச்னையாக மாறிவிடுகிறது. தாமதம் காரணமாக சுவர் கட்டுகிறார்கள்.

ஒருதரப்பு போராட்டம் நடத்த வேண்டும் என்கிறார்கள். மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர் போராட்டம் நடத்துவார்கள். சட்டப்படி எது சரியோ அதை விரைவாகச் செய்திருந்தால் சாதி பிரச்னை ஏற்படாமல் இருந்திருக்கும். இதை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்,'' என்கிறார் சாமுவேல்ராஜ்.

பல பிரச்னைகளில் அமைதி பேச்சுவார்த்தை என்ற பெயரில், மேலும் தீர்வு காண்பது தாமதிக்கப்படுகிறது என்றும், சட்டத்தில் உள்ளபடி நடவடிக்கை எடுத்தால், மக்கள் மத்தியில் வேறுபாடுகள் வளராது என்கிறார்.

ஊடக செய்திக்கு பின்னர் தாழங்குப்பம் தீண்டாமை பிரச்னைக்கு தீர்வு

பிபிசி தமிழ் உள்ளிட்ட பல ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து தற்போது அந்த கழிவறை குழாய் அமைக்கப்பட்டுவருகிறது. மாற்று சமூகத்தினர் கட்டிய அந்த சுவரும் இடிக்கப்பட்டுள்ளது.

''ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து தற்போது குழாய் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இங்கு குவிந்துள்ளனர். எங்கள் பகுதியில் பல வீடுகளில் கழிவறை இல்லை என்பதால் இந்த பொது கழிவறையைத்தான் பயன்படுத்துகிறோம். கழிவுநீர் குழாய் புதிதாக பொருத்துவதால், பல மாதங்களாக இருந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது,'' என்று தலித் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மலர் தெரிவித்தார்.

நெட்டுக்குப்பதில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபர்களிடம் பேசியபோது, சாதி ரீதியான காரணங்களுக்காக கழிவுநீர் குழாய் அமைப்பதை தடுப்பதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். மழை காலங்களில், கழிவுநீர் பாதாள சாக்கடையில் நிரம்பி வழிந்து சாலையில் செல்வதை தடுக்கவேண்டும் என்பதற்காகதான், புதிதாக குழாய் அமைப்பதை தடுத்தாக தெரிவித்தனர்.

தாழங்குப்பம்

''எங்களுக்கு சாதி ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை. தாழங்குப்பத்தில் இருப்பவர்கள் பலரும் எங்கள் பகுதியில் உள்ள மீனவர்களுடன் மீன்பிடி வேலைக்குச் செல்பவர்கள்தான். மழைக் காலத்தில் சாக்கடை தேங்கினால், மாநகராட்சி உடனடியாக சரிசெய்வோம் என்று உத்தரவாதம் கொடுத்ததால், கழிவுநீர் குழாய் அமைக்க ஒத்துக்கொண்டோம். சுவரை இடிக்கவேண்டும் என்றார்கள், அதற்கும் ஒப்புக்கொண்டோம்,''என்கிறார் கலா.

தாழங்குப்பம் உள்ளிட்ட 10 குடியிருப்பு பகுதிகளுக்கு மாநகராட்சி வார்டு ஒன்று பகுதியின் உறுப்பினராக இருப்பவர் சிவகுமார். பிபிசிதமிழிடம் பேசிய அவர், சாதி பிரச்னை எதுவும் இல்லை, ஒரு சிலர் இதனை தூண்டிவிட்டனர் என்கிறார். ''தற்போது கழிவுநீர் குழாய் அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு தரப்பு மக்களுக்கும் அது பயன்தருவதாகதான் அமையும். கழிவுநீர் தேங்காமல் பாதாள சாக்கடை தவறாமல் தூய்மை செய்யப்படும் என்று மாநகராட்சி சார்பாக நானே உத்தரவாதம் தந்துள்ளேன்,''என்கிறார் சிவகுமார்.

புதிதாக கட்டப்பட்ட சுவர் குறித்து கேட்டபோது, அந்த சுவர் இடிக்கப்பட்டது என்றும் சிமெண்ட் கரை போட்ட நடைபாதை ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: